
பர்மா ரமணி
அழ. வள்ளியப்பா
23. ரமணி கிடைத்தான்!
மறுநாள் காலை. பொழுது விடிந்தது. வழக்கம் போல் காமாட்சி அம்மாள் கோலப் பொடியைக் கையில் எடுத்துக்கொண்டு பங்களா வாசலை நோக்கி வந்தாள். வாசல் கதவைத் திறந்ததும் வராந்தாவில் யாரோ படுத்திருப்பதைக் கண்டாள். உடனே, “யாரது?” என்று பார்த்தாள். மறுநிமிஷம், “ஆ! ரமணி! என் ரமணியா!” என்று கூவிக்கொண்டே அருகிலே ஓடினாள்; உற்றுப் பார்த்தாள்; நன்றாக உற்றுப் பார்த்தாள்.
சந்தேகமில்லை; அவன் ரமணிதான்! காணாமற் போன ரமணியேதான் அங்கே படுத்துக் கொண்டிருந்தான்! உடனே, ‘ரமணி! ரமணி!’ என்று குதூகலத்துடன் தட்டி எழுப்பினாள் ‘காமாட்சி அம்மாள். ரமணி மெதுவாகக் கண்களைத் திறந்து பார்த்தான். காமாட்சி அம்மாளைக் கண்டதும், “அம்மா!” என்று அவளைப் பாசத்தோடு கட்டிப் பிடித்துக்கொண்டான்.
மறு நிமிஷம்,” என்ன இது? கனவா! நனவா! எப்படி நான் இங்கு வந்தேன்! பக்கத்தில் படுத்திருந்த சுந்தரம் எங்கே?” என்று ஆச்சரியத்துடன் கேட்டான் ரமணி.
“என்ன ரமணி, உனக்கே தெரியாதா! நடப்பதெல்லாம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது… சரி வா, உள்ளே போகலாம்” என்று கூறி அவனை அப்படியே அணைத்தபடி உள்ளே அழைத்துச் சென்றாள் காமாட்சி அம்மாள்.
உள்ளே செல்லும்போதே, “இதோ ரமணி! ரமணி வந்துவிட்டான்!” என்று இரைந்து கொண்டே சென்றாள். சத்தத்தைக் கேட்டதும், படுக்கையில் கவலையுடன் உட்கார்ந்திருந்த சிற்சபேசன் திரும்பிப் பார்த்தார். ரமணியைக் கண்டதும், சட்டென்று எழுந்தார். ஒரே தாவாகத் தாவி அவனிடம் ஓடிவந்தார். ஆ, ரமணி!” என்று கட்டித் தழுவிக் கொண்டார். அதற்குள் காமாட்சி அம்மாள் தூங்கிக் கொண்டிருந்த மாலதியைத் தட்டி எழுப்பி, “மாலதி! மாலதி! ரமணி அண்ணா வந்து விட்டான்! ரமணி அண்ணா வந்துவிட்டான்! எழுந்திரு, எழுந்திரு” என்று ஆனந்தமாகக் கூறினாள். உடனே மாலதி பரபரப்போடு எழுந்தாள்; நிமிர்ந்து பார்த்தாள். அதற்குள் ரமணி மாலதியின் எதிரே ஓடி வந்து, அவளது இரு தோள்களையும் பிடித்துக் கொண்டு, “மாலதி!” என்றான்.
“அண்ணா! எங்களையெல்லாம் விட்டுவிட்டு நீ எங்கே அண்ணா போயிருந்தாய்? நீ இல்லாது எங்களுக்கெல்லாம் எவ்வளவு கவலையாக இருந்தது? விளையாட முடியவில்லை; கதை கேட்க முடியவில்லை; எதுவுமே செய்ய முடியவில்லை” என்றாள் மாலதி.
சற்று நேரத்துக்குள் ரமணி திரும்பி வந்த விஷயம் அந்த வட்டாரம் முழுவதும் தெரிந்துவிட்டது. குழந்தைக ளெல்லாரும் குதூகலத்தோடு, ரமணி அண்ணாவைப் பார்க்க ஓடோடி வந்தார்கள். பெரியவர்களும் வந்திருந் தார்கள். எல்லோரும் அவனைச் சூழ்ந்துகொண்டு, அவன் எங்கே போனான்? எப்படிப் போனான், என்னென்ன செய்தான் என்றெல்லாம் விசாரிக்க ஆரம்பித்தார்கள்.
அப்போது சிற்சபேசன், “ரமணி, அன்று இரவு நீ காணாமற் போனதிலிருந்து நடந்ததையெல்லாம் விவரமாகச் சொல்லு. குழந்தைகளெல்லாம் கேட்கட்டும். எங்களுக்கும்தான் நீ இன்னும் சரியாகச் சொல்லவில்லையே!” என்று கூறினார்.
உடனே ரமணி, “இவ்வளவு நாளும் நீங்களெல்லோரும் எந்த எந்தக் கதைகளையோ கேட்டீர்கள். இப்போது என் சொந்தக் கதையையே கேட்க விரும்புகிறீர்கள். சொல்லு கிறேன், கேளுங்கள்” என்று ஆரம்பித்தான். தன்னை முரடர்கள் தூக்கிச் சென்றது, குகையில் கொண்டு போய் வைத்தது, கடிதத்துக்குப் பதில் எழுதச் சொல்லிப் பிரம்பால் அடித்தது, பிறகு எதிர்பாராமல் எப்படியோ வீட்டு வராந்தாவில் தான் படுத்திருந்தது – எல்லாவற்றையும் கூறினான். அப்போது அவனுக்குச் சுந்தரம் நினைவு வந்துவிட்டது. உடனே சுந்தரத்தைப் பற்றியும், அவனுடைய தங்கமான குணத்தைப் பற்றியும் எல்லோருக்கும் எடுத்துக் கூறிவிட்டு, “பாவம், அவனை அவர்கள் என்ன பாடுபடுத்துகிறார்களோ! நான் ஒருவன் தான் அவனுக்குத் துணையாக இருந்தேன். இப்போது நானும் வந்து விட்டேன்!” என்று வருத்தப்பட்டான்.
அப்போது சிற்சபேசன். “ரமணி, நீ குகையில் இருந்தது உண்மைதானா? அவர்கள் தான் பணம் கேட்டு எழுதினார் களா? அப்படியானால் பணம் வாங்காமல் எப்படி உன்னைக் கொண்டு வந்து விட்டார்கள்!” என்று கேட்டார் வியப்புடன்.
“நடந்ததெல்லாம் உண்மைதான். ஆனால், எப்படி நான் இங்கு வந்தேன் என்பதுதான் எனக்கும் புரியவில்லை! ஒரு வேளை, அவர்களே என்னை இங்கு கொண்டு வந்து விட்டுவிட்டார்களோ!… அப்படியானால், சுந்தரமும் வீட்டுக்கு வந்திருக்க வேண்டுமே!” என்றான் ரமணி திகைப்புடன்.
“இருக்கலாம்; அவன் வீடு எங்கே இருக்கிறது? உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார் சிற்சபேசன்.
“அமரபுராவில் இருக்கிறதாம். அவன் அப்பா ஒரு பெரிய மர வியாபாரியாம். பெயர் தாமோதரம்.’
“அப்படியா! சரி, இப்போதே ஓர் ஆள் அனுப்பி விசாரித்து வரச் சொல்லுகிறேன்” என்று கூறிவிட்டு உடனே ஒரு வேலைக்காரனை அமரபுராவுக்கு அனுப்பி வைத்தார் சிற்சபேசன். அமரபுரா ஐராவதி நதியின் அக்கரையில் உள்ளது. மாந்தலே இக்கரையில் உள்ளது.
‘ஆவா பிரிட்ஜ்’ என்ற பாலத்தைக் கடந்து அமரபுராவுக்குப் போக வேண்டும்.
அன்று முழுவதும் ஓயாமல் குழந்தைகளும் பெரியவர்களும் ரமணியைப் பார்க்க வந்து கொண்டேயிருந்தார்கள். எல்லோரும் ரமணி திரும்பி வந்ததைக் கண்டு ஆனந்தமடைந்தார்கள். அத்துடன் அவன் எப்படித் திரும்பி வந்தான் என்பது தெரியாததால் ஆச்சரியமும் அடைந்தார்கள்.
வந்தவர்கள் எல்லோரிடமும், “வழக்கம்போல் நாளைச் சாயங்காலம் கதை உண்டு. எல்லோரும் வந்து விடுங்கள்” என்று சொல்லி அனுப்பினான் ரமணி. எல்லோரும் அளவு கடந்த உற்சாகத்தோடு வீடு திரும்பினார்கள்.
விளக்கு வைக்கும் நேரம். அமரபுராவுக்குச் சென்ற வேலைக்காரன் திரும்பி வந்தான். அவன் மட்டும் வர வில்லை; கூடவே, சுந்தரத்தின் அப்பா தாமோதரமும் வந்து சேர்ந்தார். அவர் வந்ததும், வராததுமாக ரமணியைப் பார்த்து, “தம்பி, தம்பி, என் மகன் இன்னும் திரும்பி வரவில்லையே! அவனை நீ பார்த்திருப்பாயே! அவனுக்கு ஒன்றும் ஆபத்து இல்லையே! அந்தப் பாவிகள் இப்படி ஏமாற்றுகிறார்களே!” என்று அழாக் குறையாகச் சொன்னார்.
“சுந்தரம் இன்னும் வரவில்லையா! அப்படியானால் குகையில் தான் இருக்க வேண்டும். நான் வரும் வரை யில் அவர்கள் அவனைத் தொந்தரவு எதுவும் செய்யவில்லை. பணம் அனுப்பச் சொல்லி அந்த முரடர்கள் உங்களுக்கு எழுதியிருந்தார்களா?”
“ஆமாம் தம்பி. கடிதம் வந்த அன்றைக்கே அவர்கள் சொன்ன இடத்தில் பத்தாயிரம் ரூபாயையும் கொண்டு போய் வைத்துவிட்டோமே!’
“என்ன! அவர்கள் கேட்டபடி பணம் கொடுத்து விட்டீர்களா?’
“ஆமாம் தம்பி. என்னுடைய தேக்குமரக் காட்டிலே மேஸ்திரி வேலை பார்க்கும் கந்தசாமியிடம்தான் கொடுத்து அனுப்பினேன்.”
“அப்படியா! அவர்கள் பணம் வந்ததாகவே சொல்லவில்லையே!”
“வந்ததாகவே சொல்லவில்லையா! ஒருவேளை… நான் கொடுத்த பணத்தை எடுத்துக் கொண்டு, சுந்தரத்தைக் கொண்டு வந்து விடுவதற்குப் பதில் உன்னைக் கொண்டு வந்து விட்டுவிட்டார்களோ… இருக்கும். எதற்கும், நான் அன்றைக்கே பணம் அனுப்பிவிட்டதாக ஒரு கடிதம் எழுதி, முன்பு பணத்தை வைத்த இடத்திலே அதையும் வைத்துவிட்டு வரச் சொல்லுகிறேன் “என்று கூறிப் புறப்பட்டு விட்டார் தாமோதரம்.
சுந்தரத்தின் அப்பா, மேஸ்திரி கந்தசாமியிடம் பணம் கொடுத்தனுப்பியது உண்மைதான். ஆனால், அந்தப் பணம் எங்கே போனது, எப்படிப் போனது என்பது அவருக்குத் தெரியுமா? பாவம்! முரடர்கள்தான் எடுத்துக் கொண்டு ஏமாற்றுவதாக அவர் நினைக்கிறார்.
அன்று இரவு ரமணிக்குச் சரியாகத் தூக்கம் வரவில்லை. முதல் நாள் அடிவிழுந்த இடங்களிலெல்லாம் வலிக்க ஆரம்பித்தது. காமாட்சி அம்மாள் அந்த இடங்களில் எண்ணெய் போட்டு மெதுவாகத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். அப்போது ரமணிக்குச் சுந்தரத்தின் நினைவு வந்துவிட்டது.
“அம்மா, இதுபோல் தான் நேற்று இரவு வெகுநேரம் வரையில் சுந்தரம் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தான். பாவம், மிகவும் நல்லவன்” என்றான்.
மறுநாள் மாலை வழக்கம்போல் ஏராளமான குழந்தைகளும், சில பெரியவர்களும் கதை கேட்க வந்து சேர்ந்தார்கள். அந்தக் கும்பலில் வயதான ஒரு கிழவரும் இருந்தார். அவர் கறுப்பாக இருந்தாலும் அவரது தாடி வளுப்பாக இருந்தது. நெற்றியில் பட்டையாக விபூதி யும், நடுவில் பெரிய சந்தனப் பொட்டும் அணிந்திருந்தார். மேலே சரிகை அங்கவஸ்திரத்தைப் போர்த்துக் கொண்டிருந்தார்.
ரமணி கதை சொல்லும்போது, அந்தக் கிழவர் ‘பேஷ், பேஷ். சபாஷ்!’ என்று அடிக்கடி தலையை ஆட்டினார். அப்படி அவர் சொல்லச் சொல்ல ரமணிக்கு மிகவும் உற்சாகமாயிருந்தது.
சின்னச் சின்னக் கதைகளாக இரண்டு கதைகளைக் கூறிவிட்டு, மூன்றாவதாக ஒரு கதையைச் சொல்லிக் கொண்டிருந்தான் ரமணி. அந்தக் கதையில் இரண்டு நண்பர்கள் வருகிறார்கள். அவர்கள். இருவரும் ஒருவருக்காக ஒருவர் உயிரையும் கொடுக்கத் தயாராயிருக் கிறார்கள். இந்தக் கதையைக் கூறிக் கொண்டிருந்த ரமணி, திடீரென்று நடுவிலே நிறுத்திவிட்டான். அவன் இதுபோல ஒருநாள் கூட நிறுத்தியதில்லை. அப்போது, அவன் முகத்தில் ஏதோ கலவரம் தெரிந்தது.
உடனே சிற்சபேசன் திடுக்கிட்டார். காமாட்சி அம்மாளுக்கு ஒன்றும் புரியவில்லை. மாலதி, “என்ன அண்ணா, கதையை நிறுத்திவிட்டாய்?” என்று கேட்டாள். மற்றவர்களும் விஷயம் புரியாமல் விழித்தார்கள்.
ரமணியின் முகத்தில் கலவரத்தைக் கண்டதும் முன் வரிசையில் உட்கார்ந்திருந்த பெரியவர், “என்ன தம்பி. கதையை நிறுத்தி விட்டாய்?” என்று கவலையோடு கேட்டார்.
“ஒன்றுமில்லை! நான் குகையில் இருந்தபோது என்னோடு சுந்தரம் என்று ஒரு பையன் இருந்தான். அவனோடு நான் பழகியதெல்லாம் சில நாட்கள் தான். ஆனாலும், அவன் என்னிடத்திலே எவ்வளவு பிரியமாயிருந்தான்! முரடர் தலைவன் என்னை அடித்தபோது அவன் குறுக்கே வந்து நின்றுகொண்டு தைரியமாகத் தடுத்தான். இரவில்கூட அடிவிழுந்த இடங்களையெல்லாம் வெகுநேரம் வரை தடவிக் கொடுத்துக் கொண்டேயிருந்தான். அவன் எவ்வளவு நல்லவன்! நல்ல நண்பர்களைப் பற்றி நான் கதை சொல்லும்போது அருமை நண்பன் சுந்தரத்தின் நினைவு வந்துவிட்டது. ஐயோ! அவனுக்கு என்னென்ன தொந்தரவுகள் கொடுக்கிறார்களோ! பாவம்” என்று கூறினான். அப்போது அவன் கண்கள் கலங்கின. மேலே பேசவும் வாய் வரவில்லை.
உடனே சிற்சபேசன், “சரி ரமணி, இன்று கதை சொன்னது போதும். பேசாமல் போய் மாடியில் படுத்துக் கொள்’ என்று கூறிவிட்டு, அங்கிருந்தவர்களிடம், ரமணிக்கு அந்தப் பையனைப் பற்றியே கவலை.
“இரவெல்லாம் இதே நினைவுதான். காலையில் கூடச் சொல்லிக்கொண்டிருந்தான். இன்று கதை கேட்டது போதும். நாளை வாருங்கள். கட்டாயம் கேட்கலாம்” என்று சொன்னார்.
அந்த இடத்தை விட்டுப் போக யாருக்குமே மனம் வரவில்லை. ஆனாலும், என்ன செய்வது? சந்தர்ப்பம் சரியில்லையே! எல்லோரும் எழுந்து போய்விட்டார்கள். ஆனால், அந்தக் கிழவர் மட்டும் போகவில்லை.
அவர் சிற்சபேசனைப் பார்த்து, “ஆஹா! பிள்ளை யென்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்? மிகவும் அற்புதமாகக் கதை சொல்லுகிறான். கொஞ்ச நாட்கள் தான் பழகினாலும், நல்ல சிநேகிதனை மறக்காமல் இருக்கிறான்! இவன் உங்களுக்குப் பிள்ளையாகப் பிறந்ததே முன் ஜன்மத்தில் நீங்கள் செய்த புண்ணியம் தான். இவனுடைய தங்கமான குணத்துக்கு எல்லாம் நல்லபடியாகவே நடக்கும். கவலைப்படாதீர்கள். ஆண்டவன் அருள் புரிவார்” என்றார்.
உடனேசிற்சபேசன்,”தாங்கள் யார்?தெரியவில்லையே?” என்றார்.
“என் ஊர் தஞ்சாவூர். பர்மாவைச் சுற்றிப் பார்க்க வந்தேன். இந்த ஊருக்கு வந்ததும், தம்பி அபாரமாகக் கதை சொல்லுவதாகக் கேள்விப்பட்டேன். எனக்குக் கதை கேட்பதென்றால், சிறுவயதிலிருந்தே பிரியம் அதிகம். தம்பியின் கதையைக் கேட்கத்தான் வந்தேன்” என்று கூறிவிட்டு, ரமணியைப் பார்த்து. “தம்பி, உன் சிநேகிதன் பெயர் என்ன என்று சொன்னாய்?” என்று கேட்டார்.
“சுந்தரம்” என்றான் ரமணி.
“சுந்தரம். அப்படியானால், ஐந்து எழுத்துப் பெயர். நல்ல பெயர்தான். சரி, ஒரு பூவின் பெயர் சொல்.’
“ஏன் தாத்தா, உங்களுக்கு ஜோஸ்யம்கூடத் தெரியுமா!”
“தெரியுமா என்றா கேட்கிறாய்? அதுதானே என் பரம்பரைத் தொழில். பூவராக ஜோஸ்யர் என்றால் தஞ்சாவூர் ஜில்லாவிலே கைக்குழந்தைக்குக் கூடத் தெரியுமே?”
“ஓஹோ, அப்படியா! சரி, இதோ ஒரு பூவின் பெயரைச் சொல்லட்டுமா? தாமரை!” என்றான் ரமணி.
“தாமரையா! சரி, இது மூன்றெழுத்துப் பெயர்” என்று கூறிவிட்டு வாய்க்குள் ஏதோ முணுமுணுத்தார். பிறகு “தம்பி, கவலைப்படாதே! நீ கருதிய காரியம் சீக்கிரத்தில் கைகூடும். நீ என்ன நினைக்கிறாய்? உன் சிநேகிதன் சுந்தரம் எப்போது திரும்பி வருவானோ என்றுதானே நினைக்கிறாய்? நாளைக் காலையில் தாமரை மலர்வதற்குள் வந்து சேர்ந்துவிடுவான்.”
“என்ன! உண்மையாகவா, தாத்தா? அவன் எப்படி வருவான்?”
“அதெல்லாம் இப்போது சொல்லக்கூடாது. என் ஜோஸ்யம் பலிக்கிறதா இல்லையா என்பது நாளைக் காலையிலே தெரிந்துவிடும். நான் வருகிறேன். கவலைப்படாதே!” என்று கூறிவிட்டுப் போய்விட்டார் கிழவர்.



