இராமன் கதை
பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி

4. மந்தரை கைகேயி


கேகயாட்டு இராசகுமாரி கைகேயி. இவளைத் தசரதன் மணந்து அயோத்திக்குக் கொண்டுவந்தபொழுது இவளோடு உடன்வளர்ந்தாளும் இவளது அடிமைப்பெண்ணுமாகிய மந்தரையும் தன் காய்ச்சியுடன் அயோத்திக்கு வந்தாள். இவள் வடிவிற் கூனி, ஆகவே மந்தரையென்ற இயற்பெயர் இவளுக்கு வழங்காமல் கூனியென்ற பெயரே பெரும்பாலும் வழங்கினது. இவள் தன் நாய்ச்சிபால் மிக அன்புடையள், நாய்ச்சியின் மகன் பரதனிடத்தும் பேரன்புடையள்.

இராமனுக்கு நாளைக்குப் பட்டாபிஷேகம் என்ற சொல் மந்தரைகாதில் விழுந்தது. இராமன் தனக்கு யாதொரு தீங்கும் செய்திலனேனும் கைகேயியிடத்தும் பரதனிடத்தும் இவளுக்கிருந்த போன்பு இவளைத் தூண்டவே இவள் எவ்வகையானும் இராமனுக்கு முடிசூட்டலைத் தடுத்துப் பரதனை முடிசூட்டுவிக்கவேண்டும் என்று தன் மனத்தில் உடனே தீர் மானித்தாள். தீர்மானித்தவுடனே கைகேயியின் அந்தப்புரம் சேர்ந்தாள். பள்ளியறையில் தன்னை மறந்து துயில் செய்யும் கைகேயியைப் பலமுறை கூப்பிட்டும் அவள் எழாததுகண்டு அவளைத் தட்டியெழுப்பினாள். கைகேயி எழுந்து அரைத் துயிலுடன் “மந்தரை, என்ன விசேஷம்? என் என்னையிப்படித் தட்டியெழுப்பினாய்” என்று வினவ, “வீடு தீப்பற்றியெரி கையில் நித்திரைகொள்ளுகிறவள் பைத்தியம்பிடித்தவள் என்றாள் கூனி. “வீடு தீப்பற்றியெரியவில்லை, நீதான் பைத்தி யக்காரி” என்றாள் கைகேயி. உடனே கூனி, ” இராமனுக்கு நாளைக்குப் பட்டாபிஷேகமாம், இதைச்சொல்லத்தான் உன்னையெழுப்பினேன்” எனப் பரதனிலும் பதின்மடங்கு இராமனைத் தன்மகனென்று காதலித்த கைகேயி ஆனந்தபரவசத்தளாய், கழுத்தில் அணிந்திருந்த முத்துமாலையைக் கழற்றிக் கூனியின் கழுத்திலிட்டாள். கூனி கோபாவேசத்தளாய் மாலையை யெடுத்துத் தரையிலே வீசியெறிந்து, ” எனக்கு வேண்டா இந்தமாலை, நாளைக்கு இராமன் அரசனாகும்போது கைகேயி கௌசலைக்கடிமையாவாள், மந்தரை அடிமைக்கடிமையாவாள், இந்தச் சந்தோஷத்துக்கு மாலையும் வேண்டாவோ?” என்று சிரித்தாள். கைகேயி, ” இராமன் என்மகன், பரதனிலும் நூறு மடங்கு நல்லவன்; இராமன் எனக்கு வலக்கண், பரதன் எனக்கு இடக்கண்; நீ சொல்வதெல்லாம் விபரீதம்; இனியொன்றும் பேசாதே ” என்றாள். மந்தரை பின்னும் உரத்துச் சிரித்து, ” இஃதெல்லாம் நாளைக்குத் தெரியும். தசரதர் சிங்காசனத்திலிருக்கையில் கௌசலையும் இராமனும் உன் மேலும் பரதன் மேலும் மிக அன்புள்ளவர் போல நடிக்கிறார்கள், பேய்ச்சி நீ இதையெல்லாம் நம்புகிறாய்; நாளைக்கு இராமனுக்குப் பட்டாபிஷேகம் முடிந்தபின் தசரதர் தவஞ்செய்யக் காட் டுக்குப் போவர், அப்போது உன் மகன் பரதன் படப்போகிற பாடு ஈசனுக்குத்தான் தெரியும்; நீ இருந்துபார், நான் இன்றே சாகத்துணிந்தேன்” என்றாள். இதனைக்கேட்ட கைகேயி சிறிது நேரம் வாளாவிருந்து பின் இவ்வாறு சொல்லுவாள் : “நீ சொல்வதில் எனக்கு நம்பிக்கையில்லை, ஒருவேளை உண்மை யாயினும் இராமபட்டாபிஷேகத்தை நாம் எப்படித் தடுக்க முடியும்? இராமன் நால்வருள் மூத்தவன், சக்கரவர்த்திக்கு உயிர், வசிட்டரும் மந்திரிமாரும் படைத்தலைவரும் இராமனை நேசிப்பவர்கள்; இவையன்றி, சக்கரவர்த்தி சொன்ன சொல் மாறாதவர், முடிசூட்டுவேனென்று இராமனுக்கு அவர் சொன்ன பின்பு அதைத் தடுக்கத் தேவராலுமாகாது, மூவராலு மாகாது”. கூனி பின்னுஞ்சிரித்து, “தேவராலும் மூவராலு மாகாததை மந்தரை செய்து முடிப்பள்; ஆனால் என் புத்தியின் . படி நீ நடவாவிடின் நான் செய்யக்கிடப்பது ஒன்றுமில்லை; என் சொற்படி நீ செய்தால் மூவுலகத்தையும் ஆட்டிவைப்பேன் ” என்று ஆர்த்தனள். கைகேயி, “நீ என்னையும் என் மகனையும் காக்கவந்த தெய்வம், உன் சொல்லைக் கேளாமல் வேறார் சொல்லைக் கேட்பேன் ” என்றாள். “அப்படியானாற் சொல் கிறேன், கேள்” எனக் கூனி உபதேசிக்கத் தொடங்கினாள்: “சக்கரவர்த்தி ஒருநாளும் பொய்சொல்லாதவாலரோ? கொடுத்த வாக்கைச் செய்தே தீர்ப்பவரலரோ? இராமனுக்கு வாக்குக்கொடுக்கு முன் உனக்கு இரண்டு வாங்கொடுப்பதாக உறுதிமொழி புகன்றுளார். அவ்விரண்டுவரத்தையும் முதலில் உனக்குத் தந்தபின் இராமனுக்குக் கொடுத்த வாக்கை மன்னவர் நிறைவேற்றலாம்” என்றாள். “எனக்கு எப்போது இரண்டுவரம் தருவதாக வேந்தர்வேந்தர் கூறினார்? எனக்கு நினைவில்லை” என்றாள் கைகேயி. ”கௌசலையாலும் இராமனாலும் மயங்கின உனக்கு எது நினைவிலிருக்கும்? முன் னொருகாலம் தசரதசக்கரவர்த்தி மாற்றாரை எதிர்த்துப் போர்செய்யப்போனபொழுது நீயும் உடன் சென்றாய். தசரத ருடைய தேர்ப்பாகனைப் பகைவர் அம்பால் வீழ்த்திய போது உடனே நீ சாரதியாகித் தேரைச்செலுத்த, அரசர் பகைவரை யெல்லாம் வென்றார். அப்பொழுது உவகைமேலிட்டவராய் நீ கேட்கும் இரண்டுவாம் எவையானாலும் தருவதாக உனக்கு உறுதிமொழி புகன்றார். நீ அவ்வரத்தை உடனே கேளாமல் வேண்டிய போது கேட்பதாகச் சொன்னாய். இப்போது போய் வாரம் இரண்டையும் கேள்: முதல்வரம் பரதனைக் கோசல நாட்டுக்கு வேந்தனாக முடிசூட்டுதல்; இரண்டாம்வரம் இராமன் நாடு துறந்து பதினான்குவருடம் வனவாசஞ்செய்தல். இவ்விரண்டும் தந்தே தீரவேண்டும் என்று உறுதியுடன் நில், போ, உடனே செய், காலதாமதஞ் செய்யாதே, இன்னும் சிறிது நேரத்துக்குள் மகாராசா உன்னைத் தேடிவருவர், அப்பொழுது காரியம் தீரவேண்டும்” என்று சொல்லிவிட்டுக் கூனி போய் விட்டாள்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *