

அப்பர் தேவார அமுது
கி. வா. ஜகந்நாதன்
தமிழ்நாட்டில் கோயில்கள் மிகுதி. சிவபெருமானுடைய திருக்கோயில்களும், திருமால் திருக்கோயில்களும் பல. “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்றும், “ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்றும் ஆன்றோர்கள் அறிவுரை கூறிய நாடு இந்த நாடு. சிற்பச் சிறப்பாலும் புராண வரலாற்றாலும் சிறப்பை உடையவை திருக்கோயில்கள். அவற்றில் தேவார திருவாசகங்களாலும், திவ்வியப் பிரபந்தத்தாலும் பெருமை பெற்ற தலங்கள் பல பாடல் பெற்ற தலங்களுக்கு ஏனைய தலங்களை விடச் சிறப்பு மிகுதி. திருஞானசம்பந்தரும், அப்பர் சுவாமிகளும், சுந்தரமூர்த்தி நாயனாரும் பல தலங்களுக்குச்சென்று தரிசித்துப் பல பதிகங்கள் பாடியிருக்கிறார்கள். கற்கோயில்களாகிய அவற்றின் பெருமையைச் சொற்கோயில்களாகிய அருளாளர் திருப்பாடல்கள் சிறப்பிக்கின்றன. எல்லாக் காலத்திலும் எவ்விடத்திலும் அந்தப் பாசுரங்களை ஓதி இன்பம் காணலாம்.
அத்தகைய திருப்பாடல்களை வேதத்துக்குச் சமானமாக வைத்துப் போற்றுவார்கள், தமிழர்கள். அந்தப் பாடல்கள் இறைவனுடைய பெருமையை எடுத்து உரைப்பதோடு பல அரிய உபதேச உரைகளையும் கொண்டிருக்கின்றன. செந் தமிழ்ப் பாவாக அமைந்திருப்பதால் அவற்றில் தமிழ் நயமும் செறிந்திருக்குமாதலால் பக்தி உணர்ச்சி உடையார் அவற்றை ஓதுவதோடு, தமிழ் நயம் தேர்பலர்களும் அவற்றைப் படித்து இன்புறுகிறார்கள்.
அருளாளர்கள் தம்முடைய அநுபவத்தை அந்தப் பாடல்களில் கொட்டி வைத்திருக்கிறார்கள். இறைவன் திருவருளைப் பெற்றுப் பாடியவை ஆதலின் அவை ஆன்மாவுக்கு நலம் பயப்பவையாக உள்ளன.
கோயிலில் வழிபாடு நடக்கும் போது அவற்றை ஓதுவது வழக்கம். மற்ற நேரங்களிலும் அவற்றில் சிந்தையைச் செலுத்தி ஆழ்ந்து பயின்று நலம் பெறுவார் பலர். அப்பர் சுவாமிகளுடைய திருப்பாடல்கள் மனத்தை உருக்கும் தன்மை வாய்ந்தவை. சமண சமயத்தில் சில காலம் இருந்து பிறகு இறைவன் திருவருளால் மீண்டும் சைவ சமயத்தை நாடி வந்தவர் அவர். சில காலம் தாயைப் பிரிந்திருந்து பிறகு அவளை அடைந்த குழந்தை எவ்வளவு ஆர்வத்தோடு தாயுடன் ஒட்டி உறவாடுமோ அந்த வகையில் அன்பு செய்த பெரியார் அவர். அவருடைய பாடல்களில் கழிவிரக்கமும் இறைவனுடைய பெருங்கருணைத் திறமும் ஒலிக்கும். பல இடங்கள் நமக்காகவே பாடி வைத்தவை போல் தோன்றும்.
நாமாக நம் உணர்ச்சிகளை வாய்விட்டுச் சொல்லத் தெரியாத ஊமைகளாக இருக்கும்போது, அந்தப் பெருமான் நம் குறைகளையே தாம் கொண்டவர் போலப் பாடுகையில், அவை நமக்கு உணர்ச்சியைத் தருகின்றன. நாமும் அவற்றினூடே இணைந்து உருகுகிறோம்.
அத்தகைய பாடல்களில் சிலவற்றைச் சிந்தித்து விரிவு படுத்தி எழுதிய கட்டுரைகள் இவை. “திருமுறை மலர்கள்” என்ற பெயரில் சைவத் திருமுறைகளில் உள்ள சில பாடல் களுக்குரிய விளக்கக் கட்டுரைகளை முன்பு எழுதியிருக்கின்றேன். அந்த முறையில் இந்தக் கட்டுரைகளையும் எழுதினேன். பொருட்செறிவுள்ள பாடல்களாதலின் நம் அறிவுக்குத் தெளி வாகப் புலப்படும் வகையில் இவற்றை விரித்து எழுதும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் இந்த விரிவு அமைந்தது.
கட்டுரைகளைப் படித்து முடித்த பிறகு பாடல்கள் நம் மனத்தில் நன்றாகப் பதியும்; சொல்லின் பொருளும் நயமும் அழுந்தும்.
தேவாரத்தின் பொருட் செறிவையும் இனிமையையும் இந்தக்கட்டுரைகளால் உணரலாகும். அருளுடைய சான்றோர்களின் திருவாக்கின் பெருமையை அறிய இந்த விளக்கங்கள் ஓரளவு உதவுமென்று நம்புகிறேன்.
வேத சாத்திரங்களை நன்கு பயின்றார் இவற்றின் கருத்தை விளக்கப் புகுந்தால் இன்னும் நன்றாக விளக்கக் கூடும். என்றாலும் என் அறிவளவுக்குப் புலப்பட்டவற்றை இந்தக் கட்டுரைகளில் சொல்லியிருக்கிறேன்.
தமிழுலகம் ஏற்கும் என்ற நம்பிக்கையுடன் இவற்றை எழுதினேன்.
தேவாரத்தைப் பல நாள் பாராயணம் செய்து அதில் உள்ள திருப்பாடல்களில் ஆழங்காற்பட்டு இன்புற்றவர்கள் என்னுடைய ஆசிரியப் பெருந்தகையாகிய மகாமகோபாத்தி யாய டாக்டர் உ.வே. சாமிநாதையரவர்கள். அவற்றைப் பாராயணம் பண்ணுகையில் கண்ணீர் மல்க இருப்பார்கள். அவர்களுடைய திருவடி நிழலில் இருந்து தமிழ் கற்ற எளியேனுக்கும் ஓரளவு அந்தப் பழக்கம் அமைந்தது. அதன் பயனாகவே இந்தக் கட்டுரைகளை எழுதும் முயற்சியை மேற்கொண்டேன்.
முருகன் திருவருளும் என் ஆசிரியப் பெருமானுடைய ஆசியும் இந்த முயற்சிக்கு உரம் தந்தன. உயிருக்கு நலம் செய்கிற அமுதைப் போல உதவும் இப்பாடல்கள் சிந்தையில் வைப்பதற்குரியவை; பலகாலும் சிந்தித்துச் சிந்தித்து ஆய்வதற்கு ஏற்றவை; நம் வாழ்க்கையில் பக்தி உணர்வையும் நன்னெறியிற் செல்லும் முறையையும் தெரிவிப்பவை.
அப்பர் சுவாமிகள் திருநாமம் வாழ்க!
கி.வா.ஜகந்நாதன்



