
இராமன் கதை
பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி
3. பரசுராமனை வெல்லல்; மந்திராலோசனை
சமதக்கினி முனிவர் ஒரு பிராமண ரிஷி. அவரை ஒரு க்ஷத்திரியன் கொன்றான். அதனால் அவர் மகன் பரசுராமன் தன் தந்தையைக் கொன்றவனை மட்டுமல்ல க்ஷத்திரியரெல்லா ரையும் பகைத்தான் ; க்ஷத்திரியரை எங்கு காணினும் அவர் களைச் சண்டைக்கழைப்பான்; க்ஷத்திரிய குலத்தை வேரோடு களைவதே யவன் பூண்ட விரதம். தசரதன் குடும்பத்தோடு அயோத்திக்கு மீள்கையில் அவனை வழியிற் சந்தித்த பரசுராமன் இராமனைத் தன்னோடு சண்டைக்கு வரும்படி அழைத் தான். தன் கையில் வைத்திருந்த ஒரு வில்லை இராமனுக்குக் காட்டி, “ இராமா நீ சனகன் வில்லை யொடித்துவிட்டாயென்று இறுமாப்புற்றாய். அது முன்னமே சிறிது ஒடிந்திருந்த வில், என்கையிலுள்ள இந்த வில்லை நீ வளைப்பையேல் வல்லவன் றான், இல்லையேல் உன்னை மானபங்கஞ்செய்வேன்” என்று இடித்துக் கழறினான். இராமன் “ நீ வேதியன், வேதியரோ டமர் பொருது வென்றாலும் தோற்றாலும் வசையேயன்றோ” ஆகலின் உன்னோடு அமர் செய்ய எனக்கு விருப்பமில்லை என்றான். அதற்குப் பரசுராமன் “இப்படி ஞானவார்த்தை பேசித் தப்பித்துக்கொள்ளலாமென் றெண்ணாதே. நீ யென் வில்லை வளையாவிடின் நான் உன்னை விடேன் ” என்றான். இராமன் ” நான் உன் வில்லை வளைத்து அம்பு தொடுப்பேனேல் அதற்குக் குறி யாது ?” என வினவினன். பரசுராமன் உன்னம்புக்கு நானே இலக்கு, என்னைக் கொல்லலாம் என, இராமன் “பிராமணனைக் கொல்ல எனக்குப் பிரியமில்லை” என விடை பகர்ந்தான். பரசுராமன் “அப்படியாயின் இதுவரை யிலும் நான் செய்த தவப்பயனெல்லாம் உனக்கேயாகுக” என இராமன் சம்மதித்துப் பாசுராமன் தந்த வில்லை வளைத்தான். அதுவும் சனகர் வில்லைப் போலவே ஒடிந்து போயிற்று. பரசு ராமன் வெட்கி, தன் தவப்பயனெல்லாமிழந்து இராமனிடம் விடைபெற்றுப் போய்விட்டான். பிறப்பிற் பிராமணரெல்லாம் பிராமணரோ?
“அந்தணரென்போர் அறவோர் மற்றெவ் வுயிர்க்குஞ்
செந்தண்மை பூண்டொழுகலான்.”
அயோத்தியைத் தசாதனும் குடும்பத்தினரும் அடைந்து சில நாளாயினபின் பாதன் தன் தாய்மாமன் ஆளும் கேகய நாட்டைக் கண்டுவரும்படி போயினன். அவனுடன் சத்து ருக்கினனும் சென்றான். தசரதன் சிலநாட் சென்றபின் தன் சபையிலே கொலுவீற்றிருந்தபொழுது, அங்கிருந்த வசிஷ்டரையும் மந்திரிமாரையும் பிறரையும் நோக்கி, “நான் அரசு பூண்டு அறுபது வருஷம் கழிந்தன. மூப்பால் வருந்துகின்றேன். இனி நான் அரசியலை விட்டு முத்திநெறி தேடல் வேண்டும். என் மகன் இராமனுக்கு இவ்வரசியலைக்கொடுக்க எண்ணினேன். உங்கள் கருத்து யாது?” என்றான். சபையார் யாவரும் சிறிது நேரம் வாளாவிருக்க, பின் வசிஷ்டர் பேச லுற்றார் : “சக்கரவர்த்தி உன் சொல் எங்களெல்லாருக்கும் வருத்தத்தை விளைத்தது. உன் குடைக்கீழ் வாழ்ந்த எங் களில் யாருக்கேனும் ஒரு குறையிருந்த துண்டோ ? நாங்கள் யாவரேனும் உன் மனஞ்சலிக்க எவ்வகை மொழியுங் கூறி னோமோ ? இனி நீ முத்திநெறி தேடவேண்டுமென்றாய்.
மன்னுயிரைத் தன்னுயிர்போல் ஓம்பும் அரசனுக்கு முத்தி தானே கிட்டாதோ? முத்தியும் தேடவேண்டிய பொருளோ? ஆயினும் மூப்பால் வருந்துகின்றேனென்கிறாய்; அப்படியாயின் நீ வருந்தக் காண்பது எங்களுக்கழகன்று. நீ உன்னிஷ்டப்படி உன் அரசைத் துறக்கலாம். உன் மகன் இராமன் உன்னிடம் அரசு பெறுவதற்கு எவ்வகையினுமுரியவன். மக்கள் நால்வரில் அவனே மூத்தவன் என்பது மட்டுமல்ல, இயற்கையறிவிலும், கல்வியிலும், ஆற்ற லிலும் சிறந்தவன், சகல கலியாணகுணங்களும் ஒருங்கே வாய்க்கப் பெற்றவன், தசரதன் மைந்தர் நால்வரும் தாசரதிகளேயாயினும், தாசரதியென்னும் பெயர் இராமனுக்கே காரண இடுகுறியாயிற்று. உனக்குப் பின் கோசல நாட்டை இராமனாள்வதே எங்களுக்குங் கருத்து”.
சபையிலிருந்தமந்திரிமாரும் படைத்தலைவரும் மற்ற உத்தி யோகஸ்தர்களும் பிறரும் “முனிவர் கூறியது ஒக்கும் ஒக்கும், இதுவே எங்கள் கருத்தும் ” என்றார்கள். இச்சொல் அரசன் செவியில் நுழைய அவன் ஆனந்தபரவசனானான். சிறிது நோஞ் சென்றபின் ஏவலாளரை நோக்கி, ” இராமனை யழைத்துவாருங் கள்” என்றான். அவர் சென்று இராமனைச் சபைக்கு அழைத்து வந்தார். தசரதன் இராமனை மார்புறத்தழுவி, மகனே இராம சந்திரா, “நானும் இங்குள்ள சபையார் யாவரும் ஒரு விசேஷ காரியத்தைத் தீர்க்காலோசித்து ஒரு முடிவுக்கு வந்தோம். அம்முடிவை யுனக்கறிவிக்கவே இங்கு உன்னை யழைத்தோம்; நான் அரசு பூண்டு இன்று ஆண்டு அறுபது கழிந்தன, மூப்பால் வருந்துகின்றேன், முன் போல் அரசியல் நடத்த எனக்கு வலியில்லை. ஆகவே நான் இவ்வரசியலைத் துறத்தல் வேண்டும்; எனக்குப்பின் கோசலநாட்டையாள உரிமையும் தகுதியுமுடையவன் நீயேயென்பது எங்களெல்லேமுக்கும் ஏக அபிப்பிராயம்; மகனே நாளைக்குச் சுபதினம், அதிலே உன்னை இராசனாக்கி முடி சூட்டக் கருதினோம்; உன் கருத்து என்னை ?” எனக் கூறினான்.
இராமன் இன்றைக்கிதைக் கேட்பேனென்று சிறிதும் நினைத்தவனல்லன். மின்னாமல் இடியாமல் மழைபொழிந்தது போலத் தந்தை சொல் செவியில் நுழைந்ததும் தன்னை மறந்தான், சபையையும் மறந்தான், மாம்போலத் திகைத்து நின்றான். சிறிதுநேரஞ்சென்று தன் புத்தி தனக்கு வரவே சக்கரவர்த்தியையும் சபையையும் கைகூப்பி வணங்கிநின்று, ” ஐயன்மீர் ! என் கருத்து என்னை என்று என்னை வினவினீர். எனக்குங் கருத்தொன் றுண்டோ ? எந்தையாரும் குரு சிரேஷ்டரும் மந்திரிமாரும் மற்றச் சபையாரும் தீர்க்க ஆலோசித்து ஏக அபிப்பிராயங்கொண்டு என்னை யழைத்து எனக்குக் கட்டளையிடும் பொழுது யான் செய்வது வேறொன் றுண்டோ ? இவ்வரசியல் நடத்த நான் சிறிதுந் தகுதியற்றவ னாயினும் கடவுள் திருவருளும் எந்தையாரின் புத்திமதியும் சபையாரின் தூண்டுதலும் எனக்கிருக்க என்னாலியன்ற மட்டும் என்கடனைச் செய்வேன்” என்றான். இராமனது வின யத்தையும் கீழ்ப்படிதலையும் கண்ட வேந்தனும் அவையும் அவனை மெச்சினர். தசரதன், ” மகனே நாளைக்கு உனக்கு முடிசூட்டல், மறவாதே ” என்றான். இராமன் கௌசலைக்கும் சீதைக்கும் மற்றவருக்குஞ் சொல்ல அந்தப்புரம் ஏகினான். நாளைக்கு இராமபட்டாபிஷேகம் என்ற சொல் நகரம் முழு தும் பாம்பினது. உடனே தெருக்களையும் வீடுகளையும் அலங்கரிக்கத்தொடங்கினர். அயோத்தி முழுவதும் நாளைக்கு இராமனுக்குப் பட்டாபிஷேகம் ” என்ற ஒருசொல்லே எவர் வாயிலும் ஒலித்தது.



