பர்மா ரமணி
அழ. வள்ளியப்பா

14. கன்னத்தில் அறை!

மூன்றாவது நாள் காலை நேரம். ஆனந்தனும் குண்டுமணியும் திருச்சியிலுள்ள சைனாபஜார் வழியாகச் சென்று கொண்டிருந்தார்கள். மலைக்கோட்டை வாசலின் அருகே வந்ததும், “டேய் குண்டுமணி, எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. அதன்படி செய்தால் என்ன?” என்று ஆரம்பித்தான் ஆனந்தன்.

“யோசனையா? உம், என்றான் குண்டுமணி.

“உம். சொல்லு, சொல்லு”

“இந்த மலைக்கோட்டை வாசலில் இருக்கிறாரே பிள்ளையார், அவருக்கு ஒரு தேங்காய் வாங்கி உடைத்தால், நிச்சயம் ரமணி கிடைத்து விடுவான். வா, அந்தக் கடையிலே தேங்காய் வாங்கலாம்” என்று கூறிக் கொண்டே மலைக்கோட்டை வாசலில் இருந்த ஒரு கடையை நோக்கிச் சென்றான் ஆனந்தன். குண்டுமணியும் அவனைப் பின்தொடர்ந்தான்.

“இந்தத் தேங்காய் என்ன விலை?” என்று ஒரு தேங்காயை எடுத்துக் கடைக்காரனிடம் காட்டிக் கேட்டான் ஆனந்தன்.

அதே சமயம் குண்டுமணி, “ஆனந்தா, ஆனந்தா! அதோ பார்! ஒரு பையன் பிள்ளையாரைக் கும்பிட்டுக் கொண்டி ருக்கிறான். ஒருவேளை அவன் தான்…” என்று இழுத்தான். உடனே ஆனந்தன் திரும்பினான். மலைக் கோட்டைக்கு ஏறிச் செல்லும் வழியிலுள்ள மாணிக்க விநாயகர் கோயில் பக்கம் பார்த்தான். சும்மா பார்க்கவில்லை; பைனா குலரைக் கண்களில் வைத்துப் பார்த்தான். உடனே, “குண்டுமணி! உயரம், நிறம் எல்லாம் என்னைப் போலவேதான் ஊருக்கும் புதிதாயிருக்கிறான். அவன் ரமணியாகத்தான் இருக்கவேண்டும். வா, உடனே போவோம். அவனைக் கேட்டுப் பார்ப்போம்” என்று பரபரப்போடு சொன்னான் ஆனந்தன்.

குண்டுமணியும் பைனாகுலரை வாங்கி அதன் உதவியால் அந்தப் பையனைக் கூர்ந்து பார்த்தான். பார்த்துவிட்டு, “இருக்கும், இருக்கும். ரமணியாகத்தான் இருக்கும். ஆனாலும், நாம் உடனே அவனிடம் போய்க் கேட்கக்கூடாது. அவன் எங்கே

“எங்கே போகிறான், என்ன செய்கிறான் என்று மெதுவாய்க் கவனிக்க வேண்டும்” என்றான்.

இப்படி அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அந்தப் பையன் படிகளில் ஏறி மேலே போக ஆரம்பித்து விட்டான்.

அந்தப் பையன் படிகளில் ஏறிச் செல்வதைப் பார்த் ததும், “டேய், டேய்! அவன் மேலே போகிறானேடா! சீக்கிரம் வாடா. நாமும் அவன் பின்னாலேயே போவோம்” என்று கூறினான் ஆனந்தன். இருவரும் அவனைப் பின் தொடர்ந்து சென்றார்கள். படிகளில் ஏறிச் செல்லும் போது, பாவம், குண்டுமணி வெகு சிரமப் பட்டான். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. யானை கட்டும் மண்டபத்துக்குப் பக்கத்தில் வந்ததும், ‘அப்பாடா!’ என்று தொந்திக் கணபதி போல் தொப் பென்று உட்கார்ந்து விட்டான் குண்டுமணி!

ஆனந்தனுக்கு ஒரே ஆத்திரமாக இருந்தது. “என்னடா குண்டுமணி, சமயம் தெரியாமல் இப்படி உட்கார்ந்து விட்டாயே! அவனைப் பின்தொடர்ந்து போக வேண்டாமா?” என்றான்.

“ஆனந்தா, அவசரப்படாதே! அவன் எங்கே போய் விடுவான்? உச்சிப் பிள்ளையார் கோயில் வரைதானே போவான்? அப்புறம் அப்படியே பறந்து போய் விடுவானா? அல்லது, உச்சிக்குப் போய் அங்கிருந்தபடியே உருண்டு வேறு பக்கமாக விழுந்து விடுவானா? எப்படியும் நம் கண்ணில் படாமல் அவனால் போக முடியாது என்று குண்டுமணி கூறிக்கொண்டிருக்கும் போதே, மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த யானை பயங்கரமாகப் பிளிற ஆரம்பித்தது. அந்தச் சத்தத்தைக் கேட்டதும், குண்டுமணிக்குத் தூக்கி வாரிப் போட்டது. பயத்தில் தானாக எழுந்து விட்டான். எழுந்து என்ன செய்தான்? அங்கேயே நின்றானா? இல்லை; இரண்டு இரண்டு படிகளாகத் தாவித் தாவி மேலே சென்றான். நூற்றுக்கால் மண்டபத்தை அடைந்த பிறகுதான் திரும்பிப் பார்த்தான். பின்னால் வந்த ஆனந்தன் சிரித்துக் கொண்டே, “குண்டுமணி, கட்டிக்கிடக்கும் யானைக்கே இந்தப் பயம் பயப்படுகிறாயே! நீ பெரிய தைரியசாலிதான்! யானை சத்தம் போட்டிருக்காதா போனால், நீ எங்கே எழுந்து வந்திருக்கப் போகிறாய்? சரி, வா. சீக்கிரம் போவோம்” என்று கூறி அவனை அழைத்துக் கொண்டு போனான்.

மேலே சென்ற அந்தப் பையன் தாயுமான சாமியைத் தரிசித்துவிட்டு, மட்டுவார் குழலம்மையார் சந்நிதிக்கு வந்தான். அம்மனையும் தரிசித்த பிறகு பக்கத்திலே இருக்கும் வெளிமண்டபத்துக்குச் சென்றான். அங்கு சுவர்களில் தீட்டப்பட்டிருந்த அழகான ஓவியங்களைப் பார்த்துப் பார்த்து ஆனந்தப்பட்டான்.

நடராஜப் பெருமானின் பலவிதத் தோற்றங்களையும், வேடிக்கையான பல சித்திரங்களையும் அவன் பார்த்தான். ஒரு யானைப் பாகன் யானையை ஓட்டிக் கொண்டு வருகிறான். எதிரே ஒரு காளை மீது ஒருவன் ஏறி முரசு அடித்துக்கொண்டு வருகிறான். யானையும் காளையும் ‘டங்’ என்று முட்டிக் கொள்கின்றன. என்ன ஆச்சரியம்! யானையின் தலையும், காளையின் தலையும் ஒன்றாகி விடுகின்றன! இரு வெவ்வேறு மிருகங்களுக்கு ஒரே தலை! யானையை மட்டும் பார்த்தால், யானையின் தலை தெரியும்! காளையை மட்டும் பார்த்தால் காளையின் தலை தெரியும்! இப்படி ஓர் அதிசய சித்திரம்!

அவன் ஆச்சரியத்துடன் இன்னொரு சித்திரத்தைப் பார்த்தான். அதில் எட்டுக் குரங்குகள் இருக்கின்றன. ஆனால், அந்த எட்டுக் குரங்குகளுக்கும் ஒரே தலைதான்! உடல்தான் எட்டு! இப்படிப் பல அற்புத ஓவியங்களை அந்தப் பையன் பார்த்துக் கொண்டேயிருந்தான்.

“அடேயப்பா! பார்ப்பதற்கே கழுத்து வலிக்கிறதே! எழுதும்போது அந்த ஓவியன் எவ்வளவு சிரமப்பட்டிருப்பான்!” என்று கூறியபடி ரசித்து நின்றான். அப்போது ஆனந்தனும் குண்டுமணியும் அங்கே வந்து சேர்ந்து விட்டார்கள். உடனே ஆனந்தன், “டேய் குண்டுமணி, நான் மெதுவாக அவன் பக்கத்திலே போய் நிற்கிறேன். என் உயரமும் அவன் உயரமும் சரியாக இருக்கிறதா என்று பார்த்துச் சொல். பிறகு நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறிவிட்டு, மெல்ல நடந்தான். அந்தப் பையனின் அருகிலே போய் நின்றான். உடனே குண்டு மணி, “வித்தியாசமே இல்லை! ஒரே உயரம் “என்று கத்தினான்.

சத்தத்தைக் கேட்டதும் அந்தப் பையன் திரும்பிக் குண்டுமணியைப் பார்த்தான். குண்டுமணியின் உருவத்தைப் பார்த்ததும், அவனுக்குச் சிரிப்பு வந்து விட்டது. உடனே ஆனந்தன் அந்தப் பையனைப் பார்த்து. “ஏனப்பா, உன் பெயர் என்ன?” என்று கேட்டான்.

“என் பெயர் எதுவாயிருந்தால் உனக்கு என்ன?” என்றான் அந்தப் பையன்.

“இல்லை… என் மாமா கடிதம் எழுதியிருக்கிறார் உன் பெயர் ரமணிதானே!” என்று கேட்டான் ஆனந்தன்.

அதற்குள் குண்டுமணி அருகில் வந்து, “தம்பி, உள்ளதை மட்டும் ஒளிக்கவே ஒளிக்காதே. உன் நன்மைக்காகத்தான் கேட்கிறோம். நீ மட்டும் ரமணியாயிருந்தால் எவ்வளவு குஷியாக இருக்கலாம், தெரியுமா? இப்போதே உன்னை அழைத்துப் போய், பெரிய கடை வீதியில் இருக்கிறதே ஒரு பெரிய ஹோட்டல், அதிலே பாதாம் அல்வா, பாசந்தி, லட்டு, ஜிலேபி, மசால் தோசை, பாதாம்கீர், புளியோதரை எல்லாம் வாங்கித் தருவோம். என்ன சொல்கிறாய்?” என்று கேட்டான்.

உடனே அந்தப் பையன், ஒரு நிமிஷம் யோசித்தான். பிறகு சிரித்துக்கொண்டே, “அடடே, என்னைக் கண்டுபிடித்து விட்டீர்களே! ஆமாம், நான் தான் ரமணி என்று உங்களுக்கு யார் சொன்னது?” என்று கேட்டான்.

“யார் சொல்ல வேண்டும்? அடையாளங்களை வைத்துக் கண்டுபிடிக்க எங்களுக்குத் தெரியாதா, என்ன?” என்றான் குண்டுமணி பெருமையோடு.

“ஆமாம் ரமணி, உன்னை நாங்கள் மூன்று நாட்களாக எங்கேயெல்லாம் தேடி அலைந்தோம் தெரியுமா? நல்ல காலம், பிள்ளையார் கருணை வைத்தார்; நீயும் கிடைத்தாய். இப்போதே நீ கிடைத்துவிட்டதாக மாமாவுக்குத் தந்தி அடிக்கப் போகிறேன்” என்றான் ஆனந்தன்.

“தந்தி அடிக்கிறதெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம். முதலிலே போய், வயிறு நிறையச் சாப்பிடுவோம், வா” என்றான் குண்டுமணி.

அப்போது அந்தப் பையன், “நீங்கள் பலே பையன்களாக இருக்கிறீர்களே! அடையாளத்தை வைத்தே கண்டுபிடித்து விட்டீர்களே! உன் மாமா கடிதம் எழுதியிருந்தாரா? எழுதியிருப்பார்; எழுதியிருப்பார்” என்றான்.

“தம்பி, எங்களை சாமானியமாக நினைத்துவிடாதே! அந்த ஆனந்தன் ஒரு துப்பறியும் புலி. இந்தக் குண்டு மணி ஒரு துப்பறியும் சிங்கம். நமது சினிமாக்களிலே வருகிறார்களே, துப்பறியும் சிங்கங்களும் புலிகளும், அவர்களெல்லாம் எங்களிடத்திலே பிச்சை வாங்க வேண்டும்!” என்று கூறினான் குண்டுமணி.

அப்போது, ஆனந்தன் குண்டுமணியைப் பார்த்து, “டேய், இந்த ரமணியைப் பார்த்தாயா? என்னைப் போலவே உயரம்! நிறமும் என் நிறம் தான்! அதனால் தான் எனக்கும் இவனுக்கும் வித்தியாசம் தெரியாமல், பேனாவை நான் திருடியதாக என்னைப் பிடித்து ஜெயிலுக்குள்ளே தள்ளிவிட்டார்கள் அந்தப் பட்டணத் துப் போலீஸ்காரர்கள்! சரி, அதைப் பற்றி இப்போது என்ன பேச்சு “என்றான். பிறகு அந்தப் பையனிடம், “ரமணி! நல்லவேளையாக நீ அகப்பட்டுவிட்டாய். மூன்று நாட்களாக உன்னைத் தேடித் தேடி அலுத்துப் போனோம். பத்து நாட்களுக்கு முன்பு நாடகக் கொட்ட கையிலே நீ பட்டுத் துணியைத் திருடிவிட்டாய் என்று தானே முதலாளி உன்னைப் பிடித்து வெளியே தள்ளினார்? அதற்குப் பிறகு…”

ஆனந்தன் முழுவதையும் கூறி முடிக்கவில்லை. அதற்குள் பட்டென்று பலமாக ஓர் அறை விழுந்தது அவன் கன்னத்திலே! ஆனந்தனுக்கு அறை கொடுத்தது வேறு யாருமல்ல; அந்தப் புதுப் பையனேதான்!

ஆனந்தனுக்கு அறை விழுந்ததும், குண்டுமணி தனது கன்னங்கள் இரண்டையும் கைகளால் மறைத்துக்கொண்டு எடுத்தான் ஓட்டம்! ‘குடு குடு’ என்று கீழே ஓடி வந்து விட்டான். திரும்பியே பார்க்கவில்லை! மலைக்கோட்டை வாசலில் உள்ள பூக்கடைகளுக்குப் பக்கத்திலே வந்து நின்ற பிறகுதான் அவன் திரும்பிப் பார்த்தான்!

ஆனந்தனுக்கு அறை கொடுத்துவிட்டு, “டேய் அயோக்கியப் பயலே! என்னைத் திருடனென்றா சொல்கிறாய்? பட்டுத் துணியாம்; பேனாவாம். நான் திருடினேனாம்! என்னடா உளறுகிறாய்” என்று சீறினான் அந்தப் பையன்.

“ஐயையோ! முழுவதையும் கேளேன். அதற்குள் அவசரப்படுகிறாயே!” என்று கன்னத்தைத் தடவி விட்டுக் கொண்டே கூறினான் ஆனந்தன்.

“உன் பேச்சைக் கேட்கத் தேவை இல்லை. பாதாம் அல்வா, பாசந்தி எல்லாம் வாங்கித் தருவதாகச் சொன்னதைக் கேட்டதும், ‘நான் தான் ரமணி’ என்று கூறி உங்களை நான் ஏமாற்ற நினைத்தேன். ஆனால், என்னையே நீங்கள் ஏமாற்றிப் போலீஸில் பிடித்துக் கொடுக்கவல்லவா பார்க்கிறீர்கள்! நான் ரமணியுமில்லை; மண்ணாங்கட்டியும் இல்லை” என்றான் அந்தப் பையன். “நீ ரமணி இல்லையா!” என்று ஏமாற்றத்துடன் கேட்டான் ஆனந்தன்.

“இல்லை. என் பெயர் பழனியாண்டி. உறையூரில் என் மாமா சுருட்டு வியாபாரம் செய்கிறார். அவர் வீட்டுக்கு வந்தேன். மலைக்கோட்டையையும் பார்த்து விட்டுப்போக வந்தால், என்னைப் பிடித்துப் போலீஸில் கொடுக்கவா திட்டம் போடுகிறீர்கள், மடப் பயல்களா! டேய், இப்போதே இந்த இடத்தை விட்டு ஓடுகிறாயா, மண்டையைப் பிளக்கட்டுமா?” என்று வலது கையை ஓங்கிக்கொண்டே ஆனந்தனின் அருகிலே வந்தான் அந்தப் புதுப் பையன் பழனியாண்டி.

பாவம், ஆனந்தன் பதில் எதுவும் கூறாமல், மெதுவாக அந்த இடத்தைவிட்டு நழுவிவிட்டான். தன்னுடைய அருமை நண்பன் குண்டுமணி எங்கே என்று சுற்றுமுற்றும் பார்த்தான். அவன் அங்கே இருந்தால் தானே! அடிவாரத்தில் அல்லவா இருக்கிறான்?

சோர்ந்து போய்க் கீழே இறங்கி வந்தான் ஆனந்தன். அவனைக் கண்டதும் குண்டுமணி அருகிலே ஓடிப் போய்த் துக்கம் விசாரித்தான்.

“போடா பயங்கொள்ளிப் பயலே! அவன் என்னை ஓர் அறை அறைந்ததற்கு, அவனுக்கு நீ ஒன்பது அறை திருப்பிக் கொடுத்திருக்க வேண்டாமோ? ஆள் தான் யானைக்குட்டி மாதிரி இருக்கிறாய்” என்று கோபமாகக் கூறினான் ஆனந்தன்.

“பாவம், இந்த அறையை வாங்கவா இவ்வளவு தூரம் ஏறிப் போனோம்? சரி, வருத்தப்பட்டு என்ன செய்வது? பெரிய காரியங்களிலே ஈடுபட்டால், இப்படித்தான் பல கஷ்டங்கள் ஏற்படும். கவலைப்படாதே! எப்படியும் இன்னும் இரண்டு நாட்களில் ரமணியைக் கண்டுபிடித்து விடலாம்” என்று ஆறுதல் கூறினான் குண்டுமணி.

உடனே ஆனந்தன், “குண்டுமணி, இனிமேல் என்னாலே இப்படி அறை வாங்கமுடியாது. இன்றைக்குத் தபாலிலே மாமாவுக்கு ஒரு கடிதம் போடப் போகிறேன்” என்றான்.

“கடிதத்திலே என்ன எழுதப் போகிறாய்? அறை வாங்குவதற்குப் பட்டணத்திலேயிருந்து ஸ்பெஷலாக ஓர் ஆள் அனுப்பச் சொல்லி எழுதப் போகிறாயா?”

‘உனக்கு எல்லாம் வேடிக்கைதான். அடையாளத்தை வைத்து ரமணியைக் கண்டுபிடிக்கப் போனதால்தானே இந்தக் கஷ்டமெல்லாம்? மாமாவுக்கு எழுதி ரமணியினுடைய ‘போட்டோ’ இருந்தால், உடனே அனுப்பச் சொல்லப்போகிறேன். போட்டோ இருந்தால் சுலபமாக அவனைக் கண்டுபிடித்து விடலாம் அல்லவா?”

“ஆமாம்! இப்படி அலையவும் வேண்டாம், அறை வாங்கவும் வேண்டாம்’ என்று சிரித்துக்கொண்டே கூறினான் குண்டுமணி.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *