பர்மா ரமணி
அழ. வள்ளியப்பா

20. ரமணிக்கு ஆபத்து!

மறுநாள் காலையில் சிற்சபேசனின் குடும்பத்தாருடன் பர்மாவுக்குக் கப்பல் ஏறி விட்டான் ரமணி.

முதல் வகுப்பில் அவர்கள் பிரயாணம் செய்ததால் வேண்டிய வசதிகளெல்லாம் இருந்தன. டேபிள் டென்னிஸ், கேரம், செஸ், பில்லியார்ட்ஸ்- இப்படிப்பட்ட விளையாட்டுக்களுக்கும் கப்பலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மற்றவர்கள் விளையாடும் போதெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள் ரமணியும் மாலதியும். ரமணிக்குத் தெரிந்த விளையாட்டு கேரம் ஒன்றுதான். அதைத் தினமும் கொஞ்ச நேரம் மாலதியுடன் விளையாடுவான். மாலை நேரங்களில் கப்பலின் மேல் தளத்துக்கு மாலதியும் ரமணியும் போவார்கள். அங்கு நின்றுகொண்டு சுற்றி நாலுபுறமும் பார்ப்பார்கள். எங்கு பார்த்தாலும் ஒரே தண்ணீராக இருக்கும். தண்ணீரின் நீல நிறத்தையும், அதில் குதித்து விளையாடும் மீன்களையும் பார்ப்பதிலே அவர்களுக்கு ஒரு தனி ஆனந்தம். இப்படியே நான்கு நாட்கள் ஓடிவிட்டன. ஐந்தாவது நாள் காலை கப்பல் ரங்கூன் துறைமுகத்தை அடைந்தது. பர்மாவின் தலை நகரம் ரங்கூன். அங்கு தெரிந்தவர்கள் வீட்டிலே இரண்டு நாட்கள் தங்கியிருந்தார்கள். மூன்றாம் நாள் அங்கிருந்து ரயிலில் புறப்பட்டு மாந்தலே என்ற நகருக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.

ரயிலை விட்டு இறங்கியதும் சிற்சபேசன் எல்லோரையும் அழைத்துக் கொண்டு அங்குள்ள தமது பங்களாவுக்குச் சென்றார். அங்கு சென்றதும் சிற்சபேசன் ரமணியிடம், “ரமணி, இன்று முதல் நீ என்னை எப்படித் தெரியுமா அழைக்க வேண்டும்? ‘அப்பா’ என்றுதான் அழைக்க வேண்டும். காமாட்சிதான் இனி உன் அம்மா. மாலதி உன் தங்கை. யார் கேட்டாலும் அப்படியே சொல்லிவிடு. நாங்களும் அப்படித்தான் சொல்லுவோம். இனி உன்னை அனாதையென்று யாரிடமும் சொல்ல வேண்டாம்!” என்றார்.

அவர் சொன்னதைக் கேட்டதும், ரமணிக்கு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை. “அடடா! அனாதை யாகிய என்னிடம் இவர்கள் எவ்வளவு அன்பு வைத்திருக் கிறார்கள்! இவர்களுக்கு நம்மால் பதிலுக்கு என்ன செய்ய முடியும்? இவர்கள் மனம் நோகாமல் நடந்து கொள்ள வேண்டும். ‘நல்லவன்’ என்று பெயரெடுக்க வேண்டும்” என்று நினைத்துக் கொண்டான்.

மாந்தலே சென்ற சில நாட்களுக்குள், அந்த நகரைப் பற்றி ரமணி பல விஷயங்களைத் தெரிந்து கொண்டான். மாந்தலே மிகவும் பழமையான ஒரு நகரம். பர்மாவின் தலைநகராக அது ஒரு காலத்தில் இருந்தது. அந்தக் காலத்தில் கட்டப்பட்ட ஒரு பெரிய கோட்டையும் அங்கே இருக்கிறது. 1942-ஆம் ஆண்டு ஜப்பானியர் குண்டு போட்டதில் அங்கிருந்த பல வீடுகள் அழிந்து சாம்பலாகி விட்டன. இப்படிப்பட்ட விஷயங்களுடன் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் ரமணிக்குச் சிற்சபேசன் கூறியிருந்தார்.

ஒருநாள் அவர் அவனுடன் பேசிக்கொண்டிருந்த போது, “ரமணி! உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? நம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்த ஊரில் இரண்டு இரண்டரை வருஷத்துக்கு மேல் இருந்திருக்கிறார்” என்றார்.

“நமது நேதாஜியா? எந்தத் தெருவில் குடியிருந்தார்?” என்றான் ரமணி.

“இங்கே குடியிருக்கவில்லை. நம்மைப் போல் சிறையில் இருந்தார்!”

“சிறையிலா! என்ன காரணம்?”

“காரணமென்ன, இந்தியா சுதந்திரம் அடைவதற்குப் பாடுபட்டாரே, அதுதான் காரணம். ஆங்கிலேயர் அவரை இந்தியாவிலிருந்து இங்கு கொண்டுவந்து சிறையில் வைத்திருந்தார்கள்.”

“அடடே, அப்படியா!”

“ஆமாம். நேதாஜி மட்டும் தான் இங்கு இருந்தார் என்று நினைத்துவிடாதே! ‘சுதந்திரம் எமது பிறப்புரிமை’ என்று வீர முழக்கம் செய்தாரே திலகர், அவர்கூட இந்த ஊர் ஜெயிலில் ஆறு வருஷம் இருந்திருக்கிறார். இங்கே இருந்தபோதுதான் அவர் ‘கீதா ரகசியம்’ என்ற புத்தகத்தை எழுதினார்.’”

“திலகர்கூட இங்கேஇருந்திருக்கிறாரா!” என்று கேட்டான்.

“ஆமாம், அவர்களெல்லாரும் நம் தேச விடுதலைக்காகத் தவம் கிடந்த இடம்தான் மாந்தலே!”

சிற்சபேசன் கூறியதைக் கேட்டதும், ரமணி அத்தலைவர்களை நினைத்துக் கையெடுத்துக் கும்பிட்டான்.

ரமணி அந்த நகரைப் பற்றித் தெரிந்துகொண்டதோடு, அங்கு பேசப்படும் பர்மிய பாஷையையும் கற்றுக்கொள்ள ஆரம்பித்தான். அவனுக்கும், மாலதிக்கும் பர்மிய பாஷையைக் கற்றுக்கொடுக்க ஓர் ஆசிரியரை ஏற்படுத்தினார் சிற்சபேசன்.

ரமணி ஆறு மாதங்களில் பர்மிய பாஷையைக் கூடுமானவரை நன்றாகக் கற்றுக் கொண்டுவிட்டான்; அழகாகப் பேசுவான்; தடங்கல் இல்லாமல் படிப்பான். மாலை நேரங்களில் மாலதியையும், அக்கம்பக்கத்திலுள்ள குழந்தைகளையும் கூட்டி வைத்துக்கொண்டு, ரமணி பர்மிய பாஷையில் கதைகளெல்லாம் சொல்லுவான். நாடக சபாவிலே இருந்ததால், அங்கே பார்த்த நாடகங்களைக் கதைகளாகக் கூறுவான்.

நாள் ஆக ஆக, அந்த வட்டாரத்திலுள்ள இந்தியக் குழந்தைகள், பர்மியக் குழந்தைகள் எல்லோருமே ரமணி யின் கதையைக் கேட்கத் திரண்டு வந்துவிட்டார்கள். எத்தனை நாட்களுக்குத் தான் படித்த கதைகளையும் கேட்ட கதைகளையுமே சொல்லிக் கொண்டிருப்பது? நாளடைவில் அவனே கற்பனை செய்து பல நல்ல கதை களையெல்லாம் கூற ஆரம்பித்துவிட்டான். இதனால் ரமணியின் பெயர் அந்த வட்டாரத்திலே மிகவும் பிரபல மாகி விட்டது!

சிற்சபேசனும் காமாட்சி அம்மாளும், ‘இப்படிப்பட்ட ஒரு பையன் நமக்குக் கிடைத்ததே நம் அதிர்ஷ்டம்தான்’ என்று நினைத்து ஆனந்தமடைவார்கள்.

மாலதியோ, “ரமணி அண்ணாவின் கதையைக் கேட்க நம் வீடு தேடி எத்தனை பேர் வருகிறார்கள்!” என்று எண்ணிப் பெருமைப்படுவாள். ஆனால், ரமணி விரைவி லேயே இவர்களை விட்டுப் பிரியப் போகிறான் என்பது அவர்களுக்கு எப்படித் தெரியும்? அது ரமணிக்கே தெரி யாதே!

அன்று அக்டோபர் இரண்டாம் தேதி. உலகமெங்கும் காந்தி ஜயந்தி கொண்டாடும் முக்கியமான தினம். பர்மாவிலும் பல இடங்களில் விசேஷமாகக் கொண்டாட ஏற்பாடு செய்திருந்தார்கள். தங்கள் வீட்டில் குழந்தைகளுடன் சேர்ந்து குதூகலமாகக் கொண்டாட ரமணி விரும்பினான்.

அம்மாளிடம், “அம்மா, முதல் நாளே காமாட்சி நாளைக்குச் சாயங்காலம் நான் குழந்தைகளுக்கெல்லாம் காந்திஜியின் வாழ்க்கையில் நடந்த அநேக சம்பவங்களை எடுத்துச் சொல்லப் போகிறேன்” என்றான்.

அதற்குக் காமாட்சி அம்மாள், “ஆமாம். அப்படியே செய். நானும் கதை கேட்க வரும் குழந்தைகளுக்கு நல்ல நல்ல பட்சணங்களெல்லாம் செய்து கொடுக்கிறேன்” என்று சொல்லியிருந்தாள்.

காந்தி ஜயந்தியன்று மாலை குழந்தைகள் கூட்டம் கூட்டமாகக் கதை கேட்க வந்தார்கள். சில சிறு குழந்தைகள் தங்கள் பெற்றோர்களையும் துணைக்காக அழைத்து வந்திருந்தார்கள். மாலதியும் ரமணியும் முதலில் பட்சணங்களை வந்திருந்தவர்களுக்குக் கொடுத்தார்கள்.

பிறகு ரமணி, காந்தி கதையைக் கூற ஆரம்பித்தான். குழந்தைகள் அந்தக் கதைகளைக் கேட்டுப் பல நல்ல விஷயங்களைத் தெரிந்துகொண்டார்கள். பெரியவர்கள், “அடடா, எவ்வளவு அற்புதமாக இந்தப் பையன் கதை சொல்லுகிறான்!” என்று ஆச்சரியப்பட்டார்கள்.

காந்தி கதை முடிந்ததும், ‘கோமாளிக் குப்பன்’ என்ற கதையைக் கடைசியாக ரமணி சொன்னான். அது அவனாகவே கற்பனை செய்த கதை. மிகவும் வேடிக்கையாக இருக்கும். அதைக் கேட்டு எல்லோரும் வயிறு குலுங்கச் சிரித்தார்கள்.

கதை முடிந்ததும் ஒரு பெரியவர், சிற்சபேசனைப் பார்த்து, “சார், உங்கள் பையன் அற்புதமாகக் கதை சொல்லுகிறான். ‘கோமாளிக் குப்பன்’ கதை அபாரம்! அதை எழுதி ஏதாவது ஒரு பத்திரிகைக்கு அனுப்பினால், நிச்சயம் வெளியிடுவார்கள். பல்லாயிரக் கணக்கான குழந்தைகள் படித்து ஆனந்தமடைவார்கள்” என்று கூறி விட்டு, ரமணியிடம், “என்ன தம்பி, எழுதி அனுப்புகிறாயா?” என்று கேட்டார்.

“ஏதோ எழுதிப் பார்க்கிறேன்” என்று அடக்கமாகப் பதிலளித்தான் ரமணி.

அன்று இரவு சாப்பாட்டிற்குப் பிறகு ரமணியுடன் காமாட்சி அம்மாள் பேசிக்கொண்டிருந்தாள். அப்போது, “ரமணி, நீ சொல்லுகிற கதை ஒவ்வொன்றும் நன்றாக இருக்கிறதென்று எல்லோருமே சொல்லுகிறார்கள்” என்றாள் காமாட்சி அம்மாள். அதற்கு ரமணி, “என் கதையைக் காட்டிலும் நீங்கள் செய்து கொடுத்த பட்சணங்கள் தான் பிரமாதமாம்! எல்லோருமே அப்ப டித்தான் சொல்லுகிறார்கள்” என்றான்.

“இல்லை, இல்லை. பட்சணத்தைக்காட்டிலும் கதை தான் சுவையாயிருந்திருக்கும்” என்றாள் காமாட்சி அம்மாள். இருக்கவே இருக்காது. பட்சணம்தான் மிகவும் சுவையாயிருந்திருக்கும்” என்றான் ரமணி.

இப்படியே அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது, திடீரென்று காமாட்சி அம்மாளின் முகத்தில் ஏதோ மாறுதல் தெரிந்தது. அப்படியே ‘தொப்’பென்று தரையில் சாய்ந்து விட்டாள். முகம் வெளுத்துவிட்டது; கண்கள் மூடிக்கொண்டன. பற்கள் கிட்டித்து விட்டன! இதைப் பக்கத்திலிருந்த ரமணி பார்த்ததும் திடுக்கிட்டான்; “ஆ, அம்மா!” என்று கதறினான். சத்தத்தைக் கேட்டு மாடியிலிருந்த சிற்சபேசனும், மாலதியும் கீழே ஓடி வந்தார்கள்.

“ஐயோ! இது என்ன! அம்மா இப்படி விழுந்து விட்டார்களே!” என்று ரமணி கையைக் கசக்கினான். அவன் கண்களும் கலங்கின.

மாலதி, அம்மா பக்கத்திலே ஓடிவந்து பார்த்ததும், “அம்மா! அம்மா!” என்று கலக்கத்தோடு கூவினாள். உடனே சிற்சபேசன், “ரமணி, மாலதி, கொஞ்சம் தள்ளியிருங்கள். காற்று நன்றாக வரட்டும்” என்றார்.

உடனே ரமணி விலகி நின்று கொண்டு, “நான் ஓடிப்போய் டாக்டரை அழைத்துக்கொண்டு வரட்டுமா?” என்றான்.

“வேண்டாம். இரண்டொரு நிமிஷத்துக்கு இப்படித்தான் இருக்கும். அப்புறம், தானாக எழுந்துவிடுவாள். நீ ஃபேன் சுவிட்சைப் போட்டுவிட்டு, செம்பிலே தண்ணீர் கொண்டுவா” என்றார்.

உடனே ரமணி சுவிட்சைப் போட்டுவிட்டு, ஒரு நொடியில் செம்பு நிறையத் தண்ணீர் கொண்டு வந்தான். தண்ணீரைக் காமாட்சி அம்மாள் முகத்திலே தெளித்தார் சிற்சபேசன். ஒரு நிமிஷம் ஆகி, இரண்டு நிமிஷங்களும் ஆகிவிட்டன. அதற்கு மேலும் ஒரு நிமிஷம் ஆகிவிட்டது. ஆனாலும், காமாட்சியம்மாள் எழுந்திருக்கவில்லை. அது வரை கவலைப்படாமல் இருந்த சிற்சபேசன் முகத்திலும் கவலை ஏற்பட்டது. ரமணிக்குத் திகில் மிகவும் அதிகமாகி விட்டது.

காமாட்சி அம்மாளுக்கு முன்பு இரண்டு மூன்று தடவைகள் பலவீனத்தால் இப்படி மயக்கம் வந்த துண்டு. இது ரமணிக்குத் தெரியாது.

சற்று நேரத்தில் காமாட்சி அம்மாள் மெதுவாகக் கண்களைத் திறந்தாள். உடனே சிற்சபேசனின் முகம் மலர்ந்துவிட்டது, “அம்மா!” என்று மாலதி ஆசையாகக் கூப்பிட்டாள். சிறிது

சிறிது நேரத்தில் காமாட்சி அம்மாள் எழுந்து உட்கார்ந்தாள். மறுநிமிஷம், “ரமணி எங்கே?” என்று கேட்டாள்.

உடனே மாலதி, “ரமணி அண்ணா! ரமணி அண்ணா! அம்மா எழுந்துவிட்டாள்!” என்று ஆனந்தமாகக் கூறிக் கொண்டே சுற்று முற்றும் பார்த்தாள். ரமணி அங்கே இல்லை! வாசல் பக்கத்திலும் காணோம்! மாடியிலும் அவன் இல்லை!

ரமணியைக் காணாத மாலதி, “ஐயோ! ரமணி அண்ணாவைக் காணோமே!” என்றாள். உடனே சிற்சபேசனும், “ரமணி! ரமணி!’ என்று பலமாகக் கூவினார். ரமணி வரவில்லை.

“எங்கே போயிருப்பான்? சொல்லாமல் போக மாட்டானே! ஒருவேளை டாக்டர் ஆனந்தராவ் வீட்டுக் குப் போயிருப்பானோ!” என்று நினைத்து வேலைக் காரர்களை டாக்டர் வீட்டுக்கு அனுப்பினார். அங்கேயும் ரமணி இல்லை. அக்கம் பக்கத்து வீடுகளில் தேடிப் பார்க்கச் சொன்னார். அந்த வட்டாரம் முழுதும் அலசிப் பார்த்தும் ரமணியைக் காணோம்! எல்லோருக்கும் ஒரே திகிலாயிருந்தது!

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *