இராமன் கதை
பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி

பின்னுரை


வால்மீகி ராமாயணம் இராமன் மகாவிட்டுணுவின் அவதார மென யாண்டுங் கூறாது, அவன் ஒரு பெருவீரனென்றே கூறும். கம்பராமாயணமோ இராவணாதி இராட்சகரை அழிக்கத் திருநெடுமால் இராமனாகவும் இலக்குமி சீதையாக வும் தேவர்கள் வானரவீரராகவும் அவதரித்தனர் என்று கூறும். இவ்விரண்டினுள் முன்னையதையே யான் கொண்டனன். வால்மீகியும் கம்பரும் இதில் வேறுபட்டனரேனும் இருவரும் இயற்கைக்கு மிஞ்சியவையையும் இயற்கைக்குமாறானவையையுங்கொண்டனர். இருவரும் தசரதன் அறுபதினாயிரம் வருடம் அரசாண்டானென்பர். யானோ அறுபது வருடம் தசரதன் அரசாண்டான் என்றேன். இருவரும் இராவண னுக்குப் பத்துத்தலையும் இருபதுகையும் கொண்டனர். என் இராவணனுக்கோ தலையொன்றே, கை யிரண்டே. முதல் நூலும் வழி நூலும் இராட்ச தரெனவும் குரங்குகளெனவும் கரடிகளெனவும் கழுகுகளெனவும் கொண்டவரைத் தமிழ ரெனவே யான் கொண்டனன். வாலி சுக்கிரிவன் அனுமன் என்னும் மூவரது தந்தையரையும் விண்ணவரெனக்கொள் ளாது மண்ணவரெனவே கொண்டேன். ஆகாயத்திற் செல்லும் விமானம் கிறிஸ்துவுக்குப்பின் இருபதாம் நூற் றாண்டிலுள்ளது, கண்கூடாயினும், இராவணனுக்குப் புட்பக விமானம் இருந்ததென்பதைத் தள்ளினேன்.

“அஞ்சிலே யொன்று பெற்றான் அஞ்சிலே யொன்றைத் தாவி அஞ்சிலே யொன்றா முக ஆரியற் காக வேகி அஞ்சிலே யொன்று பெற்ற அணங்கைக்கண் டயலா ரூரில் அஞ்சிலே யொன்று வைத்தான்”

என்னுங்கூற்றை முற்றுக் தள்ளினேன். இப்படியெல்லாம் யான் செய்ததற்குக் காரணமென்? இராமாயணம் முழுதும் பொய்யும் புளுகும் நிறைந்த கதை என மாணவர் நினையா திருக்கும் பொருட்டே. பொய்க்கதைகளிருப்பதால் மெய்க் கதையையும் பொய்க்கதையென்றார் அறிஞர் சிலரும். அப்படி யாயின் இந்து தேசத்தில் நடந்த மெய்ச்சரிதமோ இராமன் கதை என வினவுவார்க்கு விடைகூற யான் வல்லேனல்லேன். கதைகளிலுள்ள அசம்பாவிதங்களைப் போக்கி, மெய்க்கதை போலக் காட்டுவதே என் கருத்தன்றி இது மெய்க்கதைதா னெனச் சாதிப்பது என் அறிவுக்கு மேற்பட்டது. இந்நூல் பெரும்பாலும் என் ஞாபகத்திலிருந்து எழுதியது. இந் நூலிற் கூறப்படும் ஸ்திரீ புருஷர் சம்பாஷணை யெல்லும் முத நூல் வழி நூல்களில் இல்லை. சில எனது கற்பனயே. அங்கத திரிசடைவிவாகம் முன் எந்நூலினுங் கூறப்பட்டிலது; என்னூலிற்தான் காணலாம். இது குற்றமேல், பெரியார் மன்னிக்க.

அரிச்சந்திரன் காலத்திலிருந்த வசிஷ்டவிசுவாமித்திரர், தசரத இராமர் காலத்திலிருந்தது எப்படி என்பார்க்கு, அரிச் சந்திரன் காலத்திலிருந்த வசிஷ்ட விசுவாமித்திரர் வேறு, தசாத இராமர் காலத்திலிருந்த வசிஷ்ட விசுவாமித்திரர் வேறு; பெயறொற்றுமையினாலே பேதந்தெரியாது கதைகள் மயங்கின என்க.

நூறு வருஷத்துக்கு முன், 1838 ஜனுவரி மீ 13 பிறந்த என் குரு வில்லியம் மில்லர் தேசிகர் ஞாபகார்த்த மாக இந்நூலை இன்று பிரசுரிக்கிறேன்.

★ ★ ★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *