இராமன் கதை
பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி

20. இலங்கை

பஞ்சவடியினின்று சீதையோடு புறப்பட்ட இராவணன் வழியிலெங்குந் தங்காமல் இலங்கை[3] வந்து சேர்ந்தான். சேர்ந்தவுடன் இராசதானியாகிய இலங்காபுரியையடுத்த அசோகவனத்திலே சீதையையிருத்தினான். சீதைக்குக் காவலராகப் பெண்கள் பலரை நியமித்தான். அவருளொருத்தி திரிசடை என்பாள். திரிசடை இராவணன் தம்பி விபீஷணன் மகள். இராவணன் சீதையை இலங்காபுரியிலே கோயி லொன்றிலே அந்தப்புரத்திலே இருத்தாமல் அசோகவனத்தில் வைத்ததற்கு நியாயம், இராமன் வனவாசியாயிருக்க, தான் நகரவாசியாயிருக்கச் சீதை உடன்பட்டாளில்லை. அன்றியும் இராவணன் விருப்பத்துக்கிணங்கி அவனோடு வாழச் சானகி சிறிதுஞ் சம்மதித்தாளில்லை. இராவணன் பரதாரத்தை இச்சித்துச் சீதையைப் பஞ்சவடியிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவந்த பாதகனெனினும், இணங்காத ஒருபெண்ணையும் வலாற்காரஞ்செய்து கற்பழிக்கும் அதியா தகனல்லன். நாள டைவிலே சீதை மனம்மாறித் தன் மனைவியாவதற்குச் சம்மதிப்பா ளென்றும் அப்படிச் சம்மதித்தபின்பே தானவளை மணஞ்செய்வதென்றும் இராவணன் காத்திருந்தான். ஒவ் வொருநாளும் அசோகவனத்திற்சென்று நயவசனங் கூறியும் அச்சுறுத்தியும் ஒருபயனுமின்றித் திரும்புவான். அவளுக்குக் காவலராக வைத்த பெண்களையும் அவளுக்குப் புத்தி சொல்லும்படி கட்டளையிடுவான். அவருட் திரிசடையொழிந்த ஏனைய பெண்களெல்லாரும், சீதை இராவணன் மனைவியாவதே தக்கதென்று அவளுக்குப் புத்தி சொல்லி வருவார்கள். திரி சடையோ பெண்களுள் உத்தமி. அவள் தந்தை விபீஷணனும் சுகுணசம்பன்னன். திரிசடை நாடோறுஞ் சீதையைத் தேற்றிக் “கடவுள் நும் கணவனாரை நும்மிடம் விரைவிற் கொண்டுவந்து சேர்ப்பர் ; ஒன்றையும் அஞ்சவேண்டா” என்று ஆறுதல் சொல்லுவாள். திரிசடை தேற்றச் சீதை தேறுவாள் சிலநாள் ; திரிசடை தேற்றவும் தேறாள் சிலநாள். “என் வினைப்பயனை நான் அனுபவித்தல் வேண்டும். கணவன் சொல்லை மீறிவந்த பாவி நான்; களங்கமற்ற மைத்துனன்பால் ஐயமுற்று நிந்தித்த பாவிதான். இவை இப்பிறப்பில் நான் செய்த பாவங்கள். கடந்த பிறப்புக்களில் யார்யாருக்கு என் னென்ன பாவஞ்செய்தேனோ? என் கணவனார் இன்னும் என்பால் விருப்புளரோ? அல்லது வெறுத்துத் தள்ளினரோ? ஐயோ! இதை யெனக்குச் சொல்வார் யார்?

“பாவிபடுங் கண்கலக்கம் பார்த்துமிரங் காதிருந்தால்
ஆவிக் குறுதுணையார் ஐயா, பராபரமே.
“ஓயாதோ என்கவலை ? உள்ளேயா னந்தவெள்ளம்
பாயாதோ ? ஐயா, பகராய் பராபரமே”

என்று புலம்புவாள்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *