பர்மா ரமணி
அழ. வள்ளியப்பா

7. யார் அவன்?

அந்தப் பையன் பதில் எதுவும் கூறவில்லை; தேம்பித் தேம்பி அழுதான். கண்களிலிருந்து நீர் தாரை தாரையாக வழிந்தது. அவனுடைய கண்ணீர் மதுரநாயகத்தின் கால்களை நனைத்துக் கொண்டிருந்தது.

அவனுடைய பரிதாப நிலையைக் கண்டு மதுரநாயகமும் கலங்கிப் போய்விட்டார். முதலாளி மோகனரங்கம், சப்-இன்ஸ்பெக்டர், 753 இவர்கள் எல்லோருக்கும் ஒன்றும் புரியவே இல்லை. சிறிது நேரம் அப்படியே அசையாமல் திகைத்துப்போய் இருந்தார்கள்.

பிறகுதான் அந்தப் பையன் பேச ஆரம்பித்தான். மதுரநாயகத்தின் காலைக் கட்டிப் பிடித்துக்கொண்டே, “ஐயோ! நான் ஒரு குற்றமும் செய்யவில்லையே! என்னைத் திருடன் என்கிறார்களே!” என்று கண்ணீர் விட்டுக் கதறியபடி கூறினான்.

உடனே முதலாளி மோகனரங்கம், ‘டேய், நீ திருடன் இல்லாமலிருக்கலாம். ஆனால், கடிகாரமும் பேனாவும் உனக்கு எப்படிக் கிடைத்தன? அந்த ரமணிப் பயல் தானே உன்னிடம் தந்து விற்கச் சொன்னான்?” என்று கேட்டுவிட்டு, சப்-இன்ஸ்பெக்டரைப் பார்த்து, “சார், அந்த ரமணிப் பயல் நீங்கள் சொன்ன மாதிரி பெரிய ஆளே தான். எங்கள் கடிகாரத்தையும் பேனாவையும் விற்பதற்கு ஒரு கூட்டாளி சேர்த்துவிட்டான். பார்த்தீர்களா?” என்றார்.

உடனே சப்-இன்ஸ்பெக்டர், “அப்படியானால் இவன் ரமணி இல்லையா! அவன் கூட்டாளிதானா” என்று சந்தேகத்துடன் கேட்டார்.

“ஐயையோ! ரமணியா! அவன் யார்? சத்தியமாகச் சொல்லுகிறேன். அவனை எனக்குத் தெரியவே தெரியாதே!” என்று தேம்பிக் கொண்டே கூறினான் அந்தப் பையன். அவன் கண்கள் பொலபொலவென்று கண்ணீரைச் சொரிந்தன.

இவ்வளவு நேரம் மௌனமாயிருந்த மதுரநாயகம் கீழே குனிந்து அவன் கைகளைப் பிடித்துத் தூக்கி நிறுத்தினார். ‘ஆனந்தா, அழாதே! நீ திருச்சியிலிருந்து எப்படி வந்தாய்? பேனாவும் கடிகாரமும் உனக்கு எப்படிக் கிடைத்தன? ஒன்றும் புரியவே இல்லையே!” என்று கேட்டார்.

இதைக் கேட்டதும் இந்நேரமாக ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர், “என்ன மிஸ்டர் மதுரநாயகம், உங்களுக்கு இந்தப் பையனை முன்பே தெரியுமா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

“தெரியாமல் என்ன? இவன் என் சொந்த அக்காளுடைய பிள்ளையேதான்!” என்றார் மதுரநாயகம்.

“அடடே, உங்கள் அக்காள் மகனா?… ஆமாம். திருட்டுப் போன பேனாவும், கடிகாரமும் இவனிடம் எப்படி வந்து சேர்ந்தன?” என்று வியப்புடன் கேட்டார் மோகனரங்கம்.

“அதுதானே தெரியவில்லை!” என்று கூறிவிட்டு அந்தப் பையனைப் பார்த்து, “ஏண்டா ஆனந்தா! பேனாவையும் கடிகாரத்தையும் உனக்கு யார் கொடுத்தது? உண்மையை ஒளிக்காமல் சொல்” என்றார் மதுரநாயகம்.

“சொல்லுகிறேன், மாமா! கேளுங்கள். ஒரு வருஷத்துக்கு முன்பு நீங்கள் திருச்சிக்கு- எங்கள் வீட்டுக்கு வந்தபோது, தங்க மூடி போட்ட எவர்-ஷார்ப் பேனா ஒன்றைக் கொண்டு வந்தீர்களே, ஞாபகம் இருக்கிறதா? அதைப் பார்த்ததும், ‘எனக்கும் இதேபோல் ஒரு பேனா வேண்டும்’ என்று நான் உங்களைக் கேட்டேன். அதற்கு நீங்கள், இது நம் நாட்டில் கிடைக்காது. கிடைத்தாலும், யானை விலை, குதிரை விலையாக இருக்கும். இது சிங்கப்பூரில் இருந்தல்லவா வந்திருக்கிறது? பெரியப்பா பிள்ளை சேகர் வாங்கி எனக்கு அன்பளிப்பாக அனுப்பியிருக்கிறார்’ என்று சொன்னீர்கள்.

சொன்னீர்கள். இதுவும் உங்களுக்கு நன்றாக நினைவில் இருக்கும். நீங்கள் திருச்சியை விட்டுப் போனது முதல், எனக்கும் அந்த மாதிரி ஒரு பேனா வேண்டுமென்று தினமும் என் அம்மாவை நச்சரிக்க ஆரம்பித்தேன்.

என் தொந்தரவு பொறுக்க முடியாமல், அம்மா உடனே சேகர் மாமாவுக்கு ஒரு கடிதம் போட்டாள். கடிதம் போட்ட ஒரு மாதத்தில், அங்கிருந்து கப்பலில் வந்த ஒருவர் மூலம் சேகர் மாமா பேனாவை அனுப்பி வைத்தார். அது நீங்கள் வைத்திருந்தது போலவே இருந்தது. உங்கள் பேனாவின் மேல் எழுதியிருந்தது போலவே அந்தப் பேனாவிலும் ‘சேகர் அன்பளிப்பு’ என்று எழுதியிருந்தது.”

ஆனந்தன் இதைக் கூறிக் கொண்டிருக்கும்போதே, முதலாளி மோகனரங்கம் குறுக்கிட்டு, “அப்படியானால் அந்தக் கடிகாரம் எப்படி வந்தது?” என்று கேட்டார்.

உடனே ஆனந்தன், “அதையும் சொல்லிவிடுகிறேன். நான் எட்டாம் வகுப்புப் பரீட்சை எழுதியிருந்தேன். பரீட்சையில் தேறினால், ஒரு கைக்கடிகாரம் வாங்கித் தருவதாக என் அப்பா சொல்லியிருந்தார். கைக் கடிகாரத்தை எப்படியும் வாங்கிவிட வேண்டுமென்று ஆசைப்பட்டேன். அந்த ஆசையில் ஒரு குற்றம் செய்து விட்டேன். அன்று பரீட்சை முடிவை அறிவித்தார்கள். அந்த முடிவுப்படி நான் தேறவில்லை; தோல்வியே அடைந்தேன்! ஆனாலும் வீடு சென்றதும், அப்பாவிடம் உண்மையைக் கூறவில்லை. சிரித்துக் கொண்டே, அப்பா! நான் ‘பாஸ்’ ஆகிவிட்டேன்’ என்று புளுகினேன். அப்பா அதை நம்பி விட்டார். உடனே என்னைக் கடைக்கு அழைத்துப் போய் எனக்குப் பிடித்த ஒரு கைக்கடிகாரத்தை வாங்கித் தந்தார். வீடு வந்ததும், என்னைப் பார்த்து, ‘ஆனந்தா! நீ தேர்ச்சி பெற்றதை ஆனந்தமாகக் கொண்டாட வேண்டுமல்லவா? அதற்காக இன்று இரவு ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்யச் சொல்லியிருக்கிறேன். நீ இப்போதே போய் உனக்கு மிகவும் வேண்டிய நண்பர் களிடம் சொல்லி வைத்துவிடு. இரவு அவர்களுடன் குதூகலமாகச் சாப்பிடலாம்’ என்றார். அதைக் கேட்டதும், எனக்குப் ‘பகீர்!’ என்றது. நண்பர்களை அழைத்து வந்தால், என் குட்டு வெளிப்பட்டுவிடுமே!’ என்று பயந்தேன். அழைத்து வராவிட்டாலும், அப்பா விட மாட்டார். என்ன செய்வது? தர்ம சங்கடமான நிலையில் நான் சேர்த்து வைத்திருந்த ஐந்து ரூபாயை எடுத்துக் கொண்டு அன்று இரவே ரயில் ஏறி இங்கு வந்து சேர்ந்து விட்டேன்..

ஆனந்தன் அதற்குள், முதலாளி மோகனரங்கம், “அப்படியானால், நீ வைத்திருந்தது என் கடிகாரம் இல்லையா!” என்று மிகுந்த ஏமாற்றத்தோடு கேட்டார்.

முழுவதையும் கூறி முடிக்கவில்லை. உடனே சப்-இன்ஸ்பெக்டர் மேஜை அறைக்குள்ளிருந்த கடிகாரத்தை எடுத்து மேஜை மேல் வைத்தார். அதை எடுத்துப் பார்த்துவிட்டு, “ஊஹும், இது இல்லை. இது சைமன் வாட்ச். என்னுடையது ஹோமர் வாட்ச். இதைவிட விலை அதிகம். அது அந்த ரமணியிடம் தான் இருக்கும்” என்று சொன்னார் மோகனரங்கம்.

“சரி ஆனந்தா, இங்கே வந்ததும், நீ என்ன செய்தாய்? ஏன் என் வீட்டுக்கு வரவில்லை? விலாசம் தெரியாதா?” என்று கேட்டார் மதுரநாயகம்.

“வீட்டு விலாசம் தெரியாத போனால் என்ன? நாடக சபா பெயர்தான் தெரியுமே! விசாரித்துக் கொண்டு வந்து விட மாட்டேனா, மாமா? ஆனாலும் ரயிலை விட்டு இறங்கியதும், உங்களிடம் வர தயக்கமாகவே இருந்தது.

நான் ஏன் வந்தேன் என்று நீங்கள் கேட்பீர்கள். நடந்ததைச் சொன்னால், நான் செய்தது உங்களுக்குப் பிடிக்காது. கோபித்துக்கொள்வீர்கள். ஏதேனும் ஒரு பொய்யைச் சொல்லி ஏமாற்றினாலும், ஒன்றிரண்டு நாட்களில் உண்மை தெரிந்து போகும். என்னைக் காணோமென்று அப்பா உங்களுக்குத் தந்தி கொடுத்துவிட்டால், என் ஏமாற்று வேலை தெரிந்து போகும்! அப்போது நீங்கள் கோபித்துக் கொள்வதுடன் மறு ரயிலிலே என்னை ஊருக்குத் திருப்பி அனுப்பிவிடுவீர்கள். குஷியாக ஊரைச் சுற்றிப் பார்க்க முடியாது என்றுதான் வீட்டுக்கு வரவில்லை. ரயில் கட்டணம் போக மீதமிருந்த சில்லறையும் இரண்டு நாளில் கரைந்துவிட்டது. மூன்றாவது நாள்- அதுதான் இன்றைக்குக் காலையிலே ‘பணத்துக்கு என்ன செய்வது?’ என்று யோசித்தேன். உடனே, என் கையிலிருந்த கடிகாரமும், பையிலிருந்த பேனாவும் நினைவுக்கு வந்தன. கடிகாரத்தை விற்க என் மனம் இடம் கொடுக்கவில்லை. அது அப்பா காசு கொடுத்து வாங்கித் தந்தது. அதனாலே அதை விற்று விட்டால், அப்பாவுக்கு விஷயம் தெரியும்போது அதிகமாக ஆத்திரப்படுவார். ஆனால், பேனா இலவசமாக வந்ததுதானே! அதனாலேதான் அதைக் கொண்டு போய் ஒரு மார்வாரி கடையிலே விற்கப் போனேன். அந்தச் சமயம் பார்த்து ஒரு போலீஸ் காரர் வந்து என்னைத் திருடன் என்று நினைத்துப் பிடித்துக் கொண்டார். நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அவர் கேட்கவில்லை. நல்ல வேளை; மாமா, நீங்களாவது இப்பொழுது வந்தீர்களே! இல்லாதபோனால், ஜெயிலிலே கிடந்து செத்தே போயிருப்பேன்” என்று கண்கலங்கக் கூறினான் ஆனந்தன்.

“ஆனந்தா, அழாதே! கண்ணைத் துடை. உன் அப்பா எவ்வளவு நல்லவர்! அவரையே நீ ஏமாற்றப் பார்த்தாய். அதனால் தான் இந்தத் துன்பமெல்லாம். இனிமேல் இப்படிச் செய்யாதே!” என்று எச்சரித்தார் மதுரநாயகம்.

“மாமா, சத்தியமாய்ச் சொல்லுகிறேன். இனி இப்படிச் செய்யவே மாட்டேன்; செய்ய நினைக்கவும் மாட்டேன்” என்று உணர்ச்சியுடன் கூறினான் ஆனந்தன்.

பிறகு மதுரநாயகம் சப்-இன்ஸ்பெக்டரைப் பார்த்து, “சார், இவன் கூறியதெல்லாம் உண்மை தான். இவனைத் தயவு செய்து விட்டுவிடுங்கள். எல்லாம் அந்த ரமணியால் வந்த தொல்லைதான்!” என்று அலுத்துக்கொண்டார்

போலீஸார் பிடித்து வந்த பையன் ரமணி இல்லை என்று தெரிந்ததும், முதலாளி மோகனரங்கம், “நல்ல வேடிக்கை! புலியைப் பிடிக்கப் புறப்பட்டுப் போனவன், எலியைப் பிடித்துக்கொண்டு இறுமாப்போடு வந்தானாம்! அந்தக் கதையாகத்தான் இருக்கிறது” என்று கூறிவிட்டு, சப்-இன்ஸ்பெக்டரைப் பார்த்து, “சார், அந்த ரமணிப் பயலை விடக்கூடாது. அவன் மகா அயோக்கியன்! சுலபமாய்க் கிடைக்க மாட்டான்” என்றார்.

“உங்களுக்கு அந்தக் கவலையே வேண்டாம். அவன் எங்கிருந்தாலும் கூடிய சீக்கிரம் கொண்டுவந்து விடுவோம்” என்று தைரியம் சொன்னார் சப்-இன்ஸ்பெக்டர்.

பிறகு மதுரநாயகம் சப்-இன்ஸ்பெக்டரிடம் இருந்த ஆனந்தனின் கைக்கடிகாரத்தையும், பேனாவையும் வாங்கிக் கொண்டு, “நாங்கள் வருகிறோம், சார். கொஞ்சம் கவனம் இருக்கட்டும்” என்று கூறிவிட்டுப் புறப்பட்டார். முதலாளி மோகனரங்கமும், ஆனந்தனும் பின்தொடர்ந் தனர்.

மூவரும் காரில் ஏறி நாடகக் கொட்டகைக்குச் சென்றார்கள்.

அங்கே சென்றதும் முதல் வேலையாகத் திருச்சியிலுள்ள அத்தானுக்கு மதுரநாயகம் ஒரு தந்தி கொடுத்தார். அதில், ‘ஆனந்தன் சென்னைக்கு வந்திருக்கிறான். இன்று இரவே திருப்பி அனுப்புகிறேன்’ என்று அறிவித்தார். அறிவித்தபடி, அன்று இரவு வண்டியிலேயே ஆனந்தனை ரயில் ஏற்றி அனுப்பிவைத்தார்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *