
இராமன் கதை
பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி
26. தீவீழ்தலைத் தடுத்தல்
இலங்கையைவிட்டு நீங்கிப் பரிவாரத்தோடு கிட்கிந்தையை யடைந்த இராமன், அங்கே சுக்கிரிவன் அங்கதன் முதலிய வரை நிறுத்திச் சீதையோடும் இலக்குமணனோடும் அயோத்திக்குப் புறப்பட்டான். இன்னும் சிலபகல் கிட்கிந்தையிற் தங்கும்படி சுக்கிரிவன் வேண்ட, இராமன், ” நாங்கள் அயோத்தியை விட்டுப்புறப்பட்டுப் பதின்மூன்றுவருஷம் ஒன் பது மாதம் சென்றன. நாங்கள் செய்ய வேண்டியது நெடும் பயணம். ஒருநாளைக்கு ஒருகாதத்தின் மேல் நடக்கச் சீதையா லியலாது. பதினான்குவருஷம் முடிகிறதினத்திலே அயோத்தியிலில்லாவிடின் பரதன் அன்றே உயிர்விடுதல் திண்ணம். ஆகையால் நாங்கள் போக எங்களுக்கு விடை கொடுக்கவேண்டும்” என்றான். அப்பொழுது திரிசடை சீதையை நோக்கி, “நீங்கள் இங்கு எழுபகலிருக்கக் கூடாதா?” என வேண்டினள். அப்பொழுது சுக்கிரிவன், ” உங்களுக்கு முன்னே அனுமன் சென்று, பரதர் உயிர் துற வாமல் காக்கும்படி செய்வேன் ” என்ன, சீதை திரிசடையின் வேண்டுகோளைத் தட்டமுடியாமல் மூவரும் அங்கு பின்னும் எழுபகல் தங்கினர். அதன்மேல், திரிசடையும் அங்கதனும், இராமபட்டாபிஷேகங் காணத் தாமும் அயோத்திக்கு வருவ தாகச்சொல்ல, அவரையுங்கூட்டிக்கொண்டு, மூவரும் கிட்கிந் தையை நீங்கித் தாம் முன்வந்த வழியே மீண்டனர். ஆங்காங் குள்ள துறவிகளைச்சந்தித்து அவ்வவ்விடங்களில் ஒவ்வொரு இராத்தங்கி மெல்லமெல்ல வடதிசை சென்றனர். ஈற்றிற் கங்கையின் தென்கரையிலே குகன் வீட்டை யடைந்தனர்.
அன்று பதினான்காம் வருஷம் முடிய ஈற்றயல் நாள். அன்றே பரதன் நந்திகிராமத்தைவிட்டு அயோத்திக்குவந்து மூவர் வரவையும் எதிர்பார்த்திருந்தான். அடுத்தநாள் பொழுது விடிந்து பதினைந்து நாழிகை சென்றும் இராமன் வந்திலன். ‘தாசரதியார் சொற்றவறாதவர்; அவர் வாராததற்குக் காரணம் யாதோ? அவருக்குக் கானகத்தில் என்ன நேரிட்டதோ? ஒன்று மறியேன் ; இனி நான் உயிர்வாழ்ந்திருப்பதாற் பயன் என்? இறந்துபடுவதே தகுதி” எனப் பரதன் எண்ணி, தான் விழுந்து சாகத் தீவளர்க்குமாறு பணித்தான். நாழிகை இருபத்தைந்தாயிற்று. இராமன் இன்னும் வரவில்லை. பாதன் தீக்குதிப்பதைக் கேள்வியுற்று, அதைத் தடுக்கத் தாயர் மூவரும் வச முனிவரும் மந்திரிபிரதானி முதலியோரும் வந்தனர். “பரதா, பொறு பொறு: ஆத்திரப்படாதே” என அவர் புத்தி சொல்லியும், பரதன் கேளாது “நான் தசரதசக்கரவர்த்திக்கு மகனல்லேனோ? இராமருக்குத் தம்பியல்லேனோ? நானும் என் சொற்படி நடப்பவன் என்பதை இன்று உலகம் அறிக” எனச்சொல்லித் தீயுள்விழும்படி அதனை மும்முறை வலஞ்செய்யத் தொடங்கினான். மூன்றாம் பிரதட்சணம் முடியுமுன் அசரீரிபோல ஒருபேரொலி கேட்டது:
“ வந்தான் வந்தான் ; பரதா- இரகுநாதன் வந்தான் வந்தான் ; பரதா.” ” இஃதென்னை? இஃது யார் குரல் ?” என்று யாவரும் சுற்றிப்பார்க்க, தென்றிசையினின்றும் ஒருவன், எட்டடி உயரமுடையான், பருத்த யாக்கையன், கறுத்த தோலினன், முடித்த குஞ்சியன், கை இரண்டும் சிரமேற்குவிய ஓடிவந்து, பரதன்காலில்விழுந்து, பின்னுமொருமுறை
“ வந்தான் வந்தான் ; பரதா- இரகுநாதன் வந்தான் வந்தான் ; பரதா”
என்றுகூறினன். “நீ யார்? எங்குநின்று வருகின்றனை ?” என்று பரதன் அவனைக் கேட்க, “நான் இராமதூதன் ; அனுமன் என் பெயர். தாசாதியாரும் சீதாபிராட்டியாரும் இலக்குமணரும் நேற்றுக் கங்கைக்குத் தென்கரையில் குகன் வீட்டுக்கு வந்தனர். இன்று காலை ஆற்றைக் கடந்திருப்பர். அவர் விரைவில் வரும்படி நீவிர் தேரொன்றனுப்பினால் பொழுது படுமுன் அவரை இங்கு காணலாம்” என்றான். உடனே இதைக்கேட்ட சுமந்திரன் தேரிலேறித் தென் திசை சென்று, பொழுதுபட இன்னும் அரைநாழிகையுள்ளது என்னுமளவில் மூவரையும் அழைத்துவந்து கோயில் புக்கனன்.
சீரா ரிலங்கை சிறக்க விபீடணனுக்
கேரார் முடிசூட்டி யிங்கிதமாய்ப் பாராள
“மாதோடு மன்னன் வரக்கண்ட மாநகருக்
கேதோ வுரைப்ப னெதிர்.”



