இராமன் கதை 
பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி

இராமன் கதை
பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி

1. பிறப்பும் இளமையும்


ஆரியவர்த்தத்திலே கங்கையாற்றுக்கு வடக்கே உள்ளது கோசலை நாடு. அதற்கு இராசதானி அயோத்தி. அங்கே தசரதன் என்னும் வேந்தர்வேந்தன் பல்லாண்டு செங்கோல் செலுத்திவந்தான். அவன் அறங்கிடந்த நெஞ் சினன், மன்னுயிரைத் தன்னுயிர் போல நேசிப்பவன், கொடையிற் கற்பகத்தை வென்றவன், பொய்க்குப் பகை, மெய்க்கு அணி, புகழுக்கு வாழ்வு.

இவனுக்கு மனைவியர் மூவர் : கௌசலை, கைகேயி, சுமித் திரை. இம்மூவரும் வெவ்வேறு நாட்டு இராசகன்னிகைக ளாயினும் ஒருதாய் மக்கள் போல ஒருவர் பாலொருவர் அன்பு பாராட்டின துமன்றி மூவரும் தசரதனைக் கண்ணுங் கவசமும் போலப் பேணிவந்தனர். இவர்களுள் பட்டத்தரசி கௌசலைக்குச் சாந்தை என்னும் மகள் பிறந்தாள். தமக்குப் பிள்ளை யில்லாத உலோமபாதமுனிவர் சாந்தையைத் தமக்குப் பிள்ளையாய்த் தரும்படி தசரதனை வேண்ட, அவன் அவளை அவருக்குத் தத்தஞ் செய்துவிட்டான். உலோமபாதமுனிவர் தக்க காலத்திலே சாந்தையைக் கலைக்கோட்டு மகாமுனிவருக்கு விவாகஞ்செய்து கொடுத்தார்.

இது நிற்க, தசரதனுக்கு மூவர் மனைவியரிடத்தும் நால்வர் மைந்தர் தோன்றினர்: கௌசலை இராமனை ஈன்றாள், கைகேயி பாதனைப் பெற்றாள், சுமித்திரை இலக்குமணன் சத்துருக்கினன் என்னும் இரட்டைப்பிள்ளைகளைப் பயந்தாள். மக்கள் நால்வரும் நாளொருவண்ணமும் பொழுதொருமேனியுமாக, சுக்கிலபட்சத்துச் சோதியம்புலிபோல வளர்ந்துவந்தனர். பிள்ளைகள் மழலை மொழியாலும் பலவகை விளையாட்டினாலும் பெற்றாரைக் களிப்பித்தனர்.

ஏற்ற பருவம் வந்தபொழுது தசரதன் பிள்ளைகள் நால்வருக்கும் குலகுருவாகிய வசிஷ்டமுனிவரைக்கொண்டும், வேறு ஆசான்மாரைக்கொண்டும், சுருதி, ஸ்மிருதி முதலிய சாஸ்திரங்களையும், வில்வித்தை முதலிய படைக்கலப்பயிற்சி யையும், ஆனையேற்றம் குதிரையேற்றம் முதலிய அருஞ் செயல்களையுங் கற்பித்தான். பிள்ளைகள் தாய்தந்தையரும் குரவரும் வியந்து அதிசயிக்க எவ்வகைக் கல்வியிலும் தேர்ச்சி யடைந்தனர். இவ்வாறு சென்றன சில்லாண்டு.

ஒருநாள் அரசன் அவைக்களத்தே விசுவாமித்திர மகா ரிஷி தோன்றி, தாம் ஒரு யாகஞ்செய்யத் தொடங்கினதாகவும் தம்மை அவ்வியாகஞ் செய்யவிடாமல் விந்தியமலைக்குத் தெற்கே வாழும் ஒரு சாதியார் கறுத்த நிறத்தினர், சுருண்ட குஞ்சியர்[1] பலர் இடையிடையே புகுந்து தடை செய்வதாகவும் தாம் செய்யும் யாகம் தடையின்றி இனிது முடியுமாறு தமக்கு உதவி செய்யத் தசரதன் தன்மகன் இராமனைத் தம்மோடு அனுப்பவேண்டுமென்றும் சொன்னார். இதைக்கேட்ட வேந்தன், “முனிபுங்கவ, தமது வேள்விக்குத் தடையொன்றும் வாராமல் காக்க நானே வருகின்றேன்” என்றான். விசுவாமித்திரர், “தசரதா, இச்சிறுகாரியத்துக்கு நீ உன் இராச்சியத்தைவிட்டு வருவானேன்? இராமனை அனுப்பினாற் போதும்” என்றார். அரசனோ “ஐய, இராமன் சிறுவன், அவனாலாகாது இக்காரியம். நானே வருகிறேன் ” என, விசுவாமித்திரர் : “நீ வரவேண்டியதில்லை, இராமன் வந்தாற் போதும்; இராமனையே அனுப்பு” எனப் பின்னுங் கூறினர். இராமனை விட்டுப் பிரியத் தசரதனுக்கு மனமில்லையென்று கண்ட வசிஷ்டர் அரசனை நோக்கி “வேந்தே, நீ உன் மகனை விசுவாமித்திரரோடு அனுப்பச் சிறிதும் அஞ்சாதே. இராமனுக்கு யாதொரு தீமையும் உறாவண்ணம் விசுவாமித்திரர் அவனைக் காப்பதுமன்றி அவனுக்குப் பல வித்தை களையும் உபதேசிப்பார். இதனால் இராமனுக்கு நன்மையே வரும். இப்பொழுது இவர் கேட்டது போல இராமனை அனுப்பாவிடின் உனக்கும் உன்னிராச்சியத்துக்கும் மட்டுமன்று, இராமனுக்குத் தீமை விளையும், இது திண்ணம்” என்று புத்தி சொன்னார். உடனே இராமனை அழைத்து முனிவரோடு போகும்படி தசரதன் ஏவினான். இரட்டையரி லொருவனான இலக்குமணனும் இராமனோடு தானும் போகத் தனக்கு விடைதரும்படி அரசனை வேண்டினான். அரசன் அதற்கிசைந்து “நீயும் போகலாம்” என்றான். இராமலக்குமணர் தந்தையிடத்தும் தாய்மாரிடத்தும் விடைபெற்று விசுவாமித்திர முனிவரோடு கானகஞ் சென்றார்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *