பர்மா ரமணி
அழ. வள்ளியப்பா

5. பேனாவைக் காணோம்!

மாலை மணி ஆறு அடித்தது. ரமணியைப் பற்றி யோசித்துக் கொண்டே அறையில் உட்கார்ந்திருந்த மதுர நாயகம் மெதுவாக எழுந்தார். அறையைவிட்டு வெளியே வந்தார். அங்கிருந்து தெருவுக்குச் சென்றார். தெருவில் ரமணி நிற்கிறானா என்று சுற்றுமுற்றும் பார்த்தார்; காணவில்லை. ஒரு வேளை வீட்டுக்குப் போயிருப் பானோ?’ என்ற சந்தேகம் அவருக்குத் தோன்றியது. உடனே, நேராக வீட்டை நோக்கி நடந் தார். போகும் போதே வழியில் ரமணி நிற்கிறானா என்று பார்த்துக் கொண்டுதான் போனார். அவனைக் காணோம்.

வீட்டுக்குள் நுழைந்ததும் முதல் கேள்வியாக “ரமணி இங்கே வந்தானா?” என்றுதான் கேட்டார்.

“இல்லையே! அவன் எங்கே போனானோ! ஏன் அவனைத் தேடுகிறீர்கள்?” என்று கேட்டாள் மதுர நாயகத்தின் மனைவி கமலாதேவி.

“ஒன்றுமில்லை. சும்மாதான் கேட்டேன்” என்று கூறி விட்டு நேராகத் தமது அறைக்குள் சென்றார். சட்டையைக் கழற்றிப் போட்டுவிட்டு, பனியனுக்கு மேல் அங்க வஸ்திரம் ஒன்றை எடுத்துப் போர்த்துக் கொண்டார். அப்படியே போய் வாசலில் நின்றார். இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டே யிருந்தார். ரமணி வரவில்லை.

“எங்கே போயிருப்பான்? அவனைத் தனியாகப் பார்த்துப் பேசினால் தான் உண்மை தெரியும்” என்று நினைத்துக் கொண்டே வாசலில் நின்றார். அவரால் சிறிது நேரம்கூடப் பொறுமையாக நிற்க முடியவில்லை. வாசலை விட்டுக் கீழே இறங்கினார். ‘விடு விடு’ என்று நடந்து கடைவீதிப் பக்கமாகச் சென்றார். ரமணியைத் தேடித் தேடிப் பார்த்தார். சுமார் ஒரு மணி நேரம் தேடியும் அவன் அகப்படவில்லை!

சரி வீட்டுக்குப் போவோம். இரவு எப்படியும் சாப்பிட வந்துவிடுவான் என்ற எண்ணத்துடன் வீடு திரும்பினார். வீட்டுக்குள் சென்றதும், “இன்னும் ரமணி வரவில்லையா?” என்று மனைவியிடம் கேட்டார்.

“நீங்கள் பார்க்கவில்லையா? அரை மணி நேரத்துக்கு முன்பு இங்கு வந்தானே! உடனே போய்விட்டான் போலிருக்கிறது. நான் அடுக்களையில் இருந்தேன்” என்றாள் கமலாதேவி.

“அடடே அப்படியா! நான் அவனையல்லவா தேடி விட்டு வருகிறேன். அவன் ஏதாகிலும் சொன்னானா?”

“ஒன்றும் சொல்லவில்லையே!” என்றாள் அவர் மனைவி.

“அவன் எவ்வளவு நல்லவனாக, யோக்கியனாக நடந்து கொள்கிறான்! அவன்மேல் வீண் பழி சுமத்துகிறார் எங்கள் முதலாளி! அவன் திருடனாம்; அயோக்கியனாம்?” என்றார் மதுரநாயகம்.

“அதற்கு நீங்கள் என்ன சொன்னீர்கள்? என் ரமணி திருடனும் இல்லை; அயோக்கியனும் இல்லை. ‘தங்கக் கம்பி’ என்று உங்கள் முதலாளியின் தலையில் அடித்துச் சத்தியம் செய்தீர்களாக்கும்… ஆமாம், அவன் எதைத் திருடிவிட்டான்?” என்று கேட்டாள்.

“உனக்கு எல்லாம் வேடிக்கையாகத்தான் இருக்கும். பாவம், நாடகத்துக்கு வாங்கி வைத்த மூன்று கெஜம் பட்டுத் துணியைத் திருடி விற்கப் பார்த்ததாக ரமணி மீது பழி போடுகிறார்கள்!”

“உங்களுக்கு எல்லாமே ஒன்றுதான். வெண்ணெய்க்கும் சுண்ணாம்புக்கும் வித்தியாசம் தெரியாது! உங்களை ஏமாற்றுவது சுலபம் என்று அந்த ரமணிக்குக் கூடத் தெரிந்திருக்கிறது. எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக் குமோ?’ என்று எரிச்சலோடு கூறினாள் கமலா தேவி. ரமணிக்கு இலவசமாகச் சாப்பாடு போட்டு, வீட்டிலேயே வசிக்க இடமும் கொடுத்தது ஆரம்பத்திலிருந்தே அவளுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. இதுதான் நல்ல சமயம் என்று நினைத்து அவள் அவனைத் தாக்கிப் பேச ஆரம்பித்துவிட்டாள்!

“கமலா, ரமணியைப் பற்றி உனக்குச் சரியாகத் தெரியாது. அவன் இப்படி எல்லாம் தவறான வழியில் போகவே மாட்டான்” என்றார் மதுரநாயகம்.

“ஆமாம். உங்கள் ரமணியைப் பற்றி நீங்கள் தான் மெச்சிக்கொள்ள வேண்டும்.”

“கமலா, வீணாக அவனைச் சந்தேகிக்காதே பாவம், அவனுக்குத் தீயவரைக் கண்டால் கூடப் பிடிக்காது.

நாடகங்களில் கூடக் கெட்ட குணங்களைக் கற்றுக் கொடுக்கும் நாடகங்களை அவன் விரும்ப மாட்டான்…. கமலா, அவனைப் பற்றி ஒன்றே ஒன்று சொல்லுகிறேன். கொஞ்சம் பொறுமையாகக் கேள். கிருஷ்ணலீலா, துருவன், பிரஹலாதன் போன்ற நாடகங்களுடன் புதுமையாகவும் பல குழந்தை நாடகங்கள் போட வேண்டுமென்று நினைத்து, நல்ல நாடகங்களை எழுதித் தருகிறவர்களுக்குப் பரிசு தருவதாகப் போன மாதம் நாங்கள் விளம்பரம் செய்ததும், உடனே ஏராளமான நாடகங்கள் வந்து குவிந்ததும் உனக்குத் தெரியும். அப்படி வந்த நாடகங் களை நான் இரவு வெகு நேரம் வரை படிப்பதும் உனக் குத் தெரியும். இதை அவனும் கவனித்திருக்கிறான். ஒரு நாள் நீ உன் தாயார் வீட்டுக்குப் போயிருந்த சமயம் என்று நினைக்கிறேன் – அவன் என்னிடம் வந்து, ‘சார், நானும் இந்த நாடகங்களைப் படித்துப் பார்க்கலாமா?’ என்று கேட்டான். ‘சரி’ என்று கூறி இரண்டு நாடகங்களை அவனிடம் கொடுத்தேன். அந்த இரண்டையும் அவன் படித்துப் பார்த்தான். கடைசியில் அந்த இரண்டிலே ஒன்றை என்னிடம் கொடுத்து “இது நன்றாயிருக்கிறது. இன்னொன்று மோசம்’ என்றான். ‘ஏன், அது உனக்குப் பிடிக்கவில்லையா?’ என்று கேட்டேன். ‘ஆமாம். பொய் சொல்வது, திருடுவது இப்படிப்பட்ட பழக்கங்களைக் கற்றுக் கொடுக்கும் நாடகமாகவே இது இருக்கிறது. இதை மேடையில் பார்த்தால் பலர் கெட்டு விடுவார்களே என்று பயந்து தான் ஒதுக்கிவிட்டேன்’ என்றான். உடனே நானும் அந்த இரு நாடகங்களையும் படித்துப் பார்த்தேன். அவன் சொன்னது முற்றிலும் சரியாகவே இருந்தது. நாடகத்தில் கூடத் தீமையை விரும்பாதவன் ரமணி அவனா திருடியிருப்பான்?” என்று கேட்டார்.

“இப்போதுதான் புரிகிறது! அதுபோல் திருட்டு நாடகங்களைப் படித்துப் படித்துத்தான் அவனும் திரு டப் பழகியிருக்கிறான் போலிருக்கிறது! தான் மட்டும் தான் அதைத் தெரிந்துகொள்ள வேண்டும்; மற்றவர்கள் தெரிந்து கொள்ளக் கூடாது என்று நினைத்துத்தான் அப்படிச் சொல்லியிருக்கிறான்.”

“கமலா, வீணாக அவன்மீது குற்றத்தைச் சுமத்தாதே! நான் தினமும் பேனா, கடிகாரம், மணிபர்ஸ் முதலிய வற்றை மேஜைமேல் தானே வைக்கிறேன்? அவன் நினைத்திருந்தால் எதை வேண்டுமானாலும் எடுத்திருக்கலாமே!” என்றார் மதுரநாயகம்.

“உங்களுக்குத்தான் ஞாபக மறதி அதிகமாயிற்றே! மணிபர்ஸில் முதலில் எவ்வளவு வைத்தோம் என்பது தெரிந்தால் அல்லவா குறையும் போது எவ்வளவு குறைகிறது என்பது தெரியும்?” என்றாள் கமலா.

“கமலா, நீ சொன்னதைத்தான் திருப்பித் திருப்பிச் சொல்லுவாய்”

“ஆமாம், நீங்கள் மட்டும் புதிதாகச் சொல்லுகிறீர் களாக்கும்! அவன் எக்கேடு கெட்டால் எனக்கு என்ன? நேரமாகிறது; சாப்பிட வாருங்கள்” என்று கூறிவிட்டு அடுக்களைக்குச் சென்றாள் கமலாதேவி.

மதுரநாயகம் சாப்பிடும் போதெல்லாம் ரமணியைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தார். இரவு தூக்கம்கூட வரவில்லை! ‘எங்கே போயிருப்பான்? சாப்பிடக்கூட வரவில்லையே!’ என்ற யோசனையிலே இருந்தார்.

மறுநாள் அதிகாலையில் மதுரநாயகம் எழுந்தார். உடனே, ரமணி வழக்கமாகப் படுக்கும் வெளித் திண்ணைக்கு வந்து பார்த்தார். அங்கே அவன் இல்லை!

‘என்ன! இரவு சாப்பிட வரவில்லை, படுக்கவும் வர வில்லையே! அவன் ரோஷக்காரனாயிற்றே! ஒரு வேளை, தற்கொலை.’ இதற்குமேல் அவரால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. மனக் கலக்கத்துடனே காலை வேலைகளை முடித்துக் கொண்டு சாப்பிட உட்கார்ந்தார். அரைகுறையாகச் சாப்பிட்டுவிட்டு அறைக்குள்ளே சென்றார். அவசர அவசரமாகச் சட்டையை எடுத்துப் போட்டுக்கொண்டார். மேஜை அருகே சென்றார். மேஜை மேலிருந்த கடிகாரத்தை எடுத்தார்; கையிலே கட்டிக் கொண்டார். மணிபர்ஸை எடுத்தார்; சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டார். இன்னும் ஏதோ ஒன்றை அவர் எடுக்கப் போனார். ஆனால், அதை அங்கே காணவில்லை! உடனே சட்டைப் பையைத் தடவிப் பார்த்தார். அங்கும் இல்லை. ஜன்னல், மேஜை அறை, அலமாரி எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்துவிட்டார். அந்த அறை முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. உடனே அவர் அளவற்ற ஆச்சரியத்துடன், “எங்கே போய்விட்டது என் பேனா! தங்கமூடி போட்ட ‘எவர் ஷார்ப்’ பேனாவைக் காணோமே!” என்று இரைந்து கூறினார்.

சத்தத்தைக் கேட்டதும், அவர் மனைவி கமலாதேவி அங்கே ஓடி வந்தாள். விஷயத்தை அறிந்தாள். உடனே, “நல்ல பையனாம், நல்ல பையன்! அந்த நாசமாய்ப் போனவன் தான் இதையும் எடுத்துக்கொண்டு தொலைந் திருப்பான். நேற்றுச் சாயங்காலம் நீங்கள் இல்லாத சமயம் பார்த்து வந்தானே, இதைத் திருடிக் கொண்டு போகத்தான் வந்திருக்கிறான்! ஐயோ! பேனாவை மட்டும் தான் எடுத்தானோ, இன்னும் என்ன என்ன சாமான்களை யெல்லாம் எடுத்திருக்கிறானோ!” என்று திட்டிக்கொண்டே அறையிலிருந்த சாமான்களையெல்லாம் சரிபார்க்க ஆரம்பித்துவிட்டாள்!

‘பேனாவைக் காணோம்!’ என்றதுமே மதுரநாயகம் அதிர்ச்சியடைந்தார். “ரமணிதான் அதைத் திருடியிருக்க வேண்டும்” என்று கமலா தேவி சொன்னதும், அவருடைய அதிர்ச்சி இன்னும் அதிகமாகியது!

“ரமணியா பேனாவைத் திருடியிருப்பான்?” என்றார் தாழ்ந்த குரலில்.

“பின்னே, கட்டுச்சாதம் கட்டிக்கொண்டு அயலூரிலிருந்தா திருடன் வருவான்? இவனைத் தவிர வேறு யார் எடுத்திருப்பார்கள்? சம்பளம் கொடுத்த சபாவிலே பட்டுத் துணியைத் திருடினான்; சாப்பாடு போட்ட வீட்டிலே தங்கப் பேனாவைத் திருடினான்! அந்தப் பட்டுத் துணிகூட முப்பது நாற்பது ரூபாய்க்குள்ளே தான் இருக்கும். இந்தப் பேனா கிட்டத்தட்ட நூறு ரூபாய் இருக்காதா? அட பாவிப் பையா! அன்னம் இட்ட வீட்டிலே கன்னம் வைத்துவிட்டாயே” என்று இரைந்து பேசினாள் கமலாதேவி.

மதுரநாயகத்துக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பேசாமல் தலையை விரல்களால் அழுத்திப் பிடித்துக் கொண்டு நாற்காலியில் உட்கார்ந்து விட்டார்.

“நாயைக் கொண்டு வந்து நடுவீட்டிலே வைத்துச் சாப்பாடு போடச் சொன்னீர்களே! வளர்த்த கடா மார்பிலே பாய்வதுபோல், நம்மிடமே அவன் கைவரிசையைக் காட்டி விட்டானே!” என்று கமலாதேவி மேலும் பேசினாள்.

மதுரநாயகம் ஏதாவது பதில் சொல்லுவார் என்று அவள் எதிர்பார்த்தாள். ஆனால், அவர் எதுவுமே சொல்லவில்லை. மெளனமாகவே உட்கார்ந்து கொண்டிருந்தார்.

“நேற்று ராத்திரி நீங்கள் என்ன சொன்னீர்கள்? நான் மேஜை மேல் பேனாவை வைக்கிறேன்; மணி பர்ஸை வைக்கிறேன். அவன் எதையாவது எடுத்திருக்கிறானா?’ என்று கேட்டீர்களே, இப்போது என்ன சொல்கிறீர்கள்? சரி, அதெல்லாம் போகட்டும். இனிமேல், நடக்க வேண்டியதைப் பார்க்க வேண்டாமா? இப்படியே சும்மா உட்கார்ந்திருந்தால், உங்கள் முன்னால் அந்தப் பேனா தானாக வந்து நிற்குமா? எப்படியாவது அவனைத் தேடிப் பிடித்துப் பேனாவை வாங்கிக்கொண்டு, ஆத்திரம் தீர அவனுக்கு முதுகிலே நாலு வைக்க வேண்டாமா? எங்கே யிருந்தாலும் விடாப்பிடியாகத் தேடிப் பிடித்துக்கொண்டு வந்துவிட வேண்டும்.”

கமலாதேவி இப்படிக் கூறிக்கொண்டிருக்கும் போது, அங்கே வந்தார் பக்கத்து வீட்டுப் பாஸ்கரன். ‘ஓசி’ யில் பத்திரிகை படிக்கத் தினமும் காலையில் தவறாது அவர் அங்கு வந்துவிடுவார்! கமலாதேவி சொன்ன கடைசி வாக்கியம் மட்டுமே அவர் காதில் விழுந்தது போலிருக்கிறது. உடனே அவர் “தேடிக் கண்டுபிடிக்க வேண்டுமா! எதை? உங்கள் நாய்க் குட்டி ‘ஜிம்மி’ காணாமல் போய்விட்டதா?” என்று அநுதாபத்துடன் கேட்டார்

‘அந்த நாய்க்குட்டிக்கு இருக்கும் நன்றிகூட ஆறு மாதமாக இந்த வீட்டிலே வேளா வேளைக்குத் தின்று வளர்ந்த ரமணிக்குக் கிடையாதே! அவன் செய்த வேலையைக் கேளுங்கள். நேற்று சபாவிலே இருந்த பட்டுத் துணியைத் திருடி அவன் அகப்பட்டுக் கொண்டுவிட்டான். ஆனால், அவன் திருடியிருக்கவே மாட்டான் என்று இவர் முதலாளியிடம் சொன்னாராம். முதலாளி என்ன, சாமானி யப்பட்டவரா? அவர் ரமணி தான் திருடியிருக்க வேண்டும் என்று முடிவுகட்டி உடனேயே அவன் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விட்டார். பிறகு அவன், இவரில்லாத சமயம் பார்த்து இங்கே வந்து மேஜைமேல் இருந்த தங்கப் பேனாவையும் திருடிக் கொண்டு ஓடிப் போய்விட்டான்… ஐயோ! அது எவ்வளவு நல்ல பேனா” என்று பாஸ்கரனிடம் பரிதாபத்துடன் சொன்னாள் கமலாதேவி.

உடனே பாஸ்கரன், “சரிதான், நான் அவன் இந்த வீட்டுக்கு வந்தவுடனே சந்தேகப்பட்டேன். நான் நினைக்கிறது எப்போதுமே சரியாகத்தான் இருக்கும். இந்தக் காலத்தில் எல்லாம் அளவோடுதான் இருக்க வேண்டும். கொஞ்சம் இடம் கொடுத்தால் ஆபத்துத் தான்!” என்றி கூறிக் கமலாதேவியின் கட்சியில் சேர்ந்து கொண்டார்.

பாஸ்கரனுக்கு ரமணி என்றாலே பிடிக்காது. ஏன்? அவர் சாப்பிடுகிற சோற்றிலே ரமணி மண்ணை வாரிப் போட்டானா? இல்லை. ஆனாலும், காரணம் இருக்கிறது. ஒரு நாள் பாஸ்கரன் கடைக்குப் போய் சிகரெட் வாங்கி வரும்படி ரணிமயிடம் கூறினார். அதற்கு அவன், “சார், நீங்கள் என்ன வேலை வேண்டுமானாலும் சொல்லுங்கள்; செய்யத் தயார். ஆனால், தயவு செய்து சிகரெட் வாங்க மட்டும் என்னை அனுப்பாதீர்கள். இந்தக் கெட்ட பழக்கத்துக்கு நான் உதவ மாட்டேன்” என்று சொல்லி விட்டான். உடனே பாஸ்கரனுக்குக் கோபம் வந்துவிட்டது! “சுத்த அதிகப் பிரசங்கி!” என்று திட்டிவிட்டு மதுரநாயகத்திடம் விஷயத்தைக் கூறினார். அதற்கு மதுரநாயகம், “பாஸ்கர் என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியும். சிகரெட் பிடிக்கமாட்டேன். பொடி, புகையிலை போடமாட்டேன். காப்பி கூடக் குடிக்கமாட்டேன். என்னிடம் பழகியவன் எப்படியிருப்பான்?” என்று சிரித்துக்கொண்டே வேடிக்கையாகக் கூறினார். ஆனால், பாஸ்கரன் சிரிக்கவில்லை. ‘சமயம் வரும். அப்போது இந்தப் பொடியனை ஒரு கை பார்த்துக்கொள்கிறேன்’ என்று கருவினார். அந்த நல்ல சமயம் இப்போது வந்திருக்கிறதே! அவர் சும்மா இருப்பாரா?

“எவ்வளவு செல்லமாக வளர்த்தோம்! இப்படி மோசம் செய்துவிட்டானே பாவிப் பையன்!” என்று அங்கலாய்த்தாள் கமலாதேவி.

“ஒன்றும் கவலைப்பட வேண்டாம். நான் சொல்லுகிற படி செய்தால் சீக்கிரம் பேனா கிடைத்துவிடும். உடனே பக்கத்துப் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போக வேண்டியது. ஒரு ரிப்போர்ட் கொடுக்க வேண்டியது. எங்கிருந்தாலும் அவனை சிண்டைப் பிடித்துக்கொண்டு வந்து விடுவார்கள். மதுரநாயகம்! ஏன் இப்படிப் பிடித்துவைத்த பிள்ளையார் போல் இருக்கிறாய்? உடனே எழுந்திரு. ரிப்போர்ட் கொடுத்து விட்டு வரலாம்” என்றார் பாஸ்கரன்.

இதைக்கேட்டதும், இதுவரை மௌனமாயிருந்த மதுர நாயகம், “என்ன! போலீஸிலே ரிப்போர்ட் கொடுக்கிறதா?” என்று கேட்டார்.

“பின்னே, பொட்டுக் கடலைக்காரனிடமா ரிப்போர்ட் கொடுப்பது? என்னப்பா யோசிக்கிறாய்? எழுந்திரு. எனக்கு இந்த ‘டிவிஷன்’ போலீஸ் சப்இன்ஸ்பெக்டரைத் தெரியும். ரிப்போர்ட்’ கொடுத்ததும் அவர் நாலா பக்கமும் ஆட்களை அனுப்பி அவனை உடனே பிடித்து வரச் சொல்லுவார். அவன் எங்கே போவான்? இந்தப் பட்டணத்தில் தானே அந்தப் பேனாவை விற்கவேணும்?” என்றார் பாஸ்கரன்.

பாஸ்கரன் மதுரநாயகத்தைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்தபோது மதுரநாயகம் சிறிது தயங்கினார். அதைக் கண்டதும் அவர் மனைவி கமலாதேவிக்குக் கடுங்கோபம் வந்துவிட்டது.

“யோசித்து யோசித்துத்தான் இப்படி ஆகிவிட்டது. ரமணி இன்னும் என்ன என்ன எடுத்திருக்கிறான் என்பது கூட அவனைப் பிடித்தால் தெரிந்துவிடும். இனி அவனைச் சும்மா விடக்கூடாது! நீங்களோ நாடகக் கொட்டகைக்குப் போய்விடுகிறீர்கள். இரவு வெகுநேரம் சென்றுதான் திரும்பி வருகிறீர்கள். நீங்கள் இல்லாத சமயம் பார்த்து அவன் வந்து எதையாவது தூக்கிக்கொண்டு ஓடிவிட்டால் நான் என்ன செய்வது? அவனைச் சும்மா விட்டு வைக்கக்கூடாது. ஆபத்துத் தான்!” என்றாள் கமலாதேவி.

“மதுரநாயகம், பேசாமல் எழுந்திரு. நேரமாகிறது” என்று கூறி மதுரநாயகத்தின் கையைப் பிடித்து இழுத்தார் பாஸ்கரன்.

மதுரநாயகம் அரை மனசுடன் எழுந்து பாஸ்கரனோடு சென்றார்.

இருவரும் பக்கத்துப் போலீஸ் ஸ்டேஷக்குச் சென்றார்கள். சப்-இன்ஸ்பெக்டரிடம் விஷயத்தை விளக்கிக் கூறினார் பாஸ்கரன்.

காணாமல் போனது எவர்-ஷார்ப் பேனா. தங்க மூடி போட்டது; அடிப்பாகம் கறுப்பு நிறம்; மதிப்பு நூறு ரூபாய் இருக்கும்; பேனாவின் மேல் ‘சேகர் அன்பளிப்பு’ என்று எழுதப்பட்டிருக்கும். மலேயாவிலிருந்து சேகர் என்ற உறவினர் அனுப்பியது. அனுப்பி ஒன்றரை வருஷம் இருக்கலாம். சந்தேகப்படும் பையன் பெயர் ரமணி. வயது பதின்மூன்று. மாநிறம். சுமார் நாலரை அடி உயரம்.’

இந்த விவரங்களுடன் ரிப்போர்ட் எழுதிக் கொடுத்து விட்டு வீட்டுக்குத் திரும்பி வந்தார்கள் மதுரநாயகமும், பாஸ்கரனும்.

அன்று மதுரநாயகம் நாடக சபாவுக்குப் போவதற்கு முன்பே இந்தச் செய்தி அங்கே போய்ச் சேர்ந்துவிட்டது. அப்படியானால் முதலாளிக்கு இது தெரியாமலா இருக்கும்? அவருக்கும் உடனே தெரிந்து விட்டது. எல்லாம் அந்தப் பாஸ்கரன் செய்த வேலை தான்!

மதுரநாயகம் சபாவுக்குள் வந்து நுழைந்ததுமே, “என்ன மதுரநாயகம்! அந்தப் பயல் உங்களிடமே தன் வேலையைக் காட்டிவிட்டான் போலிருக்கிறது! அவன் பரம யோக்கியன் என்று நேற்றுச் சொன்னீர்களே, அந்தப் பரம யோக்கியன் செய்த வேலையைப் பார்த்தீர்களா? பார்த்தால் பசு, பாய்ந்தால் புலி என்பார்களே, அது போலத்தான் அவனும் இருந்திருக்கிறான்” என்று வாய் மூடாமல் பேசலானார் முதலாளி.

மதுரநாயகம் பதில் எதுவும் கூறவில்லை. தலையைக் குனிந்தபடி தமது அறைக்குள்ளே சென்றார்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *