
பர்மா ரமணி
அழ. வள்ளியப்பா
10. ரகசியம்
இரவு வீடு சென்றதும், “நாலு மணி வரை காத்திருந்தேன். ஏன் மத்தியானம் சாப்பிட வரவில்லை?” என்று கேட்டாள் கமலாதேவி. நடந்ததை விவரமாகக் கூறினார் மதுரநாயகம்.
“என்ன, இது நிஜமா! ஒரு வேளை – நாம் போலீஸில் தகவல் கொடுத்தது ரமணிக்குத் தெரிந்து, அவனே அந்தத் தங்கவேலு என்கிறவரிடம் பேனாவைக் கொடுத்து இதுமாதிரி செய்யச் சொல்லி இருப்பானோ…” என்றாள், கமலாதேவி.
“கமலா, ஏன் இப்படி அர்த்தமில்லாமல் பேசுகிறாய்? நானே போஸ்டாபீஸில் தங்கவேலுவிடம் பேனாவைக் கொடுத்திருக்கும் போது, ரமணி எப்படி அதை எடுத்துக் கொண்டிருப்பான்?”
‘நீங்கள் இல்லாதபோது ரமணி இங்கே வந்ததால் தான் நான் சந்தேகப்பட்டேன். இங்கே வந்தவன் உங்களையும் பார்க்கவில்லை; என்னையும் பார்த்து ஒன்றும் சொல்ல வில்லை; உடனே திரும்பிவிட்டான். ஏன் திரும்பினான் என்று யோசித்துப் பார்த்தேன். பேனாவைக் காணோம் என்றதும், அவன் தான் எடுத்திருப்பான் என்று நினைத்தேன். இந்த மாதிரி சந்தர்ப்பத்தில் யாருக்கும் அப்படித்தானே நினைக்கத் தோன்றும்? கிணற்றிலே போட்ட சாமானைக் குளத்திலே தேடுவது போல் போஸ்டாபீஸில் இரவல் கொடுத்த பேனாவை அறையிலிருந்து தொலைந்து போய்விட்டதாகச் சொன்னீர்களே! அதுமட்டும் குற்றமில்லையா? சரி, இதுதான் இப்படியாகி விட்டது. அந்தப் பட்டுத் துணி விஷயம் என்னவாம்? எனக்கு என்னவோ அவன் நல்லவனாகத் தெரியவே இல்லை” என்று கூறினாள்.
“ஆமாம்! உனக்கு எப்பொழுதும் சந்தேகம்தான். உன்னைப் பார்த்துப் பார்த்து எனக்கும் சந்தேகப் பேய் பிடித்துவிட்டது. அதனால் வீண் அலைச்சலும், மனக் கஷ்டமும்தான் ஏற்பட்டுவிட்டன” என்றார் அவர்.
“ஆமாம்! இப்பொழுது அப்படித்தான் சொல்லுவீர்கள்! முதலில் நீங்களும் சேர்ந்துதானே திருட்டுப் பட்டம் அவனுக்குக் கட்டினீர்கள்? அப்பொழுதே உங்களுக்கு இந்த விவேகம் இருந்திருக்க வேண்டும்.” என்று கோபத்துடன் கூறிவிட்டு அந்த இடத்தைவிட்டுப் போய் விட்டாள் கமலாதேவி. அவளுக்கு அதற்கு மேல் பேச விருப்பமில்லை.
இரவு மணி பத்து இருக்கும். சாப்பிட்டு விட்டுப் படுத்த மதுரநாயகத்துக்குத் தூக்கமே வரவில்லை. ரமணியைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தார். “ரமணி எவ்வளவு நல்லவன்! அவன் என்னிடத்தில் எவ்வளவு அன்பாக, பிரியமாக இருந்தான்! எப்படிக் கண்ணியமாகப் பழகினான்! சொந்தத் தம்பி கூட அவ்வளவு மதிப்பும் மரியாதையும், பாசமும் வைத்திருக்க மாட்டானே! வீணாக அவனைத் திருடன் என்று கூறி முதலாளி விரட்டி விட்டாரே! இப்பொழுது அவன் எங்கே இருக்கிறானோ! வழக்கம் போல் இந்த மாதமும் சம்பளம் வாங்கியதும் என்னிடம் தந்து விட்டானே! இப்போது அவன் கையிலே தம்படி கூட இருக்காதே! என்ன பண்ணுவான்? எப்படிக் காலம் தள்ளுவான்?” என்று எண்ணி எண்ணி ஏங்கிக் கொண்டிருந்தார்.
அவர் படும் அவதியைக் கண்டு கமலாதேவி, “மணி பத்துக்கு மேலாகிறது. இன்னும் தூங்காமல் இருக்கிறீர்களே; சொந்த மகனைப் பிரிந்தவர்கள் கூட இப்படி வேதனைப் படமாட்டார்களே!” என்று அங்கலாய்த்தாள், ஆனால், அவள் வார்த்தைகள் மதுரநாயகத்தின் காதில் ஏறினால்தானே?
சிறிது நேரம் சென்றது. படுத்திருந்த அவர் திடீரென்று எழுந்து உட்கார்ந்தார். “ஐயோ! ரமணி மிகவும் ரோஷக் காரனாயிற்றே! இப்படி வீண் பழி சுமத்தியதை நினைத்து விபரீதமாக அவன் ஏதாவது செய்து கொண்டால்…?” என்று நினைத்துக் கலங்கினார். உடனே அவருடைய இரண்டு கைகளும் ஒன்று சேர்ந்தன. கூப்பிய கைகளுடன், “கடவுளே, ரமணி உயிரோடு இருக்க வேண்டும். விபரீதமாக எதுவும் நடந்துவிடக்கூடாது” என்று கண்களை மூடிப் பிரார்த்தித்தார்.
அதே சமயம், யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டது. “சார்! சார்!” என்ற குரலும் அதைத் தொடர்ந்து வந்தது.
உடனே மதுரநாயகம் படுக்கையை விட்டு எழுந்தார். வேகமாகச் சென்று வெளிக் கதவைத் திறந்தார். அங்கே ஒரு சிறுவன் நின்று கொண்டிருப்பது அவருக்குத் தெரிந்தது.
அவன் யார் என்பது இருட்டிலே சரியாகத் தெரியவில்லை..
உடனே, “யாரது? ரமணியா!” என்று ஆவலாகக் கேட்டார், மதுரநாயகம்.
உடனே. “இல்லை, சார்! நான் கோவிந்தன். நாடகக் கொட்டகையில் வெற்றிலை பாக்குக்கடை வைத்திருக் கிறாரே பரமசிவம், அவருடைய பிள்ளை” என்றான் அந்தச் சிறுவன்.
இந்தப் பதிலைக் கேட்டதும், மதுரநாயகத்துக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது. ஆனாலும், சமாளித்துக் கொண்டு, “அடடே, கோவிந்தனா! என்னப்பா விஷயம்? இந்த நேரத்தில் எங்கு வந்தாய்?” என்று கேட்டார்
“உங்களிடம்தான் சார் ரமணியைப் பற்றி ஒன்று சொல்ல வேண்டும்…”
“என்ன! ரமணியைப் பற்றியா? என்ன சொல்ல வேண்டும்? சீக்கிரம் சொல்லு, தம்பி!”
“ரகசியமான விஷயம், சார்! யாருக்கும் தெரியக் கூடாது!”
“அப்படியானால், உள்ளே வா. அறைக்குள்ளிருந்து பேசுவோம்” என்று கூறி, கோவிந்தனைத் தம்முடைய அறைக்குள்ளே அழைத்துச் சென்றார், மதுரநாயகம்.
உள்ளே சென்றதும், “அந்த ரகசியம் என்ன? உடனே சொல்; கேட்கலாம்” என்று மதுரநாயகம் மிகவும் ஆவலோடு கேட்டார்.
“சொல்கிறேன். ஆனால், நான் சொன்னதாக மட்டும் வெளியிலே சொல்லி விடாதீர்கள்” என்று பீடிகை போட்டுக்கொண்டு கோவிந்தன் சொல்ல ஆரம்பித்தான்:
“இன்று நாடகம் முடிந்த பிறகு ‘மேக்-அப் மேன்’ ஸ்ரீகண்டன் இருக்கிறாரே அவரும், திரை இழுக்கிற துரைசாமியும் எங்கள் கடைக்கு வந்தார்கள். ஸ்ரீகண்டன் ஒரு சீப்பு வாழைப் பழத்தை வாங்கித் துரைசாமியிடம் கொடுத்து, ‘துரைசாமி, இப்போது இதை வைத்துக் கொள். வேறொரு சந்தர்ப்பத்திலே நிறையத் தருகிறேன்’ என்றார். உடனே துரைசாமி ‘எனக்கு இது எதற்கு? ஐந்து ரூபாய் தருவதாகச் சொல்லி, ஒரு சீப்பு வாழைப் பழத்தோடே சரிக்கட்டப் பார்க்கிறாயே!’ என்று சிறிது கோபமாகக் கூறிவிட்டு ஸ்ரீகண்டனிடமே வாழைப் பழச் சீப்பைத் திருப்பிக் கொடுத்தார். ஸ்ரீகண்டன் விடவில்லை. ஏதேதோ சமாதானம் சொன்னார். அவர்கள் பேச்சு சுவராஸ்யத்தில் நான் இருந்ததைக் கூடக்கவனிக்கவில்லை. ஆனால். நான் மட்டும் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று அவர்களுக்குத் தெரியாதபடி கவனித்துக்கொண்டு தான் இருந்தேன். அவர்கள் பேசியதிலிருந்து நான் என்ன தெரிந்து கொண்டேன் என்பதைச் சொல்லி விட்டாலே, உங்களுக்கு எல்லாம் புரிந்துவிடும்!
மேக் அப் மேன் ஸ்ரீகண்டனுக்கு ஒரு மைத்துனன் இருக்கிறானாம். அவன் பத்தாவது வரை படித்திருக்கி றானாம். ரமணி வேலைக்கு வருவதற்கு முதல்நாள் ஸ்ரீகண்டன் முதலாளியைப் பார்த்து மைத்துனனுக்கு ஒரு வேலை வேண்டுமென்று சொன்னாராம். முதலாளி,
‘ஆபீஸ் பையன் ஞானமுத்து ஒரு வார லீவில் ஊருக்குப் போனவன் இரண்டு வாரமாகியும் இன்னும் வரவில்லை. இன்னும் இரண்டு நாட்கள் பொறுத்துப் பார்க்கிறேன். அவன் வராமல் போனால், உன் மைத்துனனுக்கு அந்த வேலையைக் கொடுத்து விடலாம்’ என்று சொன்னாராம். அவர் அப்படிச் சொன்ன மறுநாளே நீங்கள் ரமணியைக் கொண்டு வந்து வேலையில் சேர்த்து விட்டீர்களாம். இது ஸ்ரீகண்டனுக்கு மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்து விட்ட தாம். இப்போது, பத்துப் பதினைந்து நாட்களுக்கு முன்பு, திரும்பவும் மைத்துனனுக்கு வேலை வேண்டுமென்று ஸ்ரீகண்டன் கேட்டாராம். ‘இப்போது வேலை காலி இல்லை. காலி ஏற்பட்டால் கட்டாயம் வேலை தருகிறேன்’ என்று முதலாளி சொன்னாராம். ‘காலி ஏற்பட என்ன வழி?’ என்று ஸ்ரீகண்டன் யோசித்திருக்கிறார். ஒரு குருட்டு வழி தோன்றியிருக்கிறது. அதைத் துரைசாமியிடம் சொல்லி, ‘உனக்கு ஐந்து ரூபாய் தருகிறேன். வேலையை ரகசியமாக முடித்துவிடு’ என்று ஆசை காட்டியிருக்கிறார். துரைசாமி அவர் சொன்னபடி அறைக்குள்ளிருந்த பட்டுத் துணியைச் சாப்பாட்டு நேரம் பார்த்து ஜன்னல் வழியாக எடுத்திருக்கிறார்; அதை டிக்கெட் அறைக்குள் ஒளித்து வைத்துவிட்டு, நீங்கள் தபாலாபீஸ் போன சமயம் பார்த்து, ‘ரமணிதான் எடுத்து ஒளித்து வைத்திருக்கிறான்!’ என்று கதை கட்டி விட்டிருக்கிறார். உடனே முதலாளி அவர் பேச்சை நம்பிவிடுவார்; ரமணியைப் பிடித்து வெளியே அனுப்பிவிடுவார் என்று நினைத்தே அப்படிச் செய்தார்கள். அவர்கள் நினைத்தபடிதான் நடந்தது. ஆனாலும், முக்கியமானது எதுவோ அது மட்டும் நடக்க வில்லை!” -இப்படிக் கூறிச் சிறிது நேரம் நிறுத்தினான் கோவிந்தன். இதுவரை மூச்சுவிடாமல் பேசினானே, கொஞ்சம் ஓய்வு வேண்டாமா அவனுக்கு?
உடனே மதுரநாயகம், “அடடே, விஷயம் இப்படியா! இதிலும் ரமணிக்கு அநியாயம் செய்துவிட்டோமே!” என்று வருத்தத்துடன் கூறிவிட்டு, “ஆமாம், முக்கியமான ஒரு காரியம் மட்டும் நடக்கவில்லை என்றாயே, அது என்ன?” என்று கேட்டார்.
“அதையும் சொல்லாமல் விடுவேனா? ரமணியை- எந்த நேரத்தில் முதலாளி வெளியே பிடித்துத் தள்ளினாரோ, அதே நேரத்தில் ஸ்ரீகண்டனின் மைத்துனன் மாமரத்திலிருந்து கீழே விழுந்து வலது கை முறிந்துவிட்டதாம். அதனால் அவனுக்கு வேலை கொடுக்க முடியவில்லை!” என்றான் கோவிந்தன்.
“கோவிந்தா, நீ சிறு பையனாக இருந்தாலும், பலே கெட்டிக்காரனாக இருக்கிறாயே! நீ இதை உடனே வந்து சொன்னது மிகவும் நல்லதாகப் போய்விட்டது” என்றார் மதுரநாயகம்.
“சொல்லாமல் படுத்திருந்தால் எனக்குத் தூக்கமே வந்திருக்காது சார்! ரமணி தங்கமானவன் சார்! அவன் இல்லாதது என்னவோபோல் இருக்கிறது.”
“சரி கோவிந்தா, உனக்கு நேரமாகிறது. வீட்டுக்குப் போ.”
“இதோ போகிறேன் சார்! நான் சொன்னதாக மட்டும் ஸ்ரீகண்டனுக்கும் துரைசாமிக்கும் தெரிய வேண்டாம்!” என்று கூறிவிட்டுக் கிளம்பிச் சென்றான் கோவிந்தன்.
மறுநாள் பொழுது விடிந்தது. மதுரநாயகம் விரைந்து எழுந்தார். முகத்தைக் கழுவிக்கொண்டு நேராக முதலாளி மோகனரங்கத்தின் வீட்டுக்குச் சென்றார். அவரைப் பார்த்துக் கோவிந்தன் சொன்னதை அப்படியே சொன்னார். சொன்னவுடனே முதலாளியோசனையில் இறங்கிவிட்டார்.
“என்ன, யோசிக்கிறீர்களே! ரமணியைச் சேர்ப்பதற்கு முன்னால் ஸ்ரீகண்டன் தன் மைத்துனனைப் பற்றிச் சொன்னது உண்மைதானா?” என்று மதுரநாயகம் கேட்டார்.
“உண்மைதான்.”
“திரும்பவும் பத்துப் பதினைந்து தினங்களுக்கு முன்பு, மைத்துனன் வேலை விஷயமாக அவன் உங்களைக் கேட்டானா?” என்று வினவினார்.
“ஆமாம். அதுவும் உண்மைதான்.”
“அப்படியானால் கோவிந்தன் சொன்னது எல்லாமே உண்மையாகத்தான் இருக்கும்” என்றார்.
“மதுரநாயகம்! இப்போது நீங்கள் வீட்டுக்குப் போங்கள். சபாவுக்கு வந்ததும் இதை விசாரிக்கிறேன்” என்றார் முதலாளி.
“சரி சார்! ஆனால் பக்குவமாக விசாரிக்க வேண்டும். கோவிந்தன் பெயரை மட்டும் நீங்கள் வெளிப்படுத்தி விடக் கூடாது” என்று கூறிவிட்டு மதுரநாயகம் வீடு திரும்பினார்.
சபாவுக்கு வந்ததும், முதல் வேலையாக ஸ்ரீகண்டனை அழைத்து வரச் சொன்னார் முதலாளி. ஸ்ரீகண்டனுக்கு உள்ளூர நடுக்கம்! ஆனாலும், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் முதலாளியின் எதிரே வந்து நின்றான். முதலாளி சிரித்துக் கொண்டே கேட்டார்: ‘என்ன ஸ்ரீகண்டன், உன் வீட்டில் யாரோ ஒரு பையன் இருப்ப தாகச் சொன்னாயே…
“ஆமாம், சார்! அவன் என் மைத்துனன் தான்!”
“ஓஹோ! அந்தப்புரத்துச் சொந்தம்! அப்படித் தானே?”
“ஆமாம், சார்!”
“ரமணிக்குப் பதில் இப்போது ஒரு பையன் தேவை. உடனே போய் அவனை அழைத்து வருகிறாயா?”
“இன்றைக்கே அழைத்து வரவேண்டுமா? அல்லது….”
“ஏன், அவன் ஊரில் இல்லையா?”
“இருக்கிறான்; ஆனாலும், அவன் வலது கை முறிந்து போயிருக்கிறது. மாமரத்திலிருந்து கீழே விழுந்துவிட்டான். குணமாகக் குறைந்தது இரண்டு மாதங்கள் ஆகுமாம்!”
“அடடே! எப்போது அவன் கை முறிந்தது?”
“போன செவ்வாய்க்கிழமை சார்!”
“பாவம், அவனுக்கு வேலை கொடுக்கலாமென்று நினைத்தேன். இப்படி ஆகிவிட்டதே.
“எல்லாம் என் துர் அதிர்ஷ்டம் சார்! இப்போது அவன் கை முறியாதிருந்தால், அவனுக்கு வேலை கிடைத்திருக்கும்!”
“ஆமாம். அவனுக்கும் வேலை கிடைத்திருக்கும். துரைசாமிக்கும் சுளையாக ஐந்து ரூபாய் கிடைத்திருக்கும். ஒரு சீப்பு வாழைப் பழத்தோடு போயிருக்காது!”
“இதைக் கேட்டதும், ஸ்ரீகண்டனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. என்ன சார் இது! ஏதோ ஐந்து ரூபாய் என்கிறீர்கள்; வாழைப்பழம் என்கிறீர்கள். எனக்கு ஒன்றும் புரியவே இல்லையே!”
“புரியவே இல்லையா! டேய், யாரிடம் கதை அளக்கிறாய்? எல்லாம் எனக்குத் தெரியும். ரமணியைத் துரத்தி விட்டு, அவனுக்குப் பதில் உன் மைத்துனனைச் சேர்த்து விட நீயும் துரைசாமியும் சேர்ந்து செய்த சூழ்ச்சி எனக்கா தெரியாது? ஸ்ரீகண்டா, உண்மையை ஒளிக்காதே நடந்தது முழுவதையும் அப்படி அப்படியே துரைசாமி கூறி விட்டான்!’’
“என்ன! துரைசாமி கூறிவிட்டானா! அட பாவிப் பயலே, சொன்னபடி ஐந்து ரூபாய் தரவில்லையே என்ற ஆத்திரமா உனக்கு?” என்று அலறினான் ஸ்ரீகண்டன்.
துரைசாமி உண்மையைச் சொல்லிவிட்டதாக முதலாளி சொன்னாரே, அது உண்மையல்ல! அப்படிச் சொன்னால் தான் ஸ்ரீகண்டன் வழிக்கு வருவான் என்று நினைத்தே அவ்விதம் சொன்னார். அவர் நினைத்தபடியே நடந்தது. ஸ்ரீகண்டன் சொல்லி முடித்ததும் துரைசாமியை அழைத்து வரச் சொன்னார் முதலாளி. அவன் வந்ததும், “என்ன துரைசாமி, நீயும் ஸ்ரீகண்டனும் போட்ட திட்டம் எப்படி இருக்கிறது?” என்று கேட்டார்.
“என்ன முதலாளி சொல்லுகிறீர்கள்?” என்று ஒன்றுமே தெரியாதவன் போல் கேட்டான் துரைசாமி.
“ஏன், நான் சொன்னது புரியவில்லையா? ஜெர்மன் பாஷையிலோ, லத்தீன் பாஷையிலோ நான் சொல்ல வில்லையே! தமிழில் தானே சொன்னேன்?…. ஓஹோ! சும்மா கேட்டால் நீ சொல்வாயா? ஒரு சீப்பு வாழைப் பழம் வாங்கிக் கொடுத்தால் கூடச் சொல்ல மாட்டாயே! ஐந்து ரூபாய் தந்தால், உடனே சொல்லிவிடுவாய், இல்லையா?” என்று கோபத்துடன் கேட்டார் முதலாளி.
துரைசாமி விழித்தான்.
“பட்டுத் துணியை எடுத்து ஒளித்து வைக்க ஐந்து ரூபாய் லஞ்சம்! அப்படித்தானேடா அயோக்கியப் பயலே! நீயும் இந்த ஸ்ரீகண்டனும் சேர்ந்து ரமணிக்குத் திருட்டுப் பட்டம் வாங்கிக் கொடுத்துவிட்டீர்களே! நீங்கள் உருப்படுவீர்களா? ஐயோ! ரமணியின் மனம் என்ன பாடுபடும்? உங்கள் சூழ்ச்சியை அறியாமல் நான் அவன் கழுத்தைப் பிடித்துத் தள்ளி விட்டேனே!” என்று கண் கலங்கக் கூறினார் முதலாளி. அருகிலே நின்று. நடந்ததைக் கவனித்துக் கொண்டிருந்த மதுரநாயகத்தின் கண்களிலிருந்து நீர் சொட்டுச் சொட்டாக வழிந்தது. ‘இப்போதாவது ரமணி திருடனல்ல என்பதை முதலாளி உணர்ந்தாரே’ என்று நினைத்து அவர் ஆறுதல் அடைந்தார்.
“மதுரநாயகம், உடனே இவர்கள் இருவருக்கும் சம்பளத்தைக் கணக்குப் பார்த்துக் கொடுத்து வீட்டுக்கு அனுப்புங்கள். இனி ஒரு நிமிஷங்கூட இவர்கள் இங்கே இருக்கக்கூடாது. இருந்தால், நம் சபாவுக்கே அவமானம்” என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார் முதலாளி. அன்றே ஸ்ரீகண்டனும், துரைசாமியும் வீட்டுக்கு அனுப்பப் பட்டார்கள்.



