இராமன் கதை
பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி

25. சீதா இராமர்


பத்துநாள் முடிந்தபின் இராமன் சீதையைப்பார்க்க அசோக வனம் சென்றான். அவனோடு இலக்குமணன் சுக்கிரீவன் அங்கதன் அனுமன் சாம்புவன் ஆகிய ஐவரும் சென்றனர். இராமனை விபீஷணனும் திரிசடையும் ஏற்று உபசரித்தனர். அதன்பின் திரிசடை சென்று சீதையை அழைத்துவந்தாள். சானகி தாசரதி பாதத்தில் விழுந்து நமஸ்கரித்தபின் எழுந்து நின்று கைகூப்ப, இரண்டு கண்களிலிருந்தும் ஆனந்தபாஷ்யஞ் சொரிய, மெய் சிலிர்க்க, பேச நாவெழாது நின்றனள். அப் பொழுது இராமனைப்பார்த்துத் திரிசடை கூறுவாள் : “இரகு குலாதிப, இராவணனை அவன் கிளையோடு போர்க்களத்தில் மடிவித்தது தங்கள் வில்லாண்மையும் கூடவந்தோரது பலமும் என எண்ணற்க. கற்புக்கரசியாகிய சீதையின் கண்ணீரே இராவணன் குலத்தை யறுத்தது. இவ்வுத்தமியின் கடுந்தவமே உங்களுக்கெல்லாம் வெற்றி தந்தது. கற்புக்கு இலக்கு அருந்ததி யென்பர். அருந்ததியென்னும் பெண்ணை நாம் கண்ட தில்லை. நாம் கண்ட தெய்வம் சீதாதேவியாரேயன்றி வேறொருவருமல்லர். இவரை ஏற்றுக்கொள்ளற்கு ஐயஞ் சிறிதும் வேண்டா.” இவ்வுரை திரிசடை சொல்லிமுடிக்க, விபீஷணன், ” என்மனத்திலுள்ளதையே என் மகள் சொன்னாள். இதன் மேல் ஒன்றுஞ்சொல்ல எனக்கு இயலாது ” என்றான். உடனே அனுமன், “வேறொரு சான்று ஏன் ? இராவணன் வந்ததும் பிராட்டியார்காலில் விழுந்ததும் அவர் அவனைச் சினந்துசீறினதும் நான் என் கண்ணாற் கண்டவை” என்றான். இராமன், ” என் மனைவியை நான் ஏற்றுக்கொள்ளற்கு அயற்சான்றுகள் வேண்டுமோ? திரிசடையும் விபீஷணனும் அனுமனும் கூறினவற்றை இங்கு வந்துளீர் எல்லீரும் கேட்டிருக்கின்றீர். நுமக்கெல்லாம் இச்சான்று அவசியம் போலும். எனக்கு ஒருவருரையும் வேண்டுவதின்று. நான் சீதையையறிவேன்; சீதை என்னையறிவாள். சீதையின் மெய்த்தளர்வு முற்றும் அகன்றபின் திரிசடைக்கும் அங்கதனுக்கும் மணஞ்செய்து வைப்பேம். அதன்பின் நாடுவோம் அயோத்தியை ” என்றனன்.

பின்னும் இருபது நாட் கழிந்தபின் திரிசடைக்குத் திருமணம் நடந்தேறியது. மண்டோதரி திரிசடையை அலங் கரித்து மணவறைக்குக் கொண்டுவந்தனள். இராமனும் சீதையும் அங்கதனுக்குப் பெற்றார் செய்யும் கிரியைகளைச் செய்தனர். விபீஷணன் திரிசடை கையைப்பிடித்து அங்கதன் கையுள் வைத்து, தாரைவார்த்துத் தத்தஞ்செய்தனன். அக்னிப்பிரதட்சணஞ்செய்துவருகையில் அங்கதன் திரி சடைக்கு அருந்ததியைக்காட்ட, அவள், ” எனக்கேன் அவ் வருந்ததி, இங்கு சீதையார் நிற்க?” என்று சொல்லிச் சீதையினடியில் விழுந்து எழுந்தனள். இவ்வாறு முடிந்தது விவாகம்.

சீதா இராமரோடும் இலக்குமணரோடும் வதூவரரும் புறப்பட்டனர். திரிசடை மண்டோதரியைப் பார்த்து, ” அம்மா, நான் வேற்றூர் செல்கின்றேன் ; எனக்குத் தாயில்லை ; நீங்களே என்னோடு வந்து, ஒருபொழுதும் என்னை விட்டுப் பிரியாதிருக்க வேண்டும்” எனக் கேட்க, மண்டோ தரியுமிசைந்து திரிசடையோடு கிட்கிந்தைக்குப் போனாள். இராமன் விபீஷணனை ஆசீர்வதித்து, “நான் எங்கு சென்றாலும் என் கண் உன்னையும் இலங்கையையும் நாடிநிற்கும்” என்று சொல்லிப் புறப்பட்டான்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *