
இராமன் கதை
பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி
21. அனுமன்
இலங்கைக்கரையையடைந்த அனுமன் சீதையைப் பல விடங்களிற் தேடியும் காணாமல் ஈற்றில் அசோகவனம் புகுந்தான். அவன் ஒருபக்கத்திலிருந்துவர வேறொருபக்கத்திலிருந்து இராவணன் வந்தான். இராவணன் அனுமனைக் காணவில்லை. அனுமன் இராவணனை முன்னமே கண்டுளானாதலின் அவன் யாவனென உடனே யறிந்தனன். “நல்ல சமயத்தில் இங்கு வந்தேன். அம்மரத்தினடியில் பலர் சூழ வாடியிருப்பவள் சீதை போலும். முன்னே யான் தேரிற் — கண்ட பெண் இவர்தான். இதோ, இராவணனும் அங்கேதான் செல்கின்றான். நான் யாருமறியாமல் இம்மரத்தி லேறியிருந்து நடப்பனவெல்லாம் கவனிப்பேன். அதன்பின் யான் செய்ய வேண்டியது இஃதெனத் தெரியவரும் ” என எண்ணி ஒரு மரத்தில் ஏறியிருந்தான். அவன் அசோகவனத்துள் நுழைந் ததும் மரத்தில் ஏறியிருந்ததும் யாருங்கண்டிலர். இராவணன் சீதையையணுகி, ” இன்னும் எத்தனை நாள் நான் காத்திருப்பேன்? நீயிங்கிருப்பது இராமனுக்கு எப்படித் தெரியும்? தெரியினும் அவன் இங்கெப்படிவருவான்? அவன் இங்கு வந்து உன்னை மீட்பன் என்னும் வீணெண்ணத்தை விட்டு விடு. நீ யெனக்கு மனைவியாக இசைவையேல் நீயே பட்டத்து மகிஷியாவாய்; மண்டோதரி உனக்குக் குற்றேவல் செய்வள் ” எனச்சொல்லி அவள் காலில் விழுந்தான். “இராவணா! நான் பதிவிரதை யென்றதை உனக்குச்சொன்னாலும் நீ யதை அறியமாட்டாய். அசுத்தனாகிய உனக்குச் சுத்தமென் பது எப்படிப் புலப்படும்? உனக்கு விளங்காவிட்டாலும் உன்மனைவி மண்டோதரியைக் கேள். அவள் பதிவிரதை. அவளுக்கு விளங்குமிது. என் கோபத்தை மூட்டாதே; எழுந்து போ” என்றாள். இராவணன் எழுந்துநின்று ” என் கோபத்தை மூட்டாதே நீ; இவ்வளவுகாலமும் ஒரு பேதைப் பெண்ணென்று இரங்கினேன். நான் கெஞ்சக் கெஞ்ச நீ மிஞ்சிமிஞ்சிப் பேசுகிறாய். என் எண்ணத்திற்கு நீ உடன் படாவிடில் உன்னை உயிரோடே சுட்டெரித்து உன் சாம்பலை இராமனுக்கனுப்புவேன். இல்லையேல் என் பெயர் இராவண னன்று” என்றுகூறி அவ்விடம்விட்டுப் பெயர்ந்தனன். அவன் போனவுடனே திரிசடை சீதையைப்பார்த்து, “அம்மா, நீர் அஞ்சன்மின் ; ‘குரைக்கிற நாய் கடியாது’ என்னும் முது மொழி நீர் அறிந்ததன்றோ ? இராவணன் உமக்கு ஒரு தீங்குஞ் செய்யான். அன்றியும், சென்ற இரவில் நானொரு கனாக் கண்டேன், ஒரு பெருஞ்சேனை இலங்கைக்குவந்து இங்குள்ள சேனையோடு பொருது எல்லாரையும் அழித்தபின் சுந்தா புருடரொருவர் உம்மை மீட்டுச் சென்றதாக.”
திரிசடை இவ்வாறு கூற, சீதை சொல்லுவாள், ” இஃ தென்ன ஆச்சரியம்! நீ சொன்னது போலவே என் கனவுமிருந் தது. நீ கனவிற்கண்ட சுந்தரபுருடர் இரசகுலாதிப தாசரதி யாரே. ஆயினும் கனவு கனவுதானே, கனவு நனவாகுமோ?” இப்படி இவர்கள் இருவரும் பேசுகையில், “மங்களம் மங்களம் இராமனுக்கு, மங்களம் எங்கள் சானகிக்கு : என்று மென்றும் மங்களம் ” என ஒரு பாட்டு யாரோ பாடக்கேட்டு “இவ்வொலி எங்குநின்று வந்தது?” என இருவரும் நாலு பக்கமுஞ் சுற்றிப்பார்க்க, மரத்திலிருந்து ஒருவன் இறங்கி வந்து, சீதையை யஞ்சலிசெய்துகொண்டு, முன்னே தான் பாடின பாட்டைப் பின்னும் பாடினான். அங்கிருந்த காவற் பெண்டிர் எல்லாரும் ” இராவணனன்றி வேறு ஓராடவனும் உட்புகாத இவ்வனத்துள் வந்த இவன் யார்? எவ்வாறு வந்தா னிங்கு? இவன் உடையையும் தோற்றத்தையும் பார்த்தால் இவன் இலங்காவாசியல்லன் ‘ எனத் தம்முள் ஒருத்தியோ டொருத்தி பேசினர். அனுமன் பாடிமுடிந்தவுடன் ” அம்மா, நான் இராமதூதன், என் பெயர் அனுமன். நுமது நாயகர் நும்மைப் பிரிந்தபின் இளையவரோடும் நும்மைத்தேடிக் கிட் கிந்தைக்கருகில் வந்தனர். இப்பொழுதும் இருவரும் அங்குதானுள்ளார். நீயிர் எவ்விடத்துற்றீர் எவ்வாறிருக்கின்றீர் என்று அறிந்துவரும்படி என்னை அனுப்பினர் ” என்றான். அதைக் கேட்ட சீதை, “ நீ சொல்வதெல்லாம் பொய்யன்று, உண்மை தானென நான் எப்படி யறிவேன் ? என்னை யணாப்ப இராவணன் செய்த சூதாயிருக்கலாமே ” என்றாள். அனுமன், “அகத்தினழகு முகத்திற் தெரியும் என்பர் பெரியோர். நான் சொல்வது மெய்யென்பதற்கு என் முகமே சான்று; இது போதாதாயின் வேறொருசான்று வைத்துளேன். இக் கணையாழி யாருடையது? பாரும் ” என்று சொல்லிச் சீதை கையில் அதைக் கொடுத்தான். கணையாழியைக் கண்டது இராமனைக் கண்டது போலிருந்தது சீதைக்கு. கண் இமை கொட்டாமற் சிறிதுநேரம் உற்றுநோக்கினள். பின் இரண்டு கண்ணிலு மொற்றினள் ; மார்பிலொற்றினள்; முத்தமீந்தனள், பின் தன் வலக்கை ஆழிவிரலில் அணிந்துகொண்டனள். பின் அனுமனை நோக்கி, “இஃது என் நாயகர் கணையாழியே. ஆயினும் இதை அவர் உன்னிடந்தந்து எனக்கனுப்பினாரென் பதற்கு என்னசான்று? அவர் நித்திரை செய்கையில் துஷ்ட னொருவன் அவரைக்கொன்று இவ்வாழியை அபகரித்திருக்க லாமே” என்றனள். அதைக்கேட்ட அனுமன், ” அம்மா, நீரும் தாசரதியாரும் தனித்திருக்கையில் அவர் நும் மடிமீது தலைவைத்துக் கண்ணுறங்குகையில், காகமொன்றுவந்து நும் இதழைக் கொவ்வைப்பழமென எண்ணிக் கொத்தத் தொடங்குகையில் நீர் அசைய, இராமர் கண்விழித்துக் காகத்தைப் பிடித்துக் கொல்லப்போனபொழுது, நீர் அஃறிணைப் பொருளாகிய காகம் அறிவுடைய தன்று, அதைக் கொல்லல் நீதியோ என்று இராமரிடஞ் சொன்ன வாசகம் நும்மிருவருக்குமே யன்றி வேறொருவருக்குத் தெரியுமோ? இதை எனக்குச் சொன்னவர் யார் ?” என்றான். உடனே சீதை, “நான் செய்த பெரும்பிழையை மன்னிக்க வேண்டும். முன்னே அணாப்பப்பட்ட நான் உன்னை உடனே நம்பாதது இயற்கை யன்றோ ?” என்றாள். “அம்மா! நீர் செய்தது சரி, முழுதுஞ் சரி ; நுமது புத்தியை மெச்சுகிறேன். நான் இராமதூதன் தானென்று இப்பொழுது நம்புவதால் ஆனந்தமடைகின்றேன். மங்களம், மங்களம் இராமனுக்கு மங்களம்” என்று சொல்லி – ஆடினன். ” என் பிராண நாயகர் இன்னும் உயிரோடிருக்கி றாரென்றும் என்மீது அவருக்குள்ள அன்பு சிறிதும் மாறவில்லை யென்றும் அறிந்து நானும் உவகைக்கடலிற் படிந்தேன். நான் இங்கிருக்கும் நிலையைக் கண்ட நீ அதை இராகவருக் கெடுத்தோதி இன்னு மொருதிங்களுள் வந்து என்னை மீளா விடின் நான் இறந்துபடுவது ஒருதலை யென்று கூறு. மேலும் அயோத்தியிலுள்ள என் மாமியர் மூவருக்கும் என் நமஸ் காரம் அறிவி. மிதிலையில் எந்தையார் இன்னும் உயிரோ டிருப்பின், ‘நுமது மகள் சீதை, இராவணன்கைப்பட்டு இலங்கையிற் சிறையுற்றுப் பலதிங்கள் வருந்தினாளேனும் தந்தைக்கும் மிதிலைக்கும் விதேக நாட்டுக்கும் யாதொருவசையும் வாராதபடி தன்னைக்காத்து இறந்தனள் என்றும் அறிவி. நீ செய்யும் இவ்வுதவிக்கு நான் கைம்மாறொன்றுஞ் செய்ய வல்லேனல்லேன். கடவுள் உனக்கு அருள் செய்வர்” என்றாள் சீதை, அனுமன், “போதும், போதும். இவையெல்லாஞ் செய்வது என்னாலாகாது. நீர் உயிரோடிருக்க யான் பார்த்தும் உம்மை இங்குவிட்டு நான் திரும்பிப்போய் இராமன் முகத்தில் எப்படி விழிப்பேன்? ‘இவனுமொரு வீரனோ?’ என்று பிறர் கூறும் நிந்தையை எப்படித் தாங்குவேன்? என் தாய் அஞ்சனை பத்தினியானால், அனுமன் இராமருக்குக் கொத் தடிமை யென்பது மெய்யானால், ஏழையெனக்கு அன்னையார் சானகியார் அருள் கிடைத்தது உண்மையானால், நீவிர் இப்பொழுதே என்னுடன் வரல்வேண்டும். என்னுடன் வருதற்கு ஐயப்பாடு வேண்டா. தாசரதியாரும் குறையொன்றுஞ் சொல்லார் ; வாரும்” என்று சொல்லித் தரையில் விழுந்து இரங்கினான். இதைக்கண்ட சீதை, ” அனும! நீ யெனக்கு மகன் ; நான் உனக்குத் தாய். உன்னோடு நான்வர எனக்கு அச்சமுமில்லை, ஐயமுமில்லை. ஆயினும் எனக்கிவ்வாறு தீங் கிழைத்த இராவணனைக் கொன்று இராமர் என்னை மீளாவிடின் அவருக்கும் அவர் வில்லுக்கும் வசையல்லவோ? இராமர் என்னை மீட்டாலன்றி நான் மீளேன். என்னை நீ கண்டதற் கறிகுறியாக நான் அணிந்திருக்குஞ் சூளாமணியை உன் கையிற் தருகிறேன். இதைக் கொண்டுபோய் என் நாயகர் கையிற் கொடு” என்று சொல்லித் தன் சூளாமணியை அனுமன்கையிற் கொடுத்தாள். அனுமன் அதைவாங்கி இடைவாரிலிருந்த பையினுள் இட்டு அவளை நமஸ்கரித்த பின்னர் அசோகவனத்தை விட்டுப் புறப்பட்டான்.



