இராமன் கதை
பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி

18. வாலிவதம்


தன்னிடம்வந்த இராம இலக்குமணரைச் சுக்கிரிவன் அன்போ டுபசரித்தான். அனுமன், இராசகுமாரர் வரலாற்றைச் சுக்கிரிவனுக்கு விவரித்தான். அதன்பின் சுக்கிரிவன் தன் கதையை இராமனுக்குக் கூறினான் : “தக்க காரணமொன்று மின்றி வாலி என்னை எந்நாட்டிலிருந்து துரத்தின துமன்றி, என் மனைவியையும் அபகரித்துக்கொண்டான். அவனைக்கொன்று என் மனைவியை மீட்டுத்தருவீரேல் நானும் என் சேனைகளின் உதவியைக்கொண்டு சீதையை மீட்க உமக்கு உதவிபுரிவேன்” என்றான். இராமன் அதற்கு உடன்பட்டான். இராமன் சுக்கிரிவனை நோக்கி, “நீ போய் வாலியை உன்னோடு மற்போர்செய்ய அறைகூவு. நீவிர் இருவரும் போர்செய்கையில் நான் ஒரு மரத்தின் பின் ஒளித்திருந்து ஒரு வாளியால் அவனை யெய்து கொல்வேன் ” என்றான். அவ்வாறே சுக்கிரிவன் மற்போருக் கழைக்க, வாலி வா, இருவரும் மலைந்தனர். உடன்பிறந்தார் இருவரும் ஒருவனோடொருவன் மலையப் பார்த்து நின்ற இராமன், இவருள் எவன் வாலி எவன் சுக்கிரிவன் என வேற்றுமை கண்டிலன். ஆகவே அவன் அன்று வாலியைக் கொல்ல முயலவில்லை. சுக்கிரிவன் தோற்று, வாலி கைக்குத் தப்பி ஓடிவந்து, ” இராமரே, நன்று செய்தீர் ! இன்று நான் தப்பினது என் தாய்செய்த புண்ணியம், உம்மைநம்பி மோசம் போனேனே!” என்றான். இராமன், தான் அன்று வாளா விருந்ததற்குக் காரணங்கூறி ‘ நாளைக்கும் நீ போய் அறை கூவு. போகுமுன் ஒரு தாரணிந்து செல். அப்பொழுது வாலி இன்னானென்று யானறிவேன். நாளை வாலி சாவது மெய் என்றான். சுக்கிரிவன் கழுத்தில் ஒருபூமாலை சூடிச்சென்று மற்போருக்கு வரும்படி வாலியை அறைகூவினன். உடனே வாலியும் வரப்புறப்பட்டான். அப்பொழுது அவன் மனைவி தாரை வாலியை நோக்கிக் கூறுவாள் :

“ஐய! இத்தனைகாலம் உம்மையஞ்சி மதங்கமுனிவ ராச்சிரமத்தில் ஒளித்திருந்த உம் தம்பியாருக்கு இப்போது இங்கே வரத் தைரியம் வந்ததெப்படி? அன்றியும் நேற்றுத் தோற்றோடினவர் இன்று வந்து அறைகூவுவது என்ன ஆச்சரியம்! தமக்குத் தக்க துணையின்றி இப்படிச் செய்யாரொரு வரும். மேலும் நானொரு சொல் கேள்வியுற்றேன். கோசல நாட்டு மன்னன் தசரதன் மகன் இராமன் இங்கு வந்துள்ளானாம். அவனும் சுக்கிரிவரும் பெரு நண்பினராம்; சுக்கிரீ வருக்குத் துணை நிற்கவும் இராமன் உடன்பட்டிருக்கிறானாம். இவற்றை யோசியாது நீர் இப்பொழுது செல்வது புத்தியன்று .”

இதைக்கேட்ட வாலி :

“நுண்ணறி வுள்ள நூல்பல கற்பினும்
பெண்ணறி வென்பது பெரும்பே தைமைத்தே”

என்றது சும்மாதானா? உன் பேதைமையை இன்று காட்டி னாய். அறமே உருவெடுத்தாற்போன்ற தசரதனுக்கு மகனாய்ப் பிறந்த இராமன் அநியாயம் செய்வானா? அன்றியும், இராமனும் பரதனும் ஒருவன் மேலொருவன் எத்துணை அன்புடையாரென்பதை அறிவாயோ ? இவ்வாறு சகோதர சினேகத்துக்கு இலக்கியமான இராமன், வாலி சுக்கிரிவராகிய எங்களிருவரில் ஒருவனை யடுத்து மற்றவனைக் கெடுப்பானோ? இனி இப்படிப் பேய்ச்சொல் பேசாதே ” என்று சொல்லிப் போருக்கேகினான். வாலியும் சுக்கிரிவனும் மற்போர் செய் கையில் திடீரென ஒர் அம்பு பறந்துவந்து வாலியின் மார்பைத் துளைத்தது. உடனே வாலி நிலத்தில் விழுந்தான். விழுந் ததும், இவ்வாறு ஒளித்திருந்து தன் மேல் அம்பெய்தவன் யாவனோ என அதிசயித்தான். உடனே தன் கையொன் றினால் மார்பிற் தைத்த அம்பைப் பலத்தோடு பிடுங்கிப் பார்க்க, அதில் இராமன் என்ற பெயர் பொறித்திருக் தது. “இராமனா இப்படிச்செய்தான்?” என்று ஆச்சரியத் தோடு கூறுகையில், மரத்தின் பின் ஒளித்திருந்த இராமனும் வெளியே தோன்றி வாலியை யணுகினன். அவனைக் கண்ட வுடன் வாலி சொல்லுவன் :

” இராமா, என்ன செய்தாய்? பழியில்லாத உன் குலத் துக்கு உன்னாற் பழிவந்ததே! நீ தசரதன் மகன் என்றதை மறந்தாயோ? பரதனுக்கு அண்ணன் நீ யென்பது உன் நினைவை விட்டுப் போயிற்றோ? நான் உனக்கு என்ன தீமைசெய்தேன்? சீதையை இழந்தபின் உன் புத்தி தடுமாறிற்றோ ? இராவணன் உன் மனைவியை எடுத்துக்கொண்டு போனால், அதற்கு வாலியைக் கொல்லென்று மனு நூல் கூறிற்றோ? நானும் என் தம்பியும் ஒருவனையொருவன் பகைத்தால் எங்களிருவரையும் சமாதானப்படுத்துவதன்றோ உன் கடமை? என்னைக் கொல்ல லாமோ? அப்படிக் கொல்ல நினைத்தாயாயின் என்னைப் போருக்கழைக்க நீ வரவேண்டாவோ? ஒளித்திருந்து அம் பெய்யும் ஆண்மை எங்கு கற்றாய்? வசிஷ்டரும் விசுவாமித்திரரும் உனக்குப் போதித்தவை எல்லாம் இதுதானோ? ஓ இரகுவே, அரிச்சந்திரமன்னா, தசரதசக்கரவர்த்தீ, உங்கள் பேரைக்கெடுக்கப் பிறந்தானே இராமன் !”

அதற்கு இராமன், “பொறு, பொறு; வாலி, உன் பேச்சை யடக்கு; குற்றஞ்செய்யாத தம்பியை அவன் நாட்டைவிட்டுத் துரத்தினதுமன்றி அவன் மனைவியைக் கற்பழித்த நீ நீதிமான் போலப்பேசத் தலைப்பட்டாய்! உன்போற் பாதகரை அழிப்பதன்றோ க்ஷத்திரிய தருமம்? என்கையில் நான் வில்லைப்பிடித் திருப்பது வேறென்னத்திற்கு?” என்றான். உடனே வாலி நான் செய்தது குற்றமாயின், என்னைக் கொல்வது க்ஷத்திரிய தருமமாயின், குற்றஞ்சாட்டப்பட்டவனை விசாரியாமற் தண் டிப்பது க்ஷத்திரிய தருமமோ? ஒளித்திருந்து அம்பெய்யும் வீரா, வெட்கமில்லாமற் பேசுகிறாயோ?” என்றான்.

தான் சாக இரண்டொரு விநாடிதான் இன்னுமுண்டென்று கண்ட வாலி, “நீ யெனக்குச் செய்தபிழை யெல்லாம் நான் உனக்கு மன்னிக்கிறேன். இராமா, உன்னிடம் ஒரு வரங் கேட்கிறேன், தா” என்றான். “நீ கேட்கும் வரம் யாது?” என்று இராமன் வினவ, “என் மகன் அங்கதனை உனக்கு அடைக்கல மாகத் தந்தேன் நீ என்னைக் கொன்றாலும், உன்னை நான் நம்புவேன், சுக்கிரிவனை நம்பேன். சுக்கிரிவனுக்குப்பின் என் மகன் அங்கதனே கிட்கிந்தைக்கு இராசனாவான் என்று நீ எனக்கு வாக்குத் தரல்வேண்டும்” என்றான் வாலி. உடனே இராமன், ” வாலி, நான் உனக்குத் துரோகஞ் செய்தேன். நான் என் பிழையை உணருமுன்னமே நீ யென்னை மன்னித் தாய். அம்மட்டோ ? துரோகியாகிய என்னை நம்பி உன் மகனை எனக்கு அடைக்கலமாகக் கொடுத்தாய். நீயே பெரியவன்; உன் புகழே புகழ்; உன் குணத்தால் நான் தூயனானேன். நீ அஞ்சற்க ; அங்கதனை என் கண்மணிபோலக் காப்பேன்; சுக்கிரிவனுக்குப்பின் அங்கதனே இராசனாவான்” என்றான். உடனே வாலி அருகினின்ற அங்கதனையழைத்து அவன் கையைப்பிடித்து இராமன் கையில் வைத்து, “இதோ உன் மகன்; இதோ உன் தந்தை” என்று சொன்னவுடனே வாலியின் ஆவி பரமபத மடைந்தது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *