
இராமன் கதை
பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி
16. இராம இலக்குமணர்
“இலக்குமணன் இராமன் போன திசையை நோக்கி அவனைத் தேடிச்செல்கையில் அவன் தனித்தவனாய் மானொன்று மின்றி வரக்கண்டான். இலக்குமணன் இராகவனைப்பார்த்து, “அண்ணா, இவ்வளவு நேரஞ்சென்றதேன் ? கறுப்பனெங்கே? மான் ஒன்றுங் கிடைக்கவில்லையோ ?” என்றான். “கறுப்பனும் நானும் இரண்டுகாதமல்ல, மூன்றுகாதம் போயிருப்போம்; மான் ஒன்றுங் காணவில்லை. வழிநடந்த களைப்பினால் நான் ஒரு மாத்தடியிற் படுத்து ஒருநாழிகை மெய்மறந்து தூங்கி னேன் ; கறுப்பனும் என்னருகிற் படுத்திருந்தான். சிறிது நேரத்துள் ‘ இராமா, இராமா, என்னைக்கா’ வென்ற சத்தங் கேட்டுத் திடுக்கிட்டு நித்திரைவிட் டெழுந்தேன் ; கறுப்பனை ஒரு புலி காவிக்கொண்டு ஓடக்கண்டேன். நான் புலியைத் துரத்திக்கொண்டோட, புலி கறுப்பனை விட்டுவிட்டு ஓடிப் போயிற்று. கறுப்பன் குற்றுயிரோடு கிடந்தான் ; ‘ இராமா, நான் உனக்குப் பொய்சொன்னேன், கடவுள் என்னைத் தண் டித்தார், நான் பாண்டி நாட்டா னல்லேன்; என்பெயர் கறுப்ப னன்று, என்பெயர் மா-மா-மா’ என்றான். அதற்குள் அவனுயிர் போயிற்று. ஒரு கிடங்குவெட்டி அவனைப் புதைத்துவிட்டு அங்கிருந்த ஒரு குளத்திலே ஸ்நானஞ்செய்து விட்டு வருகிறேன். நீ ஏன் சீதையைத் தனியேவிட்டு வந்தாய்?”
இப்படி இராமன் பேசிக்கொண்டுவரவே பன்ன சாலையை இருவரும் அடைந்தார். உள்ளே சென்றபோது சீதையைக் கண்டிலர். உடனே அக்கம்பக்கத்தில் அவளைத் தேடினர். “சீதை எங்கே ஒளித்துநிற்கிறாய்? வெளியே வா, எனக்கு நிரம்பப் பசிக்கிறது ” என்றான் இராமன். பின் ‘அவளைத் தேடிச்செல்ல, ஒரு தேர்த்தடமும் குதிரைக்குளம்புகளின் சுவடும் ஓர் ஆடவன் அடிச்சுவடும் கண்டனர். உடனே காரியம் விளங்கிற்று. தாமிருவரும் இல்லாத நேரத்தில் எவனோ வந்து சீதையைத் தேர்மேலேற்றிக் கொண்டுபோ யிருக்கவேண்டும். தேர்த்தடமும் குதிரைக்குளம்பின் சுவடும் போனவழியே இருவரும் போயினர்.
பொழுதுபடும் நேரத்தில் யாரோ ஒருவன் அலறுவதைக் கேட்டு அவனிடம் ஓடினர். அருகிற் போனபோது இரண்டு கையும் இருபுறமும் விழுந்து கிடக்க, அடியற்ற மரம்போல் ஒருவன் ஐயோ! ஐயோ!! இராமனைக் காணேனே! என்னுயிர் போகுமுன் வந்தால், சொல்லிவிட்டுச் சாகலாமென்றிருந் தேனே ” என்ற சத்தத்தைக்கேட்டு, “நான் தான் இராமன்; வந்தேன், வந்தேன்” என்று ஓடினான் இராகவன். அங்கு விழுந்து கிடந்தவன் சடாயுவென இராமனறிந்தான். ” ஐயா, ஐயா, என்ன இது? யார் உமது கையை வெட்டினவன்?” என்றான் இராமன். மூடியிருந்த கண்ணைத்திறந்து, ” இராமா, வந்து விட்டாயா? சீதையை இராவணன் தேர்மேலேற்றித் தெற்கே போவதைக்கண்டேன். உடனே ஓடி முன்னின்று தேரை மறித்தேன். சீதையை விட்டுவிட்டுப்போ என்று கழறினேன் ; வாட்போருக்கு அழைத்தேன், என் இரண்டு கையையும் வெட்டிவிட்டுச் சானகியோடு பாதகன் சென்றான்” என்றான் சடாயு. தங்கள் நிமித்தம் சடாயு கை இரண்டுமற்றுச் சாகக் கிடப்பதைக்கண்ட இராமனும் இலக்குமணனும் கோவென்று புலம்பினர். சடாயு, ” அழவேண்டா , இதோ தசரதர் வந்து என்னை அழைக்கிறார், நான் போகிறேன். போகுமுன்னே உன்னைக்கண்டு, சீதையைக் கொண்டு போனவன் யாரென்று உனக்குச்சொல்ல எனக்குக் காலங்கிடைத்ததே” என்று சொல்லி உயிர் துறந்தான். வீரர் இருவரும், தந்தையின் நண்பனும் சீதையைக் காக்க விரும்பி உயிர் துறந்தவனுமாகிய சடாயுவின் உடலை எடுத்துத் தகனஞ்செய்துவிட்டு, அன்றிரவு அவ்விடத்திற்தங்கி, வைகறையில் எழுந்து தெற்குநோக்கிச் சென்றனர். இவ்வாறு இரண்டு மூன்று நாள் தேடியுஞ் சீதை யைக் காணவில்லை.
இராவணனெங்கே? தேரெங்கே? சீதையெங்கே?



