
பர்மா ரமணி
அழ. வள்ளியப்பா
22. சுந்தரத்தின் உதவி
குகைக்கு ரமணி வந்து அன்றுடன் நான்கு நாட்களாகி விட்டன. அன்று ரமணியும் சுந்தரமும் தங்களுக்கு நேர்ந்த கஷ்டங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது, குகையிலுள்ள இரும்புக் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. சத்தத்தைக் கேட்டதும், இருவரும் பேச்சை நிறுத்திவிட்டு எழுந்து நின்று எதிரே பார்த்தார்கள். முரடர்கள் நால்வரும் ஒருவன் பின் ஒருவனாக உள்ளே வந்தார்கள். உள்ளே வந்ததும், தலைவன் ஒரு காகிதத்தையும், பேனாவையும் எடுத்துக் கொண்டு ரமணியின் அருகிலே சென்றான்.
“தம்பி, உன் அப்பா பலே ஆளாக இருக்கிறாரே! நீ இங்கு இருப்பதாக அவருக்கு எழுதியிருந்தேன். ஆனால், அவர் நம்பவில்லை. உன் கைப்பட அவருக்கு ஒரு கடிதம் வேண்டுமாம். அந்தக் கடிதத்தைப் பார்த்த பிறகு தான், அவர் உன்னை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்வாராம்…’
“என்ன! அப்படியா சொன்னார் அவர்?” என்றான் ரமணி வியப்புடன்.
“ஆமாம் தம்பி, ஆமாம். அவர் எழுதிய பதில் கூட இதோ இருக்கிறது. நீயே படித்துப் பார்” என்று கூறி ஆலமரப் பொந்தில் சிற்சபேசன் எழுதி வைத்த கடிதத்தை ரமணியிடம் காட்டினான் தலைவன்.
ரமணி அதைப் படித்துப் பார்த்ததும், “ஆ! பத்தாயிரமா? அவ்வளவு பெரிய தொகை கொடுத்தால்தான் என்னைத் திருப்பிக் கொண்டுபோய் விடுவீர்களா? இது அக்கிரமம்! அநியாயம்!” என்று பலமாகக் கத்தினான்.
“அடேயப்பா! அப்பா தருவதாயிருந்தால் கூடப் பிள்ளையாண்டான் வேண்டாம் என்பான் போலிருக் கிறதே!” என்று கேலியாகக் கூறினான் அந்த முரட்டுத் தலைவன்.
“அவர் என் அப்பாவுமில்லை; நான் அவருடைய மகனும் இல்லை. நான் ஓர் அனாதை. அனாதையான என்னை இவ்வளவு நாட்களாக அவர் காப்பற்றி வந்ததே பெரிய காரியம். இனிமேலும் அவர் எனக்காகப் பத்தா யிரம் கொடுப்பதா? வேண்டாம். வேண்டவே வேண்டாம்.
“நான் கடிதம் எழுதித் தரமாட்டேன். தர முடியாது” என்று உறுதியாகச் சொன்னான் ரமணி.
இதைக்கேட்டதும் தலைவனுக்குக் கோபம் வந்து விட்டது. “டேய் பையா! நீ யாரை ஏமாற்றப் பார்க்கிறாய்? நீயா அனாதை? எல்லாம் எனக்குத் தெரியும். வீணாக ஆபத்தைத் தேடிக் கொள்ளாதே! இதோ, இதில் நான் சொல்லுவது போல் எழுதிக்கொடு” என்று கூறிக் காகிதத்தையும் பேனாவையும் ரமணியின் முன்னால் நீட்டினான் தலைவன்.
ரமணி அதை வாங்கவில்லை. “என் உயிருக்கே ஆபத்து வந்தாலும் சரி; கடிதம் எழுதித் தரமாட்டேன். எனக்காக இன்னொருவர் எதற்காகப் பணம் அதுவும் பத்தாயிரம் தரவேண்டும்? முடியாது; எழுத முடியாது” என்று திரும்பவும் ஆணித்தரமாகப் பதில் சொன்னான்.
“முடியாதா? சரிதான்! காரியம் அவ்வளவு தூரத்துக்கு முற்றிவிட்டதா? பார் உன்னை இப்போதே கடிதம் எழுத வைக்கிறேன்” என்று மிகவும் கோப மாகக் கூறிக்கொண்டே அங்கிருந்த ஒரு நீண்ட பிரம்பைக் கையில் எடுத்தான். இப்போது என்ன சொல்லுகிறாய்?” என்று கேட்டுக் கொண்டே பிரம்பை ஓங்கினான். பிரம்பைக் கண்டு ரமணி பயப்பட்டு விடவில்லை. அசையாமல் அங்கேயே நின்றான்!
பிரம்பை ஓங்கிய போதும், ரமணி அசையாமல் நிற்பதைக் கண்ட தலைவனுக்குக் கோபம் அபாரமாக வந்துவிட்டது. “என்ன ஆணவம் இந்தப் பயலுக்கு!” என்று கூறிக்கொண்டே பிரம்பால் ரமணியின் காலிலே இரண்டு அடி கொடுத்தான். அடி விழுந்த இடம் வலிக்கத்தான் செய்தது. ஆனாலும், ரமணி பல்லைக் கடித்து கொண்டு அப்படியே நின்றான். தலைவனின் ஆத்திரம் அதிகமாயிற்று. “எழுதப் போகிறாயா, இல்லையா?” என்று திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே ரமணியின் வலது காலிலும் இடது காலிலும் மாறி மாறி அடித்தான். வலி தாங்க முடியாமல் ரமணி எழுதிக் கொடுத்துவிடுவான் என்றே தலைவன் எதிர்பார்த்தான். ஆனால், ரமணி அடிக்குப் பயந்து சரணாகதி அடைந்து விடவில்லை. ‘முடியாது, முடியாது’ என்றே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான்.
ரமணியின் பிடிவாதம் அதிகமாக ஆகத் தலைவனின் ஆத்திரம் அதிகமாகிக் கொண்டே வந்தது. அந்த ஆத்திரத்தில் அவன் ரமணியினுடைய கை, கால், முதுகு எல்லா இடங்களிலும் மாறி மாறி அடித்தான். ரமணியும் கண்ணீர் சொரிந்தபடி அடிகளை வாங்கிக் கொண்டு அந்த இடத்திலேயே நின்றான். எவ்வளவு நேரத்துக்குத்தான் அவனால் அப்படி நிற்க முடியும்? தலைவன் முதுகிலே பலமாக ஓர் அடி கொடுத்தபோது, ரமணி ‘ஐயோ!’ என்று அலறிக் கொண்டே கீழே சாய்ந்துவிட்டான்.
அதேசமயம், இவ்வளவு நேரமாக நடந்ததையெல்லாம் வேதனையோடு பார்த்துக் கொண்டிருந்த சுந்தரம் குப்பென்று பாய்ந்து தலைவனின் எதிரே வந்து நின்றான். “ஐயா! ரமணி மிகவும் நல்லவன். அவனை இப்படி மாட்டை அடிப்பது போல் அடிக்கிறீர்களே! தயவு செய்து நிறுத்துங்கள்” என்று தடுத்துச் சொன்னான்.
“அடேயப்பா! அந்த நல்ல பையனுக்கு இந்த நல்ல பையன் சிபார்சா?” என்று கேலியாகக் கேட்டான் தலைவன்.
“ஐயா! அவனை இதற்குமேல் அடித்தால், அவன் உயிரே போனாலும் போய்விடும். உயிர்போய் விட்டால், உங்களுக்குப் பணம் எப்படி வரும்? தயவு செய்து இப்போது அவனைச் சும்மா விட்டுவிடுங்கள். காலையில் நான் எப்படியாவது சமாதானப்படுத்திக் கடிதம் வாங்கித் தருகிறேன்” என்றான் சுந்தரம்.
“நிச்சயமாகவா? சரி, நாளைக் காலையிலும் அவன் இதேபோல் தகராறு செய்தானோ, அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன்” என்று கூறி, பிரம்பை ஒரு மூலையில் எறிந்து விட்டுச் சாப்பிடச் சென்றான் தலைவன்.
அன்று இரவு குகையில் எல்லோரும் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால், ரமணிக்கு மட்டும் தூக்கம் வரவில்லை. அடி விழுந்த இடங்களைத் தன் கைகளால் நன்றாகத் தடவி விட்டுக் கொண்டிருந்தான்.
மணி பன்னிரண்டுக்குமேல் இருக்கும். அப்போது ரமணியின் பக்கத்தில் படுத்திருந்த சுந்தரம், மெதுவாகக் கண்களை விழித்தான். சுற்றிலும் பார்த்தான். மங்கலான வெளிச்சத்தில் ரமணியைத் தவிர மற்ற எல்லோரும் தூங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. உடனே ரமணியின் முகத்திற்குப் பக்கத்தில் தனது முகத்தைக் கொண்டு போனான். தாழ்வான குரலில், “ரமணி!” என்றான். ரமணி திரும்பிப் பார்த்தான் “என்ன சுந்தரம்?” என்று மெதுவான குரலில் கேட்டான்.
“ஒன்றுமில்லை. கை கால்களெல்லாம் வலிக்குமே” என்று கேட்டுக்கொண்டே சுந்தரம் ரமணியின் கைகளைத் தடவிக் கொடுக்க ஆரம்பித்தான்.
“சுந்தரம், வேண்டாம். பேசாமல் படுத்துக்கொள்” என்றான் ரமணி. சுந்தரம் விடவில்லை. தடவிக்கொடுத்துக்கொண்டே திரும்பவும் சுற்றுமுற்றும் பார்த்தான். அப்போது அவர்களின் தலைப் பக்கமாகப் படுத்திருந்த சுப்பையா என்பவன் கொஞ்சம் அசைவதுபோல் அவனுக்குத் தெரிந்தது. “இவன் விழித்துக் கொண்டிருக் கிறானோ” என்று சந்தேகப்பட்டு, சுந்தரம் அவனையே சிறிதுநேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால், அவன் மறுபடி அசையவில்லை. ஆகையால், அவன் மிகவும் நன்றாகத் தூங்குகிறான் என்று சுந்தரம் நினைத்தான். பிறகு ரமணியின் உடம்பில் அடி விழுந்த இடங்களைத் தடவிக் கொடுத்துக்கொண்டே, “ரமணி! நீ ஏன் இப்படிப் பிடிவாதம் செய்கிறாய்? பேசாமல் அவர்கள் சொன்னபடியே நீ எழுதிக் கொடுத்துவிடு!” என்றான்.
“சுந்தரம், சிற்சபேசன் என் சொந்த அப்பா என்பதை நீயும் நம்புகிறாயா? அவர் எனக்கு அப்பாவுமில்லை; நான் அவருக்கு மகனும் இல்லை. அவர் என் தூரத்து உறவினர்கூட இல்லை’
“நிஜமாகவா ரமணி!”
“சுந்தரம், இவர்கள் தான் என் பேச்சை நம்பவில்லை. நீயாவது நம்புவாய் என்றே நினைக்கிறேன். நான் பிறந்தது வேலங்குறிச்சி என்ற ஊரில். மதுரைக்குப் பக்கத்திலே அது இருக்கிறது. நான் பிறந்ததும் என் அம்மா முத்துலட்சுமி ஜன்னி கண்டு இறந்துவிட்டாள். என் அப்பா வேலாயுதமும் கொஞ்ச காலத்துக்கு முன்னால் நாய் கடித்து இறந்து போனார்” என்று ஆரம்பித்துத் தன் கதையைச் சுருக்கமாகக் கூறி முடித்தான் ரமணி.
“அப்படியா! ரமணி, நீ சொல்லுவதெல்லாம் உண்மை என்று நான் நம்புகிறேன் ஆனாலும், இவர்கள் நம்ப மாட்டார்களே! இவர்களுக்குப் பணம்தான் குறி என்று தெரிகிறது. நீ பேசாமல் கடிதம் எழுதிக் கொடுத்துவிடு. சிற்சபேசனே பணம் தருவதாக எழுதியிருக்கிறாரே! நீ இங்கு இருப்பதைத் தெரிந்து கொள்வதற்குத்தான் அவர் உன் கைப்படக் கடிதம் வேண்டும் என்கிறார். உன் கடிதம் போனால், சீக்கிரம் பணம் வரும். உனக்கும் சீக்கிரம் விடுதலை கிடைத்துவிடும்” என்றான் சுந்தரம்.
‘விடுதலை கிடைத்தால் எனக்கும் சந்தோஷம்தான். ஆனாலும், எனக்கு ஒரு சந்தேகம். இவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு என்னைத் திருப்பி அனுப்பாமலே வைத்துக் கொண்டால்…’
“ரமணி, அது மாதிரி நடக்காது. இங்கேயே உன்னை வைத்துக் கொண்டால் உனக்குச் சாப்பாடு போட வேண்டாமா? கட்டாயம் பணம் வந்ததும் கொண்டுபோய் விட்டு விடுவார்கள். தயவு செய்து எனக்காகவாவது நீ நாளைக்குக் கடிதம் எழுதிக் கொடுத்துவிடு.”
“சரி, காலையில் பார்த்துக் கொள்ளலாம். பேசாமல் படுத்துக்கொள்” என்று கூறினான் ரமணி. சுந்தரம் படுத்துக் கொண்டான். ரமணியும் இரவு வெகுநேரம் விழித்திருந்ததால், அயர்ந்து தூங்கலானான்.



