பர்மா ரமணி
அழ. வள்ளியப்பா

6. அகப்பட்டுக்கொண்டான்!

மறுநாள் பதினொரு மணி இருக்கும். முதலாளியின் பக்கத்திலே இருந்த டெலிபோன் ‘ட்ரிங், ட்ரிங்’ என்று ஒலித்தது. உடனே முதலாளி டெலிபோன் ரிஸீவரைக் கையில் எடுத்தார்.

‘ஹலோ, யார் பேசுகிறது?’ என்று முதலாளி கேட்டார்.

போலீஸ் ஸ்டேஷனிலிருந்து பேசுவதாகவும், மானேஜர் மதுரநாயகத்திடம் அவசரமாக ஏதோ சொல்ல வேண்டு மென்றும் பதில் வந்தது.

உடனே முதலாளி மோகனரங்கம் ரிஸீவரை மேஜை மேல் வைத்துவிட்டு மானேஜர் அறைக்குள் ஓடினார். “மதுரநாயகம்! மதுரநாயகம்! உங்கள் வீட்டுக்குப் பக்கத்திலுள்ள போலீஸ் ஸ்டேஷனிலிருந்து போன் வந்திருக்கிறது. சப்-இன்ஸ்பெக்டர் உங்களோடு பேசவேண்டுமாம். சீக்கிரம் வாருங்கள்” என்றார்.

உடனே மதுரநாயகம் முதலாளி அறைக்குள்ளே வேகமாக வந்தார் முதலாளியும் கூடவே வந்து அருகில் நின்றுகொண்டு அவர் பேசுவதைக் கவனித்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் மதுநாயகத்திடம் சொன்னது இது தான். “திருட்டுப் போன உங்களுடைய தங்கமூடி போட்ட எவர்-ஷார்ப் பேனா கிடைத்துவிட்டது. திருடின பையன் பேனாவைக் கடையில் விற்கப் போகும் போது அகப்பட்டுக் கொண்டான். அவனுடைய வயது, உயரம், நிறம் எல்லாம் உங்கள் ரிப்போர்ட்டில் உள்ளபடியே இருக்கின்றன. பேனாவிலும், ‘சேகர் அன்பளிப்பு’ என்று எழுதியிருக்கிறது” என்று கூறினார்.

இதைக் கேட்டதும் மதுரநாயகம் “அட, நன்றிகெட்டவனே!” என்று பல்லைக் கடித்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் முன்பு கூறியதோடு நிறுத்திக் கொண்டிருந்தாலும் பரவாயில்லை. இன்னொரு எதிர்பாராத தகவலையும் கூறினார்! அந்தப் பையனிடம் ஒரு கைக் கடிகாரமும் இருக்கிறது. ‘கேட்டால், என் அப்பா வாங்கிக் கொடுத்தது’ என்று புளுகுகிறான். நீங்கள் உடனே வந்தால் எல்லாம் தெரிந்து விடும். பையன் “லாக்-அப்பிலே இருக்கிறான்” என்று கூறினார்.

மதுரநாயகம் ஆச்சரியத்தோடு ரிஸீவரைக் கீழே வைத்து விட்டு முதலாளி மோகனரங்கத்திடம் சப்-இன்ஸ்பெக்டர் கூறியதை அப்படியே அறிவித்தார். அதைக் கேட்டதும், “அடடே! நாலைந்து மாதங்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டதே என் கைக்கடிகாரம், அதுவாகத்தான் இருக்கவேண்டும். தூங்கும்போது யாரோ எடுத்துவிட்டார் களென்று ஒவ்வொருவராக நாம் சோதனை செய்ய வில்லையா? அப்போது எங்கேயோ பத்திரமாக ஒளித்து வைத்திருந்து இப்போது எடுத்துப் போயிருக்கிறான். திருட்டுப் பயல்! இவனைச் சும்மா விடக்கூடாது. உடனே புறப்படுங்கள். நானும் உங்களுடன் வருகிறேன்” என்றார்.

“இப்படி அவன் மோசம் செய்வான் என்று நான் கனவில்கூட நினைக்கவில்லை” என்று மிகுந்த வருத்தத்தோடு கூறினார் மதுரநாயகம்.

மானேஜர் மதுரநாயகத்தை அழைத்துக்கொண்டு உடனே போலீஸ் ஸ்டேஷனுக்குச் செல்லவேண்டும் என்று துடிதுடித்தார் முதலாளி மோகனரங்கம். உடனே அவர் மேஜை மேலிருந்த மணியை அடித்தார். சத்தம் கேட்டதும் மற்றொரு ஆபீஸ் பையனான அழகிரி உள்ளே ஓடிவந்தான்.

“டேய் அழகிரி, உடனே போய் டிரைவரிடம் காரை எடுத்து வரச்சொல்” என்று முதலாளி மோகனரங்கம் உத்தரவு போட்டார்.

கார் வந்ததும், முதலாளி மோகனரங்கமும், மானேஜர் மதுரநாயகமும் ஏறிக்கொண்டனர். கார் போலீஸ் ஸ்டேஷனை நோக்கிப் புறப்பட்டது. போகும் போது ரமணியைப் பற்றி ஆத்திரம் ஆத்திரமாகப் பேசினார் முதலாளி. ஆனால், மதுரநாயகம் அவரைப் போல் ஆத்திரப்படவில்லை. மிகவும் வருத்தப்பட்டார், வேதனைப்பட்டார்.

“ஆறு மாதமாக மிகவும் அருமையாக இந்த ரமணியை வளர்த்தோமே! அவன் இப்படித் திருடனாக மாறி விட்டானே! நான் செய்த உதவியெல்லாம் வீணாகி விட்டதே! நமது பேனாவை மட்டும் அவன் எடுத்திருந் தால்கூடப் பரவாயில்லை! முதலாளியின் கைக்கடிகாரத்தையும் அல்லவா எடுத்துவிட்டான்” என்றுதான் அவர் வருத்தப்பட்டார்; வேதனைப்பட்டார்!

போலீஸ் ஸ்டேஷனின் முன்னால் கார் வந்து நின்றது. உள்ளேயிருந்த முதலாளி மோகனரங்கமும், மானேஜர் மதுரநாயகமும் கீழே இறங்கினார்கள். உடனே சப்- இன்ஸ்பெக்டர் அறையை நோக்கி மிகவும் வேகமாகச் சென்றார் மதுரநாயகம். மோகனரங்கமும் வேகமாகத்தான் சென்றார். ஆனாலும், கனத்த தொந்தியைத் தூக்கிக் கொண்டு செல்லவேண்டியிருந்ததால், அவரால் மதுரநாயகத்தை ஒட்டிச் செல்ல முடியவில்லை. அவருக்குப் பின்னால் தான் போக முடிந்தது.

வேகமாகச் சென்ற மதுரநாயகம் முன் பக்கமாக இருந்த சப்-இன்ஸ்பெக்டரின் அறைக்குள்ளே நுழைந்தார். வழக்கம்போல் வணக்கம்’ என்று சொல்லவில்லை. “எங்கே சார் அந்தப் பையன்!” என்றுதான் கேட்டார்.

ஏதோ எழுதிக்கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் நிமிர்ந்து பார்த்தார்.

மானேஜர் மதுரநாயகத்தைக் கண்டதும், “அடடா நீங்களா! இப்படி உட்காருங்கள்” என்று கூறி எதிரே இருந்த நாற்காலியைச் சுட்டிக் காட்டினார், சப்-இன்ஸ்பெக்டர்.

“பரவாயில்லை. எங்கே அந்தப் பையன்? அவன் எங்கே இருக்கிறான்?” என்று மிகுந்த படப்படப்போடு கேட்டார் மதுரநாயகம்.

“அவசரப்படுகிறீர்களே! அவன் எங்கே ஓடிப் போகிறான்? இங்கேதான் பத்திரமாக அடைத்து வைத்திருக்கிறோம். இதோ கொண்டு வரச் சொல்கிறேன்” என்று கூறிவிட்டுத் திரும்பிப் பார்த்தார் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர். முதலாளி மோகனரங்கம் அப்போதுதான் உள்ளே வந்து கொண்டிருந்தார்.

“யாரது உள்ளே வருவது?” என்று சப்- இன்ஸ்பெக்டர் கேட்டார். இதற்கு முன்பு மோகனரங்கத்தை அவர் பார்த்ததில்லை.

“மதுரநாயகம் வாசல் பக்கமாகத் திரும்பிப் பார்த்தார். முதலாளி மோகனரங்கத்தைக் கண்டதும், “அடடே, உள்ளே வாருங்கள். அவசரத்தில் நீங்களும் கூட வருகிறீர்கள் என்பதை மறந்தே போய்விட்டேன்” என்று கூறிப் பக்கத்திலிருந்த நாற்காலியைக் காட்டி உட்காரச் சொன்னார் மதுரநாயகம்.

மோகனரங்கம் நாற்காலியில் உட்கார்ந்ததும், “இவர் தான் எங்கள் சபா முதலாளி. கடிகாரம் இவருடையது தான். நாலைந்து மாதங்களுக்கு முன்பு தொலைந்துவிட்டது” என்று சப்-இன்ஸ்பெக்டரிடம் கூறினார் மதுரநாயகம்.

“நாலைந்து மாதங்களாகி விட்டதா? ஆமாம், எப்படி அது தொலைந்தது?” என்று கேட்டார் சப் இன்ஸ்பெக்டர்.

உடனே மோகனரங்கம், நாங்கள் ஆறு மாதத்துக்கு ஒரு முறை கணக்கு முடிப்பது வழக்கம். அன்றைக்குக் கணக்கு முடிக்கும் நாள். ஆதலால், இரவு நாடகக் கொட்டகையிலே நானும், மதுரநாயகமும் தங்க வேண்டியதாகிவிட்டது. இந்த ரமணிப் பயலை வீட்டுக்கு அனுப்பிச் சாப்பாடு எடுத்துவரச் சொன்னோம். சாப்பிட்டு விட்டுக் கணக்குகளை யெல்லாம் பார்த்து முடிக்கும் போது நடு இரவாகிவிட்டது. பிறகு, என் கைக் கடிகாரத் தைக் கழற்றி மேஜை மேல் வைத்துவிட்டுத் தூங்கினேன். இந்தப் பயலும் அன்றைக்கு அங்குதான் படுத்திருந்தான். விடிந்து எழுந்து பார்த்தால், கடிகாரத்தைக் காணோம்! உடனே, எல்லோரையும் கேட்டுப் பார்த்தோம். எவருமே எடுக்கவில்லை என்று சொல்லிவிட்டார்கள். கால் சட்டை, மேல் சட்டைப் பைகளையெல்லாம் சோதனை செய்தோம். எடுத்தவுடனே எங்கேயோ கொண்டுபோய் இவன் ஒளித்து வைத்துவிட்டான் போலிருக்கிறது. இப்போது அதை விற்றுப் பணமாக்கப் பார்த்திருக்கிறான். அன்றைக்கு எவ்வளவு யோக்கியன் போல் நடித்தான்! சுத்தத் திருட்டுப் பயல்!” என்று மிகுந்த ஆத்திரத்தோடு கூறினார்.

இதைக் கேட்டதும் சப்-இன்ஸ்பெக்டர், “அடேயப்பா, அவன் பலே எமகாதகப் பயலாக இருக்கிறானே! என்ன புளுகுப் புளுகுகிறான்! பேனாவும், கடிகாரமும் அவனுக்குச் சொந்தமாம்! அவன் திருடவே இல்லையாம். நாங்கள் தான் ஆளைத் தெரியாமல் பிடித்துக்கொண்டு வந்து விட்டோமாம்! அவன் உண்மையிலே பெரிய ஆள் தான். நீங்கள் கொடுத்த வயது, நிறம், உயரம் எல்லாம் சரியாயிருக்கின்றன. அவற்றையெல்லாம் அவன் மறைக்கப் பார்த்தாலும் முடிகிற காரியமா? ஆனால், பெயரை மட்டும் சரியாகச் சொல்ல மாட்டேன் என்கிறான். அதனால் என்ன? இந்த ஏமாற்று வேலையெல்லாம் எங்களிடமா பலிக்கும்? திருட்டுப் பயல்களே இப்படித் தான்” என்றார்.

“ஆமாம் சார். அதிலும் இந்த மாதிரிக் கெட்டிக்காரத் திருடனுக்குப் புளுகக் கற்றுக் கொடுக்கவா வேண்டும்? ஆனாலும், அவன் புளுகு எத்தனை நாளைக்கு நிலைக் கும்? ‘கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும்’ என்பார்கள். இந்தப் பயல் புளுகு இன்னும் கொஞ்ச நேரத்திலே தெரியப் போகிறதே! எங்கே அந்த மோசக்காரப் பயல்? கொண்டுவரச் சொல்லுங்கள்; பார்ப்போம்” என்றார் முதலாளி மோகனரங்கம்.

‘இதோகொண்டுவரச் சொல்கிறேன்” என்று கூறிவிட்டு, “யாரது? 753, இங்கே வா” என்று கூப்பிட்டார் சப்- இன்ஸ்பெக்டர்.

உடனே ஒரு போலீஸ்காரர் அங்கே வந்து கால்கள் இரண்டையும் ஒன்று சேர்த்து ஒரு சல்யூட் செய்தார். “உள்ளே போய் லாக்-அப்பில் இருக்கிறானே ஒரு பொடியன், அவனைக் கொண்டு வா” என்று உத்தரவிட்டார் சப்-இன்ஸ்பெக்டர்.

போலீஸ்காரர் உள்ளே சென்றதும், சப்-இன்ஸ்பெக்டர் மேஜை அறையிலிருந்த ‘எவர்-ஷார்ப் பேனாவை வெளியே எடுத்தார். ‘இதுதானே உங்கள் பேனா?’ என்று மதுரநாயகத்தைப் பார்த்துக் கேட்டார்.

மதுரநாயகம் அதைக் கையில் வாங்கிப்பார்த்தார். பார்த்ததும், “சந்தேகமில்லை. இது என்னுடையதேதான். மேலே தங்க மூடி, கீழ்ப் பாகம் கறுப்பு. ‘சேகர் அன்பளிப்பு’ என்றுகூட இதில் இருக்கிறதே! ஆறு மாதமாக என் வீட்டிலே தின்றுவிட்டு, எனக்கே வேட்டு வைக்கப் பார்த்திருக்கிறானே! அப்பப்பா! நினைத்தாலே வயிறு எரிகிறதே! பட்டுத் துணியைத் திருடினான்; பேனாவைத் திருடினான். கடிகாரத்தையும் திருடி வைத்திருக்கிறான்! நாலைந்து மாதத்துக்கு முன்பிருந்தே அவனிடம் இந்தத் திருட்டுத்தனம் இருந்திருக்கிறதே! இன்னும் என்ன என்ன சாமான்களைத் திருடி வைத்திருக்கிறானோ! ஏன் சார், அவனிடம் இந்த இரண்டையும் தவிர வேறு ஏதாவது பொருள் இருந்ததா?” என்று சந்தேகத்தோடு கேட்டார்.

அதற்கு சப்-இன்ஸ்பெக்டர், “வேறு எதுவும் அவனிடத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. ஒருவேளை எங்கேயாவது ஒளித்து வைத்திருப்பானோ? எதற்கும் அடித்து உதைத்துக் கேட்டால், உள்ளதைக் கக்கிவிடுகிறான்’ என்றார்.

“அந்தப் பயல் உங்களிடம் எப்படி அகப்பட்டான்?” என்று கேட்டார் மோகனரங்கம்.

“ஒரு மார்வாரி கடையில் அவன் அந்தப் பேனாவை விற்கப் பார்த்திருக்கிறான். அந்தச் சமயம் பார்த்து ஒரு போலீஸ்காரன் ‘லபக்’கென்று அவனைப் பிடித்துக் கொண்டான். பாவம், யாரிடத்திலே தப்பினாலும், போலீஸ்காரரிடமிருந்து தப்பமுடியாது என்பது அவ னுக்குத் தெரியுமா! அகப்பட்டுக் கொண்டதும், அவன் ஏதேதோ சொல்லித் தப்பிக்கப் பார்த்திருக்கிறான். விட்டால்தானே போவதற்கு! உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டுவந்துவிட்டார்கள்!” என்று உற்சாகமாகக் கூறினார் சப்-இன்ஸ்பெக்டர்.

அப்போது மோகனரங்கம், “ஏன் சார், என் கடிகாரம் எங்கே? அதைக் காட்டவில்லையே” என்று கேட்டார்.

“இதோ அதையும் தருகிறேன். சொந்தக் கடிகாரம் போல் அதை ஜம்பமாகக் கையிலே கட்டிக்கொண்டிருந்தான் அந்தப் பயல்!” என்று கூறிவிட்டு மேஜை அறைக்குள்ளே கையை விட்டார் சப்-இன்ஸ்பெக்டர்.

அதேசமயம்- உள்ளே சென்ற போலீஸ்காரர் அடைபட்டிருந்த பையனைப் பிடித்து வந்தார். அவனைப் பார்த்ததும், முதலாளி மோகனரங்கம், “ஆ! யார் இவன்? ரமணி இல்லையே!” என்று கூறிவிட்டுக் கண்களைத் துடைத்துக்கொண்டு மறுபடியும் உற்றுப் பார்த்தார். மதுரநாயகமும், “அடே, இவன் யார்?” என்று சந்தேகத்துடன் அவனைக் கூர்ந்து பார்த்தார். அதற்குள் அந்தப் பையன், “ஓ!” என்று அலறிக் கொண்டே மதுரநாயகத்தின் அருகே ஓடினான்; அவரது கால்களை பிடித்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான்!

உடனே மதுரநாயகம், “ஆ! எப்படி இங்கே வந்தாய்?” என்ற திகிலுடன் கேட்டார்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *