இராமன் கதை
பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி

17. மதங்கமுனிவர் ஆச்சிரமம்


பஞ்சவடியைவிட்டுப் புறப்பட்டுப் பலநாளாயின. ”இராவணன் சீதையை இலங்கைக்குக் கொண்டுபோனானோ, வேறெங்கு கொண்டுபோனானோ? சீதையைக் கற்பழித்தானோ? அவனெண்ணத்துக்கு உடன்படாத சீதையைக் கொன்றானோ? சீதை சாகும் பொழுது என்ன சொல்லி அழுதாளோ?” என்று ஏங்கினான் இராமன். சீதையின் பொருட்டும் இராமன் பொருட்டும் கலங்கினான் இளையவன். இப்படி இருவருங் கலங்கிச் சீதையைத் தேடிக்கொண்டுவர, ஒரு முனிவர் ஆச்சிரமம் கண்ணுக்குத் தென்பட்டது. இரவை அங்கே கழிக்கலா மென்று இருவரும் அங்கு சென்றனர்.

இவ்வாச்சிரமம் மதங்கமுனிவருடையது. இது கிட் கிந்தை நாட்டுக்கு அருகேயுள்ளது. கிட்கிந்தைக்கு அரசன் வாலி என்பான். இவனது கொடி குரங்குக்கொடி. வாலி மகாவீரன். தன்னை மற்போருக்கழைத்த சத்துருவொருவனை வாலி பின்றொடர்ந்து சென்று ஒருவருஷமாகியும் அவன் கிட் கிந்தைக்குத் திரும்பவில்லை. ‘மாற்றான் கையால் வாலி மாண்டான்போலும்’ என்று எண்ணின கிட்கிந்தையின் குடிகள் வாலியின் தம்பி சுக்கிரிவனை முடிசூட்டி இராசாவாக்கினர். சுக்கிரிவன் கிட்கிந்தையை ஆண்டுவந்தான். பல மாதங்களாகப் பகைவனைத் தொடர்ந்து சென்ற வாலி அவனைக்கொன்ற பின் நகரத்துக்குத் திரும்பினன். இங்கு சுக்கிரிவன் ஆள் வதைக்கண்டு அவனைச் சினந்து சீறிக் கொல்ல எத்தனித்தான். அவன்கைக்குத் தப்பியோடின சுக்கிரிவனும் அவன் தோழன் அனுமனும் வேறுசிலரும் மதங்கமுனிவ ராச்சிரமத்தில் வந்து “ அடிகள் சரணமே சரணம்” என, முனிவரும் அவருக்கு அபயங்கொடுத்து, “வாலி என்னாச்சிரமத்துள் வாரான், நீவிர் அச்சமின்றி இங்கு தங்குமின் ” என அங்கே தங்கினர். சுக்கிரிவன்மனைவியை வாலி மணந்து தம்பியைக்கொல்ல எண் ணின எண்ணத்தை மறந்துவிட்டான்.

வாலி தம்பியை மறந்தானேனும், தம்பி தமையனை மறந் தானல்லன். ஒருநாளில்லாவிட்டால் வேறொருநாள், இங்கில்லா விட்டால் வேறெங்கேனும், வாலி தன்னைக் கொல்வான் என்ற அச்சம் சுக்கிரிவனுள்ளத்திற் குடிபுகுந்தது. அன்றியும், தன் மனைவியை அபகரித்துக்கொண்ட பாவியைக் கொன்றாற்றான் தனக்குத் திருத்தியுண்டாகும் என்று நினைத்தான் சுக்கிரிவன். “அஞ்சினவன் கண்ணுக்கு ஆகாசமெல்லாம் பேய்” என்பது பழமொழி. அன்னியனொருவனைக் காணும் போதெல்லாம் இவனை வாலியனுப்பினான் என்னைக் கொல்ல என்று கலங்கு வான் இவன். இப்படி, நாடோறும் கலங்கின நெஞ்சினனாகிய சுக்கிரிவன் இராம இலக்குமணரை மதங்கமுனிவ ராச்சிரமத்திற் கண்டபோது, ‘இவரை வாலியனுப்ப வந்தனரிங்கு, இவர் என்னைக் கொல்வது திண்ணம்’ என்று தன் தோழருக்குக் கூறினான். இதைக்கேட்ட அனுமன், “விடு, விடு, வீண் அச்சம்; உன்னைக் கொல்ல நினைப்பதைத்தவிர வேறு வேலையில்லையோ வாலிக்கு? ஆயினும், வந்தவர் யாவர் என அறிந்து வருவேன்; அதுவரையிலும் உன் மலைவீட்டில் நீ யிரு” எனச் சுக்கிரிவனுக்குச் சொல்லி, இராம இலக்குமணர்பாற் சென்றனன். “ஐயன்மீர்! நீவிர் எந்நாட்டினீர்? எவ்விடத்தீர்? இங்குவந்த காரணம் யாது? சொன்மின்” என்றான் அனுமன். “நாங்கள் கோசலநாட்டேம். எம் நாடுவிட்டுப் பல்லாண்டு சென்றன. பஞ்சவடியில் வசித்துவந்தேம். என் மனைவியை இராவணன் எடுத்துச்சென்றான் என்று கேள்வியுற்று அவளைத்தேடிப் புறப்பட்டு இங்கு வந்தேம். அவளை இன்னும் கண்டிலேம். நீவிர் யாரேனும் அவளைக் கண்டீரோ?” என்றான் இராமன்.

உடனே அனுமன், ” ஆம், ஆம்; இன்று மூன்று நான்கு தினத்துக்கு முன்னே இராவணன் தேர்மீது தெற்கே போகக் கண்டேன் ; தேரில் ஒரு பெண்ணையும் கண்டேன். நீர் சொல்வதைக் கேட்கையில் அப்பெண்ணே நும் மனைவியார் போலும். அது நிற்க; இராவணன் வேந்தர்வேந்தன். இலங்கை கடலுக்கு அப்பாலுள்ளது. அவனது சேனை கடலினும் பெரிது. நும் மனைவியாரை நீவிர் மீட்டுவர விரும்புதிரேல் யான் ஓர் உபாயஞ் சொல்வேன் : இவ்வாச்சிரமத்தில் ஒரு மலையுள்ளது; அம்மலைமீதில் ஒரு கோட்டையுள்ளது ; அங்கு சுக்கிரிவர் வசிக்கின்றார்; அவர் கிட்கிந்தையின் இளங்கோ . நீவிரிரு வரும் இப்போது என்னோடு வருவீராயின் நும்மைச் சுக்கிரிவரிடம் அழைத்துச்செல்வேன். அவர் தக்க உபாயஞ் சொல்வார். இராவணன் எடுத்துச்சென்ற நங்கையாரை மீட்டற்கு வழி இதுவே” என்றான். இருவரும் சம்மதித்து அனுமனோடு புறப்பட்டனர். அனுமன், “நாம் ஏறும் மலை மிகச் செங்குத்துள்ளது. இவ்விளஞ்சிங்கம் ஏறும் ; நீவிர் மிகக் களைத்துளீர். நீர் என் தோள்மேலேறியிருப்பின் நும்மைத் தூக்கிச் செல்வேன் ” என்றான். முதலில் இராமன் அதற்கு இணங்கிலனேனும், இலக்குமணன், “அண்ணா ! நீங்கள் மிகக் களைத்திருக்கின்றீர்கள் ; சீதையைப் பிரிந்தபின் வாட்ட மதிகம். இவர் சொல்வது சரி. இவர் தோள் மேலேறி வாருங்கள் ; நான் அருகில் நடந்துவருகின்றேன்” என்றான். அதற்கு இராமன் இணங்க, அனுமன் இராமனைத் தோளி லேற்றி, இலக்குமணன்கையைத் தன்கையாற் பற்றிக்கொள்ள, மூவரும் சுக்கிரிவனிருக்குமிடம் சேர்ந்தனர்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *