
இராமன் கதை
பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி
19. சுக்கிரிவ பட்டாபிஷேகம்
வாலி மடிந்தவுடன் அவன் உடல்மேல் விழுந்து, தாரை சுக்கிரிவன் அங்கதன் முதலாயினோர் புலம்பினர். அப்பால் அங்கதன் தந்தைக்குச் செய்யவேண்டிய கடனெல்லாம் செய்து முடித்தான். அதன்பின் இராமன், தான் எந்நகரத் துள்ளும் போகலாகாது என்ற கட்டளையை மறவ தவனாய் இலக்குமணனைக்கொண்டு சுக்கிரிவனுக்கு முடிசூட்டுவித்தான். பின் மழைக்காலந் தொடங்கிற்று. “கார்ப்பருவம் முடிந்தவுடன் என் சேனைகளிற் சிலவற்றைப் பற்பல திசையிலும் அனுப்பிச் சீதையைத் தேடுவிப்பேன்” என்றான் சுக்கிரிவன். மழைக் காலம் முடியுமட்டும் இராமன் தம்பியோடு மதங்கமுனிவ ராச்சிரமத்திற் தங்கினான். மழைக்காலம் முடிந்தும் சுக்கிரிவன் சீதையைத்தேட ஒரு முயற்சியும் செய்திலன். பல நாட் காத்திருந்த பின்பு இராமன் இளையவனைச் சுக்கிரீவ னிடத்தில் அனுப்பினான். தமையனாற் துரத்தப்பட்டுப் பல் லாண்டு முனிவராச்சிரமத்தில் ஒளித்திருந்த சுக்கிரிவன் திடீரென முடிசூட்டப்பட்டவுடன், காய்ந்தமாடு கம்பங்கொல்லை யில் நுழைந்தாற்போல என்றபடி தன்னைமறந்து குடித்து வெறித்து எல்லாச் சிற்றின்பங்களிலும் முழுகியிருந்தனன். இவனைக்காண இலக்குமணன் காலருத்திரனைப் போலக் கோபா வேசத்தோடு போனான். போயும் சுக்கிரிவன் தன் நிலையை உணர்ந்தானல்லன். இலக்குமணன் கோபத்தோடு வருவதைக் கண்ட தாரை சுக்கிரிவனைக் குடிவெறியினின்றும் தட்டி யெழுப்பி, இலக்குமணன் புலிபோல் வந்திருப்பதை அறிவித்து விட்டு, தானே முதலிற் சென்று இலக்குமணனை நமஸ்கரித்தாள்.
தாரை அமங்கலியாய் வந்து தன்னை நமஸ்கரித்ததைக்கண்ட இலக்குமணன் அயோத்தியில் தன் தாய் சுமித்திரையும் இப்படித்தானே அமங்கலியாய் வாழ்கின்றாள் என்ற எண்ணம்வரக் கோபத்தைவிட்டுத் துக்கத்திலாழ்ந்தான். பின்பு சுக்கிரிவன் வந்து தோன்றினான். அவனைக் கண்டதும் இலக்குமணன் சினந்து, ” இன்னும் மழைக்காலம் முடிந்திலது போலும். நீ இராமனுக்குச் சொன்ன சொல் நினைவிலிருக்கின் றதோ?” என்றான். இலக்குமணன் சொன்ன சொல் தன் நெஞ்சைச்சுட, தான் தனக்குப் பேருதவி செய்த இராகவனையும் மறப்பித்த மதுபானத்தை அன்றே விடுவதாகவும் தான் செய்த அபராதத்தை இராமன் மன்னிக்க வேண்டுமென்றும் வேண்டி னான் சுக்கிரிவன். அதன்பின் தன் சேனையி னொருபாகத்தை நாலாய்ப்பிரித்து ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு தலைவனை நியமித்து எங்கும் போய்ச் சீதையைத் தேடிவரப் படைகளை அனுப்பினான். தெற்கே போனபடைக்குத் தலைவன் அனுமன். இராமன் அனுமனிடம் தன் கணையாழியைக் கொடுத்து, அதைச் சீதையிடஞ் சேர்ப்பிக்க வேண்டும் என்றதுமன்றி, சீதைக்குந் தனக்கும்மட்டும் தெரிந்தவையும் வேறொருவருக்குக் தெரியாதவையுமான சிலவிஷயங்களை அனுமனுக்கு எடுத்துச் சொல்லி, ” இவற்றை நீ சீதைக்கெடுத்துரைப்பையேல் நான் உன்னை அனுப்பியதை அவள் நம்புவாள் ” என்றான். இராம னிடம் விடைபெற்ற அனுமன் தெற்கே பாண்டிநாடு மட்டும் வெவ்வேறிடங்களிற் சீதையைத் தேடியும் எங்கும் அவளைக் காணாமல், மதுரைக்குக் கிழக்கேயுள்ள கடற்கரைக்குவந்து, அங்குநின்று இலங்கைக்குப்போகும் ஒரு தோணியைக்கண்டு, சேனையையெல்லாம் அங்கே நிறுத்திவிட்டு, தான் தன்னக் தனியனாய் இலங்கைக்கரையை யடைந்தான்.



