இராமன் கதை
பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி

13. இராவணன்


இராவணன் தாய் இலங்கை வேந்தன் சுமாலிக்கு மகள் . இவள் பெயர் கைகசி. சுமாலி தமிழன். கைகசியுந் தமிழப் பெண். கைகசியின் கணவனார் விச்சிரவர் என்னும் ஓர் ஆரிய முனிவர். தந்தையார் ஆரியமுனிவராயினும் இராவணன் தமிழனாகவே வளர்க்கப்பட்டான். ஆரியபாஷையிலுள்ள வேதங்களிலும் வல்லான். இவனுக்குக் கும்பகன்னன் விபீடணன் எனத் தம்பியரிருவர். இவரெல்லாருக்கும் இளையாள் சூர்ப்பணகை. முன் நாம் கண்டபடி சூர்ப்பணகை இளமையில் ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டுக் கணவனிறக்கவே பஞ்சவடி சென்றாள். இவளுக்குப் பிள்ளையில்லை.

சூர்ப்பணகை கரதூஷணரிறந்த பின்பு மீட்டும் இலங்கைக்குவந்து தமையன் இராவணனைக்கண்டு அவனோடு இவ்வாறு சொல்லலுற்றாள் : “ அண்ணா ! நான் பஞ்சவடியிலிருந்த காலத்தில் ஆரிய இராசகுமாரரிருவர் வடக்கேயிருந்துவந்து அங்கு தங்கினர். அவருள் மூத்தவன் பெயர் இராமன். அவன் மனைவி சீதையென்பாள் ; அவளைப்போல வடிவும் அழகும் உள்ள பெண் வேறொருத்தியையும் நான் எங்கும் கண்ட தில்லை. அன்னம்பழித்த நடை, ஆலம்பழித்த விழி, அமுதம் பழித்த மொழி, சின்னஞ்சிறுத்த இடை, பென்னம் பெருத்த நுதல், கன்னங்கறுத்த குழலுடைய அவள், இராமன் என்னும் அலிக்கு மனைவியாய் வந்தது என்ன கொடுமை? அரசற்குரித்து அருங்கலம் என்றாற்போல உன்போலும் விறல்வீரனொருவனுக் குரியாளவள் என் நான் என்னுள் ளத்திற் தேறி, அவளை உன்னிடஞ்சேர்ப்பிக்கக்கருதி, இராச குமாரரிருவரு மில்லாதகாலம் பார்த்து அவளைத் தூக்கிக் கொண்டுவந்தேன். நீ அதிர்ஷ்டங்கெட்டவன். எங்கோ நின்று ஆடவரிருவரும் வந்து அவளை மீட்டதுமன்றி என் னையும் அவமானப்படுத்தினர். நான் போய் இதைக் கரதூஷணருக்குச் சொல்ல, அவரும் போய் அவ்வாரியப் பிசாசுகளிரண் டோடும் போர்செய்து மடிந்தனர். என் அவமானத்தையும் கரதூஷணர் சாவையும் நான் எண்ணவில்லை ; கைக்கெட்டினது வாய்க்கெட்டவில்லையென்பதுபோல, சீதையைத் தூக்கிவந்தும் உன்னிடங் கொண்டுவந்து சேர்க்கத் தவறிப்போனேனே யென்று வருந்துகிறேன். உன் மனைவி மண்டோதரிபோல ஆயிரவர் பெண்கள் சீதையின் காற்றூசு பெறுவார்களோ? உனக்குரியவள் சீதை, சீதைக்குரியை நீ. இனி உன்னிஷ்டம். நான் செய்வது செய்தும் எல்லாம் வீணாயிற்று.”

தங்கையின் சொல்லைக் கேட்ட இலங்கை வேந்தன் இளைய னல்லன், முன்பின் ஐம்பது பிராயமுடையான். அவன் மனைவி மண்டோதரி சகல சற்குணமும் வாய்ந்தவள். மேக நாதன் முதலிய மக்கள் பெரும் வீரர். ஆயினும் கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது என்பதுபோல, தன்னியற்கை யறிவும் கல்வியும் பத்தியும் போகவிட்டுக் காமப்பேய் பிடித் தலைக்க எப்படியாயினும் சீதையை இலங்கைக்குக் கொண்டு வந்து அவளையே தன் பட்டத்துமகிஷி யாக்கத் துணிந்தான் இராவணன். தான் நினைத்ததை முடிக்கத் தனக்குத் துணை வேண்டுமென்றும் தக்க துணை செய்யக்கூடியவன் தாடகைமகன் மாரீசனேயென்றும் இராவணன் எண்ணி அவனையழைத்து, தன்கருத்தை அவனுக்கறிவித்து “நீ போய் எப்படியாயினும் இராமனையுந் தம்பியையும் சீதையைவிட்டுப் பிரித்து வெகு தூரம் கொண்டுசெல்லல் வேண்டும். அப்பொழுது நான் சீதை யைத் தூக்கிக்கொண்டு இலங்கை வந்து சேருவேன்” என்றான்.

மாரீசன் இதைக்கேட்டு,

“நாரங் கொண்டார், நாடு கவர்ந்தார், நடையல்லா வாரங் கொண்டார், மற்றொரு வர்க்காய் மனைவாழும் தாரங் கொண்டார் என்றிவர் தம்மைத் தருமந்தான் ஈருங் கண்டாய்;
கண்டக ருய்ந்தா ரெவரையா?

“எம்பிக் கும்மென் னன்னை தனக்கும் இறுதிக்கோர்
அம்புய்க் கும் போர் வில்லி தனக்கும் அயனிற்கும்
தம்பிக் கும்மென் னாண்மை தவிர்ந்தே சயநிற்கும் ;
கம்பிக் கும்மென் நெஞ்சவ னென்றே கவல்கின்றேன்.”

என்று கூறித் தடுக்க முயன்றான். “இராம இலக்குமணர்கள் உன்னை ஒருவேளை கொல்வார்கள் என்று அஞ்சுகின்றனை; நான் உன்னை இப்படிப் பணிந்து கேட்கவும் நீ போக மறுத்தால் இங்கு இப்பொழுது என் கையால் நீ சாவது ஒருதலை” என்றான் இராவணன். ஈற்றில் மாரீசன் உடன்பட்டான்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *