
இராமன் கதை
பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி
9. சித்திரகூடம்
இராமன் கங்கையைக் கடந்த ஓடத்தைச் செலுத்தினவன் குகன். இவன் ஆற்றின் தென்கரையில் வசிப்பவன். தன் ஓடத்தில்வந்த ஆடவரிருவரும் கோசல நாட்டு இராசகுமார ரென்றும் பெண் அவரில் மூத்தவன் மனைவியென்றும் மூத்தவனுக்குப் பெயர் இராமனென்றும் இவனை அரசன் நாட்டி னெல்லையைவிட்டு வெளியே போம்படி கட்டளையிட்டா னென்றும் சுமந்திரன் சொல்ல அறிந்த குகன் மூவரையும் தன் சிறுகுடிலுக்கழைத்துச்சென்று தன்னாலியன்ற மட்டும் அன்போடுபசரித்தான். இதைக்கண்ட இராமன் குகன் அனாரியனும் புறநாட்டுக் குடியுமாயிருந்தும் அன்னியராகிய தங்களை உள்ளன்போடு உபசரித்ததைக்கண்டு அவன்பாலுறவு பூண்டான். “குகனே, நீ யென்றோழன், என் தம்பி இலக்குமணன் உனக்கும் தம்பி, என் மனைவி சீதை உனக்கு மைத்துனி. நீ எங்களுக்குச் செய்த இந்நன்றியை நாங்கள் ஒருநாளும் மறவோம் ” என்றான் இராமன். அதைக்கேட்ட குகன், ” அன்னியர் எவ்ரேயாயினும் அவரை உபசரிப்பது எங்கள் வழக்கம்.
“விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று”
என்பது எமதுகோள். நீவிரோ சாமானிய மனித ரல்லீர். உங்களை என் குடிலுக்கு வரச்செய்தவை உங்கள் தீவினைப் பயனும் என் நல்வினைப்பயனுமாம். அடியேனை நீங்கள் மற வாமல், திரும்பி அயோத்திக்குப் போகும்பொழுது என்னிடம் வரல் வேண்டும். இதற்கு ஒரு காதத்துக்கப்பால் சித்திரகூடம் என்னும் மலையுள்ளது. அதன் சாரல் நீங்கள் வசித்தற்குத் தக்க இடம். அங்கேயுள்ள பலவகைக்காட்சி மனத்துக்கின்பந் தருவன. அங்கு சென்று உறையுங்கள்” என்றான். அவன் சொல்லியவண்ணமே மூவரும் சித்திரகூடஞ் சென்றனர். அம்மலைச்சாரலில் ஒரு சிறுகுடில் இலக்குமணன் சமைத்துத் தழையால் வேய்ந்து முடித்தபின் மூவரும் ஆங்குறைந்து சில நாட்கழித்தனர். இராமலக்குமணருக்குக் காட்டுவாழ்வு புதி தன்று. சீதைக்கு இது புதிதாயினும் சித்திரகூடத்தினழகும் இராமனது சகவாசமும் அவளுக்கு ஆனந்தத்தை விளைத்தன. மலைச்சாரலிற் கிடைத்த கந்த மூலபலாதிகளேயிவருக்கு உணவாயின.



