
இராமன் கதை
பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி
14. மாரீசன்
மாரீசன் பஞ்சவடி சென்று இராமனிருந்த பன்னசாலைக்குப் போனான். வந்த விருந்தினனைத் தக்கபடி மூவரும் உபசரித் தனர். மாரீசன் அவர்களை நோக்கி, ”நான் தெற்கே பாண்டி நாட்டிலுள்ளவன்; பாண்டியன் பலவகை மிருகங்களிலும் பிரியங்கொண்டவன். பஞ்சவடிக்கு இரண்டுகாதத்துக்கப் பால் ஒரு வனம் உள்ளதென்றும் அவ்வனத்தில் அழகிய புள்ளிமான் பலநூறு சஞ்சரிக்கின்றன என்றும் இங்கிருந்து வந்த முனிவரொருவர் சொல்லப் பாண்டியன் கேட்டு, அவனது அரமனைத் தோட்டக்காரனாகிய என்னைப்பார்த்து, “கறுப்பா, நீ இந்த முனிவர்சொல்லும் வனத்துக்குச்சென்று இரண்டொரு புள்ளிமான் கொண்டுவா” என எனக்குக் கட்டளை யிட்டனன். பாண்டிமாதேவியும், ” கறுப்பா, எனக்கும் ஓர் அழகிய குட்டிமான் கொண்டுவரல் வேண்டும்” என்றாள். அதுவே நான் இங்கு வந்த காரணம். இவ்வளவு தூரம் வந்து விட்டேன், இன்னும் இரண்டு காதந்தான், நான் போகிறேன் ” என்றான். இதைக்கேட்ட சீதை இராமனைப்பார்த்து, ” அப்படி யானால் நீரும் இவருடன் சென்று எனக்கு ஓரழகிய புள்ளி மான்குட்டி கொண்டுவாரும்” என்றாள். இராமன் அதற்கிணங்கி ” அப்படியே போகின்றேன், இன்று பகல் பதினைந்து நாழிகை யாகுமுன் திரும்பிவிடுவேன், தம்பீ! நீ பன்னசாலையைவிட்டு எங்கும் போகாதே, சீதை பத்திரம் ” என்று சொல்லி, மாரீசனோடு போனான். போனவன் பகல் இருபது நாழிகை கழிந்தும் வரவில்லை. சீதை இலக்குமணனைப்பார்த்து, “பதினைந்து நாழிகைக்குமுன்னே வருவேனென்று சொல்லிப்போன உன் தமையனார் இருபது நாழிகையாகியும் இன்னும் வந்தா ரில்லை; அவருக்கு என்ன தீங்கு நேரிட்டதோ அறியேன்; நீ விரைந்து சென்று பார்த்துவா ” என்றாள். “அண்ண னுக்குத் தீங்கு செய்வார் இங்கு யார் ? நீங்களஞ்சுவது வீண், விரைவில் வந்துவிடுவார், கலங்காதேயுங்கள் ” என்றான் இளை யவன். மனக்கலக்கங்கொண்ட சீதை, தான் பேசுவதின்ன தென்றறியாது, கோபத்தோடு, “இலக்குமணா, நீ நல்லவன் போல் வெளியே தோன்றினும், உன்னுள்ளம் தீயது; ‘ காட்டிலே இராமன் என்று சாவான், அன்றன்றோ சீதையை நான் மணப்பது’ என்ற பொல்லா நெஞ்சத்தோடு, உன் மனைவி ஊர் மிளையையுந் துறந்து என்னைத்தொடர்ந்துவந்தாய் ; இராமன் சாகினும் சாக, நான் உன்னை மணவேன் என்பது நிச்சயம் ; புலியது பசித்திடின் புல்லைத்தின்னுமோ?” என்றாள். இந் நச்சுச்சொல் காதில் விழுந்தவுடன் இலக்குமணன் காதிரண் டையும் பொத்திக்கொண்டு நானிங்கு சீதையுடன் தனித் திருப்பது அழகன்று என்று மனத்தில் நினைத்து, ” அம்மா, என் தமையன் சொல்லை மீறி நான் வெளியே செல்கின்றேன், சீதையைத் தனியேவிட்டு என் வந்தாய் தம்பி?’ என்று அண்ணன் என்னைக்கேட்டால், உங்கள் பத்தினியாரையே கேளுங்கள் என்று சொல்லுவேன்” என்று கூறிவிட்டு, இராமனைத் தேடியோடினான். இதுவரையிலுஞ் சமயம்பார்த்துக்கொண் டிருந்த இராவணன் சன்னியாசகோலத்தோடு பன்னசாலைக்கு வந்து வாயிலில் நின்று பிச்சை கேட்டான். திருநீற்றுப்பூச்சும் உருத்திராக்கவடமும் புலித்தோலாடையும் பொருந்திநிற்கக் கண்ட சீதை, ‘ சிவபெருமானே இன்றைக்கு என் குடிலுக்குப் பிச்சைக்கு வந்தார்’ என எண்ணினள். நின்ற சன்னியாசியும் சிவன் போலவே விளங்கினான். கள்ளச் சன்னியாசி, பார்வை யாலும் மொழியாலும் தன் தீய எண்ணத்தை விளக்க, அதனைக் கண்ட சீதை, “சீச்சீ, நாயே, யாரென்று என்னை நினைத்தாய்?” என்றாள். ” யாரென்று நீ என்னை நினைத்தாய் ” என்றான் இராவணன். உடனே தன் பொய்வேடத்தைக் களைந்து, “நான் இராவணன், கடல்சூழ் இலங்கைக் காவல்வேந்தன் ; இலங்கை ஒரு பெருந்தீவு, கடலுக்கப்பாலுள்ளது; இங்கிருந்து பல நூறு காதங்கடந்து கடலையுந்தாண்டிப் போக வேண்டும் இலங்கைக்கு. ஆயினும் அங்கும் உன் புகழைக் கேள்விப்பட்டேன். உன் வடிவும் அழகும் வருணிக்கக் கேட்ட நான் இப்படிப்பட்ட பெண் பூவுலகிலுண்டோ என்றறிய இங்கு வந்தேன். நான் கேள்விப்பட்டதிலும் நூறாயிரம் மடங்கு வடிவிற் சிறந்தனை , அழகிற் பொலிந்தனை ; இரதியும் சகியும் மட்டுமல்ல, இலக்குமியும் உனக்கு நிகால்லள். குரங்குக்குப் பூமாலை வாய்த்தது போல இராமனுக்கு வாய்த்தாய். கண்ணே, சனகன் பெண்ணே, எண்ணேன் இனி மறுமாதரை; உன்னையே இலங்கைக்குப் பட்டமதிஷியாக்குவேன் ; வா, என்னோடு புறப்படு இப்பொழுதே ” என்று சீதையின் அடியில் வீழ்ந்தான். உடனே அவள், உள்ளே சென்று விளக்குமா றெடுத்துவந்து அவன் தலையிலும் முகத்திலும் மாறிமாறி அடித்தனள். உடனே அவன் சீதையைப்பார்த்து, “ ‘மயிலே மயிலே இறகுதா’ என்றால் மயில் இறகு கொடுக்குமா? உனக்குச் செய்ய வேண்டியது செய்தால் நீயே வந்து என் காலில் விழுவாய் ” என்று சொல்லி, அவள் கூந்தலைத் தன் இடதுகையாற்பற்றி வலதுகையால் அவளைத் தூக்கிக்கொண்டு போய், தூரத்தினின்ற தன் தேரில் அவளோடுமேறி, அவளைத் தன் இடது தொடையிலிருத்தி, இடதுகை அவள் பிடரைப் பிடிக்க வலதுகை தேரோட்ட, தெற்குநோக்கிச் சென்றான்.



