
பர்மா ரமணி
அழ. வள்ளியப்பா
4. அவன் குணம்
மறுநாள் காலை நேரம். மதுரநாயகத்தின் வீட்டுக் கடிகாரம், ‘டாண், டாண்’ என்று ஏழு தடவைகள் அடித்து முடித்தது. அதே சமயம், “சார்! சார்” என்ற குரலும் கேட்டது.
அறையில் உட்கார்ந்து ஏதோ யோசித்துக் கொண்டிருந்த மதுரநாயகம் சத்தம் கேட்டதும் வெளியே வந்தார். வாசல் பக்கம் பார்த்தார். உடனே, “ஓ, நீயா. வா, வா! உள்ளே வா” என்று அன்புடன் அழைத்தார்.
வாசலில் நின்றுகொண்டிருந்த ரிக்ஷாக்காரப் பையன் ரமணி அறைக்குள்ளே வந்தான். மதுரநாயகம் தம்முடைய நாற்காலியில் உட்கார்ந்தார். “நீயும் இப்படி உட்கார்” என்று கூறி எதிரிலிருந்த நாற்காலியை அவனுக்குச் சுட்டிக் காட்டினார்.
“பரவாயில்லை, சார்?” என்று கூறிவிட்டு நின்று கொண்டிருந்தான் ரமணி.
‘சும்மா உட்கார்ந்து பேசு” என்று சொன்னார் மதுர நாயகம். ரமணி தயக்கத்துடன் அவர் சுட்டிக் காட்டிய நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான்.
“ரமணி, உன்னிடம் ஒன்று கேட்க வேண்டுமென்று நினைத்தேன். நேற்றுப் போலீஸ் ஸ்டேஷனில் நீ ஒன்றிரண்டு இடங்களில் வேலைக்கு இருந்ததாகவும், அங்கெல்லாம் அதிக நாட்கள் இருக்க முடியவில்லை என்றும் சொன்னாயே. ஏன் அப்படி? என்ன காரணம்?” என்று கேட்டார் மதுரநாயகம்.
“இதே கேள்வியை அந்த இன்ஸ்பெக்டர் கேட்டாலும் கேட்பார் என்று நினைத்தேன். ஆனால், அவர் கேட்கவில்லை. நீங்கள் கேட்டுவிட்டீர்கள். இதோ சொல்லுகிறேன்; கேளுங்கள்” என்று ஆரம்பித்தான்.
“என் அப்பா இறந்ததும், நான் மதுரையிலே முதன் முதலாக ஒரு பணக்காரர் வீட்டிலே வேலைக்குச் சேர்ந்தேன். எடுபிடி வேலைதான். சாப்பாடு போட்டு இரண்டு ரூபாய் சம்பளம் தந்தார் அந்தப் பணக்காரர். அவர் சுத்தக் கருமி. ஈவு இரக்கம் இல்லாதவர்.
“ஒருநாள் காலை நேரம், ஒரு சிறு பெண். வயது ஐந்து கூட இருக்காது. பிச்சை கேட்க அந்த வீட்டுக்கு வந்தாள். அப்போது எல்லோரும் பலகாரம் சாப்பிட்டு விட்டார்கள். நான் மட்டும்தான் சாப்பிட வேண்டும்.
பிச்சைக்காரப் பெண், ‘ஐயா சாமி, பிச்சை போடுங்கள். பசியாயிருக்கிறது’ என்று கூறிக் கொண்டே கையிலிருந்த தட்டை நீட்டினாள். அவளைப் பார்க்க எனக்குப் பரிதாப மாயிருந்தது. ஆனால், அந்தப் பணக்காரருக்குக் கோபம் தான் வந்தது. ‘சீ கழுதை போ. பிச்சை வேண்டுமாம் பிச்சை! பிறக்கும் போதே பிச்சைப் பாத்திரத்தோடே பிறந்துவிட்டது. போ, போ” என்று விரட்டினார்.
“அந்தப் பெண் போகவில்லை. ஐயா, உங்களுக்குக் கோடிப் புண்ணியம் உண்டு. ஏதாவது கொடுங்கள், ஐயா!’ என்று கூறி அவரது காலைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினாள். உடனே அவர் காலை வேகமாக உதறினார். அவள் கீழே விழுந்தாள். கையிலிருந்த தட்டும் தரையிலே உருண்டு ஓடியது. அந்தப் பரிதாபக் காட்சியைக் காண எனக்குச் சகிக்கவில்லை.
“சற்று நேரம் சென்று அந்தப் பெண் மெதுவாக எழுந்தாள். கலங்கிய கண்களைத் துடைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.
“ஐந்து நிமிஷம் சென்றது. பணக்காரர் என்னிடம் காலணாக் கொடுத்துப் பொடி வாங்கிவரச் சொன்னார். வெளியே வந்ததும், அந்தச் சிறு பெண் எங்கே என்று தேடிப் பார்த்தேன். தெருக் கோடியில் களைத்துப்போய் அவள் உட்கார்ந்திருந்தாள். உடனே நான் அவளிடம் ஓடினேன். தங்கச்சி, நீ வருத்தப்படாதே! உன்னை ஒரு பணக்காரர் பிடித்துத் தள்ளினாரே, அவர் வீட்டில் தான் நான் இருக்கிறேன். உன்னைப் பார்க்க எனக்கு வருத்தமாயிருக்கிறது. நீ இப்போதே எழுந்து நேராக அந்த வீட்டுக் கொல்லைப் புறத்துக்குப் போ. நானும் ஒரு நொடியில் அங்கு வந்து விடுகிறேன். வந்ததும், உனக்கு நிச்சயம் ஏதாவது சாப்பிடுவதற்குத் தருவேன்’ என்று கூறி அவளை அனுப்பி வைத்தேன்.
“சிறிது நேரத்தில் பொடியை வாங்கிக்கொண்டு போய்ப் பணக்காரரிடம் கொடுத்துவிட்டு, சமையல் கட்டுக்குச் சென்றேன். எனக்காக இருந்த மூன்று இட்டலிகளையும் ஒரு இலையில் வைத்தேன். அவற்றை எடுத்துக் கொண்டு கொல்லைப்புறத்துக்குச் சென்றேன். அங்கே தயாராகக் காத்துக்கொண்டிருந்த சிறுமியிடம் கொடுத்துச் சாப்பிடச் சொன்னேன். சிறுமி ஆசை ஆசையாக இட்டலி களைச் சாப்பிடுவதைக் கண்டு ஆனந்தம் அடைந்தேன்.
“இது நடந்து கால் மணி நேரம்கூட ஆகியிருக்காது. முதலாளி கூப்பிடுவதாகச் சமையல்காரன் வந்து என்னைக் கூப்பிட்டான். உடனே நான் அந்தப் பணக்காரரிடம் சென்றேன். ‘டேய், நீ என்ன வேலை செய்தாய்? அயோக்கியப் பயலே! யாரோ ஒரு பிச்சைக்காரப் பெண்ணாம். அவளுக்கு நீ இட்டலி கொடுத்தாயாமே! யாரைக் கேட்டுக்கொண்டு கொடுத்தாய்?” என்று கோபத்துடன் இரைந்தார்.
சமையல்காரன் கோள் சொல்லியிருக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டேன். “ஐயோ, நான் ஒன்றும் திருடிக் கொடுக்கவில்லையே! எனக்காகத் தந்த இட்டலி களைத்தானே அவளுக்குக் கொடுத்துவிட்டு நான் பட்டினி கிடக்கிறேன்” என்றேன்.
என் பேச்சைக் கேட்டதும் அவரது கோபம் அதிக மாகிவிட்டது, ‘டேய், யாரை ஏமாற்றப் பார்க்கிறாய்? உனக்குத் தந்த இட்டலிகளைத் தானம் செய்துவிட்டு நீ இப்போது பட்டினி கிடப்பதாகச் சொல்கிறாய். உண்மைதான். ஆனால், மத்தியானம் சாப்பிடும்போது இந்த வேளைக்கும் சேர்த்தல்லவா மூக்குப் பிடிக்கச் சாப்பிடப் போகிறாய்? அப்போது யாருக்கு நஷ்டம்? எனக்குத் தானேடா! இதே போல் எத்தனை தடவை செய்திருக் கிறாயோ! திருட்டுக் கழுதை’ என்று என்னைத் திட்டி னார். அவர் என்னைத் ‘திருடன்’ என்று சொன்னது எனக்கு மிகவும் வேதனையாயிருந்தது. பேசாமல், அன்றே- அந்த நிமிஷமே அவர் வீட்டைவிட்டே வெளியேறிவிட்டேன்.
பிறகு, நான் எங்கெங்கோ வேலைக்கு அலைந்தேன். கடைசியாக ஒரு பலசரக்கு மண்டியில் வேலை கிடைத் தது. அந்த முதலாளியிடம் ஒரு கணக்கப்பிள்ளை இருந்தார். அவர் இருபது வருஷ காலமாக அவரிடம் வேலை பார்த்துவந்தார். அன்று ஒருநாள் கணக்கப் பிள்ளையின் பெயருக்கு ஓர் அவசரத் தந்தி வந்தது. அப்போது அவர் கடையில் இல்லை. பாங்கிலே பணம் கட்டப் போயிருந்தார். முதலாளியே கையெழுத்துப் போட்டுத் தந்தியை வாங்கினார். அவருக்கு ஆங்கிலம் தெரியாது. அதனால், தந்திச் சேவகரிடமே அதைக் கொடுத்துப் படித்துக் காட்டச் சொன்னார்.
தந்திச் சேவகர் அதைப் படித்துப் பார்த்துவிட்டு ‘த்ஸௌ, த்ஸௌ, பாவம்! உங்கள் கணக்கப்பிள்ளையின் தாயார் இறந்து விட்டார்களாம். உடனே புறப்பட்டு வரவும் என்று இருக்கிறது’ என்றார். ‘சரிதான்’ என்று கூறித் தந்தியை வாங்கிப் பெட்டிக்குள்ளே வைத்தார் முதலாளி.
தந்திச் சேவகர் போனதும் என்னை அவர் அருகிலே அழைத்தார். அப்போது நானும் அவரும் தான் இருந்தோம். ‘டேய், ரமணி! இந்தத் தந்தி வந்த விஷயத்தைக் கணக்கப் பிள்ளையிடம் சொல்லவே சொல்லாதே. எழுதவேண்டிய கணக்குகளெல்லாம் ஏராளமாக இருக்கின்றன. கணக்கப் பிள்ளை இன்றைக்கே ஊருக்குப் போய்விட்டால், திரும்பிவரப் பத்துப் பதினைந்து நாளாகும். மூன்று நாளிலே கணக்குகளையெல்லாம் எழுதி முடித்துவிடுவான். அப்புறம் சொல்லலாம்’ என்றார்.
இதைக் கேட்டதும் நான் திடுக்கிட்டேன். ‘என்ன இது! உங்களிடம் இருபது வருஷமாக வேலை பார்த்து வருகிறார் அந்தக் கணக்கப்பிள்ளை. அவரைப் பெற்று வளர்த்த தாயார் இறந்துவிட்டதாக அவசரத் தந்தி வந்திருக் கிறது. இறக்கும் சமயத்தில் தான் அவர் அம்மாவின் அருகிலே இல்லை; இறந்த பிறகாவது அம்மாவின் முகத்தைப் பார்க்க வேண்டாமா? உங்கள் வேலைதான் பெரிது என்கிறீர்களே!’ என்று ஆத்திரத்துடன் கேட்டு விட்டேன்.
நான் கூறியதைக் கேட்டு அவர் கோபம் கொண்டார். ‘டேய், அதிகப் பிரசங்கி! நீ அவனிடம் இதைப் பற்றி ஏதாவது சொன்னால், உடனே உன்னை வேலையை விட்டே விரட்டி விடுவேன்’ என்று மிரட்டினார்.
உடனே நான் அவரிடம், ‘சிரமப்பட்டு நீங்கள் விரட்டவேண்டாம். நானே போய் விடுகிறேன். ஆனாலும், உடனே பாங்குக்குப் போய்க் கணக்கப்பிள்ளையிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டுத்தான் மறு வேலை பார்க்கப் போகிறேன்’ என்று கூறிப் புறப்பட்டேன்.
“நேராக பாங்கிற்குப் போனேன். கணக்கப்பிள்ளை யிடம் அந்தத் துக்கச் செய்தியைக் கூறிவிட்டு, அந்த ஊரை விட்டே புறப்பட்டேன். நேராக இந்தப் பட்டணத்துக்குத்தான் வந்தேன்.’
இவ்வளவு நேரமாக ரமணி கூறியதைக் கேட்டதும், மதுரநாயகத்துக்கு ஒரே ஆச்சரியமாயிருந்தது… ‘ஒரு சிறு பையன். இவனுக்கு எவ்வளவு பரோபகார சிந்தனை!’ என்று வியந்தார்.
பிறகு புன்சிரிப்புடன், “ரமணி, நீ சொல்லுவதெல்லாம் சரிதான். இருந்தாலும், காலத்தை ஒட்டி, நமது நிலைமையை அனுசரித்துப் போக வேண்டியதுதான்… ஆமாம், நீ சொல்வதைப் பார்த்தால் உனக்கு ஒருவரின் கீழேயிருந்து வேலை பார்க்கப் பிடிக்காது போல் தெரிகிறதே” என்று கேட்டார் மதுரநாயகம்.
அதற்கு ரமணி கண்கலங்கப் பின்வருமாறு கூறினான்: “எனக்கு ஒருவரின் கீழ் வேலை செய்யக்கூடாது என்பதில்லை, சார். யாரேனும் வேலை கொடுத்தால், கொடுத்த வேலையை ஒழுங்காகச் செய்வேன். பொய் சொல்ல மாட்டேன். திருடமாட்டேன். என்னைப் பற்றி நானே சொல்லுகிறேனே என்று நினைக்காதீர்கள். சிபாரிசு செய்ய எனக்கு வேறு யார் இருக்கிறார்கள்? நானோ அனாதை!’”
உடனே மதுரநாயகம், “சரி, வருத்தப்படாதே! எங்கள் சபா முதலாளியிடம் சொல்லிப் பார்க்கிறேன். அவர் உன்னை எடுத்துக் கொள்ளலாம். இதற்காகத் தான் உன்னை இங்கே வரச் சொன்னேன்” என்றார்.
அன்றே முதலாளி மோகனரங்கத்திடம் ரமணியை அழைத்துச் சென்றார். அவனை நாடக சபாவில் சேர்த்துக்கொள்ள அனுமதி கேட்டார். ரமணி ஓர் அனாதை என்பதைக் கேட்டதும் முதலாளி கொஞ்சம் தயங்கினார். மதுரநாயகம் மிகவும் சிபாரிசு செய்யவே, “சரி, உனக்கு நடிக்கத் தெரியுமா? இதற்கு முன் எங்கேனும் நடித்திருக் கிறாயா?” என்று ரமணியைக் கேட்டார்.
“இல்லை சார், சொல்லிக் கொடுத்தால் பழகிக் கொள்ளுவேன்” என்று சொன்னான் ரமணி.
“அதெல்லாம் இப்போது வேண்டாம். ஆபீஸ் பையனாக வேலை பார்த்த ஞானமுத்து ஒரு வார லீவில் ஊருக்குப் போனவன் இன்னும் திரும்பி வரவில்லை. பதினைந்து நாளாகிறது. தகவலும் இல்லை… மதுர நாயகம், அவன் இனிமேல் வந்தால் ‘வேண்டாம்’ என்று சொல்லி அனுப்பிவிடுங்கள். இன்று முதல், அவன் வேலையை இந்தப் பையன் பார்க்கட்டும். நாடகத்திலே மற்றப் பையன்கள் எப்படி நடிக்கிறார்கள் என்பதைச் சும்மா இருக்கும்போது இவன் பார்த்துத் தெரிந்து கொள்ளட்டும். ஒரு வருஷம் கழித்து நடிப்பதைப் பற்றி யோசிக்கலாம்” என்றார் முதலாளி.
ரமணி அன்றே பத்து ரூபாய் சம்பளத்தில் ஆபீஸ் பையனாகச் சேர்ந்துவிட்டான். பொய் சொல்லாமல் திருடாமல் யோக்கியனாகவே இதுவரை அவன் நடந்து வந்திருக்கிறான். அப்படிப்பட்டவன் இப்போது பட்டுத் துணியைத் திருடிவிட்டான் என்றால் மதுரநாயகம் உடனே நம்பி விடுவாரா?



