இராமன் கதை
பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி

7. கௌசலை இராமர்


இதைத் தாய்க்கும் சீதைக்கும் சொல்லும்படி கௌசலை கோயிலுட் புகுந்தான் இராமன்.

குழைக்கின்ற கவரி யின்றி, கொற்றவெண் குடையு மின்றி, இழைக்கின்ற விதிமுன் செல்ல, தருமம்பின் னிரங்கி யேங்க, மழைக்குன்ற மனையான் மௌலி கவித்தனன் வரும்என்றென்று தழைக்கின்ற வுள்ளத் தன்னாள் முன்னொரு தமியன் சென்றான்.

இவ்வாறு வந்தமகனைக் கௌசலை கண்டு, “மகனே! நீ இப்படி வருவது என்ன காரணம்பற்றியோ ?” என்றாள். இராமன், ” அம்மா, மகாராசா என் மேல் மிக அன்பு வைத் துளார், ஆதலால் என் தம்பி பரதனைக் கோசல நாட்டு மன்ன னாக நாளைக்கு முடிசூட்டுவார் ” என்றான். இதைக்கேட்ட கௌசலை சிறிதும் மனங்கோணாமல், “சந்தோஷம், சந்தோஷம், நீயாண்டாலென்ன? உன் தம்பி பரதனாண்டாலென்ன? ஒன்று மெய்: பரதன் உன்னிலும் நல்லவன்; மகாராசா செய்தது சரி, மெத்தச்சரி; நீ இதற்கு வருந்துதல் தகாது” என்றாள். உடனே இராமன், ” அம்மா, இவ்விஷயத்தில் நானும் உளங் களிக்கின்றேனேயன்றி மனஞ்சிறிதும் வருந்திலேன், நான் வேறு பரதன் வேறு என்று நான் கனவிலும் எண்ணின தில்லை. பரதன் என்னிலும் நல்லவனென்பது எனக்குப் பாலியமுதற் தெரியும். பல வருஷங்களுக்கு முன்னே நாங்கள் நால்வேமும் தலைவாசலிலிருந்து அவல் தின்று கொண்டிருந்தோம் ; ஓர் ஏழை மிகப் பசித்துவந்து தன் பசி தீர யாதேனும் தரும்படி எங்களிடம் இரந்தான். நானும் இலட்சுமண சத்துருக்கினரும், ‘ எங்களிடத்தி லொன்றுமில்லை, போ, போ’ என்றோம்; பரதனோ தன் மடியிலிருந்த அவல் முழுவதையு மெடுத்து இரவலனுக்குக் கொடுத்துவிட்டான்; எங்கள் நால்வே முள்ளும் பரதனே நல்லவனென்பது அன்று முதல் எனக்குத் தெரியும். அன்றியும், இராச்சியபாரந் தாங்குதல் எனக்கு எளிதன்று; அவ்வருத்தத்தினின்றும் மகாராசா என்னை நீக்கினது பேரருளே ” என்றான். ”நீ சொன்னதெல்லாஞ் சரி” என்றாள் கௌசலை. இராமன்: “நான் சொல்லவேண்டிய விஷயம் இன்னுமொன்றுண்டு, மகாராசா எனக்கும் ஒரு கட்டளை விதித்திருக்கிறார் : நான் இன்றே கோசலநாட்டைக் கடந்து பதினான்குவருஷம் மரவுரிதரித்துத் தவஞ்செய்தல் வேண்டும் என்பதே.” இச்சொல், காய்ச்சின நாராசம் போல, கௌசலை செவியிற் புகுந்தது. “இஃதென்ன அநியாயம்! இஃதென்ன விபரீதம்! இஃதென்ன கொடுமை?! உன்னை நாட்டைவிட்டுத் துரத்த நீ என்ன அக்கிரமஞ் செய்தாய்? குமரிமேற்கொண்ட காமத்தால் கிழவனுக்குப் பைத்தியம் பிடித்தது போலும் ” என்றாள் கௌசலை. உடனே இராமன், “அம்மா! இப்படிப் பேசவேண்டா ; பைத்தியம் பிடித்தது இராசாவையல்ல, உங்களைத்தான். மகன் மேலுள்ள பைத்தியத்தால் மகாராசாவையும் இகழத்தொடங்கினது உங்கள் வாய் ; ‘அநியாயம்’ ‘விபரீதம்’ ‘கொடுமை’ என இப்படிப்பட்ட சொற் களால் பத்தினியொருத்தி கணவனை யிகழ்வாளோ? என் தந்தையை இவ்வாறு வேறொருவர் பேச நான் கேட்பேனோ? என் சிற்றன்னை கைகேயி செய்த குற்றந்தா னென்னோ? உங்கள் இயற்கைப்புத்தியும் கணவன் மேற்பத்தியும் தங்கை மேலன்பும் எங்கே போயின? ஐயையோ ! இதையெல்லாம் உங்கள்வாயிற் கேட்க என்ன பாவஞ் செய்தேனோ நான்?” என்று கலங்கினான். உடனே கௌசலை, ” மகனே! நான் நினைத்தவை பேசினவையெல்லாம் பிழை; நீ இப்பிழையை மன்னிக்கவேண்டும். ஆனால் ஒன்று சொல்லுகிறேன், கேள் : நானும் இன்றே உன்னோடு காட்டுக்கு வருகிறேன்” என்றாள். இராமன் : ” அம்மா, மகாராசா மூர்ச்சித்துத் தரையிலே விழுந்து கிடக்கக் கண்டேன் ; உங்கள் கடமை உடனே அவரிடஞ்சென்று அவருக்குச் செய்யவேண்டிய சிகிச்சையெல்லாஞ் செய்து அவரை யாற்றித்தேற்றுவதே. இத்தனையாண்டு கணவனாருக்கு ஏவல் செய்துவந்த நீங்கள் இன்னுஞ் சிறிதுகாலம் அவரோடிருந்து அவருக்கேவல்புரிவதே உங்கள் கடன். நான் சிறியனுமல்லேன், மூப்படைந் தேனுமல்லேன். என்னைக் காத்துக்கொள்ள என்னாலாகும் ; நீங்களென்னோடுவர அவசியமில்லை ; உடனே மகாராசாவிடம் போங்கள் ; எனக்கு விடைதாருங்கள் ” என்றான். கௌசலை இராமனுக்கு விடைகொடுத்துத் தசரதன்பாற் போயினள்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *