
பர்மா ரமணி
அழ. வள்ளியப்பா
25. எதிர்பாராதது!
அந்த மனிதனுடன் கீழே விழுந்த சுந்தரம் சமாளித்துக் கொண்டு எழுந்தான். எழுந்ததும், கவலையோடு அந்த மனிதனின் அருகிலே சென்றான். அவன் முகத்தை உற்றுப்பார்த்தான். தலையிலிருந்து ‘குபு குபு’ என்று ரத்தம் வழிந்து கொண்டிருப்பது தெரிந்தது. அத்துடன் அவன் மயக்கமுற்றுக் கிடந்தான். அந்தக் காட்சியைக் கண்ட சுந்தரம், ‘ஆ!’ என்று அலறித் துடி துடித்துவிட்டான்.
அப்படி அவன் அலறுவதற்கும், லாரி பிரகாசமான வெளிச்சத்துடன் அருகில் வந்து ‘சரக்’ என்று நிற்பதற்கும் சரியாக இருந்தது. அதற்குள் முரடர் தலைவனும், அவனுடன் வந்தவர்களும், “ஐயோ! போலீஸ் லாரிபோல் இருக்கிறதே!” என்று கூறிக் கொண்டே காட்டுக்குள் ஓடிப்போய் விட்டார்கள்.
ஆனால், அங்கு வந்தது போலீஸ் லாரியல்ல; அது மரம் ஏற்றும் லாரி. லாரி நின்றதும் அதிலிருந்து டிரைவர் கிழே குதித்தார். அவருடன் நான்கு ஐந்து வேலைக்காரர்களும் கீழே குதித்தார்கள். எல்லோரும் சுந்தரத்தின் அருகே வந்தார்கள். சுந்தரத்தைக் கண்டதும், ‘ஆ, சுந்தரம்!’ என்று அலறிவிட்டார் டிரைவர். மற்றவர்களும், “தம்பி சுந்தரமா!” என்று ஆச்சரியத்தோடு கூறினார்கள். அவர்கள் எல்லோரும் சுந்தரத்தின் அப்பாவிடம் வேலை பார்ப்பவர்கள் தான். லாரியும் சுந்தரம் வீட்டு லாரிதான். அவர்களைக் கண்டதும் சுந்தரத்துக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. கீழே மயக்கமாகக் கிடந்த மனிதனை அவர்களுக்குக் காட்டி, நடந்ததைச் சுருக்கமாகக் கூறினான் சுந்தரம். தன்னைக் காப்பாற்றிய அவனை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டுமென்று துடிதுடிப்போடு கூறினான்.
உடனே, அவர்களில் ஒருவன் பக்கத்தில் இருந்த குளத்துக்கு ஓடிப்போய்த் தண்ணீர் எடுத்து வந்தான். முகத்தில் தண்ணீரைத் தெளித்துப் பார்த்தார்கள். அவன் எழுந்திருக்கவில்லை. அதற்குள் சுந்தரம் தன் சட்டையை ரண்டாகக் கிழித்து அவன் தலையில் காயம்பட்ட இடத்தைச் சுற்றிக் கட்டினான். அந்தக் கட்டையும் மீறி இரத்தம் மேலே வந்து கொண்டிருந்தது.
அதற்கு மேலும் அந்த மனிதனை அங்கே வைத்திருக்க அவர்கள் விரும்பவில்லை. அவனைத் தூக்கி லாரியில் படுக்க வைத்தார்கள். சுந்தரத்தையும் அழைத்துக்கொண்டு நேராக மாந்தலேக்குச் சென்றார்கள். அங்குள்ள பெரிய ஆஸ்பத்திரியில் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள்.
டாக்டர் வந்தார். ஏதோ, சிகிச்சை செய்து பார்த்தார். அந்த மனிதனின் மூர்ச்சை தெளியவில்லை. சுந்தரத்துக்குப் பயமாக இருந்தது. “ஏன் டாக்டர், உயிருக்கு ஒன்றும் ஆபத்தில்லையே!” என்று அடிக்கடி அவன் கேட்டுக் கொண்டேயிருந்தான்.
“நிச்சயமாகச் சொல்வதற்கில்லை! தலையில் பலமான அடி. மயக்கம் தெளிய ஊசி போட்டிருக்கிறேன். இன்னும் அரை மணி நேரத்தில் மயக்கம் தெளியலாம்” என்றார் டாக்டர்.
சுந்தரம் அந்த மனிதனுடைய கட்டில் ஓரமாக உட்கார்ந்து கொண்டு, அவனையே பார்த்துக்கொண்டிருந்தான். ஆஸ்பத்திரி விளக்கு வெளிச்சத்தில் அவன் முகம் நன்றாகத் தெரிந்தது. கன்னங்கரேலென்று அவன் இருந்தான். தலை பரட்டையாயிருந்தது. தாடியும் மீசையும் அடர்த்தியாக இருந்தன. அவை எண்ணெய் கண்டு எத்தனை நாட்கள் ஆகியிருக்குமோ!
இதற்குள் சுந்தரத்துக்குத் துணையாக வேலைக்காரர்களை வைத்துவிட்டு, டிரைவர் லாரியை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். நேராக அமரபுராவை நோக்கி அறுபது மைல் வேகத்தில் ஓட்டினார். தனது எஜமானரை, அதாவது சுந்தரத்தின் அப்பாவை அழைத்து வரத்தான் டிரைவர் அவ்வளவு அவசரப்பட்டார்.
அரை மணி நேரம் சென்றது. மயங்கிக் கிடந்த அந்த மனிதன் மெதுவாகக் கண் விழித்தான். கண் விழிப்பதைக் கண்டதும், சுந்தரம் மிகவும் ஆவலோடு அவனைப் பார்த்தான்.
“சுந்தரம்!” என்று மிகவும் மெல்லிய குரலில் அழைத்தான் அந்த மனிதன்.
‘இவருக்கு நம் பெயர்கூடத் தெரிந்திருக்கிறதே!” என்று ஆச்சரியப்பட்டுக்கொண்டே, “இதோ இருக்கிறேன்” என்றான் சுந்தரம்.
“தம்பி, உனக்குக் காயம் எதுவும் இல்லையே!” என்றான்.
“எனக்கு ஒரு சிறு காயம்கூட இல்லை. என்மேல் அடி விழாமல், நீங்கள் தான் எல்லா அடிகளையும் வாங்கிக் கொண்டு விட்டீர்களே! முரடர்கள் இப்படியா அடிப்பது! ஐயோ, என்னால் அல்லவா உங்களுக்கு இந்தக் கஷ்டம்… இப்போது வலி எப்படி இருக்கிறது?”
“இனி எதைப் பற்றியும் கவலையில்லை. நான் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டேன். சுந்தரம், நான் போலீஸாரிடம் சில விஷயங்கள் சொல்ல வேண்டும். உடனே போலீஸார் வருவதற்கு ஏற்பாடு செய்ய முடியுமா?”
“இதோ டாக்டரிடம் சொல்லி போன் பண்ணச் சொல்லுகிறேன் “என்று கூறி டாக்டரிடம் விஷயத்தைச் சொன்னான். டாக்டரும் உடனே போலீஸாருக்குத் தகவல் தெரிவித்து அவர்களை வரச் சொன்னார்.
இதற்குள் அந்த மனிதன் சுந்தரத்திடம், “சுந்தரம், ரமணியைப் பார்க்க வேண்டுமே! உடனே அவனைப் பார்க்க வேண்டும்” என்றான்.
“ரமணிதானே! இதோ அழைத்துவரச் சொல்லுகிறேன்” என்று சுந்தரம் கூறிக்கொண்டிருக்கும் போதே, “சுந்தரம்! சுந்தரம்!” என்று கத்திக்கொண்டு ஆஸ்பத்தி ரிக்குள் ஓடி வந்தான் ரமணி. அப்படியே சுந்தரத்தைக் கட்டிப் பிடித்துக்கொண்டு, கட்டிலில் கிடந்த மனிதனைப் பார்த்தான். பார்த்ததும், “சுந்தரம், இவர் தான் உன்னைக் காப்பாற்றினாரா! ஐயோ! இவர் உடம்பெல்லாம் காயமாயிருக்கிறதே!” என்றான்.
“இவர்தான் என்னைக் காப்பாற்றினார். உன்னைக் கூட இவர்தான் காப்பாற்றியிருக்க வேண்டும்!” என்று கூறினான் சுந்தரம்.
அப்போது சுந்தரத்தின் அப்பா, அம்மா, சிற்சபேசன், காமாட்சி அம்மாள், மாலதி எல்லோரும் அங்கே வந்து சேர்ந்துவிட்டார்கள். எல்லோரும் ஒரே லாரியில் தான் வந்தார்கள். சுந்தரத்தின் அப்பாவிடம், லாரி டிரைவர் விஷயத்தைச் சொன்னதும், அவர் தன் மனைவியை அழைத்துக் கொண்டு மாந்தலே ஆஸ்பத்திரிக்கு வந்தார். வரும் வழியிலே தான் சிற்சபேசனின் பங்களா இருந்தது. அதனால், அங்கே அவர் லாரியை நிறுத்தி அவர்களையும் அழைத்துக்கொண்டு வந்தார். ரமணிகூட அதே லாரியில் தான் வந்தான். ஆனால் ஆஸ்பத்திரிக்கு முன்னால் லாரி நின்றதும், எல்லோருக்கும் முன்பாக அவன் தான் கீழே இறங்கினான். வேகமாக உள்ளே ஓடினான்.
ரமணியும் மற்றவர்களும் கட்டிலில் அடிபட்டுக் கிடந்த அந்த மனிதனைச் சூழ்ந்து கொண்டார்கள். அவன் யார் என்று உற்றுப் பார்த்தார்கள். அடையா ளம் தெரியவில்லை. “முன்பின் தெரியாத இந்த மனிதர் எவ்வளவு பெரிய உதவியைச் செய்திருக்கிறார்! அதற்காக எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார்!” என்று எல்லோரும் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
அப்போது அந்த மனிதன், “தம்பி, ரமணி!” என்று மெதுவான குரலில் அழைத்தான்.
உடனே ரமணி, “இதோ இருக்கிறேன்” என்று கூறி அந்த மனிதனின் முகத்திற்கு நேராகத் தன் முகத்தைக் காட்டிக் கொண்டு நின்றான்.
“ரமணி, நீ சுகமாக இருக்க வேணும். உன் சிநேகிதன் சுந்தரம் சுகமாக இருக்க வேணும்.” என்று கூறிக்கொண்டே ரமணியின் கன்னங்கள் இரண்டையும் தன் கைகளால் தடவிக் கொடுத்தான் அந்த மனிதன். அப் போது அவன் குரல் கம்மியிருந்தது. அரை குறையாகவே வார்த்தைகளும் வெளி வந்தன.
உடனே ரமணி, “ஐயா, எங்களுக்காக நீங்கள் இவ்வள வெல்லாம் கஷ்டப்பட்டிருக்கிறீர்கள். ஆனாலும், நீங்கள் யார் என்பதை நாங்கள் இன்னும் தெரிந்துகொள்ள வில்லையே!” என்று கலக்கத்தோடு கேட்டான்.
“தம்பி, சொல்லத்தான் போகிறேன். இந்தக் கடைசி காலத்திலாவது சொல்லித்தானே ஆகவேண்டும்! அப்போதுதான் எனக்கு நிம்மதி ஏற்படும்” என்றான் அந்த மனிதன்.
அப்போது ‘சரக், சரக்’ என்று ‘பூட்ஸ்’ சத்தத்துடன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரும், சில போலீஸ்காரர்களும் அங்கே வந்து சேர்ந்தார்கள். அவர்களைக் கண்டதும் கட்டிலில் படுத்திருந்த மனிதன், “ஐயா, நான் இனிப் பிழைக்கமாட்டேன். செத்துப் போவதற்கு முன்னால் உங்களிடம் சில உண்மைகளைக் கூற வேண்டும். அதற் காகவே அழைத்து வரச் சொன்னேன்” என்றான்.
உடனே எல்லோரும் அவன் என்ன சொல்லப் போகிறான் என்பதை ஆவலுடன் கேட்கத் தயாரானார்கள். “ஐயா, நான் யாரென்பது உங்களுக்குத் தெரிய வேண்டுமானால், முதலில் இந்தத் தாடியையும் மீசை யையும் எடுத்தாக வேண்டும்” என்று கூறிவிட்டு, அவன் தன் தாடியையும் மீசையையும் பிடித்துப் பலமாக இழுத்தான். என்ன ஆச்சரியம்! அவை கையோடு வந்துவிட்டன! ஆம், பொய்த் தாடி மீசைகளைத்தான் அவன் ஒட்ட வைத்திருந்தான்!
தாடியையும் மீசையையும் எடுத்தவுடனே ரமணியும் சுந்தரமும் அவனைப் பார்த்தார்கள். பார்த்ததுமே, “ஆ! சுப்பையாவா! குகையில் இருந்த சுப்பையாவா!” என்று ஆச்சரியத்துடன் கேட்டார்கள்.
“ஆம், சுப்பையாதான். அந்த முரடர் கோஷ்டியைச் சேர்ந்த சுப்பையாவேதான்” என்றான் அவன்.
அந்த மனிதன் முரடர் கோஷ்டியைச் சேர்ந்தவன் என்று தெரிந்ததும், எல்லோருக்கும் ஒரே ஆச்சரியமாயிருந்தது. அதே சமயம் அவன் ரமணியைப் பார்த்து, “தம்பி ரமணி! நான் முரடர் கோஷ்டியைச் சேர்ந்தவன் என்பதைக் கேட்டதுமே எல்லோரும் ஆச்சரியப்படுகிறீர்கள். ஆனால், இதைக் காட்டிலும் மிக ஆச்சரியமான ஓர் உண்மையை நான் இப்போது கூறப் போகிறேன்” என்றான். அவனால் வேகமாகவோ, பலமாகவோ பேச முடியவில்லை. தட்டுத் தடுமாறிச் சொல்ல ஆரம்பித்தான்.
“ரமணி, நீ பிறந்த வேலங்குறிச்சியிலேதான் நானும் பிறந்தேன்.”
‘அப்படியா நான் பிறந்த ஊரில்தான் நீங்களும் பிறந்தீர்களா?”
“ஆம். அதுமட்டுமல்ல; நீ பிறந்த குடும்பத்திலே தான் நானும் பிறந்தேன்” என்றான் சுப்பையா.
“நிஜமாகவா!”
“சத்தியமாகச் சொல்லுகிறேன். உன் அப்பாவும் நானும் உடன் பிறந்தவர்கள். நான் உன் சித்தப்பா!”
“என் சித்தப்பாவா!” ரமணியின் ஆச்சரியம் பல மடங்காயிற்று. மற்றவர்களும் அப்படியே ஆச்சரியப் பட்டார்கள்.
சுப்பையா மேலும் சொல்ல ஆரம்பித்தான்:
“ரமணி, நீ ஆறு வயசுப் பையனாக இருந்தபோது, நான் இந்த நாட்டுக்குப் புறப்பட்டு வந்தேன். ரங்கூனிலுள்ள ஒரு செட்டியார் கடையிலே கணக்கப்பிள்ளை வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது இரண்டாவது மகா யுத்தம் வந்தது. ஜப்பான்காரன் குண்டு மாரி பொழிந்து கொண்டிருந்தான். ரங்கூன் தலைநகராதலால், எந்த நேரத்திலும் தங்கள் மேல் குண்டு விழுந்து விடும் என்று அங்கிருந்த மக்கள் பயந்தார்கள். ஆகையால் நகரை விட்டுக் கிராமப்புறங்களை நோக்கி ஓடினார்கள். நானும் காட்டுப் புறத்திலுள்ள ஒரு குக்கிராமத்துக்குச் சென்றேன்.
‘சுப்பையா இப்படிக் கூறும் போதே ரமணி குறுக்கிட்டு” ஆமாம், இப்போது நினைவுக்கு வருகிறது. அப்பா முன்பெல்லாம் அடிக்கடி உங்களைப் பற்றிச் சொல்லுவார். யுத்தத்திலே நீங்கள் குண்டுப்பட்டு இறந்து விட்டீர்களோ என்றுகூட அவர் சந்தேகப்பட்டார்” என்றான்.
“ரமணி, நான் குண்டுப்பட்டு இறந்திருந்தால் கூடத் தேவலை. இப்படிப்பட்ட கொடுமைகளைச் செய்யாமல் போயிருப்பேன். குக்கிராமத்தில் நான் தங்கியிருந்தபோது சிலர் எனக்குச் சிநேகிதர்களானார்கள். அவர்களுடன் சேர்ந்து இந்தப் பாதகமான தொழிலில் ஈடுபட்டேன். பணக்காரர் வீட்டுப் பிள்ளைகளைத் தூக்கி வந்து ஒளித்து வைத்துப் பணம் பறிப்பதே எங்கள் வேலையாய்ப் போய்விட்டது. இதில் வருமானம் கிடைத்ததால் ஊரை மறந்தேன்; உறவினரை மறந்தேன்; பர்மாவிலுள்ள தமிழர் வீட்டிலே உளவு தெரிந்துவர என்னைத்தான் அனுப்புவார்கள். நீயும் சுந்தரமும் பணக்காரர் வீட்டுப் பிள்ளைகள் என்று உளவு சொன்னவன் நான்தான். உங்களைத் தூக்கிச் செல்வதற்கு உடந்தையாக இருந்தவனும் நான்தான். உன்னை சிற்சபேசனின் சொந்தப் பிள்ளை என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அன்று நள்ளிரவில் சுந்தரத்திடம் நீ உன் வரலாற்றைச் சொன்னாயே, அப்போதுதான் எனக்கு உண்மை தெரிந்தது.”
சுப்பையா இதைச் சொன்னதும், “அப்படியானால், அன்று இரவு குகையில் நாங்கள் பேசியதை யெல்லாம் நீங்கள் கேட்டுக் கொண்டிருந்தீர்களா?” என்று கேட்டான் சுந்தரம்.
“ஆம், தம்பி. தற்செயலாகத் திரும்பிப் படுத்த என் காதில் மெதுவாக ஏதோ பேச்சுக்குரல் கேட்டது. உற்றுக் கேட்டேன். உண்மை தெரிந்தது… ரமணி, நீயோ என் சொந்த அண்ணன் மகன். உனக்கு அப்பா இல்லை; அம்மா இல்லை. உயிரோடு இருக்கும் சித்தப்பனும் உதவாமல் போனேன். இந்த நிலையில் அனாதையாகத் திரிந்த உன்னை அருமையோடு வளர்த்து வருகிறார் சிற்சபேசன். அவரிடமிருந்து நாங்கள் உன்னைப் பிரித்தோம். மேலும், ரூபாய் பத்தாயிரம் தந்தால் தான் உன்னைத் திருப்பித் தருவோம் என்று அந்த நல்ல மனிதரை மிரட்டினோம். எவ்வளவு பாதகமான செயல்! இதை நினைக்கவே என் நெஞ்சு கூசுகிறது.”
இதற்கு மேல் சுப்பையாவால் பேச முடியவில்லை தொண்டை அடைத்துக் கொண்டது. உடனே ரமணி ஓடிப்போய்த் தண்ணீர் வாங்கிவந்து அவனிடம் கொடுத்தான்.
சுப்பையா தண்ணீரைக் குடித்துவிட்டுத் திரும்பவும் பேச ஆரம்பித்தான். ரமணியும் மற்றவர்களும் சுப்பையாவை ஓய்வெடுத்துக்கொள்ளச் சொன்னார்கள். ஆனால், அவன் கேட்கவில்லை. “எப்படியும் நான் சீக்கிரத்திலேயே செத்துப் போய்விடுவேன். சாகும் போதாவது நிம்மதி யாகச் சாகவேண்டும் என்பதே என் ஆசை. எல்லாவற்றையும் உங்களிடம் சொன்னால் தான் அந்த நிம்மதி எனக்கு ஏற்படும்” என்று கூறிவிட்டுத் தொடர்ந்தான்.
‘ரமணி, குகையிலுள்ள இரும்புக் கதவுக்கு ஒரே மாதிரி நான்கு சாவிகள் உண்டு. நாங்கள் ஆளுக்கு ஒரு சாவி வைத்திருக்கிறோம். நீ என் அண்ணன் மகன் என்பது தெரிந்ததும், அன்று இரவே உன்னைக் காப்பாற்ற நினைத்தேன். நீயும் சுந்தரமும் பேச்சை முடித்து விட்டு எப்போது தூங்குவீர்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டே யிருந்தேன். நீங்கள் தூங்க ஆரம்பித்தீர்கள். தக்க சமயம் பார்த்து, குகைக் கதவைத் திறந்து உன்னைத் தூக்கி வந்து விட்டேன். பங்களா வராந்தாவில் உன்னைப் படுக்க வைத்து விட்டுத் திரும்பவும் குகைக்கு ஓடினேன். ஒன்றும் தெரியாதவன் போல் படுத்துக்கொண்டேன். மறுநாள் காலையில் உன்னைக் காணாததும் அவர்கள் திடுக்கிட்டார்கள். ஆனாலும், என்மேல் அவர்களுக்கு எள்ளளவும் சந்தேகம் ஏற்படவில்லை. என்னையே விஷயத்தை அறிந்துவர வெளியில் அனுப்பினார்கள். செருப்புத் தைப்பவன் போல் வேஷம் போட்டுக்கொண்டு போகும் படி தலைவன் சொன்னான். ஆனால், அந்த வேஷத்தில் நான் உங்கள் வீட்டுக்கு வரவில்லை.”.
“தாடி நரைத்த கிழவரைப் போல் வேஷம் போட்டுக் கொண்டு வந்தேன். உன்னைப் பார்க்கப் பார்க்க என் உள்ளம் பூரித்தது. உன் கதைகளை முன் வரிசையில் உட்கார்ந்து கேட்கக் கேட்க எனக்கு ஒரே ஆனந்தமாயிருந்தது. ஆனால், திடீரென்று நீ கதையை நிறுத்தி விட்டாய். காரணம் தெரிந்தது. உன் அருமை நண்பன் சுந்தரம் குகையில் இருப்பதை நினைத்தே நீ கவலைப்படுகிறாய் என்று அறிந்தேன். அவன் கட்டாயம் மறுநாள் காலைக்குள் வந்துவிடுவான் என்று ஜோஸியம் கூடச் சொன்னேன்! ஆனால், சொல்லிவிட்டு நான் சும்மா இருக்கவில்லை. உன் ஆசையைப் பூர்த்தி செய்ய நேற்று இரவே அங்கு சென்றேன். நள்ளிரவில் ஒரு தாடிப் பரதேசி போல் வேஷம் போட்டுக்கொண்டு சுந்தரத்தைத் தூக்கிக் கொண்டு கிளம்பினேன். ஆனால் எதிர்பாராத விதமாகத் தலைவன் விழித்துக் கொண்டு விட்டான். உடனே, கூச்சல் போட்டு மற்றவர்களோடு என்னைத் துரத்தினான். கல்லால் அடித்தான். காயப்படுத்தினான். ஆனாலும், சுந்தரத்துக்கு ஒரு காயமும் இல்லாமல் பத்திரமாகக் கொண்டுவந்து சேர்த்துவிட்டேன். நான் எத்தனையோ பாதகச் செயல்களையெல்லாம் செய்திருக்கிறேன். ஆனாலும், கடைசி காலத்திலாவது ஒரு நல்ல காரியம் செய்தேனே, இதுவே எனக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது.”
சுப்பையா கூறியதைக் கேட்கக் கேட்க எல்லோருடைய ஆச்சரியமும் அதிகமாகிக் கொண்டேயிருந்தது. சப்- இன்ஸ்பெக்டரும் ஆச்சரியத்துடனே அவன் இதுவரை கூறியதை யெல்லாம் குறித்துக் கொண்டார். பிறகு, சுப்பையா, உன்னிடம் ஒன்று கேட்க வேண்டும். உன் கோஷ்டியார் “இதுவரை எத்தனை பிள்ளைகளைத் தூக்கிச் சென்றிருப்பார்கள்?” என்று கேட்டார்.
“சுமார் அறுபது இருக்கலாம். ஆனாலும், நாங்கள் ஒரு பழக்கம் வைத்திருந்தோம். நாங்கள் சொல்லும் இடத்தில் பணத்தை வைத்துவிட்டால், பணத்தை எடுத்துக் கொண்டு, தூக்கி வந்த பிள்ளைகளைத் திருப்பி அனுப்பிவிடுவோம். இப்போது ஒரு குழந்தைகூட அக்குகையில் இல்லை.’
உடனே, “அப்படியா! கடிதம் கிடைத்த அன்றைக்கே குறிப்பிட்ட மரப்பொந்தில் பத்தாயிரத்தைக் கொண்டு போய் வைத்தோமே! ஏன் சுந்தரத்தைத் திருப்பி அனுப்பவில்லை?” என்றார் சுந்தரத்தின் அப்பா தாமோதரம்.
“நிஜமாகவா? பணம் மரப்பொந்துக்கு வரவில்லையே!” என்றான் சுப்பையா.
உடனே தாமோதரம், “ஏண்டா, கந்தசாமி! உன்னிடம் தானே கொடுத்து அனுப்பினேன்?” என்று கேட்டுக் கொண்டே, தன்னுடன் வந்த தேக்கு மரக்காட்டு மேஸ்திரியான கந்தசாமி நின்ற பக்கம் திரும்பினார். அப்போது அவன் மெதுவாக நழுவப் பார்த்தான். உடனே ‘குப்’பென்று பாய்ந்து அவன் கழுத்தைப் பிடித்துக் கொண்டார். பிறகு போலீஸார் அவனை உதைத்துக் கேட்டதில் உண்மை வெளியாயிற்று. எஜமானை ஏமாற்றிப் பணத்தை ஏப்பம் விட்டுவிட்டான், அந்தத் துரோகி! அங்கேயே அவனுக்கு விலங்கு மாட்டினார்கள் போலீஸ்காரர்கள்.
கந்தசாமியைக் கைது செய்த பிறகு, சப்-இன்ஸ்பெக்டர் சுப்பையாவைப் பார்த்து, “சுப்பையா! இப்போது உன்னைச் சேர்ந்தவர்கள் எங்கே இருப்பார்கள்? அதை மட்டும் சொல்லு” என்று கேட்டார்.
“இதோ அதையும் சொல்லத்தான் போகிறேன். இனிமேலாவது இப்படிப்பட்ட நல்ல பிள்ளைகள் அவதிப்படாமல் இருக்கட்டும். என் கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் வழக்கமாக இருக்கும் குகையில் இப்போது இருக்க மாட்டார்கள். ஆபத்து வரும்போல் தோன்றினால், ஒளிந்து கொள்வதற்கு வேறொரு குகை இருக்கிறது. அங்கேதான் இப்போது இருப்பார்கள் “என்று கூறி, அந்தக் குகை இருக்கும் இடத்தையும் விவரமாகத் தெரிவித்தான்.
பிறகு சிற்சபேசனைப் பார்த்து, “தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். வீண் சிரமம் கொடுத்து விட்டேன். ரமணியிடம் நீங்கள் அதிகமான அன்பு வைத்திருக்கிறீர்கள். இந்த அன்பு வளர ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று வணக்கத்தோடு கூறினான். அதற்கு மேலும் அவனால் பேச முடியவில்லை. உணர்ச்சி அதிகரித்தது. நெஞ்சு அடைத்துக்கொண்டது. ஆ! மறு நிமிஷம் மூச்சு நின்றுவிட்டது!



