பர்மா ரமணி
அழ. வள்ளியப்பா

17. காரியம் கெட்டது!

இரவு மதுரநாயகம் ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்றார். ‘டிக்கெட்’ வாங்கிக்கொண்டு ரயிலில் ஏறி உட்கார்ந்தார். ரயில் புறப்பட இன்னும் ஐந்து நிமிஷங்களே இருந்தன. அப்போது ஒவ்வொரு வண்டியாகப் பார்த்துக்கொண்டே ஒரு பையன் ஓடிவந்தான். அவன் மதுரநாயகம் இருந்த வண்டிக்குப் பக்கத்திலே வந்ததும், மதுரநாயகம் தற்செயலாக அவனைப் பார்த்து விட்டார். உடனே, ‘ஏ சிங்காரம், சிங்காரம்!” என்று கூவினார்.

அந்தப் பையன், சத்தத்தைக் கேட்டதும் நின்றான். “என்னப்பா விஷயம்? ஏன் இப்படி வியர்க்க விறுவிறுக்க ஓடி வருகிறாய்?” என்று கேட்டார் மதுரநாயகம்.

“உங்களைத் தேடித்தான் சார் வந்தேன். உடனே கீழே இறங்குங்கள் சார். உம், நேரமாகிறது. வண்டி புறப்படப் போகிறது. இறங்குங்கள் சார்! இதோ உங்களுக்கு ஒரு தந்தி வந்திருக்கிறது சார். முதலாளி பிரித்துப் படித்துப் பார்த்தார். உடனே என்னை அவசரமாக இங்கே அனுப்பி வைத்தார்” என்று கூறித் தந்தியை அவரிடம் கொடுத்தான் சிங்காரம்.

மதுரநாயகம் படித்துப் பார்த்தார். “புறப்பட வேண் டாம். கடிதம் வருகிறது” என்று திருச்சியிலிருந்து தந்தி வந்திருந்தது ஆனால், அந்தத் தந்தியை ஆனந்தன் அனுப்பவில்லை. அவன் அப்பா வேதநாயகம்தான் அனுப்பியிருந்தார்! மதுரநாயகம் அந்தத் தந்தியைப் படித்ததும் திடுக்கிட்டார்.

“என்ன இது! நம் அத்தான் அல்லவா தந்தி அனுப்பி யிருக்கிறார்! அன்று நான் எழுதிய கடிதத்துக்கு இதுவரை அவர் பதிலே எழுதவில்லை! ஆனந்தன் தான் இரண்டு கடிதங்கள் எழுதியிருந்தான். காலையில் வந்த தந்தியும் அவன் அனுப்பியது தான். இப்போது, அத்தான் இப்படித் தந்தி அனுப்பியிருக்கிறாரே! ஒன்றும் தெரியவில்லையே! சரி, கடிதம் எழுதுவதாகத் தான் தந்தியில் சொல்லியிருக்கிறாரே, பார்க்கலாம்” என்று கூறிக்கொண்டே ரயில் டிக்கெட்டைத் திருப்பிக் கொடுத்து விட்டுப் பணத்தை வாங்கிக்கொண்டு வீடு திரும்பினார்.

ரமணியைக் கண்டுபிடித்துவிட்டதாக ஆனந்தன் சொன்னதும் அவன் அம்மாவுக்கு ஒரே ஆனந்தம். வீட்டிலிருந்த பட்சணங்களையெல்லாம் கொண்டுவந்து “ரமணி, இதோ சாப்பிடு. நன்றாகச் சாப்பிடு” என்று கொடுத்தாள். அப்போது ஆனந்தன், “குண்டுமணி, நாம் எவ்வளவு சிரமப்பட்டு ரமணியைக் கண்டுபிடித்தோம். இந்த வெற்றியை நாம் சிறப்பாகக் கொண்டாட வேண்டாமா?” என்றான்.

“கட்டாயம் கொண்டாட வேண்டும். இன்றைக்கு மத்தியானமே நம் நண்பர்களுக்கெல்லாம் ஒரு பலமான விருந்து வைத்துவிட்டால் போகிறது!” என்று பதிலளித் தான் குண்டுமணி. அம்மாவும் ‘சரி’ என்று கூறிவிட்டாள்.

அன்று மத்தியானம் எல்லா நண்பர்களும் ஆனந்தன் வீட்டுக்கு வந்துவிட்டார்கள், அவர்கள் ஒவ்வொருவருக்கும். “இவன் தான் ரமணி” என்று புதுப் பையனை அறிமுகப்படுத்தி வைத்தான் ஆனந்தன். எல்லோரும் மகிழ்ச்சியுடன் அவனைப் பார்த்தார்கள்.

சாப்பிடும்போது, ஒரே குதூகலமாகப் பேசிக் கொண்டே அவர்கள் சாப்பிட்டார்கள்.

சேகர் என்ற பையன், “என்ன இருந்தாலும், நமது ஆனந்தன் சாமர்த்தியசாலிதான்! எவ்வளவு பாடுபட்டு இந்த ரமணியைத் தேடிக் கண்டுபிடித்திருக்கிறான்!” என்றான்.

உடனே கோபு என்பவன், ‘ஆனந்தன் பரீட்சையில் தேறியிருந்தால் அப்போதே விருந்து கிடைத்திருக்கும். ஆனாலும், இப்போதாவது கிடைத்ததே! அதற்கு இந்த ரமணிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்’ என்றான்.

அப்போது ஆனந்தன், “ரமணி, கூச்சப்படாதே நன்றாகச் சாப்பிடு. உன்னை உத்தேசித்துத்தான் இந்த விருந்தெல்லாம்” என்றான்.

ஆனந்தன் சொல்வதைக்கூட அவன் காதில் வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. இலையில் இருந்ததை யெல்லாம் வளைத்து வளைத்து உள்ளே தள்ளிக் கொண்டேயிருந்தான்.

சாப்பாட்டை முடித்துக் கொண்டு எல்லோரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது தஞ்சாவூர் போயிருந்த ஆனந்தனின் அப்பா வேதநாயகம் வந்துவிட்டார். இரவு வருவதாகக் கூறி விட்டுப் போனவர், சீக்கிரம் வேலை முடிந்துவிட்டதால் பகலி லேயே திரும்பிவிட்டார். அவரைக் கண்டதும், ஆனந்தன் துள்ளிக் குதித்துக் கொண்டே அவர் அருகே ஓடினான். “அப்பா! அப்பா! ரமணியை என்னால் கண்டுபிடிக்க முடியாது என்று சொன்னாயே! இதோ பார். இவன்தான் ரமணி!” என்று பெருமையாகக் காட்டினான்.

“ஓ, இவன் தான் அந்த ரமணியா? நல்ல காலம்!” என்றார் அப்பா. “அப்பா, மாமாவுக்குத் தந்திகூடக் கொடுத்து விட்டேன். இரவே புறப்பட்டு நாளைக் காலையில் வந்துவிடுவார்.

“மதுரநாயகத்துக்கு வேலை அதிகமாயிருக்கும். ஏன் அவனை இங்கே வரச் சொன்னாய்? நாமே இவனை அழைத்துக்கொண்டு போயிருக்கலாமே!”

“இல்லையப்பா. மாமா இங்கே வந்து வெகுநாளாகி விட்டதாம். அம்மாதான் மாமாவைப் புறப்பட்டு வரும்படி தந்தி கொடுக்கச் சொன்னாள்.”

“சரி, வரட்டும்” என்று கூறிவிட்டு வேதநாயகம் சாப்பிடச் சென்றார். அவர் சாப்பிட்டுவிட்டு வருவதற்குள் விருந்துக்கு வந்த நண்பர்கள் எல்லோரும் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினார்கள்.

வேதநாயகம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, ஆனந்தனின் அம்மா அவரைப் பார்த்து “ஆனந்தனைப் பரிகாசம் பண்ணினீர்களே! பார்த்தீர்களா அவன் சாமர்த் தியத்தை! தந்தியைப் பார்த்ததும் என் தம்பிக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்!” என்று பெருமையோடு சொன்னாள்.

வேதநாயகம் சாப்பாட்டை முடித்துக்கொண்டு முகப்புக்கு வந்தார். வெற்றிலை போட்டுக்கொண்டே ‘ரமணி, உன்னைக் காணாமல் மதுரநாயகம் ஏங்கிப் போய்விட்டான். ஆமாம், அந்த நாடக சபாவில் நீ சேர்ந்து எவ்வளவு காலமாகிறது?” என்று கேட்டார்.

“நானா?… நாடக சபாவிலே சேர்ந்து எத்தனை வருஷமாகிறது என்றுதானே கேட்கிறீர்கள்? நாலு வருஷத்துக்கு மேலே யிருக்கும்.”

இதைக் கேட்டதும் வேதநாயகம் திடுக்கிட்டார். ‘என்ன இது! நாடக சபா ஆரம்பித்து ஒன்றரை வருஷங்கூட ஆகவில்லையே! ஒரேயடியாக நாலு வருஷம் என்று சொல்லுகிறானே!’ என்று சந்தேகப்பட்டார்.

உடனே மேலும் கேள்விகள் கேட்டார். “ஓகோ! நாலு வருஷத்துக்கு மேலே இருக்குமா? அதுதான் மதுரநாயகம் உன் மேல் உயிரையே வைத்திருக்கிறார்! சரி, அந்த நாடக சபா முதலாளி. அவர் பெயர் ஏதோ சொன்னாரே! மறந்தே போய்விட்டது…. அவர் பெயர் என்ன தம்பி?” என்று கேட்டார்.

“முதலாளி பெயரா?… அவர் பெயர்… அவர் பெயர்… ராமசாமி. ஆமாம், ராமசாமிதான்.”

முதலாளியின் பெயர் மோகனரங்கம் என்பது வேத நாயகத்துக்கு நன்றாகத் தெரியும். அப்படியிருக்கும் போது, ராமசாமி என்று அவன் சொன்னதும், அவரது சந்தேகம் வலுத்துவிட்டது. ஆனாலும், வெளியில் காட்டிக் கொள்ளாமல், ‘ஆமாம், ஆமாம். ராமசாமியே தான்! அவர் தங்கமான மனிதர். மதுரநாயகம் சம்சாரம் கோதை நாயகி கூட மிகவும் நல்லவள். ரமணி, நீ கோதை நாயகியை எப்போதாவது பார்த்திருக்கிறாயா?” என்று கேட்டார்.

“என்ன அப்படிக் கேட்கிறீர்களே? கோதைநாயகி அம்மாளை எனக்கு நன்றாகத் தெரியும். சிலசமயம் சாப்பாடு எடுக்க வீட்டுக்குப் போவேன். அப்போது பார்த்திருக்கிறேன். நீங்கள் சொன்ன மாதிரி அந்த அம்மாள் மிகவும் நல்ல அம்மாள்.’

இப்படி அவன் கூறியதும் வேதநாயகத்தின் சந்தேகம் உறுதிப்பட்டது. மதுரநாயகத்தின் மனைவி கமலாதேவியைக் கோதைநாயகி என்று நான் மாற்றிச் சொன்னேன். அதை இவன் மறுத்துச் சொல்லவே இல்லை. அத்துடன், மதுரநாயகம் எழுதிய கடிதத்தில் அவன் வீட்டிலேயே ரமணி சாப்பிட்டு வந்ததாக அல்லவா எழுதியிருக்கிறான்? இவன் சொல்லுவது எல்லாமே பொய். இவன் ரமணியே அல்ல. ஆனந்தனை நன்றாக ஏமாற்றிவிட்டான்’ என்று தீர்மானித்துக் கொண்டு, அவனைப் பார்த்துக் கண்டிப்பான குரலில், “டேய், உள்ளதைச் சொல். உன் பெயர் என்ன?” என்று மிரட்டினார்.

அவன் பேந்தப் பேந்த விழித்தான். “டேய். உள்ளதைச் சொன்னால் தப்பினாய்! இல்லாத போனால், போலீஸில் ஒப்படைத்து விடுவேன். உம், சொல்லு” என்று கத்தினார்.

உடனே அவன் நடுநடுங்கினான். “சார்,

“சார், போலீஸ் வேண்டாம், சார். உள்ளதைச் சொல்லிவிடுகிறேன், சார். என் பெயர் ரமணி இல்லை. முனியாண்டி”

இதை அவன் சொன்னதும், “என்ன! முனியாண்டியா!” என்று ஆனந்தனும் குண்டுமணியும் ஆச்சரியத்தோடு கேட்டார்கள். அவர்களுக்கு ஒரே ஏமாற்றமாக இருந்தது.

அவன் மேலும் சொன்னான்: “நான் ஓர் ஏழை. பிச்சை எடுத்துக் காலம் தள்ளி வருகிறேன். நேற்று முழுதும் எனக்கு ஒரு வாய் சோறுகூடக் கிடைக்கவில்லை. பட்டினி கிடந்தேன். இரவிலே ஒரு தெருத் திண்ணையிலே படுத்திருந்தேன். தூக்கமே வரவில்லை. அப்போது ஏதோ பேச்சுக்குரல் கேட்டது. நான் படுத்திருந்த திண்ணைக்குப் பின்புறம் சாய்மானமுள்ள ஒரு திண்ணை இருந்தது. அதற்கு எதிர்ப்புறத்திலேயும் அதே மாதிரி ஒரு திண்ணை யிருந்தது. ஆளுக்கு ஒரு திண்ணையில் உட்கார்ந்து, இவர்கள் ரமணி என்பவனைப் பற்றிப் பேசியது என் காதில் விழுந்தது.”

இதை அவன் சொல்லும்போதே, “அட படுபாவி! நாங்கள் பேசியதையெல்லாம் கேட்டுக் கொண்டா இருந்தாய்?” என்றான் ஆனந்தன்.

“ஆமாம், இவர்கள் பேச்சிலிருந்து பின் தெருவுக்குப் போகப் போகிறார்கள் என்பதையும் தெரிந்து கொண்டேன். இவர்கள் தண்ணீர் குடிக்கப் போன சமயம் பார்த்து, நான் பின் தெருவுக்கு ஓடி, ஒரு வீட்டுக்கு முன்னால் படுத்துக் கொண்டேன். நான் நினைத்தபடியே இவர்கள் அந்தத் தெருவுக்கு வந்தார்கள். என்னைப் பார்த்ததும் எழுப்பி னார்கள். என்னை விசாரித்தார்கள். நான் தான் ரமணி என்று சொன்னால் வயிறாரச் சாப்பாடு கிடைக்குமே என்று நினைத்துத் தான் இப்படிச் செய்துவிட்டேன். உங்களுக்குக் கோடிப் புண்ணியம். என்னை விட்டு விடுங்கள்” என்று கூறி வேதநாயகம் காலிலே விழுந்து கெஞ்சினான் அந்த முனியாண்டி!

இவ்வளவையும் கேட்டுக் கொண்டிருந்த ஆனந்தனுக்கும், குண்டுமணிக்கும், என்ன சொல்லுவதென்றே தெரிய வில்லை. முனியாண்டியின் மேல் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அவனையே முறைத்துப் பார்த்தார்கள்.

அப்போது வேதநாயகம், “அப்பா, துப்பறியும் சிங்கங்களா! உங்கள் திறமை இப்போதாவது தெரிகிறதா? வேலையற்ற வெட்டிப் பயல்கள்! விருந்து வைக்கிறார்களாம் விருந்து!” என்று அவர்களைத் திட்டினார்.

முனியாண்டியைப் பார்த்து, “டேய்; எழுந்திரு. இனி, ஒரு விநாடி கூட நீ இங்கே இருக்கக் கூடாது. உடனே எங்காவது கண்காணாத இடத்துக்கு ஓடிப் போய்விடு. உம், நிற்காதே! ஓடு, ஓடு!” என்று அவனை விரட்டி அனுப்பினார்.

பிறகு நேராகத் தபால் ஆபீசுக்குச் சென்றார். ‘புறப்பட வேண்டாம். கடிதம் வருகிறது’ என்று மதுர நாயகத்துக்கு ஒரு தந்தியை அனுப்பி வைத்தார். இல்லாவிட்டால், மதுரநாயகம் அன்றிரவே புறப்பட்டுக் காலையில் வந்து விடுவாரே!

அன்றே நடந்ததை விவரமாக மதுரநாயகத்துக்கு எழுதி அனுப்பினார். அத்துடன், கடிதத்தில் இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்டிருந்தார். “நானும் ஒரு வாரத்துக்கு முன்பு இங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் ரமணியின் அங்க அடையாளங்களைக் கொடுத்து, அவனை எப்படியாவது தேடிக் கண்டுபிடித்துத் தரவேண்டும் என்று சொல்லியிருந்தேன். தந்தி கொடுத்த பிறகு, போலீஸ் ஸ்டேஷனுக்கும் சென்று, ஏதாவது தகவல் கிடைத்ததா?’ என்று கேட்டுப் பார்த்தேன். அவர்கள் இந்த வட்டாரம் முழுதும் தேடிப் பார்த்து விட்டார்களாம். ரமணி கிடைக்க வில்லையாம். ஆகையால், அவன் இந்தப் பகுதியில் இல்லை என்றே தெரிகிறது” என்று எழுதியிருந்தார்.

வேதநாயகம் விவரமாக எழுதியிருந்த கடிதத்தைப் படித்ததும் மதுரநாயகத்திற்குப் பெரும் ஏமாற்றமாகப் போய்விட்டது. ‘எல்லாம் இப்படியா ஆகவேண்டும்! ஐயோ, ரமணி இப்போது எங்கு இருக்கிறானோ!’ என்று எண்ணிப் பெருமூச்சு விட்டார்

ஆனால், ரமணி மதுரை நகரிலே பத்திரமாக இருக் கிறான் என்பதும், அங்கிருந்து பர்மாவுக்குப் போகப் போகிறான் என்பதும் அவருக்கு எப்படித் தெரியும்?

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *