பர்மா ரமணி
அழ. வள்ளியப்பா

1. அவசரம்! அவசரம்!


“சரோஜா, நேற்று ராத்திரி நடந்ததெல்லாம் அப்படி அப்படியே என் கண் முன்னாலே நிற்கிறது. அந்த ஜெயில் பூட்டு எப்படிப் ‘படீர்’ என்று தானாக உடைந்தது! அந்த ஆற்றின் நடுவே எப்படித் ‘திடீ’ரென்று பாதை உண்டாயிற்று! இன்னும்…”

“இன்னும் கடமுட கடமுட’ என்று எப்படி இடி இடித்தது! ‘பளிச் பளிச்’சென்று எப்படி மின்னல் மின்னியது! ‘உஸ்ஸ்’ என்று சீறிக்கொண்டு எப்படி அந்தப் பாம்பு படம் எடுத்து ஆடி வந்தது! இதை யெல்லாம் பார்க்கப் பார்க்க அற்புதமாகத்தான் இருந் தது, அண்ணா!”

“ஆமாம், சரோஜா! இன்னொரு தடவைகூடப் பார்க்க வேணும் போலே இருக்கிறது.”

“எனக்கும்தான், அண்ணா! அப்பாவிடம் சொல்லிக் கட்டாயம் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிட வேண்டும்.”

“ஏண்டி சரோஜா, எதைக் கட்டாயம் போய்ப் பார்க்க வேணும்? மிருகக்காட்சி சாலையிலே புதிதாய் வந்திருக்குதே காண்டா மிருகம், அதைத்தானே?” என்று கேட்டுக் கொண்டே அப்போது அங்கே வந்தாள், சரோஜாவின் சினேகிதி சகுந்தலா.

இதைக் கேட்டதும், சரோஜாவும் அவள் அண்ணன் முரளியும் கடகட வென்று சிரிக்க ஆரம்பித்தனர். பிறகு, சரோஜா சகுந்தலாவைப் பார்த்து, “காண்டா மிருகத்தைப் பற்றியோ, கரடிக் குட்டியைப் பற்றியோ நாங்கள் பேசவில்லை, சகுந்தலா. தேவேந்திரா தியேட்டரில் நடக்கிறதே ‘கிருஷ்ண லீலா’, அந்த நாடகத்தைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருந்தோம். அந்த நாடகத்திலே ஒவ்வொரு காட்சியும் எப்படித் தெரியுமா இருக்குது? அடடா! அதிலே கிருஷ்ணனாக நடிக்கிறான் ஒரு சின்னப் பையன். அவன் நடிப்பைப் பற்றி எப்படிச்சொல்வதென்றே தெரியவில்லை!” என்றாள்.

“அவன் மட்டும்தான் பிரமாதமாக நடிக்கிறானோ! அந்தக் கொட்டகையே கிடுகிடுக்கும்படி ராவணனாக நடித்தானே ஒரு பையன்…”

இப்படி முரளி சொன்னதும், சரோஜாவும் சகுந்தலாவும் சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

“ஏன் இப்படிப் பல்லைக் காட்டுகிறீர்கள்?” என்று சற்றுக் கோபமாகக் கேட்டான் முரளி.

“என்ன அண்ணா, ‘கிருஷ்ண லீலா’விலே ராவணன் எங்கே வந்தான்?” என்று சிரித்துக்கொண்டே கேட்டாள் சரோஜா.

“ப்பூ! கம்ஸன் என்பதற்குப் பதில் வாய் தவறிச் சொல்லிவிட்டேன். அதுக்கா இந்த அசட்டுச் சிரிப்பு!” என்றான் முரளி.

“சரி, அது போகட்டும். ஏன் முரளி, எத்தனை மணிக்கு ‘கிருஷ்ண லீலா’ ஆரம்பமாகிறது?” என்று கேட்டாள் சகுந்தலா.

“சரியாக ஆறு மணிக்கு ஆரம்பமாகும். எட்டு மணிக்கு முடியும்.”

“அப்படியா! சரி, இதோ இப்போதே என் அப்பாவிடம் சொல்லி இன்றைக்கே கிருஷ்ண லீலா வைப் பார்த்துவிட்டு வருகிறேன். பார்த்த பிறகு உங்களோடே பேசினால் தான் சுவாரஸ்யப்படும்” என்று கூறிவிட்டு வந்த வழியே ஓடினாள் சகுந்தலா.

“அண்ணா, நாமும் அப்பாவிடம் சொல்லி இன்னொரு தடவை கட்டாயம் அந்த நாடகத்தைப் பார்த்துவிட வேண்டும்” என்றாள் சரோஜா.

இப்படி சரோஜாவும் முரளியும் தான் நாடகத்தைப் பற்றிப் பேசுவதாக நினைக்க வேண்டாம்! சென்னை நகர் முழுவதும் அதைப் பற்றியே பேச்சு! தினமும் ஆயிரக் கணக்கான குழந்தைகளும், பெரியவர்களும் கூட்டம் கூட்டமாகச் சென்று அந்த நாடகத்தைப் பார்க்கிறார்கள். பார்த்துவிட்டுச் சும்மா திரும்பி வர வில்லை; அபாரம்! அற்புதம்! பிரமாதம்!’ என்றெல்லாம் புகழ்ந்துகொண்டே வருகிறார்கள்!

ஸ்ரீ முருகன் பால நாடக சபா என்றால், சென்னை நகரில் பச்சைக் குழந்தைக்குக் கூடத் தெரியும். அந்த நாடகக் குழுவில் இருப்பவர்கள் எல்லாருமே குழந்தைகள் தான். பதின்மூன்று பதினாலு வயதுக்குமேல் எவருமே இல்லை. மொத்தம் நாற்பத்து மூன்று குழந்தைகள் இருக் கிறார்கள். அவர்களுடைய பேச்சும், பாட்டும், நடிப்பும்- அடடா! அபாரம்! அபாரம்! அந்த சபையாரின் காட்சி அமைப்புக்களெல்லாம் மிக மிகப் பிரமாதமாயிருக்கும். கண்மூடிக் கண் திறப்பதற்குள் பிரமமாண்டமான காட்சி களையெல்லாம் காணலாம். பளபளப்பான உடைகளும், வர்ண விளக்குகளும் அப்படியே உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்.

குழந்தைகளை வைத்து இவ்வளவு பிரமாதமாக நாடகங்களை நடத்துவதற்கு முக்கிய காரணம் யார்? அவரைத் தெரிந்துகொள்ள வேண்டாமா? அவர்தான் அந்த சபாவின் மானேஜர் மதுரநாயகம். அவரது முயற்சியாலேதான் அந்த சபா இவ்வளவு தூரம் பேரும் புகழும் பெற்றிருக்கிறது! நாடகங்களைத் தேர்ந்தெடுப்பது, அவற்றை ஒழுங்காக நடத்துவது, குழந்தைகளைத் தயார் செய்வது, வரவு செலவுக் கணக்குகளைப் பார்ப்பது, விளம்பரம் செய்வது எல்லாம் மதுரநாயகத்தின் பொறுப்புத்தான். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், மதுரநாயகம் இல்லாவிட்டால், அந்த நாடக சபாவே இல்லை!

அன்று செவ்வாய்க்கிழமை நாடகம் கிடையாது. முதல் நாள் திங்கட்கிழமையும் நாடகம் நடக்கவில்லை. மறுநாள் புதன்கிழமை தான் நாடகம்.

நடுவே இரண்டு நாட்கள் நாடகம் நடக்காததற்குக் காரணம் வேறொன்றுமில்லை; ஒரு நாடகம் முடிந்து மறுநாடகம் ஆரம்பிப்பதற்கு இடையில் இரண்டு நாட்கள் வேண்டும். முந்திய நாடகத்தில் உபயோகித்த காட்சி அமைப்புக்களையெல்லாம் அப்புறப்படுத்திவிட்டுப் புது நாடகத்துக்கு வேண்டிய காட்சிகளை அமைப்பதற்குத்தான் இரண்டு நாட்கள் வேண்டியிருக்கிறது!

‘கிருஷ்ண லீலா’ முடிந்து, இப்போது ‘துருவன்’ நாடகம் ஆரம்பமாகப் போகிறது. அதற்கு வேண்டிய ஏற்பாடுகளெல்லாம் வெகு மும்முரமாக நடந்து கொண்டிருந்தன.

பகல் மணி இரண்டு இருக்கும். வீட்டுக்குச் சாப்பிடப் போயிருந்த மானேஜர் மதுரநாயகம் திரும்பி வந்தார். மேடையில் எவ்வளவு தூரம் அலங்கார வேலைகள் நடந்திருக்கின்றன என்பதைப் பார்த்து விட்டுத் தம் அறைக்குள் சென்றார்; நாற்காலியில் உட்கார்ந்தார். துருவன் நாடகத்துக்கு இன்னும் என்னென்ன சாமான்கள் தேவை என்று யோசனை செய்தார். அவற்றை ஒரு காகிதத்தில் எழுதினார். எழுதி முடித்ததும், கைக் கடிகாரத் தைப் பார்த்தார். மணி இரண்டரை. உடனே அவருக்கு ஏதோ ஞாபகம் வந்தது. மேஜை மீது இருந்த மணியை ‘கிணிங்’ என்று ஒரு தடவை அடித்தார்.

ஒரே ஒரு தடவைதான் அடித்தார்!

சில ஆபீஸ்களில், ‘கிணிங், கிணிங், கிணிங்’ என்று மிட்டாய்க்காரனைப் போல் ஓயாமல் மணியை அடித்துக் கொண்டேயிருப்பார்கள். ஆனாலும், ஆபீஸ் பையன் வரமாட்டான். எங்காவது மூலையில் தூங்கிக் கொண் டிருப்பான் அல்லது சொந்த வேலையாக வெளியே போயிருப்பான். இரண்டும் இல்லாத போனால், யாருட னாவது அரட்டை அடித்துக் கொண்டிருப்பான். கடைசியில் மணி அடித்தவரே, ஆபீஸ் பையன் செய்ய வேண்டிய வேலையைச் செய்து முடித்துவிடுவார்!

ஆனால், அங்கேயுள்ள ஆபீஸ் பையன் ரமணி அந்த ரகத்தைச் சேர்ந்தவனல்லன்! மதுரநாயகம் ஒரே ஒரு தடவைதான் மணியடித்தார். உடனே, ‘குப்’பென்று பாய்ந்து அறைக்குள்ளே ஓடினான். ‘என்ன சார்” என்று மிகவும் பணிவாகக் கேட்டான்.

“ரமணி, என் அம்மாவுக்கு நேற்றே பணம் அனுப்புவதாக எழுதியிருந்தேன். மறந்து விட்டேன். இன்றைக்குக் கட்டாயம் அனுப்பிவிட வேண்டும். உடனே தபாலாபீஸிற்குப் போய் ஒரு மணியார்டர் பாரம் வாங்கிவா” என்று சொன்னார் மதுரநாயகம்.

“இதோ! ஒரு நொடியில் வாங்கி வருகிறேன்” என்று கூறிவிட்டுத் தபாலாபீஸை நோக்கி ஓடலானான் ரமணி.

மறு விநாடி மதுரநாயகம், “ரமணி! ரமணி வேண்டாம், வேண்டாம். வா, இங்கே!” என்று அழைத்தார்.

ரமணி ஓட்டத்தை நிறுத்தினான். அவர் அருகே திரும்பி வந்தான்.

“ரமணி, நீ போய் பாரம் வாங்கி வந்து, நான் அதைப் பூர்த்தி செய்து, அப்புறம் மணியார்டர் அனுப்புவது என்றால் நேரமாகிவிடும். நானே போய், மணியார்டர் பண்ணிவிட்டு வருகிறேன். யாராவது கேட்டால் தபாலாபீஸிற்குப் போயிருப்பதாகச் சொல்” என்று கூறிவிட்டு மதுரநாயகம் சிறிது தூரத்திலுள்ள தபாலாபீஸை நோக்கிக் கிளம்பிவிட்டார்.

தபாலாபீஸிற்கு மதுரநாயகம் வந்து அரைமணி நேரம் இருக்கும். அவர் வந்தபோது மணியார்டர் செய்யும் இடத்திலே ஒரு ‘க்யூ’ வரிசை நின்றுகொண்டிருந்தது. அப்போது அவர் இருபதாவது ஆளாக அங்கு போய் நின்றார். ஆனால், இப்போது – அதாவது இந்த அரைமணி நேரத்தில் அவர் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்துவிட்டார். இன்னும் இரண்டு பேர்களே அவருக்கு முன்னால் நிற்கிறார்கள். “சரி! இன்னும் ஐந்து நிமிஷத்தில் நமது முறை வந்துவிடும். பணத்தை அனுப்பிவிடலாம்” என்று மனசுக்குள்ளே நினைத்துக்கொண்டிருந்தார் மதுரநாயகம்.

அந்தச் சமயம் அங்கே வெகு வேகமாக ஓடிவந்தான் ஒரு பையன். அவன் மதுரநாயகத்தின் அருகே சென்றான். மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்க, “சார் சார், உங்களை சபா முதலாளி உடனே அழைத்து வரச் சொன்னார். கையோடு கூட்டி வரச் சொன்னார்” என்றான்.

இதைக் கேட்டதும் மதுரநாயகம், “என்னடா கண்ணப்பா, என்ன விஷயம்? ஏன் இந்த அவசரம்?” என்று பரபரப்புடன் கேட்டார்.. “தலை போகிற காரியம் சார்! உடனே வாருங்கள் சார்!”

“என்னடா இது! விளங்கச் சொல்லேன்” என்று கேட்டார்.

“எல்லாம் நீங்கள் வந்தால் தானாகத் தெரியும். சீக்கிரம் வாருங்கள் சார்!”

இதைக் கேட்டதும் மதுரநாயகத்துக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. கலவரத்துடன், ‘க்யூ’ வரிசையை விட்டு வெளியே வந்தார்.

“நல்லவேளை; ஒருவர் தொலைந்தார்” என்று மதுர நாயகத்துக்குப் பின்னால் நின்றவர் மகிழ்ச்சியோடு முன்னால் நகர்ந்தார்.

“நல்ல சமயத்திலே வந்தானே அந்தப் பையன்! அவன் மகராசனாயிருக்க வேணும்” என்று வாழ்த்திக் கொண்டே அவருக்குப் பின்னால் நின்றவர்களும் முன்னால் நகர்ந்தார்கள்.

ஆனால் பாவம், அரைமணி நேரமாகக் கால் வலிக்க நின்ற மதுரநாயகத்துக்கு இப்படிப்பட்ட ஓர் அவசரச் செய்தியா வரவேண்டும்!

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *