
இராமன் கதை
பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி
22. இராவணன் கொலு
சீதையைவிட்டுப் புறப்பட்ட அனுமன் இராவணன் கொலு மண்டபம் புகுந்தான். அங்கு கும்பகன்னன் விபீஷணன் என்னுந் தம்பியரிருவரும் இருமருங்கிலும் இருப்ப, சிங்கா தனத்திலே இலங்கை வேந்தன் வீற்றிருந்தான். அவனுக்குச் சிறிது தூரத்திலே வேறு மந்திரிமார் இருந்தனர். இராவணன் மகன் மேகநாதன் படைத்தலைவன், கும்பகன்னன் பக்கத்தி லிருந்தான். அவன் தம்பி அட்சன் விபீஷணன் பக்கத்தி லிருந்தான். வாயில்காப்பாள னொருவன் மண்டபத்துட் புகுந்து, ” வேந்தர்வேந்தே, அயோத்திமன்னவர் இராம சந்திர பூபதி அனுப்பிய தூதனொருவன் அனுமனென்பான் வந்து கோபுரவாயிலில் நிற்கிறான் ; அவனை உள்ளே விட லாமோ?” என்றான். ” அவனை வரச்சொல் ” என இரா வணன் கூற, நாம் முன்னே கண்டபடி அனுமன் கொலுமண் டபம் புகுந்தான். தூதருக்கென வைக்கப்பட்டிருந்த இருக்கை பலவற்றுள் ஒன்றைக்காட்ட அதன்மீதிருந்தான் அனுமன். “ இலங்கை வேந்தே! நமஸ்காரம் ; கோசலநாட்டையாளும் இராமசந்திர சக்கரவர்த்தி அனுப்பின தூதன் நான் ; என் பெயர் அனுமன். தூதை அறிவிக்கலாமோ?” என்றான் ஆஞ்சனையன்.
“சொல்லுக” என அரசன் பணிக்க, சொல்லலுற்றான் தூதன் : “பஞ்சவடியிலே நானும் என் தம்பியும் இல்லாத நேரத்திலே நீ என் மனைவி சீதையைக் களவு செய்து இலங்கைக்குக் கொண்டுபோயினை எனக்கேள்வி; உன் ஆண்மையையும் வீரத்தையும் மெச்சுகின்றேன் ; என் தேவியை விடுகின்றாயா? அல்லது உன் ஆவியை விடுகின்றாயா ? சொல்” என்பதே தூது. இதைக்கேட்ட இராவணன் அங்கமெல்லாங் குலுங்கக் கைகொட்டி, “வாலியை மறைந்து நின்று கொன்ற ஆண்மகனார் என் ஆண்மையையும் வீரத்தையும்பற்றிப் பேசத் தொடங்கிவிட்டார்!” என்று விலாப்புடைக்கச் சிரித்தான். “சுக்கிரிவன் மனைவியை அபகரித்த வாலியைக் கொன்ற இராமர் தம் மனைவியைத் திருடின உம்மைக் கொல்லாம லிருப்பாரோ? இப்பொழுதே சீதையை விட்டுவிட்டால் தப்பினீர்; இல்லையேல் நீரும் உமது குடும்பமும் மட்டுமல்ல, இலங்கையிலுள்ளார் யாவரும் மடிவது திண்ணம் ” என்றான் அனுமன்.
இராவணன் கண் இரண்டுஞ் சிவக்க, மீசை துடிக்க, ”அச்சமின்றி என்முன் இவ்வார்த்தைகூறிய மக்கட்பதடியைப் பிடித்துக் கொன்மின் ” என்று தன் சேவகருக்குக் கட்டளை யிட்டான். அப்பொழுது விபீஷணன், ” அரசே, தூதரைக் கொல்லுவது அநீதி.. தன் அரசன் சொன்னதை இவன் சொன்னானேயன்றி வேறொன்றும் சொற்றிலன். மேலும் இவன் சொன்னவையெல்லாம் உண்மையல்லவோ? தன்னம் தனியளாய் நின்ற ஒரு பெண்ணைக் கவர்ந்து கொண்டுவந்தது ஆண்மையோ ? வீரமோ? உம்மால் இலங்கைக்கு வசையுண் டாயிற்றே. சீதையை நீர் கொண்டுவந்தும் நும் கருத்து நிறைவேறினதோ? இனியேனும் நிறைவேறுமோ? சீதையை உடனே இராமனிடந் திருப்பியனுப்புவதே தகுதி. இருபது வருஷத்துக்கு முன்னே தாடகையையும் சுபாகுவையும் கொன்ற இளஞ்சிங்கம் இன்று கரதூஷணரையும் படைகளையும் அழித்த பராக்கிரமசாலி. அவனிடம் போன மாரீசனும் அழிந் தான். இப்பொழுதோ இராம இலக்குமணர் துணையற்றவரல்லர் ; சுக்கிரிவன் அங்கதன் இருவரும் இவரைச்சார்ந்தனர். சீதையை உடனே அனுப்பிவிடுக” என்றான்.
“கேட்டபின் புத்திசொல்வது மந்திரி கடன் ; நீ பிரதம மந்திரியு மல்லை; உன்னில் மூத்தவன் உன்னில் விவேகி ; கும்ப கன்னன் வாளாவிருப்ப, வாய்திறந்து பேசவந்தாய் அறிவிலி! புண்ணியன் போலப் பாசாங்குபண்ணித் திரிகிற கபடி, என் இராச்சியத்திலுள்ளாரனைவரையும் எனக்கு விரோதிக ளாக்குகின்ற சத்துரு உன்னையன்றி வேறுளரோ? இராமன் எனக்கு வெளிப்பகைவன் ; அவனை நம்பலாம். நீ எனக்கு உட்பகைவன் ; உன்னை ஒருகணமேனும் நம்பலாகாது; இத்தனை நாளும் பொறுத்தேன் ; இனிப் பொறுக்க என்னா லாகாது. நடவெளியே, அல்லது உதைத்துத் தள்ளுவேன்” என்று இடிபோற் கழறினான் இராவணன். அப்பொழுது விபீஷணன், ” என்னைப்பிடித்த சனி இன்றுவிட்டது! என் புத்தியைத் தள்ளின நீ எக்கேடுகெடினுங் கெடுக. இலங்கையை யாவது காக்க முயல்வேன்” என்று எழுந்தான். உடனே கும்பகன்னன் “வெளியே போ, மடையா ; நீ செய்வதைச் செய்; நானும் மேகநாதனும் அட்சனும் மாண்ட பின்னன்றோ இலங்கை வேந்தர் மடிவார். உனக்கு உன்னுயிர் வெல்லம். சாக அஞ்சினை ; இலங்கையைவிட்டு ஓடிப்போ” என்றான்.
‘கேடுவரும் பின்னே மதிகெட்டுவரும் முன்னே’ என் பது பொய்யோ ?” என்று பேசத்தொடங்கின விபீஷணனை எழுந்து உதைத்தான் இராவணன். உடனே மேகநாதன் விபீஷணனைப்பிடித்து இழுத்துக்கொண்டுபோய் வெளியே தள்ளிவிட்டுக் கொலுமண்டபம் வந்தான். இராவணன் அனு மனைப்பார்த்து, “நீ போய் உன்னை அனுப்பின அரசனிடம் ‘ இராவணன் முன்வைத்தகாலைப் பின்வைக்கிறவனல்லன். நான் சீதையை விடுவதில்லை. நீ செய்வதைச் செய்’ என்று சொல்; போ, வெளியே” என்றான்.
அனுமன் கிட்கிந்தைக்குத் திரும்பினன்.
விபீஷணன் தன் மகளிருக்குமிடஞ்சென்று, அவளை யழைத்து, கொலுமண்டபத்தில் நடந்ததெல்லாம் அவளுக்குச் சொல்லி, “மகளே, நீ சீதாதேவியாரைத் தேற்றிக்கொண்டிரு; நான் இராமரைச் சரண்புகுவேன். இவ்வாறு நான் செய்வது என்னையும் உன்னையுங் காக்கவன்று. எனக்கு என்னுயிர் வெல்ல மென்றான் கும்பகன்னன்; எனக்கு ஆயிரம் உயிரிருந்தால் ஆயிரத்தையுங் கொடுப்பேன் இலங்கையைக் காத்தற்கு. இராம இலக்குமணரோடு போர்செய்து இலங்கையைக் காத்தல் இயலாது. அறமே உருவெடுத்துவந்தாற் போன்ற இராமரையும் அருளே உருவெடுத்துவந்தாற்போன்ற சீதாதேவியாரையும் அழிக்கக் காமாந்தகனாகிய இராவணனால் முடியுமோ? அவன் பக்கம் நின்று யுத்தஞ்செய்தால் நன்மை வருமோ? இவை யெல்லாம் ஒருமுறை யிருமுறையல்ல, பல்லாயிரம் முறை யோசித்த பின்பே நானிவ்வாறு கொலுவிற் பேசினேன். இரா வணனும் அவன் குடும்பமும் அழிந்தே தீரும். அவரைக் காக்க ஒருவராலும் முடியாது. இத்தீயனால் இலங்கையெல்லாம் அழிய வேண்டுமோ?
இலங்கையிலுள்ளாரைக் காக்கும் பொருட்டே நான் இராமர்பாற் சரண்புகுகின்றேன். யார் என்னைப்பற்றி எவ்வாறு சொல்லினும் நீ என்னை நம்புவாயல்லையோ ?” என்றான். திரிசடை தந்தையைவிட்டுப் பிரிவதை நினைக்க மனம் வருந்தி, கண்ணீ ராறாய்ப் பெருக, “ஐயா, உங்களை உங்கள் மகள் எப்பொழுதாயினும் சமுசயித்ததுண்டோ ! உங்களை நான் சமுசயித்தால் வேறு யாரை நம்புவேன் வருவனவெல்லாம் வந்தே தீரும். எல்லாம் ஈசன் செயல், நான் சீதையைப் பார்த்துக்கொள்ளுவேன் ; நீங்கள் போய் வாருங்கள்” என்று சொல்லித் தந்தையின் அடியில் விழுந்து பஞ்சாங்க நமஸ்காரஞ் செய்தாள். விபீஷணன் இரண்டு கையாலும் தன் மகளைத் தூக்கியெடுத்து, உச்சிமோந்து, இரு கன்னத்திலும் முத்தமிட்டு, “என் மகளை இறைவன் காக்க” என்று ஆசிகூறி அவளைவிட்டகன்றான்.



