
பர்மா ரமணி
அழ. வள்ளியப்பா
12. துப்பறியும் சிங்கம்!
மதுரநாயகத்தின் அத்தான் வேதநாயகம் திருச்சியிலே ஒரு பெரிய மருந்துக் கடை வைத்திருக்கிறார். காவேரிக் கரையிலே அவருக்குக் கொஞ்சம் நிலபுலன்களும் இருக் கின்றன. அவரும், அவர் மனைவி கல்யாணி அம்மாளும், மகன் ஆனந்தனும் வசதியாக வாழ்ந்து வருகிறார்கள்.
அன்று வேதநாயகம் வீட்டுக்கு வந்ததும், “இதோ, உங்களுக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறது. கனமாக இருக்கிறதே!” என்று கூறி அவர் மனைவி கொடுத்தாள்
“கடிதமா? வீட்டு விலாசத்துக்கு யார் எழுதுகிறார்கள்?” என்று கேட்டுக் கொண்டே அவர் கடிதத்தைக் கையிலே வாங்கினார். அவருக்கு வரும் எல்லாக் கடிதங்களுமே மருந்துக்கடை விலாசத்துக்குத்தான் வரும். வீட்டு விலாசத்துக்கு மிகவும் அபூர்வமாகவே யாரும் எழுதுவார்கள். மருந்துக் கடையில் வேதநாயகம் மும்முரமாக வியாபாரம் செய்து கொண்டிருப்பார். தினசரி கடிதங்களும் ஏராளமாக வரும். அதனால் கடிதம் முழுவதையும் பொறுமையாகப் படிப்பாரோ, படிக்கமாட்டாரோ என்ற சந்தேகத்தில் தான் வீட்டு விலாசத்துக்கே மதுரநாயகம் எழுதினார். அத்துடன் வீட்டு விலாசத்துக்குக் கடிதம் எழுதினால் அக்காளுக்கும் ஒருவாறு விஷயம் தெரியும்; அவளுடைய தூண்டுதலும் இருக்குமல்லவா?
வேதநாயகம் உறைக்குள் இருந்த எட்டுப் பக்கங் களையும் மிகவும் பொறுமையுடன் படித்தார். படித்து முடித்ததும், “இந்த மதுரநாயகத்துக்கு வேறு வேலை இல்லை” என்று அலட்சியமாகக் கூறிக்கொண்டே கடிதத்தைத் தொப்பென்று கீழே போட்டார்.
“அப்போது அங்கிருந்த கல்யாணி அம்மாள், என்ன சொல்லுகிறீர்கள்? என் தம்பி அந்தக் கடிதத்தில் என்னதான் எழுதியிருக்கிறான்?” என்று கேட்டாள்.
எவனோ ஓர் அனாதைப் பையனாம். அவன் நாடக சபாவிலே வேலை செய்து கொண்டிருந்தானாம். அவனைத் திருடன் என்று நினைத்து வேலையிலிருந்து விலக்கி விட்டார்களாம். ஆனால், அவன் திருடன் இல்லை என்பது இப்போது நிச்சயமாகிவிட்டதாம். அவன் மிகவும் நல்லவனாம். அவன் இப்போது இந்த ஊரில் தான் இருக்கிறானாம். இங்கிருந்து உன் தம்பிக்குக் கடிதம் போட்டிருக்கிறானாம். ஆனால், கடிதத்திலே விலாசம் இல்லையாம்! எங்கேனும் வேலையில் சேர்ந்திருப்பதாகவும் தெரியவில்லையாம். கடைத் தெரு, மலைக்கோட்டை, ரயில்வே ஜங்ஷன், ஸ்ரீரங்கம், திருவானைக்கா, சந்து பொந்து எல்லா இடங்களிலும் தேடிப்பார்த்து, அவனை நான் கண்டு பிடிக்க வேண்டுமாம்.
“இந்த வேலைக்கு ஆகும் செலவைத் தருவதாக நாடகசபா முதலாளியே சொல்லியிருக்கிறாராம். உன் தம்பிக்கும், அவன் முதலாளிக்கும் தான் வேறு வேலை இல்லை. எனக்குமா வேலை இல்லை? அந்த அனாதையைத் தேடிக் கண்டுபிடிக்க நான் தான் அவனுக்கு அகப்பட் டேனாக்கும்!” என்று அலுப்புடன் கூறினார் வேதநாயகம்.
“ஏன் உங்களுக்கு இவ்வளவு கோபம்? இந்த ஊரில் தானே நாம் இருக்கிறோம் என்று நினைத்து அவன் உங்களுக்கு எழுதியிருக்கிறான்” என்றாள் கல்யாணி அம்மாள்.
“இந்த ஊரில் இருக்கிறதனாலே, அவன் சொல்லு கிறபடியெல்லாம் கேட்கவேண்டுமா? நாளைக்கு, ‘என் சிநேகிதன் வீட்டு எருமைக் கன்றுக்குட்டி காணாமல் போய்விட்டது. உடனே தேடிக் கண்டுபிடியுங்கள்’ என்று எழுதுவான். உடனே நான் கயிறும் தடியுமாகப் புறப்பட்டு இந்த ஊரையெல்லாம் சுற்றிப் பார்க்க வேண்டும். அப்படித்தானே?”
“ஏன் இப்படித் தவறாக எடுத்துக்கொள்ளுகிறீர்கள்? மதுரநாயகத்துக்கு இளகிய மனசு. ஒரு நல்ல பையனுக்கு உதவி செய்த புண்ணியமாவது நமக்குக் கிடைக்குமே!” என்றாள் கல்யாணி அம்மாள்.
அப்போது அங்கே நடந்தையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ஆனந்தன், “அப்பா, நீங்கள் ஒன்றும் சிரமப்பட வேண்டாம். அந்தக் கடிதத்தை என்னிடம் கொடுங்கள். இன்னும் ஒரு வாரத்திலே அந்தப் பையன் எங்கிருந்தாலும் கண்டுபிடித்து விடுகிறேன். இது என் பொறுப்பு… அப்பா! மாமா மிக மிக நல்லவர். அவர் நல்ல சமயத்திலே வந்திருக்காத போனால், இந்நேரம் நான் இங்கேயா இருப்பேன்? பட்டணத்து ஜெயிலிலே பத்திரமாகவல்லவா இருப்பேன்! அவர் செய்த உதவிக்கு நான் இதுகூடச் செய்யாமல் இருக்கலாமா?” என்று கூறி அந்தக் கடிதத்தை எடுத்து ஒரு தடவைக்கு இரண்டு தடவையாகப் படித்துப் பார்த்தான். பிறகு சட்டைப்பையில் இருந்த ஒரு சிறு நோட்டுப் புத்தகத்தை எடுத்து அதில் சில அடையா ளங்களைக் குறித்துக் கொண்டான். பிறகு, “அம்மா, கவலை வேண்டாம். அந்த ரமணி எங்கேயிருந்தாலும் நான் விடப்போவதில்லை. அவனைத் தேடிக் கண்டுபிடித்து விடுவேன்” என்று தன்னுடைய மார்பிலே அடித்துக் கூறினான்.
“அடேயப்பா! இவர் பெரிய துப்பறியும் சிங்கம்…! படிப்பைத் தவிர வேறு எது சொன்னாலும், தயார்! இப்படிப்பட்ட பிள்ளையாண்டன் இருக்கும் போது நமக்கு என்ன கவலை!” என்று கேலியாகக் கூறினார் வேதநாயகம்.
ஆனந்தன், அவனுடைய அப்பா அம்மாவுக்கு ஒரே பிள்ளை. ஆகையால், அவனை எப்படியாவது நன்றாகப் படிக்கவைத்து ஒரு டாக்டராக்கி விடவேண்டும் என்று அவன் அப்பா ஆசைப்பட்டார். ஆனால், ஆனந்தனுக்கு அந்த ஆசையெல்லாம் இல்லை. வேளா வேளைக்கு வீட்டிலே சாப்பிட வேண்டியது; ஒரு சினிமா தவறாமல் பார்க்க வேண்டியது; நண்பர்களுடன் ஊர் சுற்ற வேண்டியது; ஓய்ந்த நேரத்தில் பள்ளிக்கூடத்துக்கும் போய்வர வேண்டியது! இப்படிப்பட்ட அழகான பிள்ளைக்கு எப்படிப் படிப்பு வரும்?
ஆனந்தனைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டவுடனே அவனுக்கு வீட்டுப் பாடம் சொல்லிக்கொடுக்க ஒரு வாத்தியாரை அவன் அப்பா ஏற்பாடு செய்து விட்டார்!
ஆனால், அந்த வாத்தியார் எப்படிச் சொல்லிக் கொடுத்தாலும் அவன் மூளையில் ஏறுவதே இல்லை! அவனுக்குப் படிப்பில் கவனம் இருந்தால்தானே! அலமாரியில் இருக்கும் பட்சணத்தையும் பழத்தையும் நினைத்துக் கொண்டேயிருப்பான்.
சிறு பையனாக இருந்தபோது அவன் பாடம் படித்த அழகே ஒரு தனி அழகுதான். “ஆனந்தா, கிழமைகள் எத்தனை? வரிசையாகச் சொல்!” என்பார் வீட்டு வாத்தியார்.
ஆனந்தன் வாயைத் திறக்க மாட்டான். ஆனால், கண்களை மட்டும் அகலத் திறந்து விழித்துப் பார்ப்பான்! “என்ன ஆனந்தா, இது தெரியாதா! ஞாயிறு, திங்கள்…” என்று அடி எடுத்துக் கொடுப்பார் வாத்தியார். அப்போது தான் ஆனந்தனுக்குக் கிழமைகள் என்றால் என்ன என்பது புரியும். உடனே, “ஐ! அதுவாசார். இதோ சொல்லுகிறேன்” என்று கூறிவிட்டு, “ஞாயிறு, திங்கள், செவ்வாய் “என்பான். உடனே செவ்வாயிலிருந்து ஒரே தாவாக வெள்ளிக்குத் தாவி விடுவான்! “வெள்ளி, சனி” என்று கூறி அத்துடன் நிறுத்தமாட்டான். ‘ஆக ஒரு வாரத்துக்குக் கிழமைகள் ஏழு” என்று அழுத்தந் திருத்தமாகக் கூறியே முடிப்பான். அவன் சொன்ன கிழமைகளோ ஐந்துதான்!
ஆனந்தன் இரண்டாவது வகுப்பில் படிக்கும் போது, “எட்டும் நான்கும் எத்தனை?” என்று கேட்டால், “ஒன்பது, பத்து…” என்று ஆரம்பித்து இருபது வரை கூடப் போய்விடுவான். சில சமயம் முப்பதையும் தாண்டி விடுவான்.
வீட்டு வாத்தியார் எப்படி எப்படியெல்லாமோ கூட்டல் கணக்கைச் சொல்லிக்கொடுத்துப் பார்த்தார். ஆனந்தன் மூளையில் ஏறினால் தானே! ஆனாலும் பையன் மண்டு என்பதை அவன் அப்பா ஒப்புக்கொள்வாரா? வாத்தி யாருக்குச் சொல்லிக்கொடுக்கத் தெரியவில்லை என்று தானே சொல்லுவார்? ஆகையால், அந்த வாத்தியார் ஒரு தந்திரம் செய்தார்.
ஆனந்தனுடைய அப்பா அல்லது அம்மா அருகிலே இருக்கும்போது, “ஆனந்தா, எட்டும் நான்கும் எத்தனை?” என்று உரத்த குரலில் கேட்பார் வாத்தியார்.
உடனே ஆனந்தன், “எட்டுக்கு அப்புறம்… ஒன்பது….” என்று இழுப்பான்.
“ம்…” என்பார் வாத்தியார்.
“பத்து…”
“ம்…”
“பதினொன்று…”
“ம்…”
“பன்னிரண்டு…”
“ம், ம், ம்!”
சேர்ந்தாற்போல் வாத்தியார் மூன்று தடவை ம் போட்டதும், ஆனந்தன் நிறுத்திவிடுவான்! மேலே போக மாட்டான். உடனே, “அடடே, நம் பிள்ளை சரியாகச் சொல்லுகிறானே!’ என்று நினைத்து, அவன் அப்பா அம்மா ஆனந்தப்படுவார்கள். ஆனால், வாத்தியார் ‘பன்னி ரண்டு’ என்றதும், ‘ம், ம், ம்’ என்று சொல்லாமல், ‘ம்’ என்று ஒரு தடவை மட்டும் சொல்லியிருந்தால் ஆபத்துத் தான்! அவன் நிறுத்தியிருக்கவே மாட்டான். 13, 14, 15 என்று சொல்லிக் கொண்டே போயிருப்பான். எங்கு போய் நிறுத்துவானோ தெரியாது!
இவ்வாறு மண்டுவாக இருந்தும், அவன் ஐந்து வகுப்புவரை ஒரு வகுப்பில் கூடத் தோல்வியடைந்ததில்லை. இதற்குக் காரணம் வேறொன்றுமில்லை. அவன் படித்துவந்த ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியரே அவனுக்கு ஐந்து வருஷமும் வீட்டுப் பாடம் சொல்லிக் கொடுத்து வந்தார். அப்படியிருக்கும் போது, பையன் தோல்வி அடையலாமா? தோல்வியடைந்தால் தலைமை ஆசிரியருக்கு அல்லவா கேவலம்?
ஆனால், ஆறாவதுக்குச் சென்றதும், ஆனந்தனின் சாயம் வெளுத்து விட்டது! அஸ்திவாரம் பலமில்லாத போனால் கட்டடம் நிலைத்து நிற்குமா? வகுப்பிலே கடைசி அவன் தான்! ஆறாவதில் இரண்டு வருஷங்கள் இருந்தான். அதற்கு மேலும் பல வருஷங்கள் அவன் அதே வகுப்பில் இருந்திருப்பான். ஆனாலும், அந்தப் பள்ளியிலே ஒரு வழக்கம் உண்டு. இரண்டு வருஷங்களுக்கு மேல் ஒரு பையனை ஒரு வகுப்பில் நிறுத்துவதில்லை என்பதுதான் அந்த வழக்கம். அதனால் தான், மூன்றாவது வருஷமும் ஆனந்தன் அதே வகுப்பில் இருக்கவில்லை. ஏழாவதுக்குத் தூக்கிப் போடப்பட் டான். ஏழாவதில் ஆண்டுப் பரீட்சை நடந்தது. முடிவு வெளிவந்தது. ஆறாவதிலிருந்து ஏழாவதுக்குப் புதிதாக வருகிறவர்களை வரவேற்க வேண்டுமே, அதற்காக ஆனந்தனை ஏழாவது வகுப்பிலேயே நிறுத்தி வைத்து விட்டார், அந்த உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்! ஆனாலும், தான் தேறிவிட்டதாகப் பொய் சொல்லி, அப்பாவிடம் கடிகாரப் பரிசு வாங்கிவிட்டான் ஆனந்தன். அன்று விருந்துக்கு அப்பா ஏற்பாடு செய்வதாகக் கூறியதைக் கேட்டதும், பயந்து சென்னைக்கு ரயிலேறி விட்டான். சென்னையில் பேனாவை விற்கப் போய், போலீஸில் அகப்பட்டுக் கொண்டதும், மாமா மதுர நாயகம் அவனை விடுவித்ததும் தெரிந்த கதை.
மதுரநாயகத்தின் கடிதத்தைப் பார்த்ததிலிருந்து, ரமணியை எப்படியாவது தேடிக் கண்டுபிடித்து விட வேண்டும் என்று ஆனந்தன் ஆசைப்பட்டான். அன்றே மதுரநாயகத்துக்குப் பதில் கடிதமும் எழுதி விட்டான். “நீங்கள் கொஞ்சங்கூடக் கவலைப்பட வேண்டாம். எனக்குப் பள்ளிக்கூடம் திறக்க இன்னும் சரியாக ஒரு வாரம் இருக்கிறது. அதற்குள் ரமணி எங்கிருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து அவனை உங்களிடம் அனுப்பி வைப்பேன்” என்று உறுதியாக எழுதினான்.
அந்தக் கடிதத்தை உடனேயே தபால் பெட்டியில் சேர்த்துவிட்டு வீட்டுக்கு வந்தான். கையிலே ஓர் அரிவாளை எடுத்துக் கொண்டான். நேராகத் தோட்டத் திலுள்ள வேப்பமரத்தின் அருகே சென்றான். ‘விறு விறு’ என்று அதன் மேல் ஏறினான். வளையாமல் இருந்த ஒரு நீண்ட கிளையை அரிவாளால் வெட்டிச் சாய்த்தான். பிறகு, கீழே இறங்கிவந்து அதை எடுத்து நன்றாகச் செதுக்கினான். அது ஒரு தடி போல் ஆகிவிட்டது. உடனே, அவன் தன் அறைக்குள்ளே சென்றான். அங்கே இருந்த அரை அடி ‘ஸ்கேல்’ ஒன்றை எடுத்துக்கொண்டு வந்தான். ஸ்கேலால் ஒன்பது தடவை அளந்தான். 9 x 1/2 = 4 1/2 அடி ஆகி விட்டதல்லவா? நாலரை அடியோடு அந்தத் தடியை வெட்டினான் வெட்டி முடியும் சமயம் அவன் அம்மா அங்கே வந்து சேர்ந்தாள்.
“என்னடா செய்கிறாய், ஆனந்தா?” என்று கேட்டாள்.
“அளவுகோல் செய்கிறேன் அம்மா. அந்த ரமணி நாலரைஅடிஉயரம் இருப்பதாக மாமா எழுதியிருக்கிறாரே, ஞாபகம் இல்லையா? அவனைத் தேடிக் கண்டுபிடிக்க அளவுகோல் வேண்டாமா?’ என்று கேட்டான் ஆனந்தன்.
அம்மாவுக்கு இதைக் கேட்டதும் சிரிப்புத்தான் வந்தது. ஆனாலும், அவள் சிரிக்கவில்லை. ‘மாமா எழுதியது உண்மைதான். ஆனாலும், ‘நமது ஆனந்தனும், ரமணியும் ஒரே உயரம் தான் இருப்பார்கள்’ என்று கூட அந்தக் கடிதத்தில் இருந்ததே, அதை நீ படிக்கவில்லையா? அவன் உன் உயரம் தான் இருப்பான் என்றால். இந்த அளவுகோலெல்லாம் எதற்கு?” என்று கேட்டாள் அம்மா.
“அடடே, ஆமாம், அம்மா! அவனுடைய உயரம், நிறம், வயது எல்லாமே என்னைப் போலத்தானாம்! அதனாலேதான் பட்டணத்துப் போலீஸ்காரர்கள் அவனுக்குப் பதிலாக என்னைப் பிடித்து ஜெயிலுக்குள்ளே தள்ளிவிட்டார்கள்! சரி, அப்படியானால், இந்த அளவுகோல் வேண்டாம். எவன் மேலேயாவது சந்தேகம் வந்தால், உடனே நான் என்ன தெரியுமா செய்வேன்? அவன் பக்கத்திலே போய் நின்று பார்ப்பேன். என் உயரமும், அவன் உயரமும் சரியாக இருந்தால், அவன் ரமணிதானா என்று விசாரிப்பேன். ரமணியாகவே இருந்தால் உடனேயே மாமாவுக்குத் தந்தி அடித்து விடமாட்டேனா!” என்று குதூகலமாகக் கூறினான் ஆனந்தன்.
“என்னவோ நாம் கண்டுபிடித்தால் நமக்கும் நல்லது; மாமாவுக்கும் நல்லது” என்றாள் அம்மா.
“கண்டுபிடிக்காமல் விடுவேனா?” என்று வீறாப்புப்புடன் பேசினான் ஆனந்தன்.
சினிமாவில் துப்பறியும் சிங்கங்களையும், புலிகளையும் பார்த்துப் பார்த்து ஆனந்தனுக்கும், அவர்களைப்போல் துப்பறியும் ஒரு சிங்கமாகவோ அல்லது புலியாகவோ மாறவேண்டும் என்ற ஆசை வெகு நாட்களாகவே உண்டு. அதற்கு இப்போது ஒரு சந்தர்ப்பம் கிடைத் திருக்கிறதே, அவன் விடுவானா?



