பர்மா ரமணி
அழ. வள்ளியப்பா

2. திருட்டுப் பட்டம்


தபால் ஆபீஸை விட்டு வெளியில் வந்த மதுரநாயகம், “டேய் கண்ணப்பா, என்னடா விஷயம்?” என்று திரும்பவும் கேட்டார்.

“நான் சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள், சார். நேரிலே வந்தால் எல்லாம் தானாகத் தெரிந்துவிடும்” என்று கூறிக்கொண்டே முன்னால் வெகு வேகமாக ஓடினான் கண்ணப்பன். மதுரநாயகமும் அவனைப் போல் தெருவிலே ஓட முடியுமா? ஆனாலும், அவசர அவசரமாக மதுரநாயகம் நடந்து சென்றார்.

நாடக சபைக் காரியாலயத்துக்குள் நுழைந்ததும், அங்கு வேலை பார்க்கும் ஆட்கள் எல் லோரும் ரமணியைச் சுற்றிக் கும்பலாக நிற்பதைப் பார்த்தார். ரமணி தலையைக் குனிந்து கொண்டு நின்றான்.

மதுரநாயகத்தைக் கண்டதும், “இதோ மானேஜர் வந்து விட்டார்!” என்று கூறிக்கொண்டே கூட்டத்தி லிருந்த ஒருவன் ஒதுங்கி நின்றான். உடனே மற்றவர்களும் ஒதுங்கி நின்றார்கள்.

‘மானேஜர் வந்துவிட்டார்’ என்பதைக் கேட்டதும், ரமணியின் அழுகை அதிகமாகிவிட்டது. தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தான்.

உடனே மதுரநாயகம் அவன் அருகே சென்று, “ரமணி, ஏன் அழுகிறாய்? என்ன விஷயம்?” என்று கலக்கத்துடன் கேட்டார். அவன் பதில் பேசவில்லை. அவனால் பேச முடியவில்லை! மேலும் மேலும் அழுதான்.

“சொன்னால் தானே தெரியும்! சும்மா அழுது கொண்டே நின்றால்…?” என்றார் மதுரநாயகம்.

உடனே, ஓர் ஓரமாக நின்று கொண்டிருந்த நாடக சபா முதலாளி மோகனரங்கம், மதுரநாயகத்தின் அருகே வந்தார். “மதுரநாயகம், நான் சொல்லுகிறேனே என்று வருத்தப்படக் கூடாது. இந்த மாதிரி ஊர் பேர் தெரியாத அனாதைகளை யெல்லாம் இங்கு வேலைக்கு வைத்ததே தப்பு அன்றைக்கே சொன்னேன். நீங்கள் கட்டாயப்படுத் தீனீர்கள். சேச்சே, மோசம், மோசம். நமது சபாவில் இதற்கு முன் ஒரு துரும்பு கூடக் களவு போனதில்லை…” என்று அவர் ஆரம்பித்தார்.

உடனே மதுரநாயகம், “என்ன! களவு போய்விட்டதா? என்ன களவு போய்விட்டது? விஷயத்தைக் கொஞ்சம் விளக்கமாகத்தான் சொல்லுங்களேன்” என்றார் பதட்டத்துடன்.

“எல்லாம் உங்கள் ரமணியைக் கேட்டாலே தெரியும். டேய், இந்தத் திருட்டு அழுகையெல்லாம் இங்கே வேண்டாம். உன் திருவாயைத் திறந்து நீ செய்த திருவிளை யாடலை எடுத்துச் சொல்லுடா! அவரும் தெரிந்து கொள்ளட்டும். அயோக்கியப் பயலே! இது மட்டும் தானோ, இன்னும் என்னென்ன திருட்டெல்லாம் செய் திருக்கிறாயோ!” என்றார் நாடக சபா முதலாளி.

இதைக்கேட்ட பிறகும் ரமணியால் மௌனமாக இருக்க முடியவில்லை. “மானேஜர் சார்… சத்தியமாக… நான்… திருடவில்லை. வீணாகப் பழி…” அவனால் அதற்குமேல் பேச முடியவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது.

“ஆமாம்! சத்தியமாக இவர் திருடவில்லையாம். அடடா! போன ஜன்மத்தில் இவர்தான் அரிச்சந்திரனாக இருந்தார். அப்போது நிஜமே பேசியதால் ராஜ்யத்தை இழந்து, மனைவி மக்களையும் விற்கும்படியாகி விட்ட தல்லவா? அதனாலே, ‘இனிமேல் நிஜமே பேசுவதில்லை. பொய்யேதான் சொல்லுவது’ என்று முடிவு பண்ணிக் கொண்டு இந்த ஜன்மத்தில் இப்படி அயோக்கியப் பயலாக வந்து பிறந்திருக்கிறார்! அப்படித்தானேடா?” என்று குத்தலாகக் கூறினார் மோகனரங்கம்.

மதுரநாயகத்துக்குத் ‘திருட்டுப் போன சாமான் எது? எப்போது திருட்டுப் போயிற்று?’ என்பதைப் பற்றியெல் லாம் ஒன்றுமே தெரியவில்லை. யாராவது சொன்னால் தானே தெரியும்? அவர் முதலாளியைப் பார்த்து, “ஐயா, நடந்தது என்ன என்பதைக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லக்கூடாதா? எனக்கு ஒன்றுமே புரியவில்லையே” என்றார்.

“நடந்ததுதானே தெரிய வேண்டும்? சரி, இந்தத் திருட்டுப் பயல் சொல்லாத போனால் போகட்டும்” என்று கூறிவிட்டு, “ஏ, துரைசாமி! இங்கே வா!” என்று அங்கு நின்றுகொண்டிருந்த திரை இழுக்கும் துரை சாமியை அழைத்தார் மோகனரங்கம்.

துரைசாமி முன்னால் வந்தான். “நடந்ததை நடந்தபடி சொல்லு” என்றார் சபா முதலாளி.

“இதோ சொல்லுகிறேன்’ என்று தொண்டையைக் கனைத்துக்கொண்டு ஆரம்பித்தான் துரைசாமி. “நான் பகல் சாப்பிட்டுவிட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தேன். தியேட்டருக்குள் நுழையும்போது ஆண்களுக்கு ‘டிக்கெட்’ கொடுக்கும் அறை இருக்கிறதே, அதற்குள்ளே ரமணி மட்டும் தனியாக ஏதோ செய்து கொண்டிருப்பதைக் கவனித்தேன். உடனே, ஜன்னல் ஓரமாகப் போய் நின்றுகொண்டு அவன் உள்ளே என்ன செய்கிறான் என்று மெதுவாக உற்றுப் பார்த்தேன். அவன் என்ன செய்தான் தெரியுமா! அந்த அறையில் வடக்கு மூலைக்குச் சென்றான். மேல் கூரையில் ஏதோ ஒரு பொட்டணத்தைத் திணித்து வைத்தான். அது என்ன பொட்டணமாக இருக்கும் என்று நான் யோசித்துப் பார்த்தேன். புரிய வில்லை. ‘சரி, நாம் போய் எடுத்தால் சந்தேகத்துக்கு இடம் ஏற்படும்’ என்று எண்ணி நேராக ஆபீஸுக்கு வந்தேன். உங்களிடமாவது முதலாளியிடமாவது சொல்லிப் பார்க்கச் சொல்லலாமென்று நினைத்தேன். நீங்கள் அறையில் இல்லை. உடனே முதலாளி அறைக்குச் சன்றேன். அவரிடம் விஷயத்தைச் சொன்னேன். உடனே அவர் என்னையும் அழைத்துக் கொண்டு ‘டிக்கெட்’ அறைக்குச் சென்றார். ரமணி பதுக்கி வைத்த பொட்ட ணத்தை எடுக்கும்படி என்னிடம் சொன்னார். நான் அதை எடுத்து அவர் கையிலே கொடுத்தேன். அவர் அதைப் பிரித்தார். பிரித்ததும்…” – துரைசாமி முழுவதையும் கூறி முடிக்கவில்லை. அதற்குள், “போதும்! என் மேஜை மேலே அந்தப் பொட்டணம் இருக்கிறது. அதை உடனே எடுத்து வா. நேரே பார்த்தால் தானே அவருக்குத் தெரியும்!” என்றார் மோகனரங்கம். அதைக் கேட்டதும் மதுரநாயகம் திகைத்துப்போய் அப்படியே சிலை போல் நின்றுவிட்டார்.

துரைசாமி முதலாளி அறைக்குள் ஓடிப் போய் அங்கே மேஜைமேல் இருந்த பொட்டணத்தை எடுத்து வந்தான். “இதோ, இந்தப் பொட்டணம் தான்!” என்று கூறி மதுரநாயகத்திடம் அந்தப் பொட்டணத்தை நீட்டினான்.

மதுரநாயகம் அதைக் கையிலே வாங்கினார். அவசர அவசரமாகப் பிரித்துப் பார்த்தார். உள்ளே இருந்ததைக் கண்டதும், “ஆ! துருவனுக்கு இடுப்பிலே கட்டுவதற்காக வாங்கியதல்லவா இந்தப் பட்டுத் துணி! இதையா ரமணி எடுத்தான் என்கிறீர்கள்?” என்று திகைப்புடன் கேட்டார் மதுரநாயகம்.

“ஆமாம், ‘கெஜம் பன்னிரண்டு ரூபாய்; மூன்று கெஜம் முப்பத்தாறு ரூபாய்’ என்று சொல்லி இன்று காலையில் வாங்கி வந்தீர்களே! இதே துணியைத் தான் இவன் திருடி யிருக்கிறான். இன்னும் கொஞ்ச நாளிலே இங்குள்ள சாமான்கள் எல்லாவற்றையுமே விற்றுவிடுவான். கடைசி யில், இந்த நாடக சபாவையே விலை பேசிவிடுவான்!” என்றார் மோகனரங்கம்.

“ஐயா! இதை ரமணி எடுத்திருப்பானா என்பது சந்தேகமாகத்தான் இருக்கிறது…”

“என்ன! இன்னுமா சந்தேகம்? மதுரநாயகம்” உங்களுக்கு வெளுத்ததெல்லாம் பால்தான்! இந்த மாதிரிப் பயல்களுக்குத் தஞ்சம் கொடுப்பதே மகாப் பாவம்! இவன் நமது நாடகங்களிலே நடிப்பவர்களைப் பார்த்துப் பார்த்து இதுவரை நல்லவன்போல் நடித்திருக்கிறான். சுத்த மோசக்காரன்!” என்று கத்தினார்.

“நீங்கள்சொல்வதை என்னால் நம்பமுடியவில்லையே!’

“என்ன! நம்பவே முடியவில்லையா? சரிதான், ஜோஸ்யம், ஆருடம் பார்த்துத்தான் நம்ப வேண்டும் போலிருக்கிறது. இவன் பொட்டணத்தில் என்ன வைத்திருந்தான் என்பது துரைசாமிக்கு அப்போது தெரியுமா? பொட்டணத் தைக்கூட அவனாக எடுத்துக் கொண்டு வரவில்லையே! நான் எடுக்கச் சொன்ன பிறகுதானே எடுத்தான்! கையும் களவுமாக அகப்பட்ட பிறகும் நம்ப முடியவில்லை என்கிறீர்களே!”

“ரமணி இதுவரை இப்படி நடந்து கொண்டதே இல்லையே!”

“நமக்குத் தெரியாமல் அவன் என்னென்ன செய் திருக்கிறானோ! இந்த நல்ல பிள்ளைக்கு நீங்கள் வீட்டில் வேளா வேளைக்குச் சாப்பாடு போடுகிறீர்கள். சபாவிலும் மாதம் பத்து ரூபாய் சம்பளம் போட்டுக் கொடுக்கிறோம். இவை போதாதென்று பட்டுத் துணி வியாபாரத்தில் வேறு இறங்கிவிட்டான். சுத்த அயோக்கியப் பயல்! தீட்டின மரத்திலே பதம் பார்க்கிறான்!” என்று கூறிக் கொண்டே ரமணியை முறைத்துப் பார்த்தார் மோகன ரங்கம்.

“ஐயா! கொஞ்சம் தயவு செய்து வாருங்கள். உங்கள் அறைக்குச் சென்று தனியாகப் பேசலாம்” என்று கூறி அவரை அறைக்குள்ளே அழைத்துச் சென்றார் மதுரநாயகம். இருவரும் அங்குள்ள நாற்காலிகளில் உட்கார்ந்தார்கள்.

“ரமணி இதுவரை ஒரு சிறு தவறுகூடச் செய்ததில்லை. தீர ஆராயாமல் அவனுக்கு நாம் திருட்டுப் பட்டம் கட்டி விடக் கூடாது” என்று மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தார் மதுரநாயகம்.

இதைக் கேட்டதும் முதலாளி மோகனரங்கத்துக்குக் கோபம் அபாரமாக வந்துவிட்டது. அவர் மொத்தத்தில் நல்லவர்தான். ஆனாலும், சில சில சந்தர்ப்பங்களில் கோபக்காரராக மாறிவிடுவார். அப்போது யார் எப்படிச் சொன்னாலும், எதைச் சொன்னாலும் அவர் கேட்க மாட்டார்.

“என்ன இது! ஒரு அனாதைப் பயல்! அவனுக்குப் பரிந்து கொண்டு பேசுகிறீர்களே! அப்படியானால், நான் பொய் சொல்லுகிறேன், இல்லையா? இனி இதைப் பற்றி என்னிடம் எதுவும் பேச வேண்டாம். அவனை இப்போதே ‘கல்தா’ கொடுத்து வெளியே அனுப்பப் போகிறேன்” என்று கத்திக்கொண்டே எழுந்துவிட்டார் மோகனரங்கம்.

“ஒன்றிரண்டு நாள் பொறுத்துப் பார்க்கலாமே!” என்று கொஞ்சம் தயக்கத்தோடு கூறினார் மதுரநாயகம்.

‘அதெல்லாம் இல்லை. வேண்டுமானால் உங்கள் வீட்டில் தாராளமாக வைத்துக்கொள்ளுங்கள். இங்கே அவனை ஒரு நிமிஷம்கூட வைத்துக்கொள்ள முடியாது. இந்நேரம் அவனைப் பிடித்துப் போலீஸில் ஒப்படைத் திருப்பேன். உங்களுக்காகத்தான் இந்த அளவோடு விடுகிறேன்” என்று இரைந்துகொண்டே அறையை விட்டு மோகனரங்கம் வெளியே வந்தார். மதுரநாயகமும் கவலை யோடு எழுந்து அவரைத் தொடர்ந்து வெளியே வந்தார். “டேய் ரமணி, இந்த நிமிஷமே நீ இந்த இடத்தை விட்டு ஓடிப்போய்விட வேண்டும். இது என் கண்டிப்பான உத்தரவு… உம்… நிற்காதே! போ” என்றார்மோகனரங்கம்.

ரமணி தயக்கத்துடன் மதுரநாயகத்தின் முகத்தைப் பார்த்தான்.

“டேய், என்னடா விழிக்கிறாய்? போடா என்றால் போக மாட்டாய்?” என்று கேட்டுக்கொண்டே அவன் அருகிலே வேகமாக வந்தார் மோகனரங்கம். பின் கழுத்திலே கையை வைத்துப் ‘பர பர’வென்று வாசலை நோக்கித் தள்ளிக்கொண்டே போனார். வெளியே அவனை விட்டு விட்டுத்தான் உள்ளே திரும்பி வந்தார்.

இந்தக் காட்சியைக் கண்டதும் மதுரநாயகத்துக்கும் தலை சுற்றியது. துக்கம் மேலிட்டது. பேசாமல் தம்முடைய அறைக்குள்ளே சென்றார். ‘பொத்’தென்று நாற்காலியில் சாய்ந்தார். யோசனையில் ஆழ்ந்தார். அப்பொழுது ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் அவரது நினைவுக்கு வந்தது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *