இராமன் கதை
பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி

10. அயோத்தியில் நிகழ்ந்த சம்பவங்கள்


தசரதன் மரணமுற்றவுடனே அவன் சரீரத்தை எண்ணெய்க் காப்பிட்டுவைத்து, உடனே பரதனும் சத்துருக்கினனும் வரும் படி கேகய நாட்டுக்கு ஓலை போக்கினர். அவ்வோலையில் தசரதன் இறந்துபட்டானென்ற செய்தியாவது இராமலக்கு மணரும் சீதையும் காட்டுக்குப்போய்விட்டாரென்ற செய்தி யாவது எழுதவில்லை. “உடனே அயோத்திக்கு மீள வேண்டும்” என்று கண்டிருந்ததேயன்றி காரணம் யாதும் சொல்லப்படவில்லை. ஓலை கொண்டுபோன ஆளும் பரதனுக் காவது சத்துருக்கினனுக்காவது அயோத்தியில் நிகழ்ந்த சம்பவமொன்றும் தெரிவிக்கலாகாது என்று வற்புறுத்தப் பட்டது. ஓலையைக்கண்ட இராசகுமாரரிருவரும் கேகய மன்னனிடம் விடைபெற்றுக் கொண்டு உடனே திரும்பினர். அயோத்தி இலக்குமியில்லாத தாமரைமலர் போலப் பொலி வழிந்து காணப்பட்டது. அரமனைக்குட்புகுந்து கொலு மண்டபஞ்சேர்ந்து அரசனைத்தேட, அவனை அங்கு காண வில்லை. இராமலக்குமணரைத் தேட அவருங் கண்ணுக்ககப் பட்டிலர். கௌசலை சுமித்திரை எங்கு மறைந்தனரோ தெரியவில்லை. ஈற்றில் கைகேயி மட்டும் புலப்பட்டாள். பரதன் தாயைக்கண்டவுடன் அவளிடஞ்செல்ல, அவள் “மகனே, கேகய நாட்டிலுள்ள வரனைவரும் சுகத்துடனிருக் கிறார்களா? அங்கே நீ கழித்த நாளெல்லாம் உனக்கு இன்பம் தந்தனவா?’ என்று வினவினாள். “அங்கேயொருவருக்கு மொருகுறையுமில்லை. நாங்களும் பலவகை யின்பங்களைய நு பவித்தோம். அவை நிற்க, மகாராசா எங்கே? அண்ண னெங்கே? இலக்குமணனெங்கே? மற்றையன்னையரிருவரு மெங்கே? அரமனை அழகழிந்து இப்படியிருப்பதற்குக் காரண மென்ன? நான்கண்ட கனவு மெய்த்ததோ? என்மனம் கலங்குகிறது, ஏன் எங்களை யழைப்பித்தீர்கள்? எல்லாஞ் சொல்லுங்கள், ஒன்று மொளிக்கவேண்டா” என்று பதற்றத் துடன் கேட்டான் பரதன். கைகேயி, ” உன்னை வரும்படி பழைப்பித்த நான் உனக்கு எல்லாஞ் சொல்லேனோ? நான் உனக்கு எப்பொழுதேனும் யாதும் மறைத்ததுண்டோ ?” என, “சரி, சரி, சொல்லுங்கள், சொல்லுங்கள்” என்றான் பரதன். “மகரராசா இறந்து இன்றைக்கு ஆறுநாள்.” இதைச் செவியுற்ற மைந்தரிருவரும் கண்ணீர்விட் டழுதனர். சிறிதுநேரம் இன்றும் பேசிலர். அதன்பின் பரதன், ” அண்ணனெங்கே?” என்றான்.

” மகாராசா இறக்க நாலுநாளைக்கு முன்னமே இராமன் அயோத்தியைவிட்டுக் காட்டுக்குப் புறப்பட்டான்.”

“அண்ணன் காட்டுக்குப் போகவேண்டிய காரண மென்ன? விசுவாமித்திரர் வந்து மறுபடியும் கூட்டிக்கொண்டு போனாரோ?”

” விசுவாமித்திரர் வரவில்லை ; வேறொருவரும் வரவில்லை. நானே இராமனைக் காட்டுக்கனுப்பினேன். ”

” ஏன், ஏன்? சொல்லுங்கள் சொல்லுங்கள் ; சும்மா என் நிற்கிறீர்கள்?”

“மகனே பாதா! நான் உன் தாயல்லேனோ?”

“அஃதெல்லாமிருக்க ; அண்ணனை ஏன் காட்டுக்கனுப் பினீர்கள்?”

“இன்றைக்குப் பத்து நாளைக்கு முன்னே இராமனுக்குப் பட்டாபிஷேகம் எனத் தீர்மானித்தார் மகாராசா.”

“அப்படியானாற் காட்டுக்குப் போவானேன் ?”

“என்னை உன்னன்பு தூண்டக் கோசலநாட்டை உனக் காக இரந்தேன்; மகாராசா உன்னையே முடிசூட்டுவதாக எனக்கு வாக்குத்தந்தார்.”

தாய் இதைச் சொல்லக்கேட்ட பரதன் ” ஐயோ! பாவி உன்னாலன்றோ மகாராசா இறந்துபட்டார் ! இராமனை வனம் போக்கின பின் தசரதர் உயிரோடிருப்பாரென்று எண்ணி னாயோ? முடிசூட்டப்படவிருந்த இராமனைக் காட்டுக்கு அனுப்பினாயே ! இந்த விபரீத புத்தி உனக்கு எப்படி வந்தது? இராமனுயிரோடிருக்க நான் அரசாள்வேனென்று எண்ணினாயே! உன் மடமை என்னே! உன் துர்க்குண மென்னே! உனக்கு மகனாய்ப்பிறக்க என்ன பாவஞ் செய்தேனோ?” என்று சீறி, உடனே கைகேயியிருந்தவிடத்தை விட்டுக் கௌசலை கோயிலுக்குச் சென்றான். அங்கே கைம்மையுற்று மகனைப்பிரிந்து வாடியிருந்த கௌசலையைக் கண்டவுடனே ஓடி, அவளடியில் அடியற்ற மரம்போல விழுந்து தேம்பித் தேம்பி யழுதான் பரதன். உடனே கௌசலை தன் கையாலெடுத்து மார்போடணைத்து, “மகனே, இனியழுது ஆவதென்னை? எல்லாம் ஈசன் செயல்” எனத் தேற்றினாள். பரதன் கௌசலை தேற்றவும் தேறாது “அம்மா, கைகேயி செய்த செய்கைக்கு நான் முன்னமே யுடன்பட்டிருந்தேன், அல்லது இப்பொழுதாயினும் உடன்பட்டேன் என்று எண்ணினீர்களோ? இராமன் உயிரோடிருக்கப் பரதன் நாடாள்வான் என்று நினைக்கிறீர்களோ? உங்கள் மறுமொழி என்னைத்தேற்றும் அல்லது கொல்லும் ; காத்திருக்கிறேன், பேசுங்கள்” என்றான். உடனே கௌசலை, ‘களங்கமற்ற பாலா, உன்னை நானறியேனோ? கைகேயி செய்தவையெல்லாம் உனக்குச் சொல்லாமலே செய்தாள். அவளும் பலநாள் நினைத்துச் செய்த செயலல்ல இவை. யாராலோ அணாப்பப் பட்டுச் செய்தாள் ஏழை. நடந்தவை நடந்து போயின; இராமன் காட்டுக்குப்போய்விட்டான். பதினாலுவருஷம் கோசல நாட்டில் அடியெடுத்து வையான்; ஆதலால் நீயே இந்த நாட்டை ஆளல் வேண்டும்” என்றாள். இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கையில், பரதன் கேகய நாட்டினின்றும் வந்து விட்டான் என்று கேள்வியுற்ற வசிஷ்டமுனிவர் பலவிடங் களில் அவனைத்தேடியுங் காணாமல் ஈற்றில் கௌசலை கோயி லுக்குவந்து, கௌசலையும் பரதனும் சம்பாஷிப்பதைப்பார்த்து, கௌசலை சொன்ன மறுமொழியைக் கேட்டுக்கொண்டு நின்றார்.

அவள் பேசி முடித்தவுடனே வசிஷ்டர், “ஆம்; பரதா, உன் தாயார் சொல்வது மெய் ; எல்லாம் ஈசன் செயல்; நீ கோசல நாட்டுக்கு முடிவேந்தனாவதே இப்போது உன் கடமை” என்றார். உடனே பரதன், வசிஷ்டர் பாதங்களில் வீழ்ந்து நமஸ்கரித்து, ” அடிகள் திருவாய்மொழியையும் அன்னை கௌசலை யாரின் திருவாசகத்தையும் தட்டிப் பேசுகிறேனென்று நினைக்க வேண்டா; நாளைக்கு என் தந்தையாருக்குச் செய்யவேண்டிய சராமகிரியைகள் யாவும் செய்து முடிப்பேன் ; அடுத்தநாள் அண்ணனைத் தேடிக் காட்டுக்குப் போவேன் ; மற்றவை யெல்லாம் அதன்பின் பார்க்கலாம் ; இராமன் உயிரோடிருக்கப் பரதன் முடிசூடுவதில்லை, இது சத்தியம் ” என்றான். அப்படியே அடுத்தநாள் தசரத சக்கரவர்த்திக்கு ஈமக்கடன்கள் நிறைவேறின. அடுத்தநாள் பரதன் காட்டை நோக்கிப் புறப் பட்டான். பின்னே அன்னையர் மூவரும் சத்துருக்கினனும் வசிஷ்டரும் மந்திரிமாரும் நாற்படைகளோடு படைத்தலை வரும் போயினர். அனைவரும் கங்கையைக்கடந்து தென் கரை சேர்ந்தனர். அங்கு நின்ற குகன் வந்தவரின்னா ரென்றறிந்து அவரிடஞ்சென்று, பரதனை நமஸ்கரித்து, தான் குக னென்றும் இராம இலக்குமணரையும் சீதையையும் இக்கரையிற் சேர்த்தவன் தானே என்றும் மூவரும் சித்திரகூட மலைச் சாரலிற் தங்கியிருக்கின்றாரென்றுஞ் சொன்னான். பரதனும் கூடவந்தவரும் குகன் சொன்ன வழியைக் கேட்டு இராமனை நாடிச்சென்றனர். சித்திரகூட மலையி லொருமரத்தின் கிளையி லிருந்த இலக்குமணன், தூரத்திலே வரும் பரதனையும் சேனை களையுங்கண்டு, வருபவன் பரதன்றானென்று மட்டிட்டு, உடனே சென்று இராமனுக்கிதை யறிவித்தான்: ” அண்ணா, கைகேயி நம்மைக் காட்டுக்குத் துரத்தினள். அவள் மகன் நம்மைக் காட்டிலுமிருக்கவிடான் போலும்! பாதகன் படைக ளோடு வருகிறான் ; வருக பரதன், வருக சேனைகள் ; விசவா மித்திர முனிவர் கற்பித்த வித்தையால் இவரெல்லாரையும் நான் ஒருவனே அதம்பண்ணுவேன்; இல்லையேல் என்பெயர் இலக்குமணனன்று.

” இதைக்கேட்ட இராமன் விலாப் புடைக்க நகைத்து, “இலக்குமணா! நீ இவ்வளவு மடைய னென்று நான் எண்ணின தில்லை ; போ, போ ; பரதனை நீ இன்னுமறிந்தாயில்லை, பரதன் வந்தபின்னாயினும் நீ யவனை அறிவாய் ; நீ உன்னாண்மையை அடக்கு; எல்லாம் நான் பார்த்துக்கொள்ளுவேன். இப்பொழுது நீ இங்கு சீதையோடு இரு” என்று சொல்லிப் பரதனை எதிர்நோக்கிச் சென்றான். இராமனைக்கண்ட பரதன் காந்தத்தைக்கண்ட இரும்பு போல அவனையணுகி அவனடியில் விழுந்து தெண்டனிட்டான். பின் இராமனவனைத் தூக்க எழுந்து நின்று, “அண்ணா ! கைகேயி செய்ததெல்லாமறிந்தேன், அவள் செய்த சூதுக்கு நான் உடன்பட்டவனல்லேன் ; இஃது அன்னையார் கௌசலை யார் அறிவர், நீங்களும் அறிவீர்களோ?” என்றான். அதற்கு இராமன், ” அன்னையார் கைகேயியார் ஒருசூதுஞ் செய்தவ சல்லர், என் மேலுள்ள அன்பினால் நான் ஈடேறவேண்டுமென்றே யிவ்வாறு செய்தனர்; அஃதெவ்வாறாயினுமாகுக, நீ இவ் விஷயமொன்று மறியாயென்பது நான் நன்கறிவேன், இதனை ஒருவர் எனக்குச் சொல்லவேண்டுமோ?” என்றான். பரதன், ” ஒருவரிடத்துந் தீங்குகினையாத உங்களுள்ளம் கைகேயியின் தீங்கையும் கண்டிலது உங்களுக்கு இக்கொடுமை செய்தவள் கணவனாரையுங் கொன்றாள். தசரதசக்கரவர்த்தி யிறந்து இன்று பதினான்கு பகல் கழிந்தன. நாட்டையாள வேந்த னில்லை. நீங்கள் மீளல் வேண்டும் ” என்றான். தசரதன் இறந்ததைக்கேட்ட இராமன் புண்பட்ட நெஞ்சினனாய் வருந்தி, பின் அன்னையர் மூவரையும் வணங்கி, வசிஷ்டரைத் தொழுது, சத்துருக்கினனைத் தழுவி, மந்திரிமாருக்கும் படைத் தலைவருக்கும் முசுமன்கூறி, எல்லாரையும் சித்திரகூட மழைத்துச் சென்றான். அங்கு சீதையும் இலக்குமணனும் வந்து, வந்தவரை வணங்கினர். இதன்பின் சகோதரர் கால் வரும் தந்தைக்கு அந்தியேட்டி செய்தனர். அந்தியேட்டி முடிந்தபின் சுபசுவீகரணம் நடந்தது. அடுத்தநாள் பரதன் இராமனை அயோத்திக்குவந்து அரசியலையேற்றுக்கொள்ளு மாறு வேண்டினன். இராமன் சிறிது மிசைந்திலன். கைகேயி வந்து தான் செய்த குற்றத்தை இராமன் மன்னிக்க வேண்டு மென்று வேண்டினள். இராமன், ” அம்மா, நீங்கள் செய்தது குற்றமென்று நான் நினைப்பினன்றோ மன்னிப்பது? எனக்குக் குற்றமொன்றுஞ் செய்யாதிருக்க நான் மன்னிப்பதெதனை?’ என்றான். வசிஷ்டரும், ” இராமா! நீ குணத்திற் பெரியன், நாங்களெல்லேமும் கோசலநாட்டார் யாவரும் விரும்பி உன்னை யழைக்கிறோம் ; நீ வந்து எங்களையாளல் வேண்டும்” என்றார். “சுவாமி, பிதுர்வாக்கியபரிபாலனஞ்செய்வதையே கடனாகக் கொண்ட நான் எப்படி யரசாளலாம்?” என்றான் இராமன். உடனே பரதன், “அண்ணா , எனக்குத் தந்தையார் தந்த அரசை என்னிடமிருந்து நீங்கள் பறித்தாலன்றோ உங்களைப் பழிசாரும்? மகாராசா இராச்சியத்தை எனக்குத் தந்தார், இராச்சியம் என்னுடையது ; என்னிராச்சியத்தை நான் உங் களுக்குத் தந்தால் நீங்களதை ஏற்றுக்கொள்ளலாகாதோ? ஏற்றால் இழிவுண்டோ ?” என்று அழுதான். உடனே இராமன், “பரதா! அழாதே, உன்னன் பிருந்தவா றென்னே! உன்னன் பாற் பிணிப்புண்டேன், நீ கொடுக்கும் இராச்சியத்தை நானேற்பதில் இழிவொன்றுமில்லை, நீ கொடுக்க நான் ஏற்றுக் கொண்டேன், இது சரி ; ஆயினும், பதினான்கு வருஷம் நான் காட்டில் வாழ வேண்டுமென்பது எந்தையார் கட்டளை, அதை மீறலாகாது. நீ போய்ப் பதினான்குவருஷம் எனக்காகக் கோசல நாட்டை ஆள்.

பதினான்குவருஷம் முடிந்தவுடனே நான் அயோத்திக்கு வந்து உன்னிடம் அரசு பெற்றுக்கொள்ளு வேன். இதற்குமேல் என்னால் ஒன்றுமாகாது” என்றான். பரதன் இதைக் கேட்டு மகிழ்ந்து, “அண்ணா , உங்கள் சித்தம் என் பாக்கியம், நானிப்பொழுதே திரும்பிப்போகிறேன்; ஆயினும் இப்பதினாலு வருஷம் அரசனென்ற பெயர்வகிக்க வாவது சிங்காசனத்திலிருக்கவாவது முடிதரிக்கவாவது என்ன லாகாது. உங்கள் மிதியடியைக் கொடுத்தல் வேண்டும். நான் அதைக்கொண்டுபோய்ப் பட்டாபிஷேகஞ்செய்து அதைச் சிங்காசனத்திலிருத்திவிட்டு அயோத்திக்கருகில் நந்தி கிராமம் என்னும் ஊரிலிருந்து இராச்சியத்தின் காரியங்களைப் பார்வையிடுவேன். நீங்கள் அயோத்தியைவிட்டுப் புறப்பட்ட நாள் முதல் பதினான்குவருஷம் முற்றுப்பெறும் தினத்தில் உங்களை நான் அயோத்தியிற் காணவேண்டும். நீங்கள் அன்று அங்கு இல்லையேல் உடனே உயிர் துறப்பேன்; இது சத்தியம்” என்று கூறினான். இராமன் அதற்கிணங்கித் தன் பாது கையைக் கொடுக்கப் பரதன் கொண்டுபோய் அதற்கு அயோத் தியிற் பட்டாபிஷேகஞ்செய்து சிங்காசனத்திருத்திவிட்டுத் தான் போய் நந்திகிராமத்தில் வாழ்ந்தான்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *