
இராமன் கதை
பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி
23. போர்
இலங்கையைவிட்டுப் புறப்பட்ட அனுமன் தான் விட்டுவந்த சேனையை யடைந்து, அவற்றோடு கிட்கிந்தைக்குத் திரும்பினான். அங்கு சுக்கிரிவனைக்கண்டு இலங்கையில் நிகழ்ந்தனவற்றை அவனுக்குச் சொன்னபின், மதங்கமுனிவ ராச்சிரமத்துக்கு இராமனிடம் சென்றான். ” எப்போது திரும்பி வருவனோ அனுமன்?” என ஏங்கின முகத்தோடு இருந்த இராமன் திரும்பிவந்த அனுமனைக் கண்டவுடனே, ” இவன் இப்போது என்ன சொல்வானோ ?” என வெண்ணி நடுங்கி வியர்த்தான். பேச நா வெழவில்லை. உள்ளத்தின் வருத்தமெல்லாம் முகத் திற்கண்ட அனுமன், “கண்டேன், கண்டேன், கண்டேன் சீதையை ” என ஆரம்பித்தான். அச்சோல் அமிர்தம்போல நுழைந்தது இராமன் செவியில். அச்சமும் ஐயமும் நீங்கின. ஆனந்தம் முகத்தில் விளங்கினது. “இன்று எனக்குப் புத்துயிர் அளித்தாய் அனும்” என்றான் இராமன். பின் அனுமன், இலங்கையில் அசோகவனத்தில் தான் சீதையைக்கண்டதும், இராவணன் அங்குவந்து அவளுக்கு நயத்துடனும் பயத்துட னும் பேசித் திரும்பினதும், தான் சீதையைச் சந்தித்ததும், சீதை நாயகருக்குச் சொல்லியனுப்பியதும் எல்லாம் ஒன்றும் விடாமல் விரித்துரைத்தான். அன்றியும் சீதை கொடுத்த சூளாமணியையும் அரைவார்ப்பையிலிருந்தெடுத்து இராமன் முன் வைத்தான். மிதிலையிற் சானகியைமணந்த அன்று கண்ட சூளாமணியை இராமன் ஒருநாளும் மறந்தவனல்லன். அதை மறுபடியுங்கண்ட இராமனைக் கார்பெற்ற தோகை யென்பேமோ? கண்பெற்ற வாண்முக மென்பேமோ? நீர் பெற்றுயர்ந்த நிறை புலமென் பேமோ? பாற்கடலிலிருந்து வந்த அமிர்தத்தை உண்ட தேவரும், இராமன் சூளாமணியைக் கண்டு உவப்புற்றது போல உவப்புற்றிலர். அனுமன் சொன்ன சொல் எல்லாம் செவிவாயாக நெஞ்சுகளனாக மண் டினன் இராமன். ” என் சீதை இன்னும் உயிரோடிருக்கின் றாளோ? இராவணன் கைப்பட்டும் கற்பழிந்திலளோ? என்னையுமின்னும் நினைக்கின்றாளோ? என்று நான் காண்பேன் என் கண்ணை ” என்று பாடினன், ஆடினன் இராகவன். அதன்பின் அனுமன் தான் இராவணன் சபையிற் சென்றதும் அங்கு கண்டதுங் கேட்டதும் எல்லாம் விஸ்தரித்தான். “இனி நாம் போருக்குச் செல்வதே கடன் ” என்று இவ்வாறு பேசிக்கொண்ட டிருக்கையில், அங்கு வந்து இராமனை நமஸ்கரித்துநின்றுன் விபீஷணன். விபீஷணன் வாய்திறந்து பேசுமுன்னர் அனுமன் இராமனை நோக்கி, “இவர் இராவணனுக்குக் கனிஷ்ட சகோதார் ; விபீஷண னென்னும் பெயரினர். மூதேவியோடு பிறந்த சீதேவிபோல, இராவணன் கும்பகன்னன் போலாது, அறங்கிடந்த நெஞ்சினர். வேத்தவையில் அரசனைச் சிறிதும் அஞ்சாது அறமெடுத்து மொழிந்த ஆண்சிங்கம். இவர்மகள் திரிசடையார் ஒருவரே தேவியாருக்கு உற்ற துணையாவார்” என்றான். விபீஷணனும், “மன்னவரேறே, இலங்கை வேந்த னுக்கு நான் எடுத்துச்சொன்ன அறமெல்லாம் பாலை நிலத்திற் பெய்தமழைபோல வீணாயிற்றன்றிப் பயனொன்றுந் தந்திலது.
‘விதிவலியாற் கெடுமதிகண் தோன்றா தன்றே.’
“ஆகவே இராவணன் கிளையோடு நாசமுறுவது ஒருதலை. ஆயினும் அவனையும் அவன் குடும்பத்தையும் நீவிர் அழிக்கை யில், குற்றமொன்றுஞ்செய்யாத பேதையரான இலங்காவாசி களையும் அழித்து நாசஞ்செய்யேனென அபயந்தந்தருள வேண்டுமென்று உம்மைச் சரண்புகுந்தேன். சரணம், சரணம் இராகவ சரணம் ” என்று இராமனடியில் வீழ்ந்தான். உடனே இராமன் அவனைத் தூக்கியெடுத்து, ”விபீஷணா, துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலனஞ்செய்வதன்றோ அரசன் கடன்? அன்றி, தீயாரை அழிக்கையில் நல்லாரையும் உடன் அழிக்கலாமோ? யான் அவ்வாறு செய்யேன். நீ அஞ்சற்க. அன்றியும் இராவணனும் கும்பகன்னனும் மேகநாதனும் அட்சனும் பட் டொழிந்தால் இலங்கைக்கு அரசன் நீயன்றி வேறு யார்? உன்னை இலங்காதிபதியாக்குவேன் ; நீ என்னோடிரு ” என்றான். விபீஷணன், “நான் இங்கே இருப்பதுமன்றி இராவணன் செய்யும் சதியெல்லாம் அப்போதைக்கப் போதறிக் தறிந்து உமக்கு வெளிப்படுத்துவேன். இராவணசங்காரத் துக்கு வேண்டிய யாவும் யான் சொல்லுவேன்” என்றான். இப்படி விபீஷணன் பேசுகையில் அங்கு வந்தான் சுக்கிரிவன். விபீஷணன் யாரென்றறிந்த கிட்கிந்தைமன்னன் இராமனைப் பார்த்துக் கூறுவான் :
“ஐய, தாம் செய்தது என்னை? இவனை முன்பின் அறியீர். பிறந்தநாட்தொடங்கி அன்புபாராட்டின தமை யனைவிட்டு வந்தேன் என இவன் சொல்வது மெய்யோ பொய்யோ? மெய்யேயாயினும் இன்று தமையனுக்கு இரண் டகம் பண்ணினவன் நாளைக்குத் தமக்கு என் செய்யான்? அன்றி இவன் உத்தமனேயாகுக. நாளைக்கு இராவணன் வந்து தமது காலில்விழுந்து ‘ என்குற்றத்தைப் பொறுத்தருள்க, இதோ சீதை, இவ்வுத்தமியை அங்கிகரிக்க’ என்பனேல் தாம் அவனை மன்னிப்பீர். அப்போது இலங்கைக்கு இராசா இராவணனோ விபீஷணனோ? சொல்லும் ” என்றான். அதற்கு இராமன், ” சுக்கிரிவா, ஒருகாரியத்தை யோசித்துத் துணியச் சிலருக்குப் பலநாள் வேண்டும். மதியூகிகளுக்கு இரண்டு விநாடி போதும். இத்துணைக்காலம் அனுமன் உன்னோடிருந்தும் நீ அவனையறிந்திலை. நான் அவனையறிவேன். இராவணன் சபையில் நடந்தவற்று ளொன்றையும் விடாமல் உண்மையறிந்த பின்பே நான் விபீஷணனுக்கு அபயங்கொடுத்தேன். நீ சொல் லுகிறபடி நாளைக்கு இராவணன் செய்வனேல் விபீஷணனை அயோத்திக்கு அரசனாக்குவேன் ” என்றான். இதைக்கேட்ட அனுமன் விபீஷணனை நோக்கி, ” அஞ்சன்மின், தசரத சக்கரவர்த்தி மைந்தனார் உரைதிறம்பார் ” என்றான்.
இதன்பின் போருக்கு வேண்டிய ஆயத்தம் செய்யப்பட் டன. நாற்படையோடு மலைகளையும் ஆறுகளையும் சுரங்கங் களையும் காடுகளையுங் கடந்து கடற்கறை சேர்ந்தனர். போர்த் தொழில் விரும்பாத இராமன் இராவணன் மேலுற்ற பரிவால் இன்னுமொருமுறை இலங்கைக்குத் தூதனுப்ப எண்ணி அங்கதனை விடுத்தான். அங்கதன் இலங்கை வேத்தவையை அடைந்து இராவணனைப்பார்த்து, ” உம்மைக் கொல்ல மனமில்லாத இராமர் இப்பொழுதாயினும் சீதையை அனுப்பிவிடு வாயா? நீ ஏன் சாகவேண்டும்?’ என்று சொல்லுகிறார் ” என் றான். இராவணன் சிரித்து, “நன்று; நன்று உன் வார்த்தை , இராமன் போர்செய்ய அஞ்சுகிறான் ; ஆயினும் வீரன் போலப் பேசுகிறான். நான் சீதையை விடுவதில்லை. அதுநிற்க, அங்கதா, நீ வாலி மைந்தனல்லையோ? உன் தந்தையை ஒளித்து நின்று கொன்ற பாதகனுக்கு நீ உதவி செய்ய நினைத்த தெப்படி ? சீச்சீ! இராமனை விட்டுவிட்டு என்னைச்சேர்; நான் உன்னைக் கிட்கிந்தைக்கு அரசனாக்குவேன் ” என்றான். அங் கதன் அதைக்கேட்டு, “இராவணா, என்னை உன் கபட நாடகம்! நான் இராமர் பக்கத்திலிருந்தால் அவருக்கே வெற்றிவரும் என அஞ்சின நீ என் உதவி கேட்கிறாய். அப்படி வெளியே சொல். அதைவிட்டு ஆடுநனைகிறதென்று கோநாய் அழுவது போல ‘ கள்ள இரக்கம் பாராட்டுகிறாய்! எந்தையார் இறக்கு முன் அவரே என்னை இராமர்கையில் ஒப்புக்கொடுத்ததை நீயறிந்திலை போலும். இது மன்றொன்று விரித்தல். இராமர் சொல்லியனுப்பிய சொல்லுக்கு விடைகூறு ” என்றான். “முன்வைத்தகாலைப் பின் வைப்பதில்லை இராவணன் என்று முன்வந்த தூதனிடம் சொல்லியனுப்பினேனே. நான் மனம் மாற வாலியல்லேன் ” என்றான் இராவணன். “நீயும் உன்கிளை யும் மாண்டீர்” என்று சொல்லிவிட்டு அங்கதன் இலங்கையை நீங்கி இராமனிடஞ் சேர்ந்தான்.
இராமன் படைகளோடு இலங்கைக்கரையை யடைந்து, படையை மூன்றணியாக வகுத்தான். வல அணிக்குச் சுக்கிரிவனையும் இட அணிக்கு இலக்குமணனையும் தலைவராக்கி, மூலபலத்துக்குத் தானே தலைவனானான் இராமன். அங்கதனும் அனுமனும் அப்போதைக்கப்போது மூன்று அணிகளுக்கும் உதவி செய்யும்படி ஏவினான். இலங்கைப்படையையும் மூன்று அணிகளாக வகுத்தான் இராவணன். வல அணிக்குக் கும்ப கன்னனையும் இடஅணிக்கு மேகநாதனையும் தலைவராக்கி, மூல பலத்துக்குத் தானே தலைவனானான் இராவணன். அட்சனை இம் மூன்று அணிகளில் எதற்காவது சமயத்துக்குத்தக்கபடி. உதவி செய்ய ஏவினான் இராவணன். இரண்டுசேனையும் கைகலந்தன. முதல் நாட்போரில் இராவணன் தேரிலேறி வில்லெடுத்துக் கொண்டு தனித்துவந்து இராமனைத் தனிப்போருக்கழைத் தான். இராம இராவணரிருவரும் வேறொரு சேனையுமின்றித் தனியே மலைந்தனர். அப்பொழுது இராமன் இராவணனது தேரிற்பூட்டிய குதிரைகளை அம்பினாற்கொல்ல, இராவணன் தேரினின்றுங்குதித்து, ” இராமா, நீயுங் குதி” என்று சொல்லுமுன்னரே இராமனுந் தேரினின்று குதித்து இரா வணனைப் பொருதான். நெடுநேரம் இருவரும் பொரு தனர். பார்த்துநின்றவர், யார் வெல்வான் யார் தோற்பான் என்று சொல்லமுடியவில்லை. ஆயினும் ஈற்றில் இராமன் தன் அம்பினால் இராவணன் சிலைகாணை அறுத்துவிட்டான். “நிராயுதபாணியாய் நிற்கும் இராவணனைக் கொல்லுதல் பாவம். முன்னொருமுறை வாலியைக்கொன்ற பாவம் என் மனத்தை யின்னுமழுத்துகின்றது” என இராமன் எண்ணி, ” இராவணா, நிராயுதபாணியாயினை, நின்னைக்கொல்லல் எனக்கு அழகன்று, புகழன்று ; திரும்பிப்போ உயிரோடு. இப்பொழுதாயினுஞ் சீதையைவிடு; இல்லையேல் நாளைவா சாக ” என்றான்.
தேரிழந்து வில்லிழந்து நிராயுதபாணியாய்ச் சென்ற இராவணன் அவ்விரவு துயின்றிலன். அவமானம் நெஞ்சை நிரப்பிற்று. “நானின்று இராமனைத் தனிப்போருக்கழைத்தது என் மடைமை. நாளைக்கு நாற்படையோடுஞ்சென்று வெல்லு வேன் ; அல்லது, போரில் மடிவேன். இராமன் என்மே லிரங்கிப் பரிந்து பேசவொட்டேன் இனி ” என்று ஒருவாறு ஆறியிருந்து பொழுதுவிடிந்தவுடன் யுத்தசன்னத்தனாய் வந்தான் இராவணன். இரண்டுசேனைகளுக்கும் பல நாட் போர் நடந்தது. இரண்டு பக்கத்திலும் மாண்டார் பல்லாயிர வர். ஆயினும் இராமன் பக்கத்தில் தலைவரொருவரும் மாண்டிலர். இராவணன் சேனையிலோ நாற்படைகளிலும் பல் லாயிரவர் மாண்டதன்றி அனுமன் கையாற் செத்தான் அட்சன். இலக்குமணன் கையால் மாண்டான் மேகநாதன். கும்பகன்னனை இராமன் கொன்றான். தம்பியையும் மக்களிருவரையும் பல்லாயிரவர் சேனாவீரரையும் இழந்த இராவணன் தன்கதியை முன்னமே யறிந்தவனாய், ”இனியேன் எனக்கு வாழ்வு? ‘ சேயோடு தான் பெற்ற செல்வம்போம். மேகநாதனும் அட்சனும் மாண்டபின் நான் உயிர் வாழ்வது தகுதியோ? தம்பி கும்பகன்னா! அந்தப் பாதகனைப்போல நீ இராமனிடஞ் சரண்புகவில்லை. என்பொருட்டு நீ மாண்டாய்; உன்னையிழந்த பின் நான் உயிர் தரிப்பேனோ? சிங்கமுகனை யிழந்த சூரன் மடியவில்லையோ? நானும் மடிவேன்” என்று புலம்பினான். மண்டோதரி அவன் காலில்விழுந்து, “ஐயா! இப்பொழுதாயினும் சீதையை அனுப்பிவிடுங்கள் ; உங்களிடம் மங்கிலியப்பிச்சை கேட்கிறேன்” என்று கதறினாள். இராவணன், “சீச்சீ! சவமே போ; நீ தாலியறுத் தால் எனக்கென்ன? சீதையைவிட்டு உயிர்வாழ்வேனோ? அவளே என்னுயிர்; அவளை நான் இராமனிடம் அனுப்புவ தில்லை” என்று இடித்துரைத்தான். “ஐயா, எனக்காக உயிர்வாழ உங்களுக்கு மனமில்லையேல், உங்கள் குடிகள் பொருட்டாயினும் நீங்கள் உயிர் தரித்திருந்து அவர்களையாளல் வேண்டும். சீதையை அனுப்பிவிடுங்கள். அல்லற் பட் டாற்றா தழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை.” என்றாள் மண்டோதரி. ” குடிகளை யாள விபீஷணன் இருக் கின்றான். அவன் தான் தருமப்பிரபு. குடிகளெல்லாரும் அவனையே நேசிக்கின்றார்கள். அவன் எப்போது திரும்பி வருவான்? என்று காத்திருக்கின்றனர். நான் செத்தபின் நீயும் அவனை மணந்து கொள் ; அப்போது சுமங்கிலியா யிருப்பாய். என் ஆவி சீதையே ; சீதையே என்னாவி” என்றான் இராவணன். “சிவ சிவா! சிவ சிவா.! இந்தச் சொல்லைக் கேட்கவோ இத்தனை நாளும் உயிரோடிருந்தேன்! நீங்கள் இறந்த அன்றே என்னுயிரும் போய்விடும். இப் பிறப்பில் நான் பெறாத பாக்கியத்தை இன்னொரு பிறப்பி லாயினும் பெறுவேன்” என்றாள் மண்டோதரி.இராவணன் போர்க்களஞ்சென்று, காலை தொடங்கிப் பிற்பகல் மட்டும், குட்டிகளைப் பறிகொடுத்த சிங்கம் போல, அச்சஞ் சிறிதுமின்றித் தன்னுயிரைக் காக்க வேண்டும் என்ற எண்ணமேயில்லாமல், எதிரிசேனையிற் புகுந்து, இங்குமங்கும் முன்னும் பின்னும் பல்லாயிரவரைக் கொன்றான். ஈற்றில் இராமன் வா, அவனோடு பொருது வலியற்று மதியற்று, “இராமா, நீயே வென்றாய்” என்று சொல்லுமுன், இராமன் வாளி அவன் மார்பை ஊடுருவிச்சென்றது. வேறோரம்பு அவன் தலையை விழுத்திற்று. சுத்தவீரன் காமப்பேய் ஆட்ட ஆடி, நாய்போற் களத்தில் விழுந்து அழிந்தான்.



