பர்மா ரமணி
அழ. வள்ளியப்பா

15. தந்தி வந்தது!

மானேஜர் மதுரநாயகம் கன்னத்தில் கைவைத்த படி தமது அறையில் உட்கார்ந்திருந்தார். அவர் முகம் மிகவும் வாட்டமாக இருந்தது.

அப்போது, “சார், நீங்கள் சொன்னபடி போர்டு எழுதி முடித்துவிட்டோம். வந்து பார்க்கிறீர்களா?” என்று கேட்டுக்கொண்டே அந்த அறைக்குள் வந்தார் சுதர்சன்.

ஸ்ரீமுருகன் பால நாடக சபாவிலே சுதர்சன் தலைமை ஓவியராக இருக்கிறார். மிகவும் அழகாகப் படங்கள் வரைவார். படங்களைப் பார்ப்பவர்கள், பார்த்தவுடன் அந்த இடத்தைவிட்டுப் போய்விட மாட்டார்கள்; சிறிது நேரம் அங்கேயே நின்று படம் முழுவதையும் ஆசை தீரப் பார்த்துவிட்டுப் பிறகுதான் போவார்கள்.

அன்று காலையில் விசேஷமாக ஒரு ‘போர்டு’ எழுத வேண்டுமென்று மதுரநாயகம் சுதர்சனிடம் கூறியிருந்தார்.

அதன்படி, ‘சீனத் தூது கோஷ்டியினரே, வருக வருக!’ என்று ஆங்கிலத்தில் ஒரு போர்டு எழுதினார் சுதர்சன். போர்டின் வலது பக்கம் சீனா தேசத்தின் படத்தை வரைந்திருந்தார், இடது பக்கம் ஒரு சீனரும், ஓர் இந்தியரும் தோள் மேல் கை போட்டு நிற்பது போல் வரைந்திருந்தார். அதை எழுதி முடிக்கும் போது மாலை நாலு மணி. எழுதி முடித்தவுடன் தான், சுதர்சன் மானேஜரிடம் வந்தார். ‘எழுதி முடித்தாய்விட்டது’ என்று கூறினார். ஆனால், அவர் கூறியது மதுரநாயகத்தின் காதில் விழுந்த தாகத் தெரியவில்லை. அவர் ஏதோ யோசனையில் ஆழ்ந் திருந்தார்.

“என்ன சார். கவலையாக iருக்கிறீர்களே!” என்று கேட்டார் சுதர்சன்.

“ஒன்றும் இல்லை. ரமணியைப் பற்றித்தான் கவலை…’

“ஏன் சார், திருச்சியிலிருந்து ஒருவிதமான தகவலும் வரவில்லையா?”

“காலையிலே ஒரு கடிதம் வந்தது. ‘மூன்று நாட்களாக என் அக்காள் மகன் ஆனந்தனும் அவன் சிநேகிதனும் திருச்சியிலும், சுற்றுப்புறத்திலும் தேடுதேடென்று தேடிப் பார்த்துவிட்டார்களாம். கிடைக்கவில்லையாம். ரமணியின் போட்டோ இருந்தால் உடனே அனுப்பி வையுங்கள். சுலபமாகக் கண்டுபிடித்துவிடலாம்’ என்று எழுதியிருந்தான். ரமணியின் போட்டோ இங்கே இருந்தால்தானே அனுப்புவதற்கு?

‘ரமணியின் போட்டோ எதுவும் இல்லை எப்படியாவது அடையாளத்தை வைத்துக் கண்டு பிடியுங்கள். ஒரு வாரத்தில் கிடைத்து விட்டால் நல்லது. இல்லாத போனால், நானே நேரில் வருகிறேன் என்று சற்று முன்புதான் பதில் எழுதிப் போட்டேன்… ம். ஒரு போட்டோ இருந்தால் எவ்வளவு உதவியாயிருக்கும்?” என்று கூறிப் பெருமூச்சுவிட்டார் மதுரநாயகம்.

இதைக் கேட்டதும் சுதர்சன் சிறிது நேரம் யோசனை செய்தார். பிறகு, “சார் சார்! எனக்கு ஒரு நல்ல யோசனை தோன்றுகிறது!” என்றார்.

இதைக் கேட்டதும், “யோசனையா! அது என்ன? சீக்கிரம் சொல்” என்று மிகுந்த ஆவலுடன் கேட்டார் நாடக சபா மானேஜர் மதுரநாயகம்.

உடனே சுதர்சன், “எனக்குத்தான் ரமணியை நன்றாகத் தெரியுமே! ஆகையால்…” என்று இழுத்தார்.

“ஆகையால், நீயே திருச்சிக்குப் புறப்பட்டுப் போகிறேன் என்கிறாயா?”

“இல்லை சார்! ரமணியின் உருவத்தை அப்படியே அச்சாக எழுதிக் கொண்டு வந்துவிடுகிறேன். இன்று இரவு எந்நேரம் ஆனாலும் சரிதான்; எழுதி முடித்து. விட்டுத்தான் படுப்பேன்” என்றார் சுதர்சன்.

இதைக்கேட்டதும் மதுரநாயகம் இருந்த இடத்தை விட்டுக் குதித்துக்கொண்டு எழுந்தார்.

“அடடே, நல்ல யோசனையாயிருக்கிறதே! அப்படியே செய், சுதர்சன். நாளைக்குக் காலையிலே நீ படம் எழுதிக் கொண்டு வந்தவுடனே நான் என்ன தெரியுமா செய்யப் போகிறேன்? நேராக “நவநீதம் ஸ்டுடியோ’வுக்குப் போய் அந்தப் படத்தை போட்டோ எடுக்கச் சொல்லப் போகிறேன்.”

“போட்டோவா! அது எதுக்கு சார்? நான் எழுதிக் கொண்டு வரப்போகும் படத்தையே நீங்கள் திருச்சிக்கு அனுப்பி விடலாமே!”

“சேச்சே, அப்படிச் செய்யக் கூடாது சுதர்சன்- தபாலில் அனுப்பும்போது வழியிலே தொலைந்து போனால் இன்னொரு தடவையல்லவா எழுதவேண்டும்? போட்டோ எடுத்து அனுப்புவது தான் நல்லது. நான் இன்னொரு யோசனையும் வைத்திருக்கிறேன். அந்தப் போட்டோவிலே பத்துப் பிரதிகள் எடுக்கச் சொல்லப் போகிறேன். ‘அவசரம்’ என்று சொன்னால் நாளைச் சாயங்காலமே தந்து விடுவார்கள். ஒரு பிரதியைத் திருச்சிக்கு. அனுப்பிவிட்டு, மற்ற பிரதிகளை முக்கியமான பத்திரிகைகளுக்கு அனுப்பி விளம்பரம் செய்யப் போகிறேன். ரமணி திருச்சியில் இல்லாது போனால் கூட வெகு சுலபத்தில் அகப்பட்டுவிடுவான் எப்படி என் யோசனை?’”

“சரியான யோசனை சார். நான் இன்றைக்கு இரவே ரமணியின் படத்தை எழுதி முடித்துவிடுகிறேன். அதிகாலையில் உங்கள் வீட்டுக்குப் படத்துடன் வந்து சேரு கிறேன். என்ன சார், சரிதானா?”

“அப்படியே செய் சுதர்சன். நீ செய்யப் போகும் உதவியால், ரமணி சீக்கிரம் கிடைத்து விடுவான் என்றே நினைக்கிறேன்” என்று ஆனந்தம் பொங்கக் கூறினார் மதுரநாயகம்.

அன்று இரவு சாப்பிடும் போதெல்லாம் மதுரநாயகமும், கமலாதேவியும் ரமணியைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். சாப்பாட்டை முடித்துக்கொண்டு அறைக்குள்ளே சென்று மதுரநாயகம் ஒரு காகிதத்தை எடுத்தார். அதில் யோசித்து யோசித்து ஏதோ எழுதினார். எழுதிவிட்டுப் படித்துப் பார்த்தார்.

பையனைக் காணோம்!

“மேலேயுள்ள பையனின் பெயர் ரமணி. வயது 13. மாநிறம். சுமார் நாலரை அடி உயரம். பத்து நாட்களாகக் காணவில்லை. அவன் மீது தவறு எதுவும் இல்லை. திரும்பி எப்போது வருவான் என்று ஆவலாக அவனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவனைக் கண்டு பிடித்துக் கீழ்க்கண்ட விலாசத்துக்குத் தகவல் கொடுப்ப வர்களுக்குத் தக்க சன்மானம் கொடுக்கப்படும்! மதுரநாயகம், மானேஜர், ஸ்ரீ முருகன் பால நாடக சபா, சென்னை-1.

இதை இரண்டு தடவை படித்துப் பார்த்தார். பிறகு, “சரி இதே போல் ரமணியின் படத்துடன் விளம்பரப்படுத்தி விடலாம். சீக்கிரம் ரமணி கிடைத்துவிடுவான். சந்தேகமே இல்லை” என்று மனத்திற்குள்ளே சொல்லிக் கொண்டார்.

பிறகு, படுக்கையில் போய்ப் படுத்தார். கண்களை மூடிக்கொண்டார். ஆனால், தூக்கம் வரவில்லை! ‘சுதர்சன் இப்போது ரமணியின் படத்தை எழுதிக் கொண்டிருப்பான். அங்கு நாமும் போனால் அவனுக்கு உதவியாயிருக்கும்’ என்று நினைத்தார் மதுரநாயகம். உடனே படுக்கையை விட்டு எழுந்தார். சட்டையை மாட்டிக்கொண்டார்.

விறுவிறு என்று நடந்தார்.

இரண்டு மைல் தூரத்திலிருந்த ஒரு மாடி வீட்டை நோக்கிச் சென்றார். அந்த வீட்டை அடைந்ததும், மாடிப் படிகளில் ஏறி மெதுவாக மேலே சென்றார். அங்கிருந்த ஏழாம் எண்ணுள்ள அறையை நெருங்கினார். அறையில் விளக்கு எரிந்து கொண்டிருக்கும் என்று அவர் எதிர்பார்த்தார். வெளிச்சம் இல்லாமல் படம் எழுத முடியாதல்லவா? ஆனால், அந்த அறையில் விளக்கு எரியவில்லை. அறைக் கதவு திறந்திருக்கிறதா என்று பார்த்தார். இல்லை; அது சாத்தப்பட்டிருந்தது. ‘என்ன இது! சுதர்சன் தூங்கிவிட்டானோ!’ என்று நினைத்துக் கதவை மெதுவாகத் தட்டினார்; பதில் இல்லை! கொஞ்சம் பலமாகவே தட்டினார்; அதற்கும் பதில் இல்லை!

கதவைத் தட்டும் போது அவர் கையில் ஏதோ தட்டுப்பட்டது. அதைத் தொட்டுப் பார்த்தார். உடனே திடுக்கிட்டார். “ஆ! பூட்டு! என்ன இது! கதவு பூட்டப் பட்டிருக்கிறதே! சுதர்சன் எங்கே போய்விட்டான்? அவன் பொய் சொல்லமாட்டானே! அவன் அறையில் இன்னொரு சிநேகிதனும் இருப்பதாகச் சொன்னானே! அவனையும் காணோமே! இருவரும் சினிமா பார்க்கப் போயிருப்பார் களோ!” என்று எண்ணினார்.

யாரையாவது கேட்கலாமென்று சுற்றுமுற்றும் பார்த்தார். பக்கத்து அறையில் உள்ளவர்கள் எல்லாரும் தூங்கிவிட்டார்கள். கதவைத் தட்டி அவர்களை எழுப்பிக் கேட்க நினைத்தார். ஆனாலும், அவர்கள் என்ன சொல்லு வார்களோ என்று பயந்து பேசாமல் கீழே இறங்கி வந்து விட்டார். அப்போது வாசலில் காவல்காரன் நின்று கொண்டிருப்பதை அவர் கண்டார். அவன் பக்கத்திலே சென்று, “ஏனப்பா, மாடியிலே ஏழாம் நம்பர் அறை பூட்டியிருக்கிறதே! அதில் சுதர்சன் என்று ஒருவர் இருப்பாரே, அவர் எங்கே? எப்போது வருவார்?” என்று கேட்டார்.

“ஊரிலிருந்து எப்போது வருவார் என்றுதானே கேட்கிறீர்கள்? அதைப் பற்றி அவர் எதுவுமே சொல்லவில்லையே! பாவம், அவருக்கு இருந்த துக்கத்திலே எப்படி சார் அதைச் சொல்லுவார்?” என்றான் காவல்காரன்.

“என்ன! துக்கமா! ஊருக்குப் போயிருக்கிறாரா?” என்று திகைப்புடன் கேட்டார் மதுரநாயகம்.

“ஆமாம் சார். ராத்திரி எட்டு மணி இருக்கும். ஊரிலேயிருந்து ஒரு அவசரத் தந்தி வந்தது. உடனே ரயிலுக்குப் புறப்பட்டுப் போய்விட்டார். கூடவே அவர் அறையிலிருக்கும் பரமசிவமும் போயிருக்கிறார். இன்னும் திரும்பிவரவில்லை. வெகுநேரமாகி விட்டது.”

“தந்தி வந்ததா? என்ன விஷயமாம்? உனக்குத் தெரியுமா?” என்று பரபரப்போடு கேட்டார் மதுரநாயகம்.

“சுதர்சன் இருக்கிறாரே, அவருக்கு ஒரே ஒரு ஆண் குழந்தையாம். அது இறந்து போய்விட்டதாம். தந்தியிலே அதுக்கு மேலே விவரம் இல்லை” என்று காவல்காரன் பதில் சொன்னான்.

இதைக் கேட்டதும், மதுரநாயகம் திடுக்கிட்டார். “ஐயோ பாவம், சுதர்சன் மிகவும் நல்லவன். அவனுக்கா இப்படிப்பட்ட துக்கச் செய்தி வர வேண்டும்?” என்று அநுதாபப்பட்டார். அத்துடன், “ரமணியின் படம் எழுதித் தருகிறேன் என்றான். அதற்குள் இப்படி ஆகிவிட்டதே! எல்லாம் நம்முடைய கெட்ட காலம் “என்று நொந்து கொண்டே அங்கேயே சிறிது நேரம் நின்று கொண்டிருந்தார். வழியனுப்பப் போன சுதர்சனின் சிநேகிதன் பரமசிவம் திரும்பி வந்தால் முழு விவரமும் தெரிந்து கொள்ளலாம் என்று தான் காத்திருந்தார். ஆனால், பரமசிவம் பன்னிரண்டு மணி வரை வரவில்லை இனியும் காத்திருப்ப தில் பயனில்லை. ஒரு வேளை ஸ்டேஷன் அருகிலே எங்கேனும் தெரிந்த இடத்தில் பரமசிவம் படுத்திருக்கலாம். எப்படியும் காலையில் விஷயம் தெரிந்து விடும்’ என்று நினைத்துக்கொண்டே மதுர நாயகம் வீடு திரும்பினார். திரும்பி வரும்போது, ‘சுதர்சனின் குழந்தை இப்படித் திடீரென்று இறந்துவிட்டதே!’ என்று வருந்தினார். அத்துடன், “ம் ரமணியைக் கண்டுபிடிக்க நல்ல ஏற்பாடு செய்யப்போகும் சமயம் இப்படித் தடங்கல் வந்து விட்டதே” என்று எண்ணிப் பெருமூச்சுவிட்டார்.

வழியனுப்பச் சென்ற பரமசிவம் இரவுதான் வர வில்லை. மறுநாள் காலையிலாவது வந்தாரா? ஊஹும், காலையிலும் வரவில்லை; மாலையிலும் வரவில்லை.

மூன்றாம் நாள் காலை மணி ஏழு இருக்கும். சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி யோசனை செய்துகொண்டிருந்தார் மதுரநாயகம்.

அப்போது, “சார், மானேஜர் சார்!” என்று ஒரு குரல் கேட்டது.

“யாரது?” என்று கேட்டுக் கொண்டே எழுந்து வந்தார் மதுரநாயகம்.

“நான் தான் சார், சுதர்சனின் சிநேகிதன் பரமசிவம்” என்று சொல்லிக்கொண்டே உள்ளே வந்தார் பரமசிவம்.

பரமசிவத்தைப் பார்த்ததும், “என்ன பரமசிவம், சுதர்சனுக்கு ஏதோ அவசரத் தந்தி வந்ததாமே!” என்று மிகுந்த கவலையோடு பேச்சை ஆரம்பித்தார் மதுரநாயகம்.

“ஆமாம் சார்; சுதர்சனின் ஒரே குழந்தை- ஆண் குழந்தை திடீரென்று இறந்துவிட்டது. இரண்டு நாளாக ஜுரம் இருந்ததாம், அவ்வளவுதான்”

“ஐயா, போவம். சுதர்சன் மிகவும் வருத்தப்படுவான்” என்று அநுதாபப்பட்டார் மதுரநாயகம்.

“வருத்தப்படுவதோடு இருந்தாலும் பரவாயில்லையே! மூளையே கலங்கிப் பைத்தியம் பிடித்துவிடும் போலி ருக்கிறதே! அதுதான் பயமாயிருக்கிறது!”

“என்ன! பைத்தியம் பிடித்துவிடும் போலிருக்கிறதா?”

‘ஆமாம். அந்தக் குழந்தை மீது சுதர்சன் உயிரையே வைத்திருந்தான். அன்றைக்குத் தந்தி வந்தவுடனேயே அவன் மூளை குழம்பிவிட்டது! அவனை வழியனுப்பப் போயிருந்தபோது, அவன் நிலைமையைப் பார்த்தேன். தனியாக அனுப்ப மனமில்லை. கூடவே சென்றேன். இப்போதுதான் திரும்பி வருகிறேன். சரி, நான் வரட்டுமா? ஸ்டேஷனிலிருந்து நேராக இங்குதான் வருகிறேன். ரமணி என்கிற பையனுடைய படத்தைப் போடப் போவதாகச் சுதர்சன் சொல்லிக் கொண்டிருந்தான். அப்போதுதான் தந்தி வந்தது. உங்களுக்குத் தகவல் தெரியாதே என்றுதான் சொல்ல வந்தேன்.”

“எல்லாம் என் துர்அதிர்ஷ்டம்” என்று வருத்தப்பட்டார் மதுரநாயகம்.

“நான் போய் வருகிறேன்” என்று கூறிவிட்டுப் பரமசிவம் போனதும், சுதர்சன் இனி எப்போது திரும்பி வருவானோ! ரமணியின் படம் எப்போது தயாராகுமோ!’ என்று எண்ணிப் பெருமூச்சு விட்டார்.

ஐந்து நிமிஷம் அப்படியே யோசனையில் இருந்தார். ஆறாவது நிமிஷம் நாடகக் கொட்டகையிலிருந்து ஓர் ஆள் அவசர அவசரமாக அங்கே ஓடி வந்தான். “சார் சார், தந்தி வந்திருக்கிறது சார்” என்று கூறிக் கொண்டே அவரிடம் தந்தியை நீட்டினான். அவர் தந்தியை வாங்கிப் பரபரப்புடன் பிரித்துப் படித்தார். உடனே, இருந்த இடத்தை விட்டு ஒரு குதி குதித்தார். பிறகு, “கமலா! கமலா!” என்று கத்திக்கொண்டே அடுக்களைக்கு ஓடினார்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *