பர்மா ரமணி
அழ. வள்ளியப்பா

18. அவன் யார்?

அன்று காலை நேரம். மணி பத்து இருக்கும். காஞ்சிபுரத்துத் தெருவிலே ஒரு பையன் தலை தெறிக்க ஓடிக் கொண்டிருந்தான். அவன் கையிலே ஒரு பொட்டணம் இருந்தது. ஓடும் வேகத்தில் கையில் இருந்த பொட்டணம் அவிழ்ந்து, உள்ளேயிருந்த நாலு பட்டுப் புடவைகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தெருவிலே விழுந்தன. கீழே புடவைகள் விழுவதைக் கண்டதும், அவன் ஓட்டத்தை நிறுத்தினான். கீழே குனிந்து அந்தப் புடவைகளை எடுத்தான். அப்போது, “டேய், திருட்டுப் பயலே!” என்ற குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தான். அவனை நோக்கி வந்து கொண்டிருந்தார் ஒரு போலீஸ்காரர்.

போலீஸ்காரர் அவன் அருகே வந்து, அவன் கையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். ‘டேய், இதையெல்லாம் எங்கே திருடினாய்?’ என்று அவனை மிரட்டினார். “என்ன! திருட்டா! ஐயோ, என்னையா திருடன் என்கிறீர்கள்! அந்தப் பழக்கமே என்னிடத்தில் இல்லையே!”

“டேய் என்னடா நடிக்கிறாய்? வா, போலீஸ் ஸ்டேஷனுக்கு. அங்கு வந்து சப்-இன்ஸ்பெக்டரிடத்திலே உன் புளுகு மூட்டையை அவிழ்த்துவிடு.” இப்படிக் கூறிக் கொண்டே புடவைகளைப் பறித்து ஒரு கையில் வைத்துக் கொண்டு, மற்றொரு கையால் அந்தப் பையனைப் பிடித்து இழுத்தார் போலீஸ்காரர்.

“ஐயோ! நான் திருடவில்லையே! சத்தியமாக நான் திருடனில்லை. நடந்ததைக் கேளுங்கள்; தயவுசெய்து கேளுங்கள்” என்று கதறினான் அந்தப் பையன். போலீஸ்காரர் அவன் பேச்சைக் கேட்கத் தயாராக இல்லை. அவனைப் பிடித்துப் பலவந்தமாக இழுத்தார். இதற்குள் அவர்கள் இருவரையும் சுற்றிப் பெரிய கும்பல் கூடிவிட்டது.

அந்தச் சமயம் எதிரிலிருந்து ஒரு மோட்டார் கார் வந்தது. கூட்டம் வழியை மறைத்துக் கொண்டிருந்த தால், அந்தக் கார் அங்கேயே நின்றுவிட்டது. கார் நின்றதும், உள்ளேயிருந்து ஒரு மனிதர் இறங்கி வந்தார். வேடிக்கை பார்ப்பதற்காக அவர் கும்பலுக்குள் புகுந்து சென்றார். கும்பல் நடுவிலே போலீஸ்காரர் பட்டுப் புடவைகளுடன் நிற்பதைக் கண்டதும் அவர்திடுக்கிட்டார். உடனே அவர், முண்டியடித்துக் கொண்டு போலீஸ்காரரின் அருகிலே சென்றார். ‘ஏனய்யா, இந்தப் புடவைகளெல்லாம் எப்படி இங்கே வந்தன?” என்று கேட்டார்.

“எப்படி வந்தனவா! இதோ இந்தத் திருட்டுப் பயல் அமுக்கப் பார்த்தான். நானா விடுவேன்? உடும்புப் பிடியாய்ப் பிடித்துவிட்டேன்” என்று பெருமையோடு கூறினார் போலீஸ்காரர்.

உடனே அந்தப் பையன் அந்த மனிதரைப் பார்த்து, “ஐயா, ஐயா, நல்ல சமயத்திலே நீங்கள் வந்தீர்கள். உங்களுக்குத்தான் உண்மை புரியும். அந்த மண்டபத்திலே நீங்கள் இந்தப் பொட்டணத்தை மறந்து வைத்துவிட்டு மோட்டாரிலே ஏறி விட்டீர்கள் அப்போது தற்செயலாக நான் இதைப் பார்த்தேன். உடனே “சார், சார்” என்று கூவிக்கொண்டே உங்களிடம் பொட்டணத்தைப் பற்றிச் சொல்ல வந்தேன். ஆனால், நீங்கள் என் பேச்சைக் கேட்க விரும்பாமல் போய்விட்டீர்கள். ஆனாலும் நான் விடாமல், பொட்டணத்தை எடுத்துக் கொண்டு காரைப் பின் தொடர்ந்து ஓடி வந்தேன். எப்படியாவது உங்களிடம் சேர்த்துவிட வேண்டுமென்றுதான் வேகமாக வந்தேன். வழியிலே முடிச்சு அவிழ்ந்து புடவைகளெல்லாம் விழுந்துவிட்டன. நல்லது செய்யப்போக இப்படிப் பொல்லாப்பு வந்துவிட்டதே!” என்று கண் கலங்கக் கூறினான்.

இதைக் கேட்டதும், அந்த மனிதர் சிறிது நேரத்துக்கு முன்பு நடந்ததை நினைத்துப் பார்த்தார். அவர், அவருடைய மனைவி, ஐந்து வயதுப் பெண் மூவரும் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலுக்குப் போய் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, கோயிலுக்கு எதிரேயுள்ள மண்டபத்தில் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒரு மோட்டார் காரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள், சிறிது நேரத்தில் அவர்கள் எதிர்பார்த்த கார் வந்துவிட்டது. உடனே அவர்கள் மூவரும் காரில் ஏறிக் கொண்டார்கள். கார் புறப்படப் போகும் போது தான் அந்தப் பையன் “சார், சார்” என்று கூவிக் கொண்டே அருகிலே ஓடி வந்தான். அவன் பிச்சைதான் கேட்கிறான் என்று நினைத்து, ‘போடா வேலையற்றவனே!’ என்று ஏசி விட்டு. டிரைவரைப் பார்த்து ‘ம்… நீ போ, என்று அவர் உத்தரவிட்டார். கார் வேகமாகப் பறந்து சென்றது. ஆனாலும், ‘சார் சார்’ என்ற குரல் மட்டும் சிறிது நேரம் பின்னால் கேட்டுக்கொண்டேயிருந்தது. காருக்குள் இருந்த எவருமே திரும்பிப் பார்க்கவில்லை. அந்தப் பையன் பொட்டணத்தைக் கொடுக்கத்தான் “சார், சார்’ என்று கூவினான் என்பது இப்போதுதான் அவருக்குப் புரிந்தது.

உடனே அவர், “அடடா! ஆமாம் தம்பி. உன்மேல் தவறே இல்லை” என்று கூறிவிட்டுப் போலீஸ்காரரைப் பார்த்து, “ஐயா போலீஸ்காரரே, பையன் சொல்வதெல்லாம் உண்மைதான். என் சம்சாரம் மண்டபத்திலே ஒரு தூணுக்குப் பக்கத்திலே இந்தப் பொட்டணத்தை வைத்திருந்தாள். கார் வந்ததும், அவசரத்தில் அதை அவள் மறந்து போய்விட்டாள். எனக்கும் ஞாபகம் இல்லை. சற்று முன்புதான் ஞாபகம் வந்தது. உடனே காரைத் திருப்பிக்கொண்டு வந்தோம். இந்தப் பையன் மேல் குற்றமே இல்லை. குற்றமெல்லாம் எங்கள் மேல்தான்” என்றார்.

பெரிய கேஸ் ஒன்றைக் கண்டுபிடித்துவிட்டதாகப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்த போலீஸ்காரர் முகத்திலே அசடு வழிந்தது பேசாமல் புடவைகளை அந்த மனிதரிடம் கொடுத்துவிட்டு, அங்கிருந்து நழுவிவிட்டார். உடனே கூட்டமும் கலைய ஆரம்பித்தது

அந்த மனிதர், பையனைப் பார்த்து, “தம்பி, நீ இதற்காக எவ்வளவு தூரம் ஓடிவந்திருக்கிறாய்! பாவம், உன்னைப் போய்த் திருடனென்று சொன்னாரே அந்தப் போலீஸ்காரர்! நல்லகாலம், உன் கையில் கிடைக்காதிருந்தால் இதன் கதி என்ன ஆகியிருக்குமோ! நாலு புடவையும் கிட்டத் தட்ட ஆயிரம் ரூபாயாகிறது! நான் உன்னைப் பிச்சைக் காரன் என்று நினைத்து விரட்டினேன். அப்படியிருந்தும் நீ எங்களுக்கு நல்லது செய்ய முன்வந்தாய். உண்மையி லேயே நீ நல்ல பையனப்பா. சரி, வா. காரிலே நீயும் ஏறிக்கொள். எங்கள் உறவினர் வீடு நாலாவது தெருவிலே இருக்கிறது. அங்கே போய்ப் பேசிக் கொள்ளலாம்’ என்று கூறி அவனை அழைத்துக் கொண்டு காருக்கு வந்தார். காரில் உட்கார்ந்து கொண் டிருந்த தன் மனைவியிடம் நடந்ததையெல்லாம் சுருக்கமாக எடுத்துச் சொன்னார்.

அதைக் கேட்டதும், “பாவம், நல்ல பையன்” என்றாள் அவரது மனைவி.

“அடே, இந்த அண்ணா நல்ல அண்ணாதான்!” என்று கூறினாள் அவரது அருமைப் பெண்.

அந்த மனிதர் யாரென்பது தெரிய வேண்டாமா? அவரது பெயர் சிற்சபேசன். அவரது மனைவி பெயர் காமாட்சி அம்மாள். பெண் பெயர் மாலதி. அவர்களது சொந்த ஊர் மதுரை. சிற்சபேசனுக்குப் பர்மாவிலே ஏராளமான சொத்து இருக்கிறது இரண்டாவது உலக யுத்தத்துக்கு முன்பு அங்கிருந்து நிறையப் பணம் வந்து கொண்டிருந்தது. ஆனால், யுத்தம் நடந்தபோது பணம் வர வழியில்லை. யுத்தம் முடிந்த பிறகும் பர்மா நாடு சுதந்திர நாடாகி விட்டதால், இந்தியர்கள் அங்கிருந்து முன்போல் பணம் கொண்டு வராதபடி பர்மா சர்க்கார் செய்துவிட்டார்கள். ‘மாதா மாதம் நாற்பது ரூபாய் அனுப்பலாம். அதற்கு மேல் அங்கிருந்து அனுப்ப முடியாது’ என்று உத்தரவிட்டனர்.

பர்மாவில் ஏராளமான வீடுகள், நிலங்கள், நிறையப் பணம் எல்லாம் இருந்தும் இந்தியாவுக்குக் கொண்டுவர முடியவில்லையே என்று சிற்சபேசன் எண்ணினார். கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். குடும்பத்துடன் பர்மாவுக்குப் புறப்பட்டுப் போய், அங்கேயே கொஞ்ச காலம் இருப்பது என்று முடிவு செய்தார். அயல் நாட்டுக்குப் போவதென்றால் ‘பாஸ்போர்ட்’ வேண்டு மல்லவா? ஆதலால் பாஸ்போர்ட்டுக்கு ஏற்பாடு செய்யச் சென்னைக்கு எல்லோருமாக வந்தார்கள். சென்னையிலிருந்து திரும்பும்போது காஞ்சிபுரத்துக்கு வந்தார்கள். அங்கே அவர்களது நெருங்கிய உறவினர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் பார்த்துவிட்டு, பெயர் பெற்ற காஞ்சிபுரம் பட்டுச் சேலைகளையும் வாங்கிக் கொண்டு மதுரைக்குப் போகத் தீர்மானித்தார்கள்.

அன்று காலையில் உறவினருடைய காரிலே புறப்பட்டு வரதராஜப் பெருமாள் கோயிலுக்குச் சற்று முன்னாலுள்ள ஒரு பட்டு வியாபாரி வீட்டுக்கு வந்தார்கள். அங்கே இறங்கிக்கொண்டு ஏதோ ஒரு வேலையாகக் காரை அனுப்பி வைத்தார்கள். புடவைகளை வாங்கிக் கொண்டு கோயிலுக்குப் போய் சுவாமி தரிசனம் செய்து விட்டு, எதிரேயுள்ள மண்டபத்தில் காத்திருப்பதாகவும், பத்து மணி சுமாருக்குக் காரைக் கொண்டுவரும்படியும் டிரைவ ரிடம் சொல்லி அனுப்பினார் சிற்சபேசன். அப்படியே பத்து மணிக்கு கார் திரும்பி வந்தது. சுவாமி தரிசனம் செய்து விட்டுக் காத்துக்கொண்டிருந்த சிற்சபேசன் குடும்பத்தார் காரிலே ஏறிச் சென்றார்கள்.

அப்போது அவசரத்தில் மறந்து வைத்துவிட்டுப் போன புடவைப் பொட்டணம் தான் அந்தப் பையன் மூலமாக இப்போது கிடைத்தது!

புடவைகளைக் காப்பாற்றிக் கொடுத்த பட்டுப் பையனை மோட்டாரில் ஏற்றிக்கொண்டு உறவினர் வீட்டுக்குப் போனார் சிற்சபேசன். அங்கே போனதும், அவனைப் பற்றிய முழு விவரங்களையும் அவனிடமிருந்து அவர் தெரிந்துகொண்டார்.

அந்தப் பையன் யார்? வேறு யாருமல்ல; ரமணிதான்! ஆம்; ரமணியேதான்! ரமணி எப்படிக் காஞ்சிபுரத்துக்கு வந்தான்?

நாடக சபா முதலாளி அவன் பட்டுத் துணியைத் திருடி விட்டதாகக் கூறி வெளியே பிடித்துத் தள்ளினாரே, அன்றே சென்னையை விட்டு அவன் புறப்பட்டுவிட்டான். கால் போனபடி நடந்தான்; நடந்தான்; நடந்துகொண்டே யிருந்தான். நன்றாக இருட்டி விட்டது. அதற்காக அவன் நிற்கவில்லை. நல்ல பசி எடுத்தது; எதுவும் சாப்பிடவில்லை ஏதாவது வாங்கிச் சாப்பிடுவதற்குப் பணமும் இல்லை. இரவு முழுவதும் சாப்பிடாமல், நிற்காமல் நடந்தான். விடியும் சமயம், ‘நாம் எங்கே இருக்கிறோம்?’ என்று நிமிர்ந்து பார்த்தான். எதிரே பெரிய பெரிய கோபுரங்கள் தெரிந்தன. ‘இது எந்த ஊராக இருக்கும்?’ என்று யோசித்தான். சிறிது நேரத்தில் அது காஞ்சிபுரம் என்பது தெரிந்துவிட்டது.

சரிதான். ‘நாம் ஒரு புண்ணிய ஸ்தலத்துக்குத் தான் வந்திருக்கிறோம்’ என்று நினைத்து ஆறுதல் அடைந்தான். அப்போது அவனுக்கு நல்ல பசி. கையிலே காசிருந்தால் ஏதேனும் வாங்கிச் சாப்பிடலாம். ‘என்ன செய்வது?’ என்று யோசித்தான். அப்போது ஒரு ஹோட்டல் அவன் கண்ணுக்குத் தெரிந்தது. உடனே அந்த ஹோட்டலை நோக்கிச் சென்றான். தயக்கத்துடன் ஹோட்டல் முதலாளியின் அருகே போய், “ஐயா, நேற்று மத்தியானம் சாப்பிட்டது. எனக்கு ஒரே பசியாயிருக்கிறது. ஏதாவது வேலை கொடுங்கள். செய்து முடித்த பிறகு, பசி தீரக் கொஞ்சம் பலகாரம் கொடுங்கள்” என்று கெஞ்சிக் கேட்டான்.

ரமணியின் பேச்சைக் கேட்டதும், ஹோட்டல் முதலாளிக்கு ஆச்சரியமாயிருந்தது. எத்தனையோ பேர் நன்றாகச் சாப்பிட்டுவிட்டுப் பணம் கொடுக்காமலே நழுவப் பாப்பார்கள். வேறு சிலர் கையிலே காசில்லாமல் வயிறு முட்டச் சாப்பிட்டுவிட்டு அவரிடம் வந்து, ‘ஐயா, கையிலே தம்படி இல்லை பசி அபாரமாயிருந்தது. சாப்பிட்டு விட்டேன். ஏவ்…!” என்று ஏப்பம் விடுவார்கள். அவர்களைப்போல் செய்யாமல், வேலை கொடுங்கள், செய்து முடிக்கிறேன். பிறகு ஆகாரம் தாருங்கள்” என்று ரமணி கேட்டது அவருக்கு ஆச்சரியமாகவே இருந்தது.

உடனே அவர் ரமணியைப் பார்த்து, “தம்பி, உன்னைப் பார்த்தால் மிகவும் களைத்திருப்பதாகத் தெரிகிறது. முதலில் சாப்பிடு. வேலையைப் பற்றிப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்று கூறிவிட்டு, ஒரு சிப்பந்தியிடம் ரமணிக்குப் பசி தீரப் பலகாரம் கொடுக்கச் சொன்னார். நாலு இட்டலிகள் சாப்பிட்டதுமே போதும் என்று கூறி, ஒரு ‘கப்’ காப்பியைக் குடித்துவிட்டு ரமணி எழுந்திருந் தான். நேராக ஹோட்டல் முதலாளியிடம் போய், “ஐயா, சாப்பிட்டுவிட்டேன். வேலை கொடுங்கள். செய்து முடித்து விட்டுப் போகிறேன்” என்றான்.

ஹோட்டல் முதலாளிக்கு ரமணியிடம் வேலை வாங்க மனமில்லை. “இப்போது வேலை ஒன்றும் இல்லை. வேலைக்காக நான் ஆகாரம் தரவில்லை. உன் நல்ல குணத்துக்காகத்தான் தந்தேன். போய் வா!” என்று கூறினார். ரமணி அவரிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினான்.

சிறிது தூரம் சென்றதும் அவன் கண்களில் வரதராஜப் பெருமாள் கோயில் தென்பட்டது. கோயிலுக்குள் சென்று சாமி கும்பிட வேண்டுமென்று ஆசைப்பட்டான். ஆனாலும், இரவெல்லாம் நடந்துவந்ததால் களைப்பாக இருந்தது. அதனால், கோயிலுக்கு எதிரேயுள்ள மண்ட பத்தின் ஒரு தூணில் சாய்ந்து கொண்டான். சிறிது நேரத்தில் நன்றாகத் தூங்கிப் போய்விட்டான்.

தூங்கிக் கொண்டிருந்த ரமணி கண் திறந்து பார்த்தபோது தான் சிற்சபேசன், காமாட்சி அம்மாள், மாலதி மூவரும் மண்டபத்தில் நிற்பது தெரிந்தது. மண்டபத்தில் விற்ற பொம்மைகளை வாங்கி மாலதி கை நிறைய வைத்துக் கொண்டிருந்தாள். சிற்சபேசன் “இன்னும் கார் வரவில்லையே!’ என்று கூறிக்கொண்டிருந்தார்.

சிறிது நேரத்தில் கார் வந்துவிட்டது. உடனே அவர்கள் வேகமாகப் போய்க் காரிலே ஏறினார்கள். ‘ஏறும் போது அவர் மண்டபத்திலே மறந்துவைத்து விட்டுப் போன புடவைப் பொட்டணத்தைத்தான் ரமணி எடுத்துக்கொண்டு காரைப் பின்தொடர்ந்து ஓடினான்; வழியில் போலீஸ் காரரிடம் அகப்பட்டுக் கொண்டான்; கடைசியில், சிற்சபேசனால் காப்பாற்றப்பட்டான்.

ரமணி தனது வரலாறு முழுவதையும் சிற்சபேசனிடமும் காமாட்சி அம்மாளிடமும் கூறிவிட்டு, “நான் நாடக சபாவில் பட்டுத் துணியைத் திருடியதாக முதலாளி குற்றம் சாட்டினார். இங்கே, நான் பட்டுப் புடவையைத் திருடியதாகப் போலீஸ்காரர் குற்றம் சாட்டினார். அதனால் ‘பட்டு’ என்றாலே எனக்கு மிகவும் பயமாகத் தான் இருக்கிறது” என்றான்.

“பயப்படாதே! நாங்கள் இங்கு நாலைந்து நாட்கள் இருப்போம். அதுவரை நீயும் இங்கேயே இருக்கலாம்” என்று கூறி அங்கிருந்த உறவினர்களிடமும் ரமணியைப் பற்றிக் கூறினார் சிற்சபேசன். அவர்களும் அவன் மேல் இரக்கப்பட்டார்கள்.

ஒன்றிரண்டு நாட்களிலே அவன் எல்லோருடைய உள்ளத்தையும் கவர்ந்துவிட்டான். மாலதியிடத்திலே அவன் மிகவும் அன்பாக இருந்தான். மாலதியும் ‘அண்ணா அண்ணா’ என்று அவனை விட்டுப் பிரியாமல் எப்போதும் கூடவே இருந்தாள். ரமணியுடைய அன்பையும், நல்ல குணத்தையும் கண்ட சிற்சபேசனும், காமாட்சி அம்மாளும் மூன்றாவது நாளே ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள்.

சிற்சபேசன் காமாட்சி அம்மாளிடம், “இந்த ரமணி எவ்வளவு அன்பாயிருக்கிறான்! மாலதியிடத்திலே எவ்வளவு அன்பாயிருக்கிறான்! இவனைப்போல் ஒரு நல்ல பையன் கிடைப்பதே அபூர்வம். ஆகையால் இவனையும் நாம் பர்மாவுக்கு அழைத்துக்கொண்டு போனால் நமக்கும் உதவியாயிருக்கும்; இவனுக்கும் அனாதை என்ற எண்ணமில்லாமல் இருக்கும்; நமது ஊர் போலப் பர்மாவிலே இருக்கமுடியுமா? உதவி ஒத்தாசைக்கு யாராவது வேண்டும். ரமணி சிறுவனாயிருப்பதால் பர்மா பாஷையைச் சுலபமாகக் கற்றுக் கொள்வான். வெளியிலே தெருவிலே போய்வர உதவியாயிருப்பான். மாலதிக்கும் இவன் இருந்தால் சந்தோஷமாய்ப் பொழுது போகும். ஆகையாலே ரமணிக்கும் ஒரு பாஸ்போர்ட்டுக்கு ஏற்பாடு செய்துவிடலாம்” என்றார்.

காமாட்சி அம்மாளுக்கும் அது நல்ல யோசனையாகத் தோன்றியது. “ஆமாம், அதுதான் சரி. அப்படியே செய்யுங்கள். ரமணியுடைய தங்கமான குணமும், மரியாதையான நடத்தையும் எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றன” என்றாள். ரமணியிடம் இந்த விஷயத்தைச் சொன்னதும், அவனுக்கு ஒரே ஆனந்தமாயிருந்தது. ‘சரி’ என்று தலையை ஆட்டினான்.

நாலாம் நாள் அவர்கள் ரமணியை அழைத்துக் கொண்டு திருச்சிக்குப் புறப்பட்டார்கள். அங்கே சிற்சபேசனின் சித்தப்பா இருக்கிறார். அவரைப் பார்த்து விட்டு மறுநாள் காலையில் மதுரைக்குத் திரும்பினார்கள். திருச்சியில் ஒரு நாள் தங்கியிருந்தபோதுதான் ரமணி மதுரநாயகத்துக்கு ஒரு கடிதம் எழுதினான். ஆனால், அதில் அவன் விலாசம் எழுதவில்லை. அந்தக் கடிதத்திலிருந்த தபால் முத்திரை யைப் பார்த்துவிட்டுத்தான் ரமணி திருச்சியில் இருப்பதாக மதுரநாயகம் தீர்மானித்துவிட்டார்!

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *