
இராமன் கதை
பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி
12. சூர்ப்பணகை
மூவரும் பஞ்சவடி[2]யென்னும் இடம் போய் அங்கு சில பகல் கழித்தனர். இவரிருந்தவிடத்துக்கருகே ஓரிளங்கைம்பெண் வாழ்ந்தனள். இவள் பெயர் சூர்ப்பணகை. இவள் இலங்கை வேந்தன் இராவணன் தங்கை. இவள் கைம்மையுற்றபின் இலங்கையை விடுத்துப் பஞ்சவடியையடுத்துத் தன்னுறவினர் சிலரோடு வாழ்ந்துவந்தாள். இராம இலக்குமணரும் சீதையும் இங்குவர இவர்களைப் பலமுறை காட்டிற் கண்டனள். இவரோடு பழகி நட்புக்கொள்ள விரும்பினள். பலமுறை இவ ரிருக்குமிடஞ்சென்று இவரோடு அளவளாவி வருவள். இளங் கைம்பெண்ணாகிய சூர்ப்பணகை இராசகுமாரரின் பேரழகைக் கண்டு இருவரிலொருவரை மணஞ்செய்துகொள்ள விரும் பினள். தமிழருட் கைம்பெண்கள் மறுமணஞ்செய்வது தவ றென்று விலக்கப்படவில்லை. ஆகவே சூர்ப்பணகை மறுமணஞ் செய்ய விரும்பியதில் யாதொரு தப்பிதமுமில்லை. மனைவி உயி ரோடிருக்க ஆடவன் வேறு மனைவியரை மணஞ்செய்வது தவ றென்ற கொள்கையுமில்லை. ஆகவே இராமன் மனைவியுடைய னேனும் விருப்பமாயின் சூர்ப்பணகையையும் விவாகஞ்செய்து கொள்ளலாம். தந்தைக்கு மனைவியர் மூவராயின் மைந்தற்கு மனைவியரிருவர் வாய்ப்பது பிழையன்று என்றெண்ணினாள் சூர்ப்பணகை. நாளுக்குநாள் காமம் வளரச் சூர்ப்பணகை தன்மனக்கோளை மெல்ல இராமனுக்கறிவித்தாள். சந்திரன் களங்கமுடையது. இராமசந்திரன் நடக்கையிலும் சில களங்கம் காணப்படுகின்றன. இராமன் சூர்ப்பணகையை மணந்து கொள்ளச் சிறிதும் எண்ணமிலானாயினும் அவளோடு சரசசல்லாபஞ்செய்வது தவறென்று கருதினானல்லன். தன் மனைவி பொல்லாதவளென்றும் தான் வேறொருத்தியை விவாகஞ்செய்யின் புலிபோலச்சீறு வாளென்றும் இலக்குமண னுக்கு மனைவியில்லையென்றும் (இலக்குமணன் மனைவி ஊர் மிளை உயிரோடிருப்பது இராமனறிந்த விஷயமே.) அவனை விவாகஞ்செய்துகொள்வதே புத்தியென்றும் சூர்ப்பண கைக்குச் சொன்னான். இதை மெய்யென்று நம்பி யாதொரு கபடமுமின்றிச் சூர்ப்பணகை இளையவனிடம் போய்த் தன் காதலை யறிவித்தாள். இலக்குமணனும் தான் அரிச்சந்திரன் வழித்தோன்ற லென்பதை மறந்து, தான் இராமனுக்கு இளவல் என்பது உண்மையேனும் அவனுக்குத் தானடிமை யென்றும் ஓரடிமையை மணப்பது அவள் மேன்மைக்கு அடா தென்றும் சீதையினும் அழகியான சூர்ப்பணகையை இராமன் விவாகஞ்செய்து கொள்ளுவா னென்றும் இராமனுஞ் சூர்ப்பணகையுமே மன்மதனும் இரதியும் போல ஒருவருக்கொருவர் பொருத்தமுடையவரென்றும் சொல்ல, இஃதெல்லாம் மெய் யென்று நினைத்த பேதை மீண்டும் இராமனை யடுத்தனள். இராமன் மீண்டும் பல பொய் சொல்ல, ஈற்றில் சூர்ப்பணகை தான் இராமனை மணக்கத் தடையாயிருந்த சீதையை இராமனைவிட்டுப் பிரிப்பின் அவன் தன்னை மணந்துகொள்ள இசைவானென்று கருதி, சீதையைத் தூக்கிக்கொண்டு ஓடத் தலைப் பட்டனள். உடனே இராமனுமிளையவனும் அவளைத் தொடர்ந்தோடிச் சீதையை மீட்டதுமன்றிச் சூர்ப்பணகையுடம்பை ஊறுசெய்தனர். இராமன் சொல்ல இலக்குமணன் அவளை மானபங்கப்படுத்தினன். அவள் தன்னிருக்கை சேர்ந்தனள்.
அங்கிருந்த உறவினருள் கரன் தூஷணன் என்னும் வீர ரிருவர் தங்களுறவினளுக்கு ஆரியரிருவருஞ் செய்த தீங்கைக் கேட்டு அவர்களோடு யுத்தஞ்செய்ய வந்தனர். கர தூஷணர் இராம இலக்குமணரோடு எதிர்த்து நிற்க ஆற்றலுமின்றி, புறங் கொடுத்தோட மனமுமின்றிப் போர்செய்து மாண்டனர். இவையெல்லாம் நடந்தபின்னும் சூர்ப்பணகை இராமன் மேலுள்ள காதல் தணியாதவளாய்ச் சீதையை இராமனை விட்டுப் பிரிப்பின் இராமன் தன்னை மணந்து கொள்ளுவான் என்ற வீணெண்ணம் மாறாதவளாய் அதற்கோருபாயஞ் செய்யக்கருதி இலங்கைக்குத் தன் அண்ணன் இராவணன்பாற் சென்றாள்.



