இராமன் கதை
பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி

11. வனவாசம்


பரதன் பரிவாரத்துடன் போயினபின் தாசரதியும் சானகியும் இளையவனும் சிலகாலம் சித்திரகூடமலையிற்றங்கி வாழ்ந்தனர். அவர்களுறைந்த விடத்துக்கருகே பல ஆச்சிரமங்களிருந்தன. அவற்றில் இருடிகளும் இருடியத்தினிமாரும் மாணவர் சூழ வேதமோதுதல் ஓதுவித்தல் எரியோம்புதல் தவஞ்செய்தல் முதலியவற்றிற் காலங்கழித்து வந்தனர். மூவரும் இவ் வாச்சிரமங்களைச் சந்தித்து, முனிவரையும் பத்தினிகளையும் வணங்கி, அவராலுபசரிக்கப்பட்டு, யாதொரு கவலையுமின்றிப் பொழுதுபோக்கினர்; பெரியோரிடத்தும் தம் உடன்மாணவ ரிடத்தும் பல பாடங்களைக் கற்றுக்கொண்டனர். ஆச்சிரமங் களிலுள்ளவருக்கு இயன்றமட்டும் எவ்வகையிலும் பணி விடை செய்து மகிழ்ந்தனர். ஆச்சிரமவாசிகளும் இம்மூவரும் தங்களோடிருந்ததா லுவகை கொண்டனர். இப்படிச் சில வருஷங்கழிந்தபின் சித்திரகூடத்தைவிட்டுத் தென்றிசை நாடி விந்தியமலையைக்கடந்து தண்டகாரணியஞ் சேர்ந்தனர். தெற்கே வரவர ஆரியர் அருகவும் திராவிடர் பெருகவும் தலைப் பட்டனர். சிலகாலம் கோதாவரியாற்றங்கரையில் வசித்து மகிழ்ச்சியுற்றனர். அங்கிருக்கையில் விராதன் என்னுமொரு கொடியன் மூவரையுங்கண்டு சீதைமேல் மோகங்கொண்டான்; அவளோடிருந்த ஆடவரிருவரும் தன்னிலும் வலி குறைந்தா ரென்றெண்ணிக் காமமயக்கத்தால் மைதிலியைத் தூக்கித் தன் தோள் மேலிருத்திக்கொண்டு ஓடினான். அதைக்கண்ட இராம இலக்குமணர் அவனைப் பின்றொடர்ந்து சீதையை மீட்டனர். விராதனைக் கொன்றான் இராமன். முன் விசுவாமித்திரர்செய்த யாகத்தை அழிக்கவந்தவருள் தாடகையையும் சுபாகுவையும் இவர்கள் கொன்றது முன்கண்டுளோம். இப்பொழுது வன வாசகாலத்தில் இராமன்கையால் கொலையுண்டிறந்தவர்களில் முதல்வன் விராதனே. வேறொருநாள் தமிழனொருவன் கழுகுக்கொடியன் இங்குவந்தான். வனத்திலிருந்த ஆரியர் மூவரையும் சிறிதுற்று நோக்கி, ”நீவிர் வடநாட்டீர்போலும் இங்குவந்த காரணம் யாதோ?” என வினவினன். அதற்கு இராமன், “நாங்கள் கோசலநாட்டேம், எங்கள் தந்தை தசரதர்; அவரிறந்து போயினர்; என் தம்பி பரதன் இப்பொழுது இராச்சியவிஷயங்களை மேற்பார்க்க, நான் என் மனைவி சீதையோடும் தம்பி இலக்குமணனோடும் அரணியசஞ்சாரஞ் செய்துவரு கின்றேன் ; என் பெயர் இராமன்” என்றான்.

இதைக்கேட்ட தமிழன், ” என் பெயர் சடாயு ; உங்கள் தகப்பனார் தசரதர் எனக்கு உற்ற நண்பர் ; பலமுறை தசரதர் சத்துருக்களோடு யுத்தஞ்செய்யப்போனபோது என்னையுந் தம்முடன் அழைத்துச் செல்ல, அரிய மன்ன ராகிய அவரும் தமிழனாகிய நானும் ஒருவருக்கொருவர் அருகில் நின்று உடன்பிறந்தார்போல யுத்தஞ்செய்திருக்கி றோம். ஒருநாள் வலியனான மாற்றானொருவனைப் போர்க் களத்திலே கொன்றபின் தசரதர் என்னை நோக்கி, ‘சடாயு, நீ என் உயிர் , நான் உன் உடல்’ என்று கூறினார். உடலை விட்டு உயிர்போவது கண்டுளோம்; உயிரைவிட்டு உடலைக் கொண்டுபோன நமன் மடையன். ஐயோ ! இனி என் நண்பனை என்று காண்பேனோ? கொடையிற் கற்பகத் தையும் தண்மையிற் சந்திரனையும் வென்றவர், சத்தியத்தில் தம்முன்னோன் அரிச்சந்திரனுக்கு எவ்வாற்றானுங் குறைந்தவ எல்லர். என் நண்பரைப்பிரிந்த கலக்கமொருபாலிருக்க அவர் பிள்ளைகளாகிய உங்களைக் கண்டது எனக்கு மெத்தச் சந் தோஷம். நீங்கள் மூவிரும் என் பிள்ளைகள் ; நான் உங்கள் தகப்பன் ; நீங்கள் இங்கே வசிக்கும் பொழுது என்னாலியன்ற உதவி உங்களுக்குச் செய்வேன்” என்று சொல்லி அவர்களைத் தழுவி ஆசீர்வதித்துவிட்டுப் போயினன்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *