பர்மா ரமணி
அழ. வள்ளியப்பா

3. பழைய சம்பவம்


ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் இரவுநேரம்.

மானேஜர் மதுரநாயகம் எழும்பூர் ஸ்டேஷனுக்குச் சென்றிருந்தார். திருச்சியிலிருந்து வந்திருந்த அவருடைய அத்தானை (அக்காளின் கணவர்) வழியனுப்பத்தான் சென்றிருந்தார். 9-40க்குப் புறப்படும் வண்டியில் அவரை அனுப்பிவிட்டு, ஸ்டேஷனுக்கு வெளியே வந்தார். பஸ்ஸிற்காகக் காத்து நின்றார்.

ஐந்து நிமிஷம் ஆயிற்று; பத்து நிமிஷமாயிற்று; பதினைந்து நிமிஷங்களும் பறந்தோடி விட்டன. ஆனா லும், பஸ்தான் ஓடி வரவில்லை! அப்போது, ‘டர்டர்… டர்டர்’ என்ற ‘இன்னிசை’யுடன் ஓர் ஆட்டோ ரிக்ஷா அங்கு வந்தது. அதைப் பார்த்ததும், ‘மணியோ பத்துக்கு மேலாகிறது. இனியும் நின்றால் நேரம் வீணாகும். ஆதலால், இந்த ஆட்டோ ரிக்ஷாவிலே போய்விடலாம்’ என்று தீர்மானித்தார் மதுரநாயகம். உடனே ஆட்டோ ரிக்ஷாவை அழைத்து, அதிலே ஏறி உட்கார்ந்துகொண்டார்.

“தங்கசாலைக்குப் போ” என்றார். கர்ணகடூர சத்தத்துடன் அது புறப்பட்டது. எதிரில் இருக்கும் உயரமான ரயில் பாலத்தில் ஏறியது. சுமார் ஐம்பது அடி தூரம்கூடப் போயிருக்காது.

அப்போது-

“ஆ! ஐயோ! ஐயையோ!” என்ற கூக்குரல் கேட்டது. சத்தத்தைக் கேட்டதும், மதுரநாயகம் திடுக்கிட்டார். எதிரே பார்த்தார். அங்கே மனிதன் இழுக்கும் ஒரு ரிக்ஷா மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கிப் பின்புறமாக ஓடி வந்து கொண்டிருந்தது! அதை இழுத்துச் சென்ற ரிக்ஷாக்காரன் அதைக் கைவிட்டு விட்டான் என்பதை மதுரநாயகம் உடனே புரிந்து கொண்டார். ரிக்ஷாவுக்குள் இருப்பவர் தான் கூக்குரல் போடுகிறார் என்பதையும் அவர் அறிந்து கொண்டார்.

உடனே அவர், “ஏய்! ஏய்! நிறுத்தப்பா, நிறுத்து!” என்று பரபரப்புடன் கூறி ஆட்டோ ரிக்ஷாக்காரனின் முதுகிலே பலமாகத் தட்டினார். உடனே அவன் நிறுத்தினான்.

மதுரநாயகம் கீழே இறங்குவதற்குள் பின்னோக்கி வந்த அந்த ரிக்ஷா சரிவிலே வெகு வேகமாக ஓடியது. அதைத் தொடர்ந்து ரிக்ஷாக்காரனும் ஓடினான். ஆனாலும், அவனால் ரிக்ஷாவைப் பிடித்து இழுத்து நிறுத்த முடிய வில்லை!

சிறிது தூரம் சென்றதும், தலைகுப்புறக் கவிழ்ந்தது அந்த ரிக்ஷா! அதிலிருந்து ஒரு குண்டு மனிதர் “அம்மாடி யோவ்!” என்று கதறிக்கொண்டே கீழே சாய்ந்தார். மறு நிமிஷம் ஓடிவந்த ரிக்ஷாக்காரன் அவர் அருகே சென்றான். “ஐயையோ! அடிபட்டுவிட்டதா! எந்த இடத்திலே அடி? என்னை மன்னிக்க வேண்டும்” என்று கூறிக்கொண்டே அவரது உடம்பைத் தொட்டுப் பார்த்தான்.

இதற்குள் மதுரநாயகம் அங்கே வந்துவிட்டார். அவர் மட்டும் வரவில்லை; ஒரு சிறு கூட்டமே வந்து விட்டது? ஒரு போலீஸ்காரரும் அங்கே வந்து சேர்ந்தார். அந்தப் போலீஸ்காரர் கூட்டத்துக்குள்ளே புகுந்தார். அங்கே நின்ற ரிக்ஷாக்காரனைக் காதைப் பிடித்து இழுத்துச் சென்றார். பக்கத்திலே இருந்த ‘மெர்க்குரி’ விளக்கின் அடியிலே கொண்டு போய் நிறுத்தினார். கூட்டமும் அங்கே வந்தது.

மதுரநாயகம் கீழே விழுந்த கனத்த மனிதரை மெது வாகத் தூக்கிவிட்டு, “அடி பலமோ?” என்று கேட்டார்.

“நல்ல காலம்; அடி எதுவும் ல்லாமல் தப்பினேன். ஜீவன் செத்த பயல்களெல்லாம் ரிக்ஷா இழுக்க வந்து விட்டார்கள்!” என்று அந்தக் குண்டு மனிதர் ஆத்திரத்துடன் சொன்னார்.

“சரி, வாருங்கள், அந்த ரிக்ஷாகாரனை என்ன செய்கிறார்கள்; பார்க்கலாம்” என்று கூறி அவரையும் அழைத்துக் கொண்டு ரிக்ஷாக்காரன் நின்ற இடத்துக்கு வெகு வேகமாகச் சென்றார் மதுரநாயகம்.

அங்கே போலீஸ்காரரின் எதிரே விளக்கு வெளிச்சத்தில் நின்ற ரிக்ஷாக்காரனைக் கண்டதும் மதுரநாயகம் திடுக்கிட்டார். அவர் மட்டும்தானா திடுக்கிட்டார்? அங்கு நின்ற எல்லோருமே போலீஸ்காரர் உள்பட அனைவருமே திடுக்கிட்டார்கள். ஏன்?

அவன் ஒரு சிறுவன்! ஆம், அவனுக்கு வயது பதின்மூன்று பதினாலுக்கு மேல் இருக்காது. ஆனாலும், நன்றாக வளர்ந்திருந்தான்.

“டேய், ரிக்ஷா இழுக்க உனக்கு யாரடா லைசென்ஸ் கொடுத்தது? கையிலே லைசென்ஸ் வில்லை கட்டியிருக்க வேணுமே! எங்கே அது?” என்று அவனை அதட்டிக் கேட்டார் போலீஸ்காரர்.

அந்த ரிக்ஷாக்காரப் பையன் திருதிருவென்று விழித்தான். “இது என் ரிக்ஷா இல்லை. வேறு ஒருவருடையது. பசிக் கிறக்கத்தில் விட்டு விட்டேன்” என்று தயக்கத்தோடு கூறினான்.

“என்ன! வேறு ஒருவனுடையதா? நீ எப்படி இழுக்கலாம்? நட ஸ்டேஷனுக்கு” என்று கூறி அவனை ரிக்ஷாவுடன் பக்கத்திலிருந்த போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு சென்றார் போலீஸ்காரர். செல்லும்போதே கீழே விழுந்தவரைப் பார்த்து, “நீங்களும் வாருங்கள்; இவனைச் சும்மா விடக்கூடாது” என்று கூறி அவரையும் அழைத்தார்.

அந்தப் பையனைப் பார்த்தவுடனே மதுரநாயகத்துக்கு அவனிடம் ஓரளவு அநுதாபம் ஏற்பட்டுவிட்டது. இந்த வயதில் இவன் ஏன் ரிக்ஷா இழுக்க வேண்டும்? எப்படி இவனுக்கு இந்த ரிக்ஷா கிடைத்தது?’ என்றெல்லாம் எண்ணினார். கடைசியில், சரி, நாமும் இவர்களோடு போய், என்ன நடக்கிறது என்றுதான் பார்ப்போமே!’ என்று நினைத்துக்கொண்டே அவர்களின் பின்னால் சென்றார். போலீஸ்-ஸ்டேஷனுக்குச் சென்றதும், சப் இன்ஸ்பெக்டருடைய அறைக்குள் என்ன நடக்கிறது என்பதை ஜன்னல் ஓரமாக நின்று கவனித்தார்.

சப்-இன்ஸ்பெக்டரிடம் நடந்ததைச் சுருக்கமாகக் கூறினார் போலீஸ்காரர். உடனே சப்-இன்ஸ்பெக்டர் ரிக்ஷா இழுத்த சிறுவனைப் பார்த்துக் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார். அந்தக் கேள்விகளுக்கெல்லாம் அவன் கூறிய பதில் இதுதான்.

“நான் பிறந்தவுடனே என் அம்மா ஜன்னிகண்டு இறந்து போனாள். என் அப்பாவும் ஆறேழு மாதங்களுக்கு முன்பு ஒரு வெறி நாய் கடித்துச் செத்துப் போனார். வேறு உற்றார் உறவினர் இல்லாததால் நான் அனாதையானேன்; என் அப்பா பணம் எதுவும் சேர்த்து வைக்கவில்லை. அதனால், எட்டாவது வகுப்பைப் பாதியிலே முடித்துக்கொண்டு ஊர் ஊராக வேலைக்கு அலைந்தேன். ஒன்றிரண்டு இடங்களில் வேலை கிடைத்தது. ஆனாலும், அங்கெல்லாம் அதிக நாள் இருக்கமுடியாமல் போய் விட்டது. கடைசியாக இந்தப் பட்டணத்துக்கு வந்தேன். சென்னையில் வந்து ஒரு மாதம் ஆகிறது. இங்கும் வேலை கிடைக்க வில்லை. அதனால், கூலி வேலை பார்த்தாவது காலத்தைக் கழிக்கலாம் என்று நினைத்தேன். அதில் தினம் இரண்டணா கிடைத்தது. அதைக்கொண்டு அரை வயிறும், கால் வயிறும் நிரப்பி வந்தேன். வயிறு நிறையச் சாப்பிட எனக்கு ஒரு வழி சொல்லித் தந்தார், எனக்குத் தெரிந்த ஒரு ரிக்ஷாக்காரத் தாத்தா. அவர் பகலெல்லாம் ரிக்ஷா இழுப்பார். விளக்கு வைத்த பிறகு அவருக்குச் சரியாகக் கண் தெரியாது. வெள்ளெழுத்தாம்! அதனால், அவர் என்னிடம் இந்த ரிக்ஷாவைத் தந்து இரவு நேரங்களிலே இழுக்கச் சொன்னார். கிடைக்கும் கூலியில் அவருக்குப் பாதி கொடுத்து விடுவேன். நாலு நாட்களாக இந்த மாதிரி செய்து ஒரு ரூபாய் மிச்சம் பிடித்து வைத்திருந்தேன். அதை நேற்று ராத்திரி நான் தூங்கும் போது எவனோ ஒருவன் திருடிப் போய் விட்டான்! அதனாலே இன்றைக்கு முழுவதும் பட்டினி! பட்டினியோடே ரிக்ஷா இழுத்தேன். இப்படி விபரீதம் நேர்ந்துவிட்டது. நான் செய்தது தப்புத்தான். ரிக்ஷாவிலே வந்த பெரியவரையும், உங்களையும் மன்றாடிக் கேட்டுக் கொள்ளுகிறேன். தயவு செய்து என்னை மன்னித்து விட்டுவிடுங்கள்” என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டான். இதைக் கேட்ட சப்-இன்ஸ்பெக்டர், “பேச்சு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனாலும்… சரி, உனக்கு இப்போது என்ன வயது?” என்று கேட்டார்.

“பதின்மூன்று”.

“என்ன! பதின்மூன்றுதானா! ரிக்ஷா இழுக்க வேண்டுமானால், 17 வயது முடிந்து 18-வது வயது ஆரம்பமாகியிருக்க வேண்டும். தெரியுமா? லைசென்ஸ் இல்லாமல் ரிக்ஷா இழுத்ததே குற்றம்.”

“எனக்கு இது தெரியாது, சார். பொய் சொல்லுவது, திருடுவது, ஏமாற்றுவதுதான் குற்றம் என்று நினைத்தேன், இப்போதுதான் இதுவும் குற்றமென்று தெரிகிறது.”

“சரி, உன்னுடைய ஊர் எது? உன்னுடைய பெயர் என்ன?’”

“என் ஊர் வேலங்குறிச்சி. மதுரைக்குப் பக்கத்திலே இருக்கிறது. என் பெயர் ரமணி.”

“பெயரெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், நீ லைசென்ஸ் இல்லாமல் இழுத்தது ஒரு குற்றம். இந்தப் பெரியவரைக் கீழே தள்ளியது இரண்டாவது குற்றம். இந்த இரண்டுக்கும் சேர்த்து உனக்குச் சரியான தண்டனை வாங்கித் தரவேண்டியதுதான்.

இதைக் கேட்டதும் அவன் திடுக்கிட்டான். “சார், சார்! தெரியாமல் செய்துவிட்டேன், சார்! தயவு செய்து என்னை மன்னித்து விட்டுவிடுங்கள், சார்!” என்று கெஞ்சினான்.

இந்தக் காட்சியைக் கண்ட மதுரநாயகத்தின் மனம் இளகிவிட்டது. உடனே அவர் மெதுவாக சப்-இன்ஸ் பெக்டரின் அறைக்குள்ளே நுழைந்தார். “சார், வணக்கம்!” என்று ஒரு கும்பிடு போட்டார்.

“என்ன விஷயம்?” என்று கேட்டார் சப்-இன்ஸ் பெக்டர்.

“ஒன்றுமில்லை. உங்களிடம் ஒரு வேண்டுகோள்…’

“வேண்டுகோளா! அது என்ன? நீங்கள் யார்?”

“ஸ்ரீ முருகன் பால நாடக சபா என்று கேள்விப் பட்டிருப்பீர்களே…’

“ஆமாம். இப்போதுகூட கிருஷ்ணலீலா நாடகம் நடத்துகிறார்களே…?”

“ஆமாம், ஆமாம், நான் தான் அந்த நாடக சபாவின் மானேஜர். பெயர் மதுரநாயகம்…”

“அடடே! அந்த சபாவின் மானேஜரா! மிஸ்டர் மதுர நாயகம், இப்படி உட்காருங்கள். நின்று கொண்டே பேசுகிறீர்களே?” என்று எதிரிலே இருந்த நாற்காலியில் உட்காரச் சொன்னார் சப்-இன்ஸ் பெக்டர்.

மதுரநாயகம் நாற்காலியில் உட்கார்ந்ததும், “உங்கள் சபாவுக்கு நான் இரண்டு மூன்று முறை வந்திருக்கிறேன். குழந்தைகளெல்லாம் மிகவும் பிரமாதமாக நடிக்கிறார்கள். என் குழந்தைகளுக்கு உங்கள் நாடகமென்றால் மிகமிகப் பிடிக்கும். என் சின்னப் பையன் ஆனந்தன், ‘கிருஷ்ண லீலா’வை மட்டும் மூன்று தடவைகள் பார்த்திருக்கிறான்!” என்று புகழ ஆரம்பித்துவிட்டார் சப்-இன்ஸ்பெக்டர்

“அப்படியா! சந்தோஷம்” என்றார் மதுரநாயகம்.

“ஆமாம், நீங்கள் வந்த காரியத்தைச் சொல்ல வில்லையே!” என்று கேட்டார் சப்-இன்ஸ்பெக்டர்.

“இந்த ரிக்ஷாக்காரப் பையனைப் பார்க்கப் பார்க்கப் பரிதாபமாயிருக்கிறது. ரிக்ஷா இழுத்தாவது யோக்கியமாக வயிறு வளர்க்க நினைத்திருக்கிறான். இவன் துர் அதிர்ஷ்ட ம் இப்படி ஆகிவிட்டது. தயவு செய்து இவனை மன்னித்து விட்டால், அதுவே தாங்கள் எனக்குச் செய்யும் பெரிய உதவி. தங்களை நான் மறக்கவே மாட்டேன்” என்றார் மதுரநாயகம்.

ரிக்ஷாவில் ஏறிக் கிழே விழுந்த பெரியவருக்கும் இரக்கம் உண்டாகிவிட்டது. “ஆமாம் சார், இரவு நேரத்தில் ஆளைச் சரியாகப் பார்க்காமல் ரிக்ஷாவில் ஏறி விட்டேன்… என்னைப் போன்றவர்களை வைத்து இந்தப் பொடியனால் இழுக்க முடியுமா? ஏதோ தெரியாமல் செய்துவிட்டான்! இவனை விட்டு விடுவதில். எனக்கும் சம்மதமே!” என்று பரிந்து பேசினார்.

சப்-இன்ஸ்பெக்டர் சிறிதுநேரம் யோசனை செய்தார். பிறகு அந்தப் பையனைப் பார்த்து, “சரி. ஏ பையா, இனி ஒரு தடவை நீ இந்த மாதிரி செய்தாயோ, தண்டனை நிச்சயம் தான். இப்போது உன்னை விட்டு விடுகிறேன்” என்று கூறிவிட்டு, ‘என்ன மிஸ்டர் மதுரநாயகம், உங்களுக்குத் திருப்திதானே?” என்று கேட்டார்.

“மிகவும் நன்றி” என்று கூறிவிட்டு சப்-இன்ஸ்பெக்டரிடம் விடை பெற்றுக்கொண்டு வெளியே வந்தார் மதுர நாயகம். ரமணியும் அவர் பின்னால் வந்தான். வெளியே வந்ததும், “சார், நீங்கள் தெய்வம் போல் வந்தீர்கள். உங்களை மறக்கவே மாட்டேன்” என்று கண் கலங்கக் கூறினான் ரமணி.

“அது போகட்டும். இனி நீ இப்படியெல்லாம் செய்யாதே. நாளைக் காலையில் ஏழு மணிக்கு என் வீட்டுக்கு வா. விலாசம் இதோ இருக்கிறது” என்று கூறித் தம்முடைய தோல் பையிலிருந்த ‘விசிட்டிங் கார்ட்’ ஒன்றை எடுத்து அவனிடம் கொடுத்துவிட்டுப் புறப்பட்டார் மதுர நாயகம்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *