பர்மா ரமணி
அழ. வள்ளியப்பா

19. மதுரநாயகம் எங்கே?

மதுரைக்கு வந்த பிறகு, ரமணிக்கு நல்ல நல்ல உடை களையெல்லாம் வாங்கிக் கொடுத்தார் சிற்ச பேசன். அத்துடன் ரமணிக்கு வேண்டிய கதைப் புத்தகங்களையெல்லாம் தாராளமாக வாங்கிக் கொள்ளச் சொன்னார். ரமணி கதைப் புத்தகங்களைக் கருத்தோடு படித்து மாலதிக்கு எடுத்துச் சொல்லுவான். சில சமயம் அவன் கதை சொல்வதை மறைந்திருந்து சிற்சபேசனும் காமாட்சியம்மாளும்கூடக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள். அப்போதெல்லாம் காமாட்சி அம்மாள், “கேட்டீர்களா ரமணி கதை சொல்வதை! மாலதிக்குப் பாட்டியிருந்தால் கதை சொல்லுவாள். அவள் தான் இல்லையே! ஆனாலும், அந்தக் குறை தெரியாதபடி ரமணி எவ்வளவு அன்பாய், அழகாய்க் கதை சொல்லுகிறான்!” என்பாள்.

‘ஆமாம்! மாலதிக்கு அண்ணனைப் போல ரமணி இருக்கிறான் என்பாயே, இப்போது பார்த்தாயா? பாட்டியாகவும் இருக்கிறான்!” என்று சொல்லிச் சிரிப்பார் சிற்சபேசன்.

இதற்கிடையில் ரமணியை பர்மாவுக்கு அழைத்துச் செல்லுவதற்கு வேண்டிய ஏற்பாடுகளையும் சிற்சபேசன் செய்தார். இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் பர்மாவுக்குப் புறப்படப் போவதாக ரமணி தெரிந்துகொண்டான். உடனே மதுரநாயகத்துக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டான். சிற்சபேசனிடம் ஒரு கார்டு வாங்கி அதில் சுருக்கமாக எழுதினான். பர்மா போவதைப் பற்றி எழுதினால், அவர் தடுத்து விடுவாரோ என்ற பயம்! அதனால் நான் மதுரையில் சுகமாக இருக்கிறேன். தங்களைப் போலவே சிற்சபேசன் என்பவர் என்னை அன்பாக ஆதரித்து வருகிறார். தங்கள் கைப்பட ஒரு கடிதம் எழுதினால் எனக்கு ஆறுதலாக இருக்கும். அம்மாளுக்கும் சபா முதலாளிக்கும் எனது வணக்கம்” என்று எழுதி, தன் மதுரை விலாசத்தையும் அதில் கொடுத்திருந் தான்.

அந்தக் கடிதத்தைப் பார்த்ததும், மதுரநாயகம் மகிழ்ச்சி அடைவார்; உடனே பதில் போடுவார் என்று ரமணி எதிர்பார்த்தான், ஆனால், ஒரு வாரமாகியும் பதில் வரவில்லை; திரும்பவும் ஒரு கார்டு போட்டான், அதற்கும் பதில் இல்லை, பிறகு இரண்டு மூன்று கார்டு கள் எழுதியும் பதிலே இல்லை. ரமணிக்கு மிகவும் வருத்த மாயிருந்தது. ‘சரிதான், அவரும் நம்மைத் திருடன் என்றே நினைத்து விட்டார் போலிருக்கிறது. அதனால் தான் பதில் போடவில்லை. ஐயோ! மதுரநாயகம் கூடவா என்னை அப்படி நினைக்க வேண்டும்” என்று நினைத்து மனம் கலங்கினான்.

ஆனால், மதுரநாயகமா, அப்படி நினைப்பார்? அவன் எழுதிய கடிதங்கள் அவரிடம் போய்ச் சேர்ந் திருந்தால் தானே அவர் பதில் எழுதுவார்? ஒரு கடிதம்கூடப் போய்ச் சேரவில்லையே, ஏன்? அவன் சரியான விலாசம் எழுதவில்லையா? சரியாகத்தான் விலாசம் எழுதியிருந்தான். அப்படியிருந்தும், அவரது கைக்குக் கிடைக்கவில்லை!

ரமணி போன பின்பு அவனுக்குப் பதிலாக நாடக சபாவிலே வேறொரு பையனைச் சேர்த்திருந்தார்கள். அவன் பெயர் சிங்காரம். சிங்காரம் சுத்த சோம்பேறி. பெரிய தூங்குமூஞ்சி. ஒரு தடவைக்கு ஒன்பது தடவையாக மணி அடித்தால்தான் அவன் ஆடி அசைந்து வருவான். வந்து, “ஏன் சார். என்னையா கூப்பிட்டீர்கள்?” என்று சாவதானமாகக் கேட்பான்.

மதுரநாயகத்துக்கு சிங்காரத்தைப் பிடிப்பதே இல்லை.

“உனக்கு முன்னால் இருந்தானே ரமணி, அவன் எவ்வளவு சுறுசுறுப்பாயிருப்பான்! எப்படி நடந்து கொள்வான்! அவன் இருந்த இடத்திலே நீயும் இருக்கிறாயே? அவன் கால் தூசுக்குக்கூட நீ சமானமாவாயா?” என்று அவர் அடிக்கடி கூறுவார்.

சிங்காரம் ரமணியைப் பார்த்ததே இல்லை. அப்படியிருந்தும், மதுரநாயகம் கூறுவதைக் கேட்டுக் கேட்டு ரமணி மேல் அவனுக்கு ஒருவித வெறுப்பு ஏற்பட்டு விட்டது. அத்துடன், “ரமணி திரும்பவும் வந்துவிட்டால் நம்மை நிச்சயம் வீட்டுக்கு அனுப்பி விடுவார். இந்த மதுரநாயகம். ஆகையால், கடவுளே! ரமணி கிடைக்கவே கூடாது” என்று தினந்தோறும் வேண்டிக்கொள்வான்.

ஒருநாள் சிங்காரம் வழக்கம்போல் தபால் ஆபீசுக்குப் போனான். கடிதங்களை வாங்கிக்கொண்டு திரும்பி வந்தான். வரும்போது, தற்செயலாக அவன் மதுரநாயகத்துக்கு வந்திருந்த ஒரு கார்டைப் பார்த்தான். அதில் ‘ரமணி” என்ற கையெழுத்தைக் கண்டதும் அவன் திடுக்கிட்டான். உடனே, கார்டில் என்ன எழுதியிருக்கிறதென்று படித்துப் பார்த்தான். பிறகு, “அடடே! இந்த ரமணிப் பயல் மதுரையில் அல்லவா இருக்கிறான்! இந்தக் கார்டை மதுரநாயகம் பார்த்தால் ஆபத்துத்தான்! உடனே அவனுக்குத் தந்தி கொடுத்து இங்கே வரவழைத்துவிடுவார்! அவன் வந்துவிட்டால், நமக்கு நிச்சயம் சீட்டுக் கொடுத்து விடுவார். ஆதலால், இந்தக் கார்டை மதுரநாயகத்திடம் காட்டவேகூடாது” என்று தீர்மானித்தான். மறுநிமிஷமே அதை வழியிலே கிழித்தெறிந்து விட்டான்!

அதற்குப் பிறகு, மதுரையிலிருந்து எந்தக் கடிதம் வந்தாலும், சிங்காரம் கிழித்துப் போட்டுவிடுவான் இந்த விஷயம் மதுரநாயகத்துக்குத் தெரியாதல்லவா? அதனால் அவர், ‘ரமணி இப்போது எங்கே இருக்கிறானோ! எப்படி இருக்கிறானோ!’ என்று கவலைப்பட்டுக் கொண்டே யிருந்தார்.

மதுரநாயகம் பதில் எழுதவில்லையே என்ற குறையைத் தவிர, ரமணிக்கு வேறு குறையே இல்லை. சிற்சபேசனும், காமாட்சி அம்மாளும் சொந்தப் பிள்ளை யைப் போலவே நினைத்து, ரமணியிடம் அன்பாக இருந்தார்கள். மாலதியும் சொந்த அண்ணனைப் போலவே அவனைக் கருதி வந்தாள்.

சிற்சபேசனும் காமாட்சி அம்மாளும், தினமும் மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போவார்கள். போகும் போது ரமணியையும் மாலதியையும் கூடவே அழைத்துச் செல்வார்கள். ரமணிக்கு மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போவதென்றாலே ஆனந்தம்தான்! அங்கே ஒவ்வொரு தூணிலும் உள்ள அழகிய சிலை களைப் பார்த்துப் பார்த்து அவன் பரவசப்படுவான். மேலும், அங்குள்ள திருவிளையாடல் சிற்பங்களைக் காட்டிக்காட்டி மாலதிக்கு அவன் பல கதைகளைச் சொல்லுவான். ரமணியும் மாலதியும் கைகோத்துக் கொண்டு அந்தப் பெரிய கோயிலை ஆனந்தமாகச் சுற்றி வருவதே அழகாகத்தானிருக்கும். மதுரைக்குத் தெற்கே ஐந்து மைல் தூரத்திலுள்ள திருப்பரங்குன்றத்துக்குச் சிற்சபேசன் வெள்ளிக்கிழமை தோறும் போய் வருவார். அப்போது ரமணி அவர்கூடச் செல்வான். வடக்கே பன்னிரண்டு மைல் தூரத்திலுள்ள அழகர் கோயிலுக்குக்கூட ஒரு தடவை எல்லோருமாகப் போய் வந்தார்கள். ரமணியின் அப்பா இறந்த பிறகு மதுரையில் ஒரு பணக்காரர் வீட்டிலே அவன் கொஞ்ச நாள் வேலைக்கு இருந்திருக்கிறான். அப்போது அவன் மதுரை மீனாட்சியம்மன் கோயிலைக் கூடச் சரியாகப் பார்த்ததில்லை. ஆனால், இப்போதோ அவன் சிற்சபேசன் செல்லும் இடத்துக்கெல்லாம் செல்கிறான்.

ரமணி மதுரைக்கு வந்து இரண்டு மாதங்கள் ஓடி விட்டன. இன்னும் ஒரு வாரத்தில் பர்மாவுக்குப் புறப் பட வேண்டும். சென்னைக்குப் போய், அங்கிருந்து கப்பல் ஏறி, பர்மாவுக்குப் போக வேண்டும் என்பதை ரமணி தெரிந்துகொண்டான். உடனே, அவனுக்கு ஓர் ஆசை தோன்றியது. ‘சென்னைக்குப் போனதும், மதுர நாயகத்தை எப்படியாவது பார்த்துவிட வேண்டும். அவரைப் பார்க்காமல் போனால் என் மனம் நிம்மதி அடையவே அடையாது’ என்று நினைத்தான்.

அன்று, சிற்சபேசன், காமாட்சி அம்மாள், மாலதி, ரமணி நால்வரும் சென்னைக்கு ரயிலில் புறப்பட்டார்கள்.

சென்னையை அடைந்ததும் அங்கிருந்த ஒரு பெரிய ஹோட்டலில் தங்கினார்கள். அன்று புதன்கிழமை. வெள்ளிக்கிழமை கப்பல் புறப்பட்டுவிடும். ஆகையால், அன்றே மதுரநாயகத்தைச் சந்தித்துவிட வேண்டும் என்று ரமணி

ஆசைப்பட்டான். உடனே சிற்சபேசனிடம் தன் ஆசையைக் கூறினான். அவனைத் தனியாக அனுப்ப சிற்சபேசனுக்கு மனமில்லை. “சரி வா, நானும் வரு கிறேன். அந்த நல்ல மனிதரை நானும் பார்க்க வேண் டாமா?” என்று கூறி அவனுடன் அவரும் கிளம்பினார்.

இருவரும் ஒரு ‘டாக்ஸி’ எடுத்துக்கொண்டு நாடகக் கொட்டகை இருக்கும் இடத்துக்கு வந்தார்கள். அவர்கள் வந்தபோது, நாடகக் கொட்டகையின் முன்னால் எந்தவித மான அலங்காரமும் இல்லை. வழக்கமாக வெளியில் வைத்திருக்கும் வர்ண விளம்பரங்களையும் காணோம். எந்நேரமும் திறந்து கிடக்கும் வெளிக் கதவும் நன்றாகப் பூட்டப்பட்டிருந்தது!

இந்த காட்சியைக் கண்டதும் ரமணி திடுக்கிட்டான். “இப்படி ஒரு நாளும் இருக்காதே! கதவுகூடப் பூட்டப் பட்டிருக்கிறதே!” என்றான்.

“ஒருவேளை இப்போது நாடகம் நடத்தவில்லையோ என்னவோ!” என்றார் சிற்சபேசன். அத்துடன், “எதற்கும் யாரையாவது கேட்டுப் பார்க்கலாமே! அதோ அந்தக் கடையில் விசாரிப்போம்” என்றார்.

அதற்குள் ரமணி, “வேண்டாம், மானேஜர் வீட்டுக்கே நேராகப் போவோம் இங்கே பூட்டப்பட்டிருப்பதால் நிச்சயம் அவர் வீட்டில் தான் இருப்பார்” என்றான். உடனே மதுரநாயகம் இருக்கும் வீட்டை நோக்கி டாக்ஸியைப் போகச் சொன்னான் ரமணி,

சற்றுநேரத்தில் மதுரநாயகத்தின் வீட்டின் முன்னால் டாக்ஸி வந்து நின்றது. ஆனால், அங்கும் அதே நிலைதான்! அந்த வீட்டின் வெளிக்கதவும் பூட்டப்பட் டிருந்தது! ரமணிக்கு ஒன்றுமே புரியவில்லை!

மதுரநாயகத்தின் வீடு பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்ட ரமணி, “என்ன இது! நாடகக் கொட்டகையும் பூட்டப்பட்டிருக்கிறது. மானேஜர் வீடும் பூட்டப்பட் டிருக்கிறதே!” என்றான்.

உடனே சிற்சபேசன் “எதற்கும் பக்கத்து வீட்டிலே கேட்டுப் பார்க்கச் சொல்லலாம்” என்று சொல்லிவிட்டு, டாக்ஸி டிரைவரிடம், “டிரைவர், இந்த வீட்டிலே குடியிருந்த நாடக சபா மானேஜரும், அவர் சம்சாரமும் எங்கே போயிருக்கிறார்கள் என்று அதோ அந்த வீட்டிலே கேட்டுப் பார்” என்றார்.

அவர் சொன்னபடி டாக்ஸி டிரைவர், பக்கத்து வீட்டுக்குச் சென்றார். விசாரித்துப் பார்த்துவிட்டுத் திரும்பி வந்து, ”அடடே, பக்கத்து வீட்டு அம்மா சொன்ன பிறகு தான் எனக்குக்கூட ஞாபகம் வருகிறது. இந்த நாடக சபா டில்லிக்குப் போயிருக்கிறது, சார். மானேஜர், அவர் சம்சாரத்தையும் கூடவே அழைத்துக் கொண்டு போயிருக் கிறாராம். வரப் பத்துப் பதினைந்து நாட்களாகுமாம்” என்றார்.

‘என்ன! டில்லிக்குப் போயிருக்கிறார்களா! திரும்பி வரப் பத்துப் பதினைந்து நாட்கள் ஆகுமா?” என்று வியப்புடன் கேட்டான் ரமணி.

“ஆமாம், தம்பி! டில்லியிலே இப்போது நடக்கிறதே தேசீய நாடகவிழா, அதிலே கலந்து கொள்ளத்தான் இந்த சபாவும் போயிருக்கிறது. போய் நாலைந்து நாளாகிறது.”

டிரைவர் பேச்சைக் கேட்டதும், ரமணிக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. ஒரு நீண்ட பெருமூச்சு விட் டான். உடனே சிற்சபேசன், “ரமணி, என்ன பண்ணுவது? சந்தர்ப்பம் சரியில்லை. நாம் எப்படியும் நாளை மறுநாள் கப்பல் ஏறியாக வேண்டுமே!’ என்றார். மதுரநாயகத்தைப் பார்க்க முடியாமல் போனது ரமணிக்கு வருத்தமாகத்தான் இருந்தது. ஆனாலும், என்ன செய்வது?

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *