பர்மா ரமணி
அழ. வள்ளியப்பா

16. கிடைத்துவிட்டான்!

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே-இன்று ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே-இந்த ஆனந்த னுக்கு நல் ஆனந்தமே!

அப்பாவோ இல்லை; அம்மாவோ நம்கட்சி ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே!

இப்படிப் பாடிக்கொண்டே குண்டுமணியின் வீட்டுக்கு வந்தான் ஆனந்தன். “என்னடா ஆனந்தா! ஒரே குஷியா யிருக்கிறாயே!” என்று கேட்டான் குண்டுமணி.

“குஷியாயில்லாமல், மூலையிலே குந்திக்கொண்டு அழவா சொல்லுகிறாய்? கேளுடா, இன்றைக்கு அதி காலையிலே என் அப்பா தஞ்சாவூருக்குப் புறப்பட்டுப் போய்விட்டார். ஏதோ வியாபார விஷயமாம். நாளை இரவுதான் திரும்பி வருவார். இது நமக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம். இந்த சந்தர்ப்பத்திலே ரமணியைக் கண்டு பிடிக்க நான் திட்டம் போட்டிருக்கிறேன்…’

என்னடா இது! ‘திட்டம் போட்டிருக்கிறேன்’ என்றா சொல்லுவது? ‘திட்டம் தீட்டியிருக்கிறேன்’ என்று சொல்லுடா. அது சரி, உன் அப்பா ஊரில் இல்லாததற்கும், ரமணியைக் கண்டுபிடிப்பதற்கும் என்னடா சம்பந்தம்? உன்னை சி.ஐ.டி. வேலை பார்க்க வேண்டாமென்று உன் அப்பா சொன்னாரா? அல்லது குறுக்கே விழுந்து படுத்துக்கொண்டாரா?”

‘அட, அவசரப்படாமல் கேளுடா. என் அப்பா ஊரில் இருந்தால் இரவிலே வெகு நேரம் ஊர் சுற்ற முடியுமா? இன்று இரவு நாம் எப்படியாவது ரமணியைத் தேடிக் கண்டுபிடித்துவிட வேண்டும். அவன் எங்கேயாவது வேலையிலே சேர்ந்திருப்பான் போலத் தோன்றுகிறது. அதனால்தான் பகலிலே அவனைக் கண்டுபிடிக்க முடிய வில்லை. இரவிலே தான் தேடிப் பார்க்க வேண்டும்.”

“அப்படியானால் இரவு முழுவதும் அவனைத் தேட வேண்டும் என்கிறாயா?”

“இரவு முழுவதும் தேட வேண்டாம். அவனுடைய வேலை முடிய ஒன்பது மணியாகலாம். பத்து மணி ஆகலாம். பன்னிரண்டும் ஆகலாம். அதனாலே, பன்னிரண்டு மணிக்கு மேலே தேடினால் கட்டாயம் அகப்பட்டு விடுவான். எங்கேயாவது ஒரு கடை வாசலில் படுத்திருப்பான் அல்லது, ஒரு வீட்டுத் திண்ணையில் தூங்குவான்.”

“அப்படியானால், பன்னிரண்டு மணிக்கு மேலே தான் புறப்பட வேண்டுமென்கிறாய். அதுவரையில் தூங்காமல் கொட்டக் கொட்ட விழித்துக்கொண்டிருக்க வேண்டுமா?”

“சும்மா விழித்துக் கொண்டிருக்க வேண்டாம். சுகமாக மெத்தை போட்ட நாற்காலியில் உட்கார்ந்து, எதிரேயிருக்கும் வெள்ளித் திரையைப் பார்த்துக் கொண்டிருக்க லாம்.”

“ஆ! அப்படிச் சொல்! நீயும் நானும் சினிமாவுக்குப் போய் எத்தனை நாட்கள் ஓடிவிட்டன!” என்றான் குண்டுமணி.

திட்டம் போட்டபடி, குண்டுமணியும் ஆனந்தனும் அன்று இரவு சினிமா பார்த்துவிட்டு பன்னிரண்டு மணிக்கு வெளியே வந்தார்கள். வெளியே வந்ததும், வராததுமாகத் துப்பறியும் வேலையில் இறங்கிவிட்டார்கள்.

ஆனந்தன் கையிலே ஒரு டார்ச் விளக்கு இருந்தது. குண்டுமணி கையிலும் ஒரு டார்ச் விளக்கு இருந்தது. இருவரும் ஆளுக்கொரு பக்கமாக விளக்கை அடித்துப் பார்த்துக் கொண்டே போனார்கள். யாராவது படுத்திருப்பது தெரிந்தால், உடனே உற்றுப் பார்ப்பார்கள். சந்தேகம் ஏற்பட்டால், எழுப்பி விசாரிக்கலாம் என்று நினைத்தார்கள். ஆனால், படுத்துக் கிடந்தவர்கள் எல்லோ ருமே பெரியவர்கள்தான்! ஒரு பையனாவது தென்பட வேண்டுமே! ஊஹும்.

சுமார் நான்கு மணி நேரம் சுற்றிவிட்டார்கள். ‘டாண், டாண், டாண், டாண்’ என்று நான்கு முறை மணியடிக்கும் சத்தம் கேட்டது. உடனே குண்டு மணி, “அப்பா ஆனந்தா! நம்மாலே இனிமேல் நடக்கவே முடியாது. கொஞ்ச நேரமாவது உட்கார்ந்து களைப்பாற வேண்டும். இல்லாத போனால், மயக்கம் போட்டு விழுந்துவிடுவேன்” என்று எச்சரித்தான்.

உடனே ஆனந்தன், “டேய், டேய், அப்படியெல்லாம் செய்துவிடாதே! நீ தூங்க ஆரம்பித்தாலே என்னால் எழுப்ப முடியாது. நீ மயக்கம் போட்டு விட்டாலோ அப்புறம் கேட்கவே வேண்டாம். சரி, அதோ பார். அந்த வீட்டுத் திண்ணையிலே போய்க் கொஞ்ச நேரம் உட்கார்ந்து இளைப்பாறலாம். ஆனால் ஒரு நிபந்தனை. அங்கே நீ படுத்துவிடக் கூடாது!”

“இல்லை. படுக்கமாட்டேன். வா, போய் உட்காருவோம்” என்றான் குண்டுமணி.

ஒரு வீட்டின் முன்னால், எதிர் எதிராக இரண்டு நீளமான திண்ணைகள் இருந்தன. சாய்ந்து கொள்ளவும் அவை வசதியாக இருந்தன. குண்டுமணி ஒரு திண்ணையில் உட்கார்ந்தான். ஆனந்தன் எதிர்த் திண்ணையில் உட்கார்ந்தான்.

சிறிது நேரம் சென்றது. ஆனந்தன், “குண்டுமணி, ஒரேயடியாக உட்கார்ந்து விடாதே! புறப்படு. சீக்கிரம் ரமணியைக் கண்டுபிடிக்க வேண்டும் மாமா தந்தியை எதிர்பார்த்துக் கொண்டேயிருப்பார்” என்றான்.

உடனே குண்டுமணி, “ஏண்டா ஆனந்தா, உன் மாமாவுக்கு இந்த ரமணி ஒரே ஒரு பிள்ளை தானா? வேறு பிள்ளையே கிடையாதா?” என்று கேட்டான்.

இதைக் கேட்டதும் ஆனந்தனுக்குச் சிரிப்பு வந்து விட்டது. ஆனாலும் அடக்கிக்கொண்டு, அட மண்டு சிகாமணி, ‘விடிய விடியக் கதை கேட்டு சீதைக்கு ராமர் சித்தப்பாவா?’ என்று கேட்ட கதையாகத்தான் இருக்கிறது. அன்றைக்கு ஹோட்டலில் சாப்பிடும் போதே எல்லாம் விவரமாகச் சொன்னேன். நீ சாப்பிடும்போது சொன்னேனே, அது என் தப்புத்தான்… சரி, கொஞ்சம் காதைத் தீட்டிக்கொண்டு கேள். என் மாமா மதுரநாயகம் பட்டணத்திலே ஸ்ரீ முருகன் பால நாடக சபாவிலே மானேஜராயிருக்கிறார். அந்த சபாவிலே ரமணி என்று ஒரு பையன் வேலைக்கு இருந்தானாம். அவன் மிகவும் நல்லவனாம். ஆனாலும், அவன் சபாவில் பட்டுத் துணியைத் திருடிவிட்டதாக அவன் மேல் சில வேலைக்காரர்கள் பழி போட்டுவிட்டார்களாம். அவர்கள் பேச்சைக் கேட்டு நாடக சபா முதலாளி பத்துப் பன்னிரண்டு நாட்களுக்கு முன்பு ரமணியை விரட்டி விட்டாராம். ஆனால், இப்போது அவன் மீது குற்றம் எதுவும் இல்லை என்பது ருசுவாகிவிட்டதாம். அவன் திருச்சியிலிருந்து மாமாவுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறானாம். அதனால் அவனை இந்த ஊரில் தேடிக் கண்டுபிடிக்கும்படி மாமா எழுதி யிருக்கிறார். மாமா விருப்பப்படி நான் அவனைத் தேடிக் கொண்டிருக்கிறேன். எனக்குத் துணையாக என் அருமை நண்பன் அசகாய சூரன் குண்டுமணியாகிய நீயும் வந்திருக்கிறாய். அவ்வளவு தான்! விவரம் போதுமா? இன்னும் வேணுமா?” என்று கேட்டான் ஆனந்தன்.

“அடடே! புரியுது, புரியுது… ஆமாம், அப்போது நீ சொன்னதெல்லாம் இப்போதுதான் ஞாபகத்துக்கு வரு கிறது. சரி, இன்னும் எங்கெல்லாம் தேட வேண்டும்.

“பின் தெரு ஒன்றுதான் பாக்கி. அங்கேயும் தேடிப் பார்த்துவிடலாம்”

“சரி, இப்போது எனக்கு ஒரே தாகமாயிருக்கிறது. தண்ணீர் வேண்டும்.!”

“அதோ நாம் வந்த வழியிலே, இதே தெரு முனையிலே ஒரு குழாயிருக்கிறது. வா, போய்த் தண்ணீர் குடித்துவிட்டு வேலையைப் பார்ப்போம்.”

இருவரும் குழாயடிக்குச் சென்று தண்ணீர் குடித்து விட்டுப் பின் தெருவுக்குப் போய்த் தேட ஆரம்பித்தார்கள். அப்போது ஒரு வீட்டின் எதிரேயிருந்த ஒரு அகலமான கல்லின் மேல் யாரோ படுத்திருப்பது தெரிந்தது. உடனே ஆனந்தன் விளக்கை முகத்திலே அடித்துப் பார்த்தான். பார்த்ததும், “டேய், டேய், குண்டுமணி! இதோ பார். ஒரு பையன் “என்றான்.

குண்டுமணியும் அருகே வந்து பார்த்தான். “ஆமாண்டா, முகத்திலே மீசையில்லை. பையனாகத் தான் இருக்கும்” என்று கூறினான்.

“போடா, மடையா! மீசை இருந்தாலும், இல்லாத போனாலும் முகத்தைப் பார்த்தாலே தெரியாதா? இவ னுக்கும் என் வயதுதான் இருக்கும். நிறம் கூட என் நிறம் தான்! எழுப்பிக் கேட்கலாமா?” என்றான்.

“டேய், கன்னம் பத்திரம்! மலைக்கோட்டையில் விழுந்த மாதிரி அறை விழுந்துவிடப் போகிறது!”

“சரி, இவன் உயரமும் என் உயரம் தான் இருக்கிறதா என்று பார்த்துவிடலாம். குண்டுமணி, நான் இவன் பக்கத்திலே படுத்துக்கொள்கிறேன். என் உயரமும் இவன் உயரமும் சரியாக இருக்கிறதா என்று நீ பார்த்துச் சொல். சரிதானா?” என்று கூறிவிட்டு அந்தப் பையனின் அருகே தரையில் படுத்தான் ஆனந்தன்.

குண்டுமணி தலைப் பக்கமும் கால் பக்கமும் பார்த்து விட்டு, “அச்சா! வித்தியாசமே இல்லை. உன் உயரமே தான்! சரி, இவனைச் சீக்கிரம் எழுப்பு. உம்!” என்று அவசரப்படுத்தினான். உடனே ஆனந்தன் அந்தப் பையனை எழுப்பினான். அவன் பலமுறை தட்டி எழுப்பிய பிறகே எழுந்தான்.

அவன் எழுந்து உட்கார்ந்ததும், “தம்பி, உன் பெயர் என்ன?” என்று குழைவாகக் கேட்டான் ஆனந்தன்.

“என் பெயரா?… என் பெயர்… ரமணி “என்றான் அவன்.

உடனே, “என்ன, ரமணியா! உனக்கு மதுரநாயகத்தைத் தெரியுமா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டான் ஆனந்தன்.

“ஓ! நாடக சபா மானேஜர் மதுரநாயகத்தையா எனக்குத் தெரியாது! அவர் தங்கமானவர்” என்றான் பையன்.

இதைக் கேட்டதும் ஆனந்தனுக்கும், குண்டுமணிக்கும் அவன் ரமணிதான் என்பது உறுதியாகிவிட்டது. உடனே அவனை அப்படியே கட்டிப் பிடித்துக்கொண்டு இருவரும் குதித்தார்கள்.

பிறகு ஆனந்தன் அவனிடம், “நீ இங்கே வந்து எத்தனை நாளாகிறது?” என்று கேட்டான்.

“பத்து நாளாகிறது… சாப்பிட்டு ஒரு வாரமாகிறது. என் கஷ்ட காலம் பட்டுத் துணியை நான் திருடிவிட்டதாக என்மேல் பழி சுமத்தினார்கள்…’

“ரமணி! கவலைப்படாதே! நீ திருடவில்லை என்பது ருசுவாகிவிட்டது. மாமா உன்னைக் காணாமல் ஏங்கிக் கொண்டிருக்கிறார். வா, வா, சீக்கிரம் வீட்டுக்குப் போகலாம். பசி தீரச் சாப்பிட்ட பிறகு மிச்சத்தைப் பேசிக் கொள்ளலாம்” என்றான் ஆனந்தன்.

மறுநாள் பொழுது விடிந்ததுமே, ரமணி கிடைத்து விட்டதாக மாமாவுக்குத் தந்தி கொடுத்துவிட்டான் ஆனந்தன்.

அந்தத் தந்தியைப் பார்த்ததும் தான், “கமலா கமலா” என்று கத்திக் கொண்டே அடுக்களைக்கு

அடுக்களைக்கு வேகமாக ஓடினார் மதுரநாயகம்

“என்ன விஷயம்? இப்படிச் சிறு குழந்தை மாதிரி ஓடி வருகிறீர்களே!” என்று கேட்டாள் கமலா தேவி.

“இதோ பார் தந்தி! திருச்சியிலிருந்து வந்திருக்கிறது. படித்துப் பார். எல்லாம் தெரியும் “என்று கூறிவிட்டுத் தந்தியை அவளிடம் காட்டினார் மதுர நாயகம். “என்ன இது! என்னைப்படித்துப் பார்க்கச்சொல்லுகிறீர்களே!

விளையாடுகிறீர்களா? தந்தி தமிழிலா இருக்கிறது? எனக்குத்தான் இங்கிலீஷ் தெரியாதே!” என்றாள் கமலா தேவி.

“அடடே! எனக்கு இருந்த ஆனந்தத்தில் உனக்கு இங்கிலீஷ் தெரியாது என்பதைக்கூட மறந்துவிட்டேன்! சரி, இப்போது இந்தத் தந்தியிலுள்ள செய்தியைக் கேட்டால், நீயும் என்னோடு சேர்ந்து ஆனந்தப்படப் போகிறாய்…”

“அப்படியா! சரி, விஷயம் என்ன என்பதைச் சொல்லாமல் ஏதேதோ சொல்லுகிறீர்களே! சீக்கிரம் சொல்லுங்கள்” என்றாள் கமலாதேவி.

“இது யார் கொடுத்த தந்தி தெரியுமா? என் அக்காள் மகன் ஆனந்தன் கொடுத்தது! அவன் என்ன சாமானியப் பட்டவனா? பலே கெட்டிக்காரன்!” என்று கூறினார். பிறகு, “இதோ படிக்கிறேன்; கேள். “ரமணி கிடைத்து விட்டான். புறப்பட்டு வரவும் -ஆனந்தன்’. பார்த்தாயா? இனிக் கவலையே இல்லை. ரமணி கிடைத்துவிட்டான்!” என்று ஆனந்தம் பொங்கக் கூறினார்.

“என்ன! ரமணி கிடைத்துவிட்டானா? அப்பா! நல்ல வேளை. இப்போதாவது கிடைத்தானே! இனி, அவனை நான் ஒன்றுமே சொல்லமாட்டேன். சொந்தத் தம்பி போலப் பார்த்துக் கொள்வேன்” என்றாள் கமலா தேவி.

“நானும் அப்படித்தான். என் சொந்தத் தம்பி போலவே பார்த்துக்கொள்வேன். ஆமாம், அவன் எனக்கும் தம்பி, உனக்கும் தம்பியாக எப்படி இருக்க முடியும்? முறை சரியாக வராதே!” என்று கேட்டு விட்டுச் சிரித்தார் மதுர நாயகம். கமலாதேவியும் கூடச் சேர்ந்து சிரித்தாள்.

அன்று ஆபீசுக்கு வந்ததும், முதல் வேலையாக முதலாளியிடம் ரமணி கிடைத்துவிட்ட செய்தியைத் தான் மதுரநாயகம் கூறினார். முதலாளிக்கும் பரம சந்தோஷம். ‘நமக்கு அதிக சிரமம் வைக்காமல் கிடைத்துவிட்டான். உடனே அவனை அழைத்துவரச் சொல்லி இப்போதே பதில் தந்தி கொடுத்துவிடுவோமா?” என்று கேட்டார் முதலாளி.

“ஆனந்தன் என்னையல்லவா புறப்பட்டு வரச்சொல்லித் தந்தி கொடுத்திருக்கிறான்? காரணத்தோடுதான் அவன் அப்படிக் கொடுத்திருக்க வேண்டும்” என்றார் மதுர நாயகம்.

“என்ன காரணமாக இருக்கும்?”

“ஒன்றுமில்லை. ரமணியை ஆனந்தன் கண்டு பிடித்ததும், இங்கே அழைத்து வருவதாகத்தான் சொல்லி யிருப்பான். ஆனால், ரமணிக்குத் திரும்பவும் இங்கே வர யோசனையாக இருந்திருக்கும். தயக்கத்தோடு ஏதாவது சொல்லியிருப்பான். நானே நேரில் போனால், எப்படியும் சமாதானப்படுத்தி அழைத்து வந்துவிடுவேன். இல்லையா? அதனால் தான் என்னைப் புறப்பட்டு வரச் சொல்லி ஆனந்தன் தந்தி கொடுத்திருக்கிறான்.”

“ஆமாம் மதுரநாயகம், அப்படித்தான் இருக்கும். சரி, இன்று இரவே நீங்கள் புறப்படுங்கள். ரமணியைக் கையோடு அழைத்துக்கொண்டு நாளை இரவே திரும்பி வந்துவிடுங்கள். இன்னும் நாலு நாட்கள் தானே நடுவே இருக்கின்றன, சீனத் தூதுகோஷ்டி வருவதற்கு?”

“எனக்கு வேறு என்ன வேலை? நாளை இரவே ரமணி யுடன் திரும்பிவிடுகிறேன்” என்று கூறிவிட்டு மதுரநாயகம் உற்சாகமாகத் தமது வேலைகளை யெல்லாம் முடித்தார்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *