
இராமன் கதை
பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி
6. கைகேயி இராமர்
அந்தப்புரத்தினுள் வந்த இராமன் தன் தந்தை மூர்ச்சித்துத் தரையிற் கிடப்பதையும் கைகேயி அருகில் வாளாவிருப்பதை யும் கண்டு, “ஐயோ! ஐயோ !! மகாராசா இப்படித் தரையில் மூர்ச்சித்துக் கிடப்பதற்குக் காரணம் யாது?” என வினவ, கைகேயி, “ஏனோ அறியேன், இன்றைக்குப் பலமுறை யிவ்வாறு மூர்ச்சித்தார்; இன்னுஞ் சிறிதுநேரத்துள் மயக்கந்தீர்ந்து விடும்” என்றாள். இராமன், “மகாராசா என்னையழைத்தாராமே, காரணந்தெரியுமோ?” என்றான். கைகேயி, ”ஆம் தெரியும் ; மகாராசா கோசலநாட்டுக்கு மன்னனாகப் பரதனை நாளைக்கு முடிசூட்டத் தீர்மானித்துவிட்டார். இதுவுமன்றி நீ நாளைக்கே அயோத்தியைவிட்டு ஈரேழாண்டு வனவாசம் செய்ய வேண்டும் என்று உனக்குக் கட்டளையிடுகிறார் ; இஃது என் கட்டளையன்று, உன் தந்தையார் கட்டளை” என, இராமன் கூறுவான்:
“மன்னவன் பணியன்றாகில் நும்பணி மறுப்பனோ? என்
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்ற தன்றோ?
என்னினி உறுதி இப்பால்? இப்பணி தலைமேற் கொண்டேன் மின்னவிர் கானம் இன்றே போகின்றேன், விடையும்
கொண்டேன்.
” உடனே இராமன் தந்தையின் பாதத்தில்விழுந்து நமஸ்கரித்து எழுந்து, கைகேயிக்குத் தெண்டனிட்டுப் புறப்பட்டான்.



