
பர்மா ரமணி
அழ. வள்ளியப்பா
13. குண்டுமணி
அன்று சாயங்காலமே ஆனந்தன் ஒரு பைனாகுலர் வாங்கிவிட்டான். வெகு தூரத்தில் ரமணி போனால் கண்டுபிடிக்க வேண்டாமா? அதற்குத்தான் அந்த பைனாகுலர்! மறுநாள் காலையில் பலகாரம் சாப்பிட்டதும், புஷ்கோட், முழுக்கால் சட்டை, பூட்ஸ், தலையில் மடக்குத் தொப்பி முதலியவற்றை அணிந்து கொண்டான். கழுத்திலே பைனாகுலரைத் தொங்க விட்டுக் கொண்டான். சட்டைப் பையில் ரமணியின் அடையாளங்கள் அடங்கிய சிறிய நோட்டுப் புத்தகத்தை வைத்துக்கொண்டான். உடனே வீட்டை விட்டுக் கிளம்பி நேராக அவனுடைய அருமை நண்பன் குண்டுமணி வீட்டுக்குச் சென்றான்.
குண்டு + மணி இரண்டும் சேர்ந்துதான் குண்டு மணியாகிவிட்டது. ஆமாம், ‘மணி’ என்பது அவனுடைய இயற் பெயர். அதாவது, அப்பா, அம்மா வைத்த பெயர். ‘குண்டு’ என்பது பள்ளிக்கூடப் பிள்ளைகள் அன்போடு கொடுத்த காரணப் பெயர் நாலைந்து வருஷங்களுக்கு முன்பு புடலங்காய் போல் இருந்த மணிதான், இப்போது பறங்கிக்காய் போலப் பருத்துவிட்டான். இன்னும் பருத்துக் கொண்டேயிருக்கிறான். ஒவ்வொரு வாரமும் அவனுடைய சுற்றளவு அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது.
விளையாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி, சித்திரப் போட்டி- இப்படிப் பள்ளிக்கூடங்களில் என்ன என்னவோ போட்டிகள் வைக்கிறார்களே, சாப்பாட்டுப் போட்டி என்று ஒரு போட்டி வைக்கக் கூடாதோ? அப்படி ஒரு போட்டி வைப்பதாயிருந்தால், அதில் முதல் பரிசு யாருக்குத் தெரியுமா கிடைக்கும்? குண்டு மணிக்குத்தான்!
ஆனந்தன், குண்டுமணி வீட்டுக்குச் சென்றபோது அவன் நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான். ஆனந்தன், “குண்டுமணி! குண்டுமணி!” என்று பலமாகக் கூவிப் பார்த்தான். குண்டுமணி எழுந்திருக்கவில்லை. முதுகிலே பலமாகத் தட்டிப் பார்த்தான்; குத்திப் பார்த்தான். ஊஹூம்! பலனில்லை கடைசியில் ‘நறுக்’கென்று நன்றாக ஒரு கிள்ளுக் கிள்ளினான். உடனே குண்டுமணி, “சேச்சே. வரவர எறும்பு உபத்திரவம் அதிகமாய்விட்டது. விட்டேனா பார் இந்த எறும்பை!” என்று கூறிக்கொண்டே எழுந்தான்.
குண்டுமணி எழுந்ததும், “என்னடா குண்டு சிகாமணி, கும்பகர்ணன் சாகிறபோது அவன் தூக்கத்தையெல்லாம் உன்னிடத்திலேதான் ஒப்படைத்துவிட்டுச் செத்தானோ!” என்று கேட்டான் ஆனந்தன்.
“யாரது?” என்று கண்களைத் திறக்காமலே கேட்டான் குண்டுமணி.
“கொஞ்சம் கண்களைத் திறந்து பாரப்பா. நீ இருக்கிறது பூலோகம் தான் என்பதும், உன் எதிரே இருப்பது எறும்பல்ல; உன் ஆத்ம நண்பன் ஆனந்தன் தான் என்பதும் நன்றாகத் தெரிந்துவிடும்” என்றான் ஆனந்தன்.
உடனே குண்டுமணி கண்களைத் திறந்து நிமிர்ந்து பார்த்தான். பார்த்ததும் அவனுக்குச் சரியாகத் தெரியவில்லை. கண்களைக் கசக்கிவிட்டுக் கொண்டு திரும்பவும் பார்த்தான். உடனே அவன் முகம் மலர்ந்தது.
“அடடே, ஆனந்தனா! இது என்னடா சூட்டும், ஹேட்டும்! பெரிய துரைமாதிரி இருக்கிறாயே! எந்தக் கப்பலிலே வந்து இறங்கி இருக்கிறார் இந்தத் துரை? கத்திக் கப்பலிலா, சண்டைக் கப்பலிலா, நீர் மூழ்கிக் கப்பலிலா? அல்லது…”
“…அல்லது காகிதக் கப்பலிலா என்றுதானே கேட்கிறாய்? உனக்கு எல்லாமே வேடிக்கையாகத்தான் இருக்கும்.’
“ஆமாம், இதெல்லாம் என்னடா வேஷம்?”
“எல்லாம் விவரமாகச் சொல்லுகிறேன். முதலில் நீ இப்போதே என்னோடு கிளம்பி வர வேண்டும். மிகவும் அவசரமான ஒரு வேலை!” என்று கூறினான் ஆனந்தன்.
“அப்படியென்றால், இதோ பல்லைத் துலக்கிவிட்டு வந்துவிடுகிறேன். முதல் வேலையாகச் சாப்பிட வேண்டும்.” என்றான் குண்டுமணி.
சற்று நேரத்தில் இருவரும் கிளம்பினார்கள் நேராக அருகிலே இருந்த ஒரு பெரிய ஹோட்டலுக்குச் சென்றார்கள். அங்கே குண்டுமணி, வயிறு முட்ட பாதாம் அல்வா, மைசூர்பாகு, ஜாங்கிரி, லட்டு. இட்டலி, வடை, தோசை, போண்டா, பஜ்ஜி இன்னும் என்னென்னவோ சாப்பிட்டான்.
குண்டுமணி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே ஆனந்தன் ரமணியைப் பற்றிக் கூறிவிட்டு, அவனை எப்படியாவது தேடிக் கண்டுபிடிக்க வேண்டுமென்றான். சாப்பிட்டானதும், “குண்டுமணி, இனி நாம் கிளம்பலாமா? இப்போது எந்தப் பக்கம் போய்த் தேடினால், அகப்படுவான்?” என்று கேட்டான் ஆனந்தன்.
“தேடுவதா! யாரை! உங்கள் வீட்டில் வேலைக்கு இருந்தானே சுப்புக்குட்டி, அவனைத்தானே? மேலப் புலிவார் ரோட்டுப் பக்கம் போனால்….” என்று பதில் சொல்ல ஆரம்பித்தான் குண்டுமணி.
“அட ராமா! ஹோட்டலிலே எவ்வளவு விவரமாகச் சொன்னேன்! சாப்பாட்டிலே குறியாயிருந்து விட்டுச் சுப்புக்குட்டியா, அப்புக்குட்டியா என்று கேட்கிறாயே! சரி, போகட்டும். இப்போதாவது கவனமாகக் கேள். நாம் இருவரும் ரமணி என்ற பையனைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அவன் என்னுடைய உயரம்தான் இருப்பான். நிறமும் என் நிறம்தான். இந்த ஊருக்குப் புதிதாக வந்திருக்கிறான். எப்படியாவது அவனைத் தேடிக் கண்டுபிடித்துவிட்டால், பட்டணத்திலே இருக்கிற என் மாமா மிகமிக சந்தோஷப்படுவார். நமக்கும் நிறையப் பரிசுகள் கொடுப்பார்” என்றான் ஆனந்தன்.
“அடடே! அப்படியானால் எனக்கும் நிறையப் பரிசு கிடைக்கும். சரி, உடனே கிளம்பு. அவனைக் கண்டு பிடிக்கும் வரை நான் உண்ணமாட்டேன்; உறங்கமாட்டேன். இது சத்…”
“டேய்! டேய்! என்னடா உளறுகிறாய்? உன்னால் ஒரு வேளை பட்டினி கிடக்க முடியுமா? ஒருநாள் உன்னால் தூங்காமல் இருக்க முடியுமா?”
“ஓஹோ! அந்த சினிமாவில் கேட்ட வசனத்தை அப்படியே சொல்லிவிட்டேன் போலிருக்கிறது! சரி, இனிமேல் சினிமா வசனம் வேண்டாம். இதோ என் சொந்த வசனத்திலே கூறுகிறேன். ஆனந்தா, எப்படியும் திருச்சியில் நாம் அவனைத் தேடிக் கண்டுபிடித்துவிட வேண்டும்.” என்று ஆனந்தனிடம் உற்சாகமாகக் கூறினான் குண்டுமணி.
ஆனந்தனும், குண்டுமணியும் எப்போதுமே ஊர் சுற்றிகள் தான். அதனால், அவர்களுக்குத் திருச்சியும் சுற்றுப் புறங்களும் நன்றாகத் தெரியும். அது மட்டுமா? திருச்சியிலுள்ள பையன்களையும் அநேகமாகத் தெரிந்து வைத்திருந்தார்கள். இதனால் புதுப் பையனான ரமணி யைக் கண்டு பிடிப்பது வெகு சுலபம்தான் என்று அவர்கள் நினைத்தார்கள்.
திருச்சியில் அவர்கள் சுற்றாத இடமில்லை; தேடாத தெருவில்லை; நுழையாத கோயில் இல்லை. தெருவிலே போவோர் வருவோரை யெல்லாம் பைனாகுலர் வைத்துப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்! எதிரிலே அருகில் நிற்பவர்களைப் பார்ப்பதற்குக் கூட பைனாகுலரை உபயோகித்தார்கள்! மாற்றி மாற்றி இருவரும் இப்படிச் செய்வதைச் சிலர் வேடிக்கையாகப் பார்த்தார்கள். சிலர் ‘பையன்கள் இப்போதுதான் பைனாகுலர் வாங்கியிருக் கின்றார்கள் போலிருக்கிறது” என்று கேலி செய்தார்கள். இன்னும் சிலர், ‘சுத்தப் பைத்தியங்கள்’ என்று கிண்டல் செய்தார்கள்.
இரண்டு நாட்களாகக் கால் வலிக்கத் தேடியும் ரமணியைக் கண்டுபிடிக்க முடியவில்லை! இதற்குள் ஆனந்தன் சேர்த்து வைத்திருந்த பணத்தில் பாதியைக் காலி செய்து விட்டான் குண்டுமணி! அடிக்கடி பல காரமும், காப்பியும், ஷர்பத்தும், பழமும் வாங்கி வாங்கிச் சாப்பிட்டால்- அதுவும் குண்டுமணி சாப்பிட்டுக் கொண்டேயிருந்தால், பணம் காலியாகாமல் பெருகிக் கொண்டு இருக்குமா, என்ன?



