
இராமன் கதை
பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி
2. இராமன் விசுவாமித்திரர் வேள் விகாத்தலும் சனகர் மகளை வேட்டலும்
விசுவாமித்திரர் ஒரு காலத்தில் ஒரு நாட்டையாண்ட மன்னவர். ஒருநாள் வசிஷ்டருடைய ஆச்சிரமத்துக்குப் போனபொழுது அவருடைய தவவலிமையைக்கண்டு, “துறவிக்கு வேந்தன் துரும்பு” என்னும் முதுமொழியி னுண்மையை யுணர்ந்து தாமுந் துறவு பூண்டார். துறவு பூண்டவர் பல்லாண்டு பல கடுந்தவம் புரிந்து, பிறப்பில் க்ஷத்திரியராயினும் வசிஷ்டர் வாயினால் பிரமரிஷி எனப் போற்றப்பட்டார். இதனால் சாதியிலும் குணமே சிறந்தது என்பது வெளிப்படை..
விசுவாமித்திரர் அரசிளங்குமார ரிருவரையும் தம்மோ டழைத்துச் சென்று அவர்களுக்குப் பல வித்தைகளைப் போதித்தார். அதன் பின்பு அவர், இராமலக்குமணர் காக்க, வேள்வியைத் தொடங்கி முடித்தார். வேள்வி நடந்தபொழுது தடைசெய்ய வந்த பலரை இவரிருவரும், புறங்கொடுத் தோடச் செய்தார். தாடகை பெண்ணாயினும் ஆண்மக்களிலும் மிக அஞ்சாநெஞ்சும் திறமையும் படைத்தவள். இப்படிப்பட்டவள் பெண்ணாயினும் இவளைக் கொல்லுதல் அறமேயன்றி மறமன்றென விசுவாமித்திரர் இராமனுக்கு வற்புறுத்த இராமன் கோதண்டமென்னும் தன் வில்லை வளைத்து அம்பு தொடுத்து அவளைக் கொன்றான்; அப் பொழுது அவளுக்குத் துணையாய் வந்த அவள் இளையமகன் பொகுவையும் கொன்றான். அவள் மூத்தமகன் மாரீசன் ஓடித்தப்பினான். விசுவாமித்திரர் வேள்வியை முடித்தபின் இராமலக்குமணரைப் பல காடுகளூடும் நாடுகளூடும் கொண்டு போய் அவ்வவ்விடத்துப் பழங்கதைகளை அவர்களுக்கெடுத் தோதினார். ஈற்றில் விதேக நாட்டுக்கு இராசதானியான மிதலை மாநகரத்தை மூவரும் அடைந்தார். விதேகநாட்டு மன் னவர் சனகர். இவர் இராச கோலத்தோடு அரசியல் நடத்தி வந்தாராயினும், இவர் நெஞ்சம் தாமரையிலையிற் தண்ணீர் போல உலகத்தாற் சிறிதும் கறைப்பட்டிலது. இவர் இல் லறத்திற் துறவு பூண்டவர், கடவுளடி கனவிலும் மறவா தவர்,
“எத்தொழிலைச் செய்திடினும் ஏதவத்தைப் பட்டிடினும் முத்தர் மனமிருக்கும் மோனத்தே”
என்ற சொல்லிற்கு இலக்கானவர்.
இவருக்குச் சீதை என்னும் பெயருள்ள மகளொருத்தி யிருந்தாள். கடவுளுடைய திருவருளினாலே யிவருக்குக் கிடைத்த வில்லுமொன்றுண்டு. அவ்வில்லை வளைக்கும் ஆற்றலுடையானுக்கே சீதையை விவாகஞ்செய்து கொடுப்பதாக எண்ணியிருந்தார் சனகர். விசுவாமித்திரர் இராம லக்குமணர்களை வேத்தவையிற் கொடுவந்து அவர்களது வரலாற்றையும் திறமையையும் எடுத்துக்கூறி, சனகரது வில்லை இராமன் வளைப்பான் என்றார். சனகர் வில்லை யெடுத்து வரும் படி எவலாளருக்குப் பணிக்க, வில்லைச் சபையிற் கொண்டு வந்தார்கள். விசுவாமித்திரர் இராமனுக்கு ஆசிகூறி “வில்லை வளைக்க” எனக் கட்டளையிட்டார். இராமன் வில்லையெடுத்து வளைக்க அஃது இரண்டு துண்டாக ஒடிந்துவிழுந்தது. இவனே என் மகளுக்கு வாய்த்த கணவன் என உவந்தார் சனகர். உடனே தசரதனுக்கு நடந்ததையறிவிக்க ஓலை சென்றது. தசரதனும் இதைக் கேட்டவளவிலே உவகைக் கடலிற் படிந்தான். அவன், மனைவியர் மூவரும் பாத சத்துருக்கினரும் வசிஷ்டரும் மந்திரிமார் முதலியோரும் புடைசூழ மிதிலை வந்து சேர்ந்தான். சுபதினத்திலே சுபமுகூர்த்தத்திலே இராமனுக்கும் சீதைக்கும் விவாகம் நடந்தது. இராமன் இரகுவமிசத்திற் பிறந்தவனாகையால் இராகவனென்னும் பெயரும் பெறுவன். தசரதன் மகனாகையால் தாசரதியென் பதும் அவன் பெயர். விதேக நாட்டாளாகிய சீதைக்கு வைதேகியென்று பெயர். மிதிலைப் பட்டணத்திற் பிறந்ததால் மைதிலியெபன் தும் அவள் பெயர். சனகன் மகளாதலால் சானகியென்பதும் அவள் பெயர்.
இராமனுக்கும் சீதைக்கும் விவாகம் நடந்தபொழுதே தம்பியர் மூவருக்கும் திருமணம் நிறைவேறின. இலக்குமணன் ஊர்மிளையை மணந்தான். பரதனும் சத்துருக்கினனும் குசத்துவசன் மக்களிருவரை மணந்தனர். இன்னும் சிறிதுகாலம் மிதிலையிற் கழித்தபின் தசரதன் மனைவியரும் மக்களும் தற்சூழ, பரிவாரம் முன்னும் பின்னும் செல்ல அயோத்திக்குப் புறப்பட்டான்.



