
இராமன் கதை
பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி
8. சுமித்திரை சீதை இராம இலக்குமணர்
தாயிடம் விடைபெற்ற இராமன் சீதைபாற்சென்று நடந்ததை யெல்லா மவளுக்கறிவித்தான். அதற்குச் சீதை எந்தையார் சனகர் இல்லறம் நீங்காமலே துறவு பூண்டவர் ; நான் அவர்மகள் ; நுந்தையார் நுமது தம்பியார் பரதருக்கு முடி சூட்டினால் நான் வருந்துவேனோ? நீர் பதினான்குவருஷம் வன வாசம் செய்வது என்னை வருத்துமோ? இவையெல்லாம் ஈசன் செயல். நானும் மரவுரிதரித்து உம்மோடு கானகஞ் சேர்வதே பத்தினியென் கடன் ” எனப் புகன்றாள். இம்மொழி கேட்ட இராமன், ”சானகி, சொல்வதின் பொருள் உனக்குத் தெரியுமோ? காட்டில் நீ எப்பொழுதாவது வசித்ததுண்டோ ? அங்கே வாழும் மக்கள் எப்படிப்பட்டவர் ? நீ என்னுடன் வந்து நான்வாழும் வாழ்விற் பங்குபெற வல்லையோ? அங்கு நேரிடும் வருத்தமெல்லாந் தாங்குவாயோ? இவற்றுளொன் றையு மாராயாமல் துணிந்த உன் துணிபென்னே?” என்றான். அதற்குச் சீதை, ” இரகுகுலோத்தமரே! நீர் கூறிய தொவ் வொன்றையும் நான் தனித்தனி யாராயவில்லையென்பது மெய் தான் ; முன்னே நான் காட்டில் வசித்தவளல்லேன் ; காடென் பது எனக்குத் தெரியாது; ஆயினும் பெண்ணாய்ப்பிறந்த நான் ஒன்று அறிவேன், ஆடவராகிய நீர் அதையறியீர்; பதினான்கு வருஷம் உம்முடன் காட்டில் வாழ்ந்து உடலை வருத்துஞ் சில வருத்தங்களை யனுபவிப்பதோ அல்லது பதினான்கு வருஷம் உம்மைப்பிரிந்து உமக்கு என்ன நேரிட்டதோ, நீர் எங் குற்றீரோ என்பனவற்றில் ஒன்றுமறியாது ஆவியிற் துயருறு வதோ எது பெரும் வருத்தம்? இதை நீர் யோசித்தீ ராயின் நான் வருவதற்குத் தடையொன்றுங் கூறீர்; அன்றியும், சுகத்திலும் துக்கத்திலும் வாழ்விலும் தாழ்விலும் இன்பத்திலும் துன்பத்திலும் உன்னைப் பிரியேன் என்று நீர் சொன்ன சொல் இவ்வளவு சீக்கிரம் மறந்தீரோ? நான் உம்முடன் வருவது திண்ணம் ; வேறு பேசுவதிற் பயனில்லை” என்றாள். “உன்னெண்ணம் இஃதாயின் நீ வா ” என்றான் இராமன்.
பின் சுமித்திரையின் அந்தப்புரத்திற்கு இராமன் போனான். நிகழ்ந்தனவற்றையெல்லாம் அங்கே யவளுக்கு இராமன் கூற, அருகிற் கேட்டுக்கொண்டிருந்த இலக்குமணன் ” ஓகோ இப்படியா காரியம் ? இலக்குமணனொருவன் இங்கிருக் கிறான் என்பதை எல்லாரும் மறந்தார் போலும்! பரதன் முடி சூட்டப்படுவதில்லை, இராமன் காட்டுக்குப் போவதுமில்லை ; இராமனுக்கு நாளை நானே முடிசூட்டுவேன் ; என்னைத்தடுக்க வல்லவரெல்லாரும் ஒருங்கு சேர்ந்து வரலாம் ; இதை நாளைக்குப் பாருங்கள்” என்று சீறிச்சினந்து, பிரளயகாலத்து வடவாமுகாக்கினிபோல விளங்கினான். அதைக்கண்ட இராமன் “ இலக்குமணா, உன் சகோதரசிநேகத்தை மெச்சினேன் ; நீ சொல்லியதைச் செய்ய வல்லவனென்பதிலும் எனக்கைய மின்று ; ஆயினும் ஒருகாரியத்தை மறந்தாய் நீ. பாதனுக்கு முடிசூட்டுவதற்கும் காட்டுக்கு நான் போவதற்கும் நான் சம்மதித்து வாக்குக்கொடுத்துவிட்டேன் ; பிதிர்வாக்கிய பரிபாலனஞ்செய்யப் பிறந்தான் இராமன் என்னும் ஒரு சொல்லே நான் நாடுவது. அயோத்திக்கு மன்னனாக முடி சூட்டப்படுவதைப் பெரிதென்று நான் மதித்தேனல்லேன். ஆகவே நீ வேறென்ன செய்யினும் என்மனத்தையும் மாற்ற வல்லாயோ ?” என்றான். உடனே இலக்குமணன், கண்களில் நீர்சொரிய இராமன் அடியில் விழுந்து “அண்ணா ! நீங்கள் இப்படிச் சொல்லின் நான் வேறென் செய்வேன்? பதினான்கு வருஷமும் நானும் உங்களோடுவந்து உங்களுக்குத் தொண்டு செய்வதே என் பிறப்பின் பேறு ” என்று அழுதான். விச னத்திலாழ்ந்த தம்பியை இராமன் கையாற் தூக்கியெடுத்து ” மகாராசா என்னைக் காட்டுக்குப் போகச்சொன்னாரேயன்றி உன்னையும் போகச்சொல்லவில்லை ; நீ இங்கிருந்து இங்குள்ளார் யாவரையும் ஆதரி ” என, இலக்குமணன், ” முன்னே விசுவா மித்திரர் வந்து உங்களை அழைத்தபோது என்னையும் அழைத் தாரோ? அழையாவிடினும் நானும் உங்களுடன்வர மகா ராசா சம்மதித்தாரே ; அப்படியே இப்பொழுதும் மகாராசா விடஞ்சென்று நான் அனுமதி கேட்க இது சமபமன்று ; இங்கு அருகில் என் தாயார் இருக்கிறார்கள், அவர்கள் சம்மதம் பெற்றுக்கொண்டு நானும் காட்டுக்கு வருகிறேன் ” என்றான். இதைக்கேட்ட சுமித்திரை “ மகனே இலக்குமணா! நீ சொல் வது சரி, உன்னிஷ்டப்படி செய், நீ போகவில்லை காட்டுக்கு; இராமனிருக்குமிடமே அயோத்தி; பதினான்குவருஷம் நீ இராமனோடு அயோத்தியிலிருப்பாய்; இராமனில்லாத அயோத்தியே காடு; நாங்களே பதினாலுவருஷம் காட்டி லிருக்கப்போகிறோம். இலக்குமணா, இராமனை உன்னண்ண னென்றெண்ணாதே, உன்னாண்டவன் அவன்; அவனே தசரத சக்கரவர்த்தி. சீதையை உன் மைத்துனி யென்றெண்ணாதே, அவளே உன் தாய்; கௌசலை கைகேயி சுமித்திரை மூவரும் ஓர் உரு எடுத்துவந்தால் அவ்வுருவே சீதையென்று நினை ; நீ இராமனுக்குத் தம்பியல்லை, அவன் அடிமை நீ. நீயும் நானும் செய்த புண்ணியத்தாலன்றோ உனக்கு இப்பேறு வந்தது! ஊர்மிளையை விட்டுப்போவதற்கு வருந்தாதே,
என் கண்மணிபோல அவளை நான் காப்பேன். அவளும் எனக்கு உதவி செய்வாள். எல்லாம்வல்ல ஈசன் உன்னை ஆசீர்வதிக்க ” என்றாள். இதைக்கேட்ட இராமன் ” கௌசலை என்னைப் பெற்ற தாயார், கைகேயி என்னை வளர்த்த தாயார், சுமித்திரை என்னைக் காக்குந்தெய்வம் ” என்று அவளை வழி பட்டு விடைபெற்றபின், இராமன் சீதை இலக்குமணன் மூவரும் தம் உடையைக் களைந்து மரவுரி தரித்து, சுமந்திரன் கங்கைக்கரை வரையிலும் வழிகாட்ட, அயோத்தியைவிட்டுப் புறப்பட்டனர். சிகைமுடியாத
” சீரை சுற்றித் திருமகள் பின் செல,
மூரி விற்கை யிளையவன் முன் செல,
காரை யொத்தவன் போம்படி கண்டவவ்
வூரை யுற்ற துணர்த்தவு மொண்ணுமோ?”
சுமந்திரன் தசரதனது மந்திரிமாருள் பிரதமமந்திரி. அரசனுக் காருயிர் நண்பன். இராமலக்குமணரும் சீதையும் கங்கைக் கரையையடைந்தவுடன் ஒரோடத்திலேறி ஆற்றைக் கடந்தனர். சுமந்திரன் கங்கைக்கு வடகரையில் நின்று விட்டான். இராமன் சுமந்திரனைப்பார்த்துத் தானும் தம்பியும் சீதையும் கோசலநாட்டி னெல்லையைவிட்டு ஓடமேறிச்சென் றதை மகாராசாவுக் கறி விக்கும்படி சொன்னான். சுமந்திரன் இராமனிடம் விடைபெற்று அயோத்திக்குத் திரும்பினான், நகரம் சேர்ந்தவுடன் தசரதனிடம் இராமன் நாட்டினெல்லையை விட்டுக் கடந்து சென்றதை யறிவித்தான். இதைக்கேட்ட தசரதன் அக்கணமே உயிர்நீத்தான்.



