
இராமன் கதை
பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி
24. விபீஷண கிரீடதாரணம்
போர்க்களத்தில் இராவணன் மடிந்தபோது மண்டோதரி அவன் தேகத்தின்மீது விழுந்து அழுதாள். விபீஷணனும் கண்ணீர்விட்டான். பின் இராமன் கட்டளைப்படி, இராவண னுக்கு விபீஷணன் ஈமக்கடனெல்லாஞ்செய்தான். இவை யெல்லாம் முடிந்த பின்பு இராமன், தான் ஒருப்பட்டணத் துள்ளும் பிரவேசிப்பதில்லை என்ற சபதத்தை மறவாது, இலக்குமணனைக்கொண்டு விபீஷணனுக்கு முடிசூட்டுவித் தான். அப்பொழுது அங்கு இலக்குமணன் சுக்கிரிவன் அங்கதன் அனுமன் சாம்புவன் முதலிய பெருமக்கள் அவையை விளக்கஞ்செய்தார்கள். இலங்கைநங்கையரில் மண்டோ தரியும் திரிசடையும் ஆங்கு விளங்கினர். மறுநாட்காலை இராமன் தங்கியிருந்த ஓர் அரசமரச்சோலைக்கு விபீஷணனும் திரிசடையும் வந்தனர். சுக்கிரிவன் முதலியோர் முன்னரே அங்குபோய் இராமனைச்சூழ இருந்தனர். விபீஷணனையும் திரிசடையையும் இராமன் கண்டவுடனே, “சீதையெங்கே? என் அவள் வரவில்லை ?” என்ற எண்ணம் அவனுள்ளத்திற் தோன்றின. அவன் வாய் திறந்து கேட்குமுன்னரே திரி சடை இராமனைக் கைகூப்பிச் சொல்லுவாள் : “மகாபிரபு! கடந்த இருபத்தொருநாளும் சீதாபிராட்டியார் கடும் உபவாசம் செய்து மெய்தளர்ந்த நிலையி லிருக்கின்றனர். இவ்விருபத் தொருநாளும் தண்ணீரும் உப்புமேயன்றி வேறொன்றும் உட் கொண்டிலர். இன்று தான் அவர் பாரணம்பண்ணும் பொருட்டுத் தோடம் பழச்சாற்றைச் சருக்கரையிற் கலந்து கொடுத்தேன். அவர் தம் இயற்கைநிலையடையக் குறைந்த பட்சம் இன்னும் ஒருமாதஞ்செல்லும். அதன்பின்புதான் பயணஞ்செய்யமுடியும். அதுவரையில் சக்கரவர்த்தியவர் களும் இலங்கையிலிருந்து, பின்பே பிராட்டியாரை அழைத்துக் கொண்டு அயோத்திக்கேகலாம். தாங்கள் அவரை இப்பொழுது பார்க்க விரும்பின் வந்து பார்க்கலாம். ஆயினும் இன்னும் பத்து நாளைக்குப்பின் பார்ப்பதே யுசிதம்.” இதைக் கேட்ட இராமன், ” ஆக்கப்பொறுத்தவன் ஆறப்பொறுக்க வேண்டாவா? உன்னிஷ்டப்படியே பத்துநாட் சென்றபின் நான் சீதையைப் பார்ப்பேன் ” என்றான்.
விபீஷணனும் திரிசடையும் ஒருபக்கத்தில் ஒரு மான் தோலிலிருந்தனர். அப்பொழுது அங்கதன் எழுந்து நின்று, இராமனுக்கு அஞ்சலி செய்து சொல்லுவான் : “வேந்தர் வேந்தே, தங்கள் பால் ஒரு விண்ணப்பம் செய்ய விரும்பு கின்றேன். இத்தருணத்தில் இலங்கைக்கோனும் கோமகளாரும் இங்கிருப்பது பாலிற்பழம் விழுந்தது போலாம். ஐய, இலங்கைக் கோமகளாரை என் மனைவியாக்கிக்கொள்ள மிக விரும்புகின்றேன். என் ஆசையைத் தேவரீரே பூர்த்தி செய்தல்வேண்டும்.” இதனைக் கேட்ட இராமன், நற்றாமரைக்கயத்தில் நல்லன்னஞ்சேர்ந்தாற்போல்’ நீ திரிசடையை மணப்பது எனக்குச் சம்மதமே. ஆயினும் இதைக் குறித்துத் திரிசடையிடம் பேசினாயோ?” என்றான். அங் கதன், “நான் அவரோடு வாய் திறந்து ஒன்றும் பேசின தில்லை ; அவரும் என்னோடு பேசினால்லர். ஆயினும் நேற்றுப் பட்டாபிஷேக காலத்திலே நாங்கள் ஒருவரொருவரைக் கண்ட போது எங்கள் கண்கள் பேசின.
“கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனு மில”
என்றான்.
இதைக்கேட்ட திரிசடை மந்தகாசத்தோடு நிலம் நோக்கினள். இராமன், ” விபீஷணா, உன் கருத்தென்னை?” என வினவ, இலங்கை வேந்தன், “திரிசடை தன்கருத்தை வாய் திறந்து சொல்லுக ” என்ன, திரிசடை தந்தையைப் பார்த்துக் கூறுவாள் : ” எந்தாய், நான் கைக்குழந்தையாயிருந்தபொழுது என் தாயார் இறந்தனர். எனக்கு அண்ணன் தம்பியர் ஒரு வருமில்லை. நேற்றுவரையிலும் நான் உங்களையன்றி வேறோ ராடவனையும் நேசித்ததில்லை. நேற்றோ கிட்கிந்தை இளங்கோவைப் பட்டாபிஷேக மண்டபத்திலே கண்டபொழுதே என் நெஞ்சு என்னையறியாமல் அவர் வசமாயிற்று. இனி வேறென் சொல்வேன்?” என்றாள். விபீஷணன், “மகளே, சக்கரவர்த்தியவர்கள் இப்பொழுது சொன்னது போல ‘நற் நாமரைக்கயத்தில் நல்லன்னம் சேர்ந்தது.’ என் நல்லன்னமே, நீ உன் நற்றாமரைக்கயத்தைச் சேர்க. நாளைக்கே மண வினையை முடிப்போம்’ என்றான். உடனே திரிசடை, “அம் மம்ம! அத்துணை விரைவு செய்ய வேண்டா. எனக்கு விவாகம் நடக்கும் பொழுது சீதாபிராட்டியாரும் அங்கிருக்கவேண்டு மன்றோ ? மேலும் அவர் மெய்தளர்வுற்றிருக்கும் இக்காலம் அவரை ஆதரிப்பது எனக்குக் கடனும் சிலாக்கியமுமாகும். சீதாபிராட்டியார் தம் பிராண நாயகரை மீட்டும் அடையும் நாளே நானும் கிட்கிந்தை இளங்கோவை மணக்கும் நாளாம் ” என்றாள். இதைக்கேட்ட சபையார் யாவரும் திரிசடையின் விவேகம் போலவே குணமுமிருந்ததைக் கண்டு வியந்தனர்.



