
இராமன் கதை
பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி
5. கைகேயி தசரதர்
இராமனது பட்டாபிஷேகத்துக்குச் செய்யவேண்டிய ஒழுங் கெல்லாம் செய்துமுடித்தபின் தசரதன் கைகேயிக்கு இதை அறிவிக்க அவள் அந்தப்புரத்துக்குப் போனான். கைகேயியோ அங்கில்லை. இங்குமங்கு மவளைத்தேடி ஈற்றில் ஓர் அறையிலே ஆபரணங்களையெல்லாம் களைந்து எறிந்துவிட்டு, கூந்தல் விரிந்து தரையிலே புரள, கைகேயி நிலத்திலே குப்புறப்படுத்துத் தேம்பித்தேம்பியழுதுகொண்டிருக்கத் தச பாதன் கண்டான். தன்னுயிர்க்காதலியை வருத்துவது யாதென் நறியாத தசரதன் ஓடிப்போய் அவள் அருகிலிருந்து “கண்ணே கைகேயி, உனக்கு என்ன நேரிட்டது? தேக அசௌக்கியமோ?” என்றுசாவினாள். அவள் முன்னிலு மதிகம் தேம்பியழுதாள். தசரதன் ஆயிரஞ்சொல்லியும் ஒன்றுக்கும் வாய் திறந்தாளில்லை. பின்னுமாசன் :
“கைகேயி, உன் குறையென்? அதையெனக்குத் தெரிவித்தால் எப்படியும் தீர்ப்பேன் ” என்றான்.
கைகேயி, “போம், போம், உமக்கு என் மேல் மிகப் பிரியம் என்பது யாவருமறிவார், நீரதை இன்னுமொருமுறை சொல்லிக்காட்டவேண்டியதில்லை; உமக்குக் கௌசலையிருக்கக் கைகேயி ஏன்?” என்று கோவென்றலறினாள்.
“நீ சொல்லுவது எனக்கொன்றும் விளங்கவில்லை, எனக்கு என்னுயிரிலும் நீயே இனியை ” என்றான் தசரதன்.
“நீர் சொல்வதுண்மையாயின் நான் கேட்பதை எனக்குத் தருவீரோ?” என்றாள் கைகேயி.
” இராமனாணை, நீ யெதைக்கேட்டாலும் உனக்குத் தருவேன்” என்று தசரதன் கூற,
கைகேயி சொல்லுவாள்: “முன்னே ஒருநாள் உமக்குச் சாரதியாக நான் தேரோட்ட நீர் உமது சத்துருக்களை வென்ற காலத்தில் எனக்கு இரண்டுவரம் தருவதாக நீர் வாக்குக் கொடுத்தது மறந்துபோனீரோ?”
தசரதன், “நான் மறக்கவில்லை, நீ தான் இதுகாறும் ஒரு வரமும் கேட்கவில்லை” என்றான்.
கைகேயி, “அவ்விரண்டுவரமும் இப்பொழுது நான் கேட்கிறேன், மறாது தருவீரோ?” என்றாள்.
“முன்னமே கொடுத்த வரத்தை இப்பொழுது எப்படி மறுப்பது? தசரதன் சொன்ன சொல் மாறுமுன்னே கிழக்கிலுதிக்கும் ஞாயிறு மேற்கிலுதிக்கவேண்டும். ஞாயிறு மேற்கிலுதித்தாலும் தசரதன் சொன்ன சொல் தவறான்” என்றான் அரசன்.
“இது சத்தியந்தானோ”
“ஆம், இது சத்தியந்தான்.”
“பின் மறுத்தால் ?”
“மறேன்.”
“உம் இராமனாணை?”
“ என் இராமனாணை.”
” அப்படியானாற் சொல்லுகிறேன் : கோசல நாட்டுக்கு மன்னனாக என்மகன் பரதனுக்கு முடிசூட்டவேண்டும்.
தசரதன், “ என்ன சொன்னாய்?”
கைகேயி, “நான் இன்னும் பேசிமுடியவில்லை, இப்பொழுது கேட்டது முதல்வரம். இதன்படி கோசல நாட்டுக்கு மன்னனாவான் பரதனே. நான் கேட்கும் இரண்டாம்வரம் இராமன் நாளைக்கே அயோத்தியை விட்டுப்போய் பதினாலு வருஷம் வனவாசம் செய்தல் வேண்டும். இவ்விரண்டு வரங் களையும் நீர் எனக்குக் கொடுத்தால் நீர் சத்தியவந்தரே, இல்லை யென்றால் தசரதரும் சொன்னசொல் மாறுகிறவரே” என்றாள்.
உடனே தசரதன், “இராமனை நாளைக்கு முடிசூட்டுவ தாக அவனுக்குச்சொல்லிவிட்டேன், சொன்ன சொல்லைத் தசரதன் மாற்றுவதில்லை ” என்றான்.
“அப்படியானால் மகாராசா எனக்குச் சொன்ன சொல்லைத் தான் மாற்றிவிட்டார், என்றும் பொய்யாதவர் பொய்த்தார்!” என்று நகைத்தாள் கைகேயி.
அரசன், ” பெண்ணே ! ஆத்திரப்படாதே, நிதானித்துப் பார், மைந்தர் நால்வருள் இராமனே மூத்தவன், பட்டத்துக்குரியவன் அவனே; உரிமை மட்டுமன்று, தகுதியுமுடையான். இம்மட்டோ , வசிஷ்ட முனிவரும் மந்திரிமாரும் படைத்தலைவரும் சபையார் எல்லாரும் இராமனையே முடிசூட்டல் வேண்டுமென்று தீர்மானித்து அதை அவனுக்கு அறிவித்து விட்டார். நான் மாறினாலும் என் சபையார் மாறுவாரோ? வசிஷ்டர் என்ன சொல்லுவார்? நாம் எல்லேமும் சம்மதித்தாலும் பரதன் சம்மதிப்பானோ?” என்றான்.
அதற்கு “இந்தச் சாதுரியமெல்லாம் எனக்குத்தெரியாது; நான் கேட்ட வரங்கள் கொடுக்க உமக்கிஷ்டமில்லையேல் இஷ்ட மில்லையென்று சொல்லும். அதை விட்டுவிட்டுப் பரதன் சம்ம தியான், வசிஷ்டர் என்ன சொல்லுவார் என்ற நீண்டகதைகள் எனக்கு வேண்டா; தசரதர் பொய்க்குப் பகை, மெய்க்கு அணி, புகழுக்கு வாழ்வு என்ற பேச்செல்லாம் வெறும் பேச்சு; தசரதர் அரிச்சந்திரன் மரபில் வந்தவராம்!” என்று பரிகசித் தாள்.
தசரதன், “நான் இராமனுக்குச்சொன்னது சொன்னதே” என்றான்.
கைகேயி, ” இராமனுக்குச் சொன்னது இன்றைக்கு; எனக்கு வாக்குக்கொடுத்தது முப்பதுவருஷத்துக்குமுன்.முன் சண்டையிலே சாகாமல் உம்முயிரைக் காத்த எனக்குச் சொன்ன வாக்கோ இன்றைக்குக் கௌசலைமகனுக்குச் சொன்ன வாக்கோ எதை முதலில் நிறைவேற்ற வேண்டும்? பேசியென்ன பிரயோசனம்? பொய்த்த மனுஷன் பொய்யன் தானே” என்றாள்.
இதைக்கேட்ட தசரதன், ” கைகேயி, இந்த இரண்டு வரத்தையும் விட்டு வேறு எந்த இரண்டு வரமாகுதல் கேள், நான் தருவேன்” என்றான்.
“தம்முயி ரிராமன்மே லாணையிட்ட இரண்டுவரமும் இராசா தந்துவிட்டார் ! இனிக் கௌசலைமே லாணையிடுவார் போலும்! வேண்டா, வேண்டா; நான் இனி வேறுவரங் கேட்பதில்லை ; பொய்த்தார் அயோத்தி மன்னவர்; பாதனை முடிசூட்ட வேண்டும், இராமனைப் பதினான்குவருஷம் காட்டுக் கனுப்பவேண்டும்; இஷ்டமில்லையென்றால் இஷ்டமில்லை யென்று சொல்லும்.”
இதைக்கேட்டவுடனே தசரதன், அறிவுகெட்டு மூர்ச்சித்துச் சிறிதுநேரம் மரம் போலக் கிடந்தான். மூர்ச்சை தெளிந்தபின், “கைகேயி ! உன்னிஷ்டப்படியே பரதனை முடி சூட்டலாம்; இரண்டாம் வரத்தைமட்டும் கேளாமல் விட்டு விடு ” என்று அவள் காலில் தன் முடியைவைத்து இரந்தான் தசரதன்.
“கிழடனுக்கு மாய்மாலமெல்லாம் தெரியும், என் காலில் விழவேண்டா; கௌசலைகாலிற் போய்விழும்” என்று சீறினாள் கைகேயி.
“நான் செய்வது மாய்மாலமன்று, இராமன் என்னுயிர்; இராமனைப் பிரிந்தால் என்னுயிர் போய்விடும்; எனக்கு உயிர்ப் பிச்சை தா” என்று கெஞ்சினான் தசரதன்.
“இராமனைப் பிரிந்தால் உயிர் போய்விடுமோ? இராமன் விசுவாமித்திரரோடு போனபோது நீர் செத்துப்போனீரோ?
அப்போது சாகாத உயிர் இப்போது சாகுமோ? செத்தாற் தானென்ன? வயது எண்பதானது உமக்கு ; இன்னும் எத்தனை வருஷம் நீர் உலகத்திலிருக்க வேண்டும்?’ என்று சிரித்தாள்.
“பாதகி, நான் செத்தால் உன் மங்கிலியம் போய்விடு மல்லவோ? கைம்பெண்கைகேயி யென்று உலகம் உன்னை ஏசுமல்லவோ ”?
“என் மங்கிலியத்தைக் காக்கத்தான் இராசா உயிரோ டிருக்கவேண்டுமாம், இராசா உயிரோடிருக்க இராமன் அயோத்தியிலிருக்கவேண்டுமாம்; போதும், போதும் கதை ; இராமன் நாளைக்கு அயோத்தியைவிட்டுப் போகவேண்டும் ; அஃதில்லையேல் கைகேயி நஞ்சுதின்று சாவாள்.”
இதைக்கேட்டவுடனே ” இனி உன்னிஷ்டம் ; இராமனை பழைப்பி, இனி நீ எனக்கு மனைவியல்லை, பரதன் எனக்கு மகனுமல்லன்” என்று சொல்லித் தசாதன் பின்னும் மூர்ச்சித்தான்.
இராமனையழைத்துவர ஏவலாளர் போயினர். தந்தை யார் தன்னையழைக்கிறார் என்று கேள்விப்பட்ட இராமன் விரைந்துவந்து கைகேயியந்தப்புரம் சேர்ந்தான்.



