
பர்மா ரமணி
அழ. வள்ளியப்பா
11. கடிதம் வந்தது!
அவர்கள் போன பிறகு மதுரநாயகம் தன்னுடைய அறையில் உட்கார்ந்தபடியே, “ரமணி குற்றமற்றவன்; மிகவும் யோக்கியமானவன் என்பது தெளிவாகி விட்டது. ஆனாலும், இப்போது அவன் எங்கே இருக்கிறானோ! கடவுளே! அவன் உயிரோடு இருக்க வேண்டும் சுகமாக இருக்க வேண்டும்” என்று கூறிக் கொண்டே வலது பக்கத்துச் சுவரில் மாட்டப்பட்டிருந்த கிருஷ்ணன் படத்தைப் பார்த்துக் கும்பிட்டார்.
அப்போது, “சார், இதெல்லாம் உங்களுக்கு” என்று சொல்லி மேஜைமேல் மூன்று கடிதங்களை வைத்துச் சென்றான் ஒரு வேலைக்காரன்.
மதுரநாயகம் ஒவ்வொரு கடிதமாகப் பார்த்துக் கொண்டே வந்தார். ஒரு கடிதம் அவரது நண்பர் ஒருவர் குற்றாலத்திலிருந்து எழுதியது. மற்றொன்று திருச்சியிலிருந்து அவருடைய அக்கா எழுதியது. மூன்றாவது கடிதத்தை எடுத்ததும் மேலேயிருந்த விலாசத்தைப் பார்த்தார். ‘உயர்திரு. டி.வி.மதுரநாயகம் அவர்கள்’ என்று மிகவும் மரியாதையாக எழுதப்பட்டிருந்தது. “யாரது இவ்வளவு மரியாதையாக எழுதியிருப்பது!” என்று கேட்டுக்கொண்டே உறையைக் கிழித்தார்; உள்ளேயிருந்த கடிதத்தை எடுத்தார். படித்துப் பார்த்தார். படிக்கும் போதே அவருடைய முகத்தில் பிரகாசம் தோன்றியது. படித்து முடித்ததும், உள்ளத்தில் ஆனந்தம் பொங்கியது. உடனே அவர் விருட்டென்று இடத்தைவிட்டு எழுந் தார். முதலாளி அறையை நோக்கி அந்தக் கடிதத்துடன் வேகமாகச் சென்றார்.
“சார், சார்! இந்தக் கடிதத்தைப் பாருங்கள் சார்; படித்துப் பாருங்கள் சார்!” என்று குதூகலமாகக் கூறிக் கொண்டே முதலாளியிடம் அந்தக் கடிதத்தைக் கொடுத்தார். முதலாளியும் பரபரப்புடன் அக்கடிதத்தை வாங்கிப் படிக்கத் தொடங்கினார்!
முதல் இரண்டு வரிகளைப் படித்ததும், “அடடே, ரமணி எழுதியிருக்கிறானே! என்ன எழுதியிருக்கிறான்?” என்று கூறிக்கொண்டே மேலும் ஆவலோடு படிக்க ஆரம்பித்தார்:
“அன்பே உருவான மானேஜர் ஸார் அவர்களுக்குப் பணிவான வணக்கம்.
அனாதையாகத் திரிந்த என்னை ஆபத்திலிருந்து காப்பாற்றினீர்கள். நாடக சபாவில் வேலைக்கு அமர்த்தினீர்கள். ஆறு மாதமாக வேளா வேளைக்குச் சாப்பாடு போட்டு அன்பாக, அருமையாக வளர்த்தீர்கள். இப்படிப்பட்ட உயர்ந்த குணம் படைத்த உங்களிடம் கடைசியாக நான் ஒரு வார்த்தையைக் கூடச் சொல்லாமல் வந்து விட்டேன். இதை நினைக்க நினைக்க என் நெஞ்சம் மிகவும் வேதனைப்படுகிறது.
நான் பட்டுத் துணியைத் திருடி ஒளித்து வைத்ததை நேரில் பார்த்ததாகத் திரை இழுக்கும் துரைசாமி கூறினார். அவருக்கும் எனக்கும் எவ்வித விரோதமும் இல்லை. அவர் ஏன் அப்படிக் கூறினார் என்பதே எனக்குப் புரியவில்லை! என் குணத்தை நீங்கள் நன்றாக அறிந்தவர்கள்; அதனால், நான் திருடவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், மற்றவர்களுக்கு எப்படி நிரூபித்துக் காட்டுவது? அதற்கு வழியில்லாததால் நான் திருட்டுப் பட்டம் பெற வேண்டியதாயிற்று!
முதலாளி அவர்கள் என்னை வெளியே பிடித்துத் தள்ளினார்கள். அதற்காக நான் அவர்கள் மீது கோபப்பட வில்லை; ஆத்திரப்படவும் இல்லை. நாடக சபாவில் பல விலை உயர்ந்த சாமான்கள் இருக்கின்றன. அதனால் ஒருவன் மேல் சந்தேகம் ஏற்பட்ட பிறகு, அவனை வைத்துக்கொள்ள மனம் இடம் தராது. அதனால் தான் முதலாளியவர்கள் என்னை வெளியேற்றியிருக்கிறார்கள். அவர்கள் மீது தவறில்லை சந்தர்ப்பம் என்னைத் திருடனாக்கி விட்டது. ஆனாலும், உண்மையிலே நான் திருடன் அல்ல என்பதை எல்லாரும் அறிய வேண்டும். அறியக்கூடிய காலம் சீக்கிரம் வரவேண்டும் என்ற ஒரே ஒரு ஆசைதான் இப்போது எனக்கு இருக்கிறது.
நான் வேலையில் இருக்கும் போதாவது எனக்குக் கிடைத்த சிறு தொகையாகிய பத்து ரூபாயைத் தங்களிடம் கொடுத்துவிட்டு, வயிறாரச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். இனி அந்தப் பத்து ரூபாய்க்கும் வழியில்லை! உங்களுக்குப் பாரமாகவே இருக்க வேண்டும். அதை நான் விரும்பவில்லை. அன்று இரவு நான் உங்களைப் பார்த்திருந்தால் நீங்கள் நிச்சயமாக என்னைப் போக விடமாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். அதனால் தான் தங்களிடம் சொல்லிக் கொள்ளாமலே வந்து விட்டேன். நான் திருடன் அல்ல என்பது தெளிவாகும் வரை பட்டணத்தில் இருக்கக்கூடாது என்று தீர்மானித்தேன். கால் போனபடி நடந்தேன். சிறிது தூரம் சென்றதும், ‘இவ்வளவு நாட்களாக நமக்கு உணவு தந்த அம்மாளிடம் சொல்லாமல் வந்துவிட்டோமே!’ என்று நினைத்து வீட்டுக்குச் சென்றேன். ஆனால், அவர்களிடம் எதுவும் சொல்லவில்லை. சொல்ல ஆரம்பித்தால் நேரமாகும்; நீங்களும் வந்து விடுவீர்கள். அப்புறம், என்னைப் போக விடமாட்டீர்கள் என்று நான் நினைத்தேன். நீங்கள் தீபாவளிக்கு வாங்கித் தந்த புதுச் சட்டையை அன்று நான் அணிந்திருந்தேன். அதை அறையில் கழற்றிப் போட்டுவிட்டு, நான் முதன்முதலில் உங்களிடம் வந்த போது அணிந்திருந்த பழைய சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு உடனே திரும்பிவிட்டேன்.
அனாதைக்குப் புதுச் சட்டை எதற்கு?
இவ்வளவு நாட்களாக நான் நாணயமாகவே நடந்து வந்திருக்கிறேன். கடவுள் கிருபையால் இனியும் நாணய மாகவே நடக்க விரும்புகிறேன். என்னை இவ்வளவு காலமாக ஆதரித்து வந்த நாடக சபா முதலாளி அவர் களுக்கும், உங்களுக்கும், அம்மாளுக்கும் என் பணிவான வணக்கங்கள். மனமார்ந்த நன்றி.
தங்கள் அன்புள்ள,
ரமணி.
கடிதத்தைப் படிக்கும் போதே மோகனரங்கத்தின் முகத்தில் பலவித உணர்ச்சிகள் மாறி மாறித் தோன்றின. படித்து முடித்ததும், கடிதத்தை இப்படியும் அப்படியுமாகத் திருப்பித் திருப்பிப் பார்த்தார். எதையோ அதில் தேடினார். பிறகு “என்ன இது! இக்கடிதத்தி லிருந்து ரமணி எங்கே இருக்கிறான் என்று கண்டு பிடிக்க முடியாது போலிருக் கிறதே! இதில் விலாசத்தையே காணோமே!” என்றார்.
‘அடே! விலாசமே இல்லையா! எனக்கிருந்த ஆனந்தத்தில் அதைக்கூடக் கவனிக்கவில்லை” என்று கூறிவிட்டுக் கடிதத்தை வாங்கி மதுரநாயகமும் பார்த்தார். விலாசம் இல்லை. உடனே அவர் தம்முடைய அறைக்கு ஓடினார், கிழித்துப் போட்ட உறையைத் தரையிலிருந்து எடுத்தார். அதில் ரமணியின் விலாசம் இருக்கிறதா என்று இருபுறமும் பார்த்தார். காணோம்! உடனே, ‘எந்த ஊரிலிருந்து எழுதியிருக்கிறான்! அதையாவது தெரிந்து கொள்ளலாம்’ என்று நினைத்துக் கொண்டே தபால் முத்திரையைப் பார்த்தார். தெப்பக்குளம் என்றிருந்தது. உடனே அதை எடுத்துக் கொண்டு முதலாளியிடம் ஓடினார்.
“திருச்சியிலிருந்துதான் அவன் இதை எழுதியிருக்கிறான். இதோ தெப்பக்குளம் தபால் முத்திரை இருக்கிறது” என்று கூறினார்.
“என்ன! அவன் திருச்சியிலா இருக்கிறான்! அங்கே அவனுக்கு யார் இருக்கிறார்கள்?” என்று வியப்புடன் கேட்டார் மோகனரங்கம்.
“யாருமே இருப்பதாகத் தெரிவில்லை. உற்றார் உறவினர் ஒருவருமே இல்லை என்று அவன் அடிக்கடி. சொல்லுவானே!” என்று கூறினார் நாடக சபா மானேஜர் மதுரநாயகம்.
“பின்னே எதற்காக அங்கே போனான்? எப்படிப் போயிருப்பான்? ரயிலில் காசு கொடுக்காமலே அவன் போயிருப்பானோ….?”
“சேச்சே. அப்படி ரமணி ஒரு நாளும் செய்யமாட்டான். நடந்தே போனாலும் போவானே தவிர, பிறரை ஏமாற்ற நினைக்கமாட்டான்” என்று உறுதியாகச் சொன்னார் மதுரநாயகம்.
“சரி, சாப்பாட்டுக்கு இத்தனை நாள் வரை என்ன செய்திருப்பான்? அவனோ சிறு பையன். பட்டினி கிடக்க முடியுமா? ஒரு மணி நேரம் தாமதமானால் கூட என்னால் பசியை அடக்க முடியவில்லையே!”
“பாவம், அவன் போய் ஒரு வாரம் ஆகிறதே. என்ன பாடு படுகிறானோ எப்படித் துடிதுடிக்கிறானோ!”
“ரமணி தங்கமான பையன். அப்போதே இரண்டு மூன்று நாட்கள் பொறுத்துப் பார்க்கலாம் என்று சொன்னீர்கள். மிகவும் அவசரப்பட்டு விட்டேன். அவன் இப்போது பட்டினி கிடந்தால் அந்தப் பாவம் என்னைத் தானே சேரும்?… மதுரநாயகம், அவன் இப்போது திருச்சியில் தான் இருப்பான். இல்லையா?” என்று கேட்டார்.
“அங்கேதான் இருக்க வேண்டும். அதுவும் ஒரு பெரிய நகரம். அங்கு ஏதேனும் வேலை கிடைக்குமா என்று தேடிப் பார்த்துக் கொண்டிருப்பான். ஆனாலும் சுலபத்திலே வேலை கிடைத்துவிடுமா? அவனுடைய தங்கமான குணத்தைப் பற்றிப் பிறருக்கு எங்கே தெரியப் போகிறது?”
‘இவ்வளவு நாள் பழகிய நமக்கே தெரியாமல் போய் விட்டதே!… அவனைப் போல் ஒரு பையன் கிடைக்கவே மாட்டான். அவனை எப்படியாவது திரும்பவும் இங்கே கொண்டு வந்துவிடவேண்டும். ஆனால் ஆபீஸ் பையனாக வேண்டாம்; உங்களுக்கு உதவியாக இருக்கட்டும். சம்பளமும் அதிகமாகக் கொடுக்கலாம்.”
“அது சரி, இப்போது அவனை எப்படிக் கண்டுபிடிப்பது?, ம்… எனக்கு ஒரு யோசனை தோன்று கிறது. அதன்படி செய்தால்…?”
“அது என்ன யோசனை? சொல்லுங்கள், சொல்லுங்கள். சீக்கிரம் சொல்லுங்கள்” என்று மிகுந்த ஆவலுடன் கேட்டார் முதலாளி.
“இன்று இரவு நாடகம் முடிந்தவுடனே நான் திருச்சிக்குப் புறப்பட்டுப் போகிறேன். எப்படியும்- ரமணியை நாளைக்குள் கண்டுபிடித்துக் கையோடு அழைத்து வந்து விடுகிறேன்” என்ற ஆர்வத்தோடு சொன்னார் மானேஜர் மதுரநாயகம்.
“நீங்களே நேரில் போனால் நல்லதுதான். இருந்தாலும்…” என்று இழுத்தார் மோகனரங்கம்.
“ஏன்? நான் தான் நாளை இரவே திரும்பிவிடப் போகிறேனே!”
“திருச்சியிலே அவன் எந்த இடத்தில் இருக்கிறான் என்பது நிச்சயமாகத் தெரிந்தால், அவனை அழைத்துக் கொண்டு மறு ரயிலிலே திரும்பி வந்துவிடலாம். ஆனால், தேடியல்லவா கண்டுபிடிக்க வேண்டும்? நாளையே திரும்பி வந்துவிட முடியுமா? சந்தேகம்தான். கூட இரண்டு நாட்கள் ஆனாலும் ஆகும். ஒரு வேளை, ஒரு வாரம் தங்க வேண்டியது வந்தாலும் வரலாம். நீங்கள் போய்விட்டால், நாடகம் எப்படி நடக்கும் என்பதுதான் எனக்குக் கவலையாயிருக்கிறது. மேலும், சீனாவிலிருந்து வருகிறார்களே ஒரு தூது கோஷ்டியார், அவர்கள் நமது குழந்தைகளின் நடிப்பைப் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இது என் ஆசை. நீங்கள் இல்லாத போனால், இந்த ஆசை நிறைவேறுமா? அதுதான் யோசிக்கிறேன்!”
இதைக்கேட்டதும் மதுரநாயகம் சிறிது நேரம் யோசனை செய்தார். பிறகு, “சரி, அப்படியானால் எனக்கு இன்னொரு யோசனை தோன்றுகிறது. அதன்படி செய்தால்…?” என்றார்.
‘அது என்ன யோசனை?’
“என் அத்தான் தான் திருச்சியில் இருக்கிறாரே! அவருக்கு ரமணியின் அடையாளங்களையெல்லாம் விவரமாக எழுதித் திருச்சி முழுவதும் அவனைத் தேடிப் பார்க்கச் சொன்னால்…?”
“…கிடைத்துவிடுவான் என்கிறீர்கள். சபாஷ்! இப்போதே அவருக்கு ஒரு கடிதம் போடுங்கள். கையோடு எழுதி விடுங்கள். இதனால், அவருக்குக் கொஞ்சம் செலவு வரலாம்; பரவாயில்லை. அதையும் நாம் கொடுத்து விடலாம்.”
அன்று மத்தியானம் மதுரநாயகம் சாப்பிடுவதற்காக வீட்டுக்குச் சென்றார். வீட்டிற்குள் நுழையும் போதே, “கமலா! கமலா!” என்று ஆனந்தமாகக் கூப்பிட்டுக் கொண்டே சென்றார்.
“என்ன விஷயம்! நேற்றைக்கு ஒருவர் உங்கள் நாடகத்தைப் பார்க்க வந்தார். அவர் இன்றைக்கு நேரிலே வந்து உங்களை வானளாவப் புகழ ஆரம்பித்து விட்டார். அப்படித்தானே!’
“அது கிடக்கட்டும். அதைவிட இது மிகவும் முக்கியமான விஷயம். ரமணியைப் பற்றி இல்லாததையும், பொல்லாததையும் இவ்வளவு நாளாகச் சொல்லிக் கொண்டிருந்தாயே, அதெல்லாம் எவ்வளவு அநியாயம்! அவன் பட்டுத் துணியை எடுக்கவில்லை என்பது இப்போது நூற்றுக்கு நூறு உண்மையாகி விட்டது
“என்ன ! இதெல்லாம் உண்மைதானா?” என்று சந்தேகத்துடன் கேட்டாள் கமலாதேவி.
“சத்தியம்கூடப் பண்ணச் சொல்லுவாய் போலிருக் கிறதே! இதனால் தான் நேற்று ராத்திரியே இதைப்பற்றி உன்னிடத்திலே சொல்லவில்லை. இல்லாது போனால், அந்தக் கோவிந்தன் சொன்னதையெல்லாம் அப்படியே உன்னிடத்திலே சொல்லியிருக்க மாட்டேனா?’
“கோவிந்தனா! அவன் யார்? என்ன சொன்னான்?”
“நாடகக் கொட்டகையிலே வெற்றிலை பாக்குக் கடை வைத்திருக்கிறாரே, அவருடைய மகன் தான் கோவிந்தன் அவன் நேற்று ராத்திரி நீ சாப்பிடுகிற போது வந்து கதவைத் தட்டினான். கதவைத் திறந்து “என்ன விஷயம்?” என்று கேட்டேன். அவன், ரமணியை விரட்ட ஸ்ரீகண்டனும் துரைசாமியும் செய்த சூழ்ச்சியை என்னிடம் ரகசியமாகச் சொன்னான்.’
‘அவன் வந்ததாக என்னிடத்திலே நீங்கள் சொல்லவே இல்லையே!’
“சொல்லி என்ன பிரயோசனம்? நீதான் பெரிய சந்தேகப் பிராணியாயிற்றே!” என்றார் மதுரநாயகம்.
“அவன் என்ன சொன்னான்? விவரமாய்ச் சொல்லுங்களேன்.”
மதுரநாயகம் நடந்தது முழுவதையும் ஒன்றுவிடாமல் கமலாதேவியிடம் விரிவாக எடுத்துச் சொன்னார். அதோடு, “இப்போது ரமணியைப் பற்றி முதலாளி என்ன தெரியுமா சொல்லுகிறார்? அவன் எங்கிருந்தாலும் உடனே வரவழைக்க வேண்டுமாம். அவனுக்கு நிறையச் சம்பளம் கொடுத்து, உயர்ந்த உத்தியோகமும் கொடுக்க வேண்டுமாம். அப்போதுதான் அவருடைய மனம் ஆறுதல் அடையுமாம்” என்றார்.
முழுவதையும் கேட்ட கமலாதேவி, “அடடே, அப்படியா விஷயம்? நானும் அவசரப்பட்டுவிட்டேன். யோசித்துப் பார்க்கும் போது ரமணி மேல் எந்தவிதமான குற்றமும் இல்லை என்றே தெரிகிறது. அன்று நீங்கள் எவ்வளவோ சொன்னீர்கள். கேட்காமல் போனேன். ஆமாம், இப்போது ரமணி எங்கே இருக்கிறான்? அவனைப்பற்றி ஏதாவது தகவல் தெரியுமா?” என்றாள்.
“கடவுள் அருளால் ரமணி உயிரோடுதான் இருக்கிறான். இதோ பார். அவன் தன் கைப்படக் கடிதம் எழுதி யிருக்கிறான். இது திருச்சியிலிருந்து வந்திருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. ஆனால், விலாசம்தான் தெரியவில்லை!” என்று கூறிக் கடிதத்தைக் கமலாதேவி யிடம் கொடுத்தார் மதுரநாயகம்.
கமலாதேவி அதை வாங்கி அவசரம் அவசரமாகப் பிரித்துப் படித்தாள். படித்து முடித்ததும், ‘அடே தீபாவளிக்கு நாம் தைத்துக் கொடுத்த சட்டையைக் கழற்றிப் போட்டுவிட்டு, அவனுடைய பழைய சட்டையைப் போட்டுக்கொள்ளத்தான், அவன் அன்றைக்குச் சாயங்காலம் வந்திருக்கிறான். இது தெரியாமல் நான் வீணாகச் சந்தேகப்பட்டு விட்டேன். நான் இவ்வளவு கெடுதல் செய்தும் ரமணி என்னை மறக்கவில்லை. என்னைப் பற்றியும் கடிதத்தில் எழுதியிருக்கிறான். அவனுக்குத்தான் எவ்வளவு பரந்த எண்ணம்?” என்று கண் கலங்கக் கூறினாள் கமலாதேவி. “சரி கமலா, நடந்ததை நினைத்து வருந்துவதில் என்ன பயன்! இப்போது அவனைத் தேடிக் கண்டுபிடித்தால் தான் எனக்கு நிம்மதி”
“திருச்சியில் தானே இருப்பதாகச் சொல்லுகிறீர்கள்! நாமும் திருச்சிக்குப் போய் வெகு நாளாகிறது. உங்கள் அக்காளும்தான் அடிக்கடி வரச் சொல்லிக் கடிதம் போடுகிறார்களே! இன்றைக்கே புறப்பட்டுப் போவோம். ரமணியைக் கண்டுபிடித்து அழைத்து வருவோம்… என்ன, யோசிக்கிறீர்கள்?”
“எனக்கும் அந்த மாதிரி ஒரு எண்ணம் முதலிலே இருந்தது. ஆனாலும், இப்போது போக முடியாது போலிருக்கிறது. சீனாவிலிருந்து ஒரு தூதுகோஷ்டி டில்லிக்கு வந்திருக்கிறது. அடுத்த வாரம் இந்தப் பட்டணத்துக்கும் வருகிறது. அந்தக் கோஷ்டியில் நடிகர்கள், நாட்டியக்காரர்கள் எல்லோரும் இருக்கிறார்களாம். அவர்களை அழைத்துக் குழந்தைகளின் நடிப்பைக் காட்ட வேண்டும் என்பது முதலாளியின் ஆசை. எனக்கும் ஆசைதான். நாடகத்தைப்பார்க்க அவர்களுக்கு எப்போது சௌகரியப்படும் என்பதை இன்னும் ஒன்றிரண்டு நாட்களுக்குள் தெரிந்துகொள்ள வேண்டும். பிறகு அவர்களை வரவேற்க மிகப் பிர மாதமான ஏற்பாடுகளெல்லாம் செய்யவேண்டும். இந்தச் சமயம் நான் இல்லாது போனால் நன்றாயிருக்குமா? இது என் கடமையல்லவா?”
“அப்படியானால், அந்தத் தூது கோஷ்டி நாடகத்தைப் பார்த்துவிட்டுப் போன பிறகுதான், நாம் திருச்சிக்குப் போக வேண்டுமா?”
“அதுவரை ரமணி திருச்சியிலே இருக்கிறானோ என்னவோ! இதை உத்தேசித்துத்தான் என் அத்தானுக்கு விவரமாக ஒரு கடிதம் எழுதி ரமணியைக் கண்டுபிடிக்கச் சொல்லியிருக்கிறேன். அவர் நிச்சயம் கண்டுபிடித்து விடுவார். கடவுள் கிருபையால் அவன் கிடைத்து விடுவான்.”
“ஓஹோ! உங்கள் அத்தானுக்கு எழுதிவிட்டீர்களா! சரி, ஒரு வாரம் பொறுத்துப் பார்ப்போம்” என்று கூறினாள் கமலாதேவி.



