பர்மா ரமணி
அழ. வள்ளியப்பா

24. இரவிலே பரபரப்பு

‘ரமணி கிடைத்துவிட்டான்’ என்று காமாட்சி அம்மாள், சிற்சபேசன், மாலதி எல்லோரும் ஆனந்தப் பட்டுக் கொண்டிருந்தார்களே, அதே சமயம், ‘ரமணியைக் காணோமே!’ என்று குகை முழுதும் தேடிக் கொண்டிருந்தார்கள் முரடர்கள்.

ஆம், அன்று காலையில் எழுந்ததும், தலைவன் மற்றவர்களை யெல்லாம் சத்தம் போட்டு எழுப்பினான். எல்லோரும் எழுந்து விளக்குகளை ஏற்றினார்கள். இரவிலே அடிபட்ட ரமணி அப்போது எப்படியிருக்கிறான் என்று பார்ப்பதற்காக, அவன் படுத்திருந்த பக்கம் பார்த்தான் தலைவன். அங்கு ரமணி இல்லை. “எங்கே ரமணி? காணோமே!” என்று கேட்டுக்கொண்டே அங்குமிங்கும் பார்த்தான். ரமணி தென்படவில்லை. உடனே, மற்றவர்களையும் அழைத்துக்கொண்டு குகையின் மூலை முடுக்கிலெல்லாம் தேடிப்பார்த்தான். ரமணி குகைக்குள் இருந்தால்தானே அகப்படுவான்?

ரமணியைக் காணோம் என்றதும் தலைவன் இரும்புக் கதவை நோக்கி ஓடினான். அது பூட்டியபடியே இருந்தது! உடனே, அவனுடைய ஆச்சரியம் அதிகமாகியது. “என்ன இது! அவன் எங்கே போயிருப்பான்? எப்படிப் போயிருப்பான்? மாயமாய் இருக்கிறதே!” என்று யோசித்தான்.

சுந்தரத்துக்கும் ரமணியைக் காணாதது ஆச்சரியமாகவே இருந்தது. ஆனாலும், ‘நல்லவேளை ரமணி எப்படியோ தப்பிவிட்டான்!’ என்று நினைத்துக் கொண்டு உள்ளூர ஆனந்தமடைந்தான்.

அப்போது தலைவன் சுந்தரத்தைப் பார்த்து, “ஏ, சுந்தரம்! உன் சிநேகிதன் எங்கே?” என்று மிரட்டினான்.

‘எனக்கு எப்படித் தெரியும்? நானும் உங்களைப் போல் தூங்கிக் கொண்டுதான் இருந்தேன். அவன் எங்கு போனானோ” என்றான் சுந்தரம்.

“எமன் அறியாமல் உயிர் போகாது. நிச்சயம் உனக்குத் தெரிந்துதான் இருக்க வேண்டும். உள்ளதைச் சொல். இல்லாவிட்டால், என் கோபம் உனக்குத் தெரியும்” என்றான் தலைவன்.

“தெரிந்தால்தானே சொல்லலாம்? கோபத்துக்குப் பயந்து எதையாவது உளறச் சொல்லுகிறீர்களா? அவன் போன வழி எனக்குத் தெரிந்திருந்தால், அவன் கூடவே நானும் ஓடிப்போயிருப்பேனே!” என்றான் சுந்தரம்.

தலைவன் சிறிது நேரம் யோசித்தான். பிறகு, “சரி, ஏதோ சூது நடந்திருக்கிறது” என்று கூறிக் கொண்டான். பிறகு சுப்பையாவைப் பார்த்து, “சுப்பையா! இப்போதே நீ கிளம்ப வேண்டும். செருப்புத் தைப்பவன் போல் வேஷம் போட்டுக் கொண்டு அந்த ரமணிப்பயல் வீட்டுக்கு எதிரே போய் உட்கார்ந்து கொள். செருப்புத் தைத்துக் கொண்டே ரமணி அவன் வீட்டில் இருக்கிறானா, அங்கு என்னென்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து வா. சீக்கிரம் கிளம்பு. அவன் அங்கே இருந்தால், நமக்கு ஆபத்து! நாம் இருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுத்து விடுவான்” என்று கொஞ்சம் அச்சத்தோடு கூறினான்.

“அந்தக் கவலையெல்லாம் உங்களுக்கு வேண்டாம். இதோ நான் செருப்புத் தைப்பவனைப் போல் கிளம்புகிறேன். ரமணி அங்கிருந்தால், இரவோடு இரவாக அவனைத் தூக்கி வந்துவிடுகிறேன். ஆனால், நான் திரும்பி வரும் வரையில் நீங்கள் வெளியே தலைகாட்டாதீர்கள். ஆபத்து! பேசாமல் இங்கேயே இருங்கள்” என்று கூறிவிட்டுக் கிளம்பிச் சென்றான் சுப்பையா.

அன்று முழுவதும் சுப்பையா திரும்பி வரவில்லை. மறுநாளும் வரவில்லை. தலைவன் ஒவ்வொரு நிமிஷமும் சுப்பையாவை எதிர்பார்த்துக் கொண்டேயிருந்தான்; அவன் வராததால், அவனுக்குப் பலபல சந்தேகங்கள் தோன்றின. “ஒருவேளை சுப்பையா அகப்பட்டுக்கொண்டிருப்பானோ? இருக்காது. அவன் தந்திரசாலி சமயம் பார்த்துக் கொண்டிருக்கிறான் போலிருக்கிறது. எதற்கும் நாளைக் காலை வரையில் பார்க்கலாம். இல்லாத போனால், யாரையாவது அனுப்பலாம்” என்று நினைத்தான்.

இரவு மணி சுமார் பத்து இருக்கும். குகைக் கதவு திறக்கும் சத்தம் கேட்டதும், உடனே தலைவனும், மற்றவர்களும் ஓடிப்போய்ப் பார்த்தார்கள். சுப்பையாதான் வந்து கொண்டிருந்தான். அவனைக் கண்டதும் “என்ன சுப்பையா, வெறும் கையோடு திரும்பி வருகிறாயே! அந்தப் பையனைப் பார்க்கவில்லையா?” என்று ஏமாற்றத் தோடு கேட்டான் தலைவன்.

“பார்த்தேன். அந்த பங்களாவில் தான் அவன் இருக்கிறான். ஆனால், எப்படி அங்கே போய்ச் சேர்ந்தான் என்பது யாருக்குமே தெரியவில்லை. நம்மைப் போலவே எல்லோரும் ஆச்சரியப்படுகிறார்கள். அவனை நேற்று இரவே கொண்டுவந்து விடவேண்டும் என்று நினைத்தேன். ஆனால், அவன் அப்பா மிகவும் உஷாராக இருக்கிறார். இரவெல்லாம் தூங்காமல் விழித்துக் கொண்டேயிருந்தார். இன்றைக்கும் அப்படித்தான் இருப்பார். ஆகையால், அவனை நாளை இரவே அந்த பங்களாவை விட்டுக் கிளப்புவதற்கு வேண்டிய ஏற்பாட்டை நாம் செய்யவேண்டும்” என்றான் சுப்பையா.

“என்ன ஏற்பாடு செய்வது?

“அதெல்லாம் காலையில் யோசித்துச் சொல்லுகிறேன். இரண்டு நாட்களாகப் பட்டினி. தூக்கமும் இல்லை. ஒரே களைப்பாக இருக்கிறது. சாப்பாடு இருந்தால் கொடுங்கள். சாப்பிட்டுவிட்டுத் தூங்க வேண்டும்.”

உடனே சுப்பையாவுக்குச் சாப்பாடு கொண்டு வரப் பட்டது. சுப்பையா சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, தலைவன் அவனைப் பார்த்து, “சுப்பையா, அந்தப் பையன் நாம் இருக்கும் இடத்தைப் போலீஸாரிடம் சொல்லி, நம்மைப் பிடித்துக் கொடுத்து விடுவானோ!” என்று மிகுந்த கலவரத்தோடு கேட்டான்.

“சேச்சே, அந்த வம்புக்கெல்லாம் அவர்கள் போக மாட்டார்கள். போலீஸில் சொன்னால், நம்மால் எதாவது தொந்தரவு ஏற்படும் என்று அவர்கள் பயந்து போயிருக் கிறார்கள். அவர்களாவது, போலீஸில் சொல்வதாவது!”

“அப்படியா! நல்ல காலம். சரி, சாப்பிட்டுவிட்டுத் தூங்கு. காலையில் யோசிப்போம்” என்றான் தலைவன்.

அன்று இரவு குகையில் எல்லோரும் தூங்கிக் கொண்டி ருந்தார்கள். சுந்தரமும் தூங்கிக்கொண்டுதான் இருந்தான். இரவு மணி இரண்டு இருக்கும். அப்போது ஓர் உருவம் மெதுவாக சுந்தரத்தின் அருகே வந்தது. சுற்றுமுற்றும் பார்த்துவிட்டுக் கீழே குனிந்தது. மெதுவாக சுந்தரத்தைத் தூக்கித் தோள் மேல் போட்டுக்கொண்டு அடிமேல் அடிவைத்து நடந்தது. பத்தடி தூரம்கூடப் போகவில்லை. அதற்குள் சுந்தரம் விழித்துக்கொண்டு விட்டான்.

“யாரது என்னைத் தூக்குவது?” என்று உரத்த குரலில் கேட்டான்.

சத்தத்தைக் கேட்டதும், தலைவன் திடுக்கிட்டு எழுந்தான். சத்தம் வந்த திசையைப் பார்த்தான். அதற்குள் ‘தடதட’வென்று யாரோ ஓடுவது தெரிந்தது. உடனே சுந்தரம் படுத்திருந்த இடத்தைத் தலைவன் பார்த்தான். சுந்தரத்தைக் காணோம்

“ஆ! சுந்தரத்தையும் பறிகொடுத்து விட்டோம்! என்று கூறிவிட்டு, “டேய், டேய். எழுந்திருங்கள். ஆபத்து!” என்று கத்தினான். உடனே எல்லோரும் திடுக்கிட்டு எழுந்தார்கள். “எவனோ சுந்தரத்தைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறான். வாருங்கள். விடக்கூடாது அவனை” என்று கூறிக்கொண்டே தலைவன் முன்னால் வேகமாக ஓடினான். மற்றவர்களும் பின்தொடர்ந்து ஓடினார்கள். குகைக் கதவு ‘ஆ’வென்று திறந்து கிடந்தது. அதைக் கடந்து எல்லோரும் வெளியில் வந்து பார்த்தார்கள். சுந்தரத்தைத் தூக்கிக்கொண்டு யாரோ ஓடுவது தெரிந்தது. மங்கலான நிலா வெளிச்சத்தில் அவன் யாரென்பது சரியாகத் தெரியவில்லை. தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்த அவனைக் கண்டதும், “அயோக்கியன்! இவன் தான் ரமணியையும் தூக்கிச் சென்றிருப்பான். இவனைச் சும்மா விடக்கூடாது. உம், வாருங்கள், வாருங்கள்” என்று கூறிக் கொண்டே தலைவன் அவனைத் துரத்தினான். மற்றவர்களும் துரத்தினார்கள்.

சுந்தரத்தைத் தூக்கிச் சென்றவன் ஓட்டத்திலே பெரிய புலியாயிருக்க வேண்டும். இல்லாத போனால் சுந்தரத்தையும் தூக்கிக்கொண்டு அவ்வளவு வேகமாக ஓடமுடியுமா? கரடு முரடான காட்டுப் பாதையிலும் அவன் காற்றாய்ப் பறந்து சென்றான். முரடர்களும் விடவில்லை. துரத்திக் கொண்டே ஓடினார்கள்.

சுமார் ஒரு மணி நேரம் அப்படி ஓடியிருப்பார்கள். போகப்போக, சுந்தரத்தைத் தூக்கிச் சென்றவனுடைய வேகம் குறைய ஆரம்பித்தது! ஆரம்பத்தில் அவனுக்கும், மற்றவர்களுக்கும் இடையே இரண்டு பர்லாங்கு தூரம் வித்தியாசமிருந்தது. ஆனால், அந்த வித்தியாசம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே வந்தது. இன்னும் சிறிது நேரத்தில் அவன் பிடிபட்டுவிடுவான் என்றே முரடர்கள் நினைத்தார்கள். நினைத்ததோடு விடவில்லை; வழியிலே கிடந்த கற்களை எடுத்து அவனைக் குறிபார்த்து எறியவும் ஆரம்பித்தார்கள். அவனுடைய முதுகிலும், பின் கால்களிலும், கற்களைப் பலமாக எறிந்து அவனுக்குக் காயம் உண்டாக்கினார்கள். கல்லடி விழும்போதெல்லாம் அவன் பல்லை இறுகக் கடித்துக் கொள்வான். சில சமயங்களில், ‘உஸ்’, அப்பா’ என்று முணுமுணுப்பான். ஆனாலும், ஓட்டத்தை நிறுத்தவில்லை. சுந்தரத்தின் மீது அடிபட்டு விடக்கூடாதே என்று அவனை மார்போடு அணைத்துக்கொண்டு இரைக்க இரைக்க வேகமாக ஓடினான். அப்போது சுந்தரம், “இந்த மனிதர் நம்மைக் காப்பாற்றத்தான் குகைக்குள் வந்திருக்கிறார். சந்தர்ப்பம் தெரியாமல் யார் தூக்குவது?” என்று கேட்டுக் காரியத்தைக் கெடுத்து விட்டேனே! ஐயோ! என்னால் இவருக்கு எவ்வளவு சிரமங்கள்! பாவம், அந்த முரடர்கள் கல்லால் அடிக்கிறார்கள். ஆனாலும், இவர் நிற்கவில்லை! என்னை எவ்வளவு பத்திரமாகத் தூக்கிச் செல்கிறார்! ரமணியையும் இவர் தான் காப்பாற்றியிருக்க வேண்டும்… இவ்வளவு நல்ல மனிதர் யாராயிருக்கும்? உற்றுப் பார்த்தால், தாடியும் மீசையும் தான் தெரிகின்றன. ஆள் அடையாளம் தெரியவில்லையே!” என்றெல்லாம் நினைத்தான்.

அதே சமயம், “ஐயோ! முரடர்கள் நெருங்கிவிட்டார்கள் போலிருக்கிறதே! என்ன ஆகுமோ! எப்படி ஆகுமோ!’ என்று நடுநடுங்கினான்.

ஒருவழியாகக் காட்டைக் கடந்து மாந்தலேக்குச் செல்லும் பெரிய சாலைக்கு வந்துவிட்டான் அந்த மனிதன். அப்போது அவனுக்கும் முரடர் தலைவனுக்கும் இடையில் நூறடி தூரம்கூட இல்லை. “இதோ ஒரு நொடியில் அவர்களைப் பிடித்து விடுகிறேன்” என்று கூறிக்கொண்டே தலைவன் வெகு வேகமாக நெருங்கினான். அதேசமயம் ‘பாம் பாம்’ என்ற சப்தத்துடன் சிறிது தூரத்தில் ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. லாரியைக் கண்டதும், சுந்தரமும் அந்த மனிதனும் “இனித் தப்பிவிடலாம்’ என்ற நம்பிக்கையைப் பெற்றார்கள். ஆனால் முரடர் தலைவனோ, ‘நாசமாய்ப் போகிற லாரி இந்த நல்ல சமயத்திலா வரவேண்டும்?” என்று ஆத்திரப் பட்டான். அந்த ஆத்திரத்தில் அவன் தன் கையிலிருந்த ஒரு கூரான கல்லை அந்த மனிதனின் தலையைக் குறி பார்த்து எறிந்தான்; எறிந்துவிட்டுத் திரும்பி ஓடிவிட்டான். அவன் எறிந்த கல் குறி தவறாமல் அந்த மனிதனின் தலையைப் பலமாகத் தாக்கியது. மறுநிமிஷம், ஆ!’ என்று கத்திக் கொண்டே சுந்தரத்தைப் போட்டுவிட்டுத் ‘தொப்’பென்று கீழே விழுந்தான் அவன்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *