பர்மா ரமணி
அழ. வள்ளியப்பா

26. வாழ்க, வாழ்க!

லாரியைக் கண்டதும் ஓட்டமாகத் திரும்பி ஓடினார்களே முரடர்கள், அவர்கள் வெகு தூரம் சென்றுதான் நின்றார்கள். தாங்கள் எல்லோரும் திரும்பி வந்து விட்டோமா என்று சரிபார்த்துக் கொண்டார்கள். அப்போதுதான் சுப்பையாவைக் காணோம் என்பது தெரிந்தது. இது வரையிலும் ஒரே அவசரத்திலும் குழப்பத்திலும் இருந்ததால், சுப்பையா தங்களோடு இருக்கிறானா இல்லையா என்றுகூட அவர்கள் பார்க்கவில்லை! பார்க்க வேண்டிய கட்டாயமும் அவர்களுக்கு ஏற்படவில்லை.

சுப்பையாவைக் காணோம் என்று தெரிந்த பிறகும், அவர்கள் அவன் மேல் சந்தேகப்படவில்லை. “சுப்பையா கெட்டிக்காரன். ஒளிந்து ஒளிந்து அவர்கள் பின்னாலேயே போய் விஷயத்தைத் தெரிந்துகொண்டு வந்து விடுவான்” என்று சொல்லிவிட்டு மற்றவர்களை அழைத்துக்கொண்டு குகைக்குச் சென்றான் தலைவன்.

ஆனால், அந்தக் குகையில் அவர்கள் சிறிது நேரம்கூட இருக்கவில்லை. “இனி நாம் இந்தக் குகையில் இருந்தால் ஆபத்து நிச்சயம்! சுந்தரத்தையும் ரமணியையும் தூக்கிச் சென்றவன் நம்மைக் காட்டிக் கொடுத்து விடுவான்!” என்று எண்ணி அவர்கள் வேறொரு குகைக்குப் பணப் பெட்டி, சாமான்கள் முதலியவற்றுடன் புறப்பட்டு விட்டார்கள். ஆனால், போலீஸ்காரர்களா விடுவார்கள்? அவர்கள் தான் அந்தக் குகையைப் பற்றிச் சுப்பையா மூலமாகத் தெரிந்து வைத்திருந்தார்களே! ஆயுதம் தாங்கிய ஒரு பெரிய படையுடன் சப்-இன்ஸ்பெக்டர் புறப்பட்டுச் சென்று அந்தக் குகையை முற்றுகையிட்டார். முரடர்கள் மூவரும் தப்ப வழியில்லாது உடனே போலீஸாரிடம் சரண் அடைந்தார்கள்.

முரடர் கோஷ்டி பிடிப்பட்ட செய்தி மாந்தலே நகரில் ஒரு பெரிய பரபரப்பை உண்டாக்கிவிட்டது அவர்கள் பிடிபட்டதற்குக் காரணம் ரமணிதான் என்று மக்கள் பேசிக் கொண்டார்கள். அதனால், ரமணியின் புகழ் இன்னும் அதிகமாயிற்று. அவனது கதையைக் கேட்க மாந்தலே நகரத்துக் குழந்தைகள் எல்லோருமே திரண்டு வர ஆரம்பித்துவிட்டார்கள்.

சித்தப்பா இறந்து போனதை நினைத்துச் சில சமயம் ரமணி வருத்தப்படுவான். ஆனாலும், கூட்டம் கூட்டமாக வரும் குழந்தைகளைக் காணும்போது அந்த வருத்தம் இருந்த இடம் தெரியாமல் ஓடி மறைந்துவிடும். குஷியாக அவர்களுக்குக் கதை சொல்ல ஆரம்பித்துவிடுவான். அவன் சொல்லும் கதைகளைக் கேட்டுக் கேட்டுக் குழந்தைகள் ஆனந்தப்படுவார்கள். பெரியவர்கள் ஆச்சரியப்படுவார்கள்.

ரமணி சொல்லும் கதைகளையெல்லாம் பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்பினால், நிச்சயம் வெளியிடுவார் கள் என்று அங்கு வரும் சில பெரியவர்கள் அடிக்கடி சொல்லி வந்தார்கள். சுந்தரத்தின் அப்பா தாமோதரமும் ரமணியிடம் இதைச் சொன்னார். சொன்னதோடல்ல; கட்டாயப்படுத்தி எழுதி அனுப்பவும் செய்தார். பர்மாவிலுள்ள சில தமிழ்ப் பத்திரிகாசிரியர்கள் ரமணியின் கதைகளுக்கு நல்ல வரவேற்பு அளித்தார்கள். அவனுடைய கற்பனைத் திறத்தைப் போற்றினார்கள். தங்கள் பத்திரிகை களில், தொடர்ந்து வெளியிட்டு ஊக்கமளித்தார்கள். மூன்று மாதங்களில் சுமார் முப்பது கதைகளுக்கு மேல் பத்திரிகைகளில் வெளிவந்துவிட்டன! எல்லாக் கதைகளுமே அற்புதமான கதைகள். அந்தக் கதைகளைப் பாராட்டித் தினமும் பத்திரிகாசிரியர்களுக்குக் கடிதங்கள் வர ஆரம்பித்தன.

ரமணிக்குப் பெயரும் புகழும் பெருகி வருவதைக் கண்ட சிற்சபேசனும், தாமோதரமும் ஒரு முடிவுக்கு வந்தார்கள். அந்த முடிவுப்படி இருவரும் ஆளுக்குப் பத்தாயிரம் ரூபாய் முதல் போட்டு ஒரு பதிப்பகத்தை ஆரம்பித்தார்கள். அதன் பெயர் ‘ரமணி சுந்தர் பதிப்பகம்’. அதிலிருந்து ரமணியின் கதைகளையெல்லாம் புத்தகங்களாக வெளியிடுவதென்று தீர்மானித்தார்கள். முதல் புத்தகமாக ரமணியின் புகழ்பெற்ற ‘கோமாளிக் குப்பன்’ வெளிவந்தது.

ஆனால், ரமணி பர்மாவில் இருக்கிறான் என்பதும் முதலில் கதாசிரியனாக இருந்து. இப்போது புத்தக ஆசிரியனாகி விட்டான் என்பதும் நாடக சபா மானேஜர் மதுரநாயகத்துக்குத் தெரியுமா? அவர் அடிக்கடி ரமணியை நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டேயிருந்தார். ‘இப்போது ரமணி எங்கே இருக்கிறானோ! எப்படி இருக்கிறானோ’ என்பதே அவரது கவலை.

அன்று காலையில் நாடக சபாவிலுள்ள தம்முடைய அறையில் மதுரநாயகம் கவலையோடு உட்கார்ந்து கொண்டிருந்தார். அப்போது, அவர் முன்னால் சில கடிதங்களைக் கொண்டுவந்து வைத்தான், ஆபீஸ் பையன் சிங்காரம். அந்தக் கடிதங்களுடன் உறையோடு கூடிய ஒரு புத்தகம் இருந்தது. உறையை அகற்றிவிட்டுப் புத்தகத்தை எடுத்துப் பெயரைப் பார்த்தார். ‘கோமாளிக் குப்பன்’ என்ற பெயரைக் கண்டதும் அவருக்குச் சிரிப்பு வந்துவிட்டது. வேடிக்கையான பெயராயிருக்கிறதே!’ என்று கூறிக்கொண்டே உள்ளே பார்த்தார். முதல் பக்கத்தில், எழுதியவர்: ‘பர்மா ரமணி’ என்று இருந்தது. உடனே அவர், “என்ன! பர்மா ரமணியா! அது யார்?” என்று ஆச்சரியத்தோடு அடுத்த பக்கத்தைப் புரட்டினார். அங்கே ஒரு கட்டம் கட்டி, அந்தக் கட்டத்தின் நடுவே அனாதையாக இருந்த எனக்கு ஆறு மாத காலம் ஆதரவளித்து, அன்போடு வளர்த்து வந்த சென்னை ஸ்ரீ முருகன் பால நாடக சபா மானேஜர் மதுரநாயகம் அவர்களுக்கு சமர்ப்பணம்’ என்று அச்சிடப்பட்டிருந்தது.

இதைக் கண்டதும் மதுரநாயகம், “ஆ! என் ரமணியல்லவா இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறான்!” என்று கூறிக்கொண்டே தம் இடத்தைவிட்டு எழுந்தார். துள்ளிக் குதித்துக்கொண்டே முதலாளி மோகனரங்கத்திடம் ஓடினார். அந்தப் புத்தகத்தைக் காட்டி விஷயத்தைக் கூறினார். அவருக்கு ஒரே ஆனந்தம்! உடனே அவர், “மதுரநாயகம்! ரமணியின் விலாசம் இதில் இல்லையே! ஆனாலும் பரவாயில்லை. இதில் பதிப்பகத்தின் விலாசம் இருக்கிறது. உடனே அந்த விலாசத்துக்கு ஒரு தந்தி கொடுப்போம். ரமணியை விரைவில் இங்கு வரவழைக்க வேண்டும்” என்றார்.

அன்றே தந்தி கொடுத்தார்கள். ரமணியும் பதில் தந்தி கொடுத்து, ஒரு நீண்ட கடிதமும் எழுதி அனுப்பினான். அந்தக் கடிதத்தில், நடந்தவற்றையெல்லாம் விவரமாக எழுதிவிட்டு, “தந்தியில் கண்டபடி உடனே புறப்பட்டு வரவேண்டும்; உங்களையெல்லாம் காண வேண்டும் என்றுதான் என் மனம் துடிதுடிக்கிறது. ஆனாலும், இங்குள்ளவர்களுக்கு இப்போது என்னைத் தனியாக அனுப்ப மனமில்லை. அத்துடன், என் கதையைக் கேட்க வரும் குழந்தைகளும் என்னைக் காணாமல் ஏங்கிப் போவார்கள். ஆனாலும், இதற்கு ஒரு நல்ல வழி இருக்கிறது. பர்மாவில் தமிழ் நாடகம் நடப்பதே அபூர்வம். அதிலும் குழந்தைகளே நடிக்கும் நாடகத் துக்கு அபாரமான வரவேற்பு இருக்கும். ஆகையால் என் வளர்ப்புத் தந்தையும் என் சிநேகிதன் சுந்தரத்தின் தந்தையும் சேர்ந்து நீங்கள் இங்கு வந்து சில நாடகங் களை நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

“எல்லாச் செலவையும் அவர்கள் இருவருமே ஏற்றுக் கொள்வார்கள். அவசியம் நீங்கள் இங்கு வரவேண்டும். நீங்கள் இங்கு வந்தால் ஒருவரை ஒருவர் சந்திக்க வழி யுண்டு. அத்துடன் இங்குள்ள தமிழ் நாட்டுக் குழந்தைகளும், பெரியவர்களும் நம் சபா நாடகங்களைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள். எங்களது வேண்டு கோளைத் தயவு செய்து ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று எழுதினான்.

முதலாளி மோகனரங்கத்துக்கு வெகு நாட்களாகவே ஓர் ஆசை உண்டு. கடல் கடந்து சென்று நாடகங்கள் நடத்திக் காட்ட வேண்டும் என்பதுதான் அந்த ஆசை. ரமணியின் கடிதத்தைக் கண்டதும் மோகன ரங்கத்துக்கு அளவில்லாத ஆனந்தம். உடனேயே பர்மா புறப்படுவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை யெல்லாம் செய்யும்படி சொன்னார்.

பாஸ்போர்ட் எடுப்பதற்கும் மற்ற ஏற்பாடுகளைச் செய்வதற்கும் சரியாக இரண்டு மாதங்களாயின. மூன்றாவது மாத ஆரம்பத்தில் சபா பர்மாவுக்குப் புறப்பட் டது. சபாவிலுள்ள சிறுவர்களுக்கு ஒரே ஆனந்தம். கடல் கடந்து அந்நிய நாடான பர்மா தேசத்துக்குத் தாங்கள் போகப் போகிறோம் என்பதில் அவர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை.

பர்மா வந்ததும் மதுரநாயகம் முதல் காரியமாக ரமணியைப் பார்க்கத்தான் விரும்பினார். ஆம், நெடுநாட்களாகப் பிரிந்திருந்ததால் அவனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவருக்கு அதிகமாயிற்று.

பர்மாவில் ரமணியைக் கண்டதும் மதுரநாயகம் அப்படியே அவனைக் கட்டித் தழுவிக்கொண்டார்.

அப்போது மோகனரங்கமும் மற்றவர்களும் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. பிரிந்தவர் கூடும் போது ஆனந்தத்துக்குக் கேட்க வேண்டுமா?

மாந்தலே நகரில் முதல் முதலாக அவர்கள் நடத்திய நாடகம் ‘கோமாளிக் குப்பன்’ என்பதுதான்! ஆம், ரமணி எழுதிய கதையைத்தான் அவர்கள் நாடகமாக்கியிருந்தார்கள். இடையிலே இருந்த இரண்டு மாத காலத்தில் அந்த நாடகத்தை அவர்கள் தயாரித்துவிட்டார்கள்.

முதல் நாள் நடந்த நாடகத்துக்குக் கட்டணம் எதுவும் கிடையாது. ஆனால், பதினான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளே அனுமதிக்கப்பட்டார்கள். மாந்தலே நகரிலுள்ள எல்லாக் குழந்தைகளும் பர்மியக் குழந்தைகள் உள்பட கும்பல் கும்பலாக வந்து “கோமாளிக் குப்பன்’ நாடகத்தைக் குதூகலத்துடன் பார்த்தார்கள். அடிக்கடி கைதட்டி ஆனந்தத்தை வெளிப்படுத்தினார்கள். “ஆஹா! அற்புதம்! அபாரம்!” என்று வாய்விட்டுப் புகழ்ந்தார்கள்.

நாடகத்தை எழுதிய ரமணிக்கு மாலை போட்டு மரியாதை செய்யும் போது, ‘பர்மா ரமணி வாழ்க! பர்மா ரமணி வாழ்க!’ என்று அந்தக் கொட்டகையே அதிரும் படி குழந்தைகள் எல்லோரும் கோஷமிட்டார்கள். அவர் களுடன் சேர்ந்து நாமும், “பர்மா ரமணி வாழ்க! நீடூழி வாழ்க!” என்று வாழ்த்துவோமாக!

★ ★ ★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *